Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஹஜ் பெருநாள் சிந்தனைகள் – தியாகத் திருநாள்.
Posted By:peer On 3/29/2012

how to buy naltrexone

buy naltrexone 3mg redirect

- இப்னு ஹத்தாது

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன.

ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம். ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து கொண்டாடம் ஒரு நன்நாளாக ஈகைத் திருநாள் அமைந்துள்ளது.

அதே போல், நாம் அல்லாஹ்வின் அடியார்கள். அடியான் எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாக கட்டுப்பட வேண்டம். அப்து( அடியான்) விரும்பினாலம், விரும்பாவிட்டாலும் சரியே என்று அடிமைத் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாகத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது. நமக்கு “முஸ்லிம்” என்று பெயரிட்ட நபி இப்றாஹிம்(அலை) அவர்களது வாழிவோடு இணைந்த இறை அடிமைத் தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்துவதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட, முயற்சிகள் செய்வோமாக.

நபி இப்றாஹிம் (அலை) அவர்களது வாழ்வின் ஆரம்பக்கட்டத்திலிருந்தே, இளமைப் பருவத்திலிருந்தே, அல்லாஹ் ஒருவனுக்கே வழிப்பட வேண்டும்; அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனல்லாத யாருக்கும், எதற்கும் வழிப்படுவது மாபெரும் குற்றம் என்ற அடிப்படை உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதால் ஏற்படும் பயங்கரமான எதிர்ப்புகள், இன்னல்கள், சகிக்க முடியாத கஷ்டங்கள் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக் கொண்டு, தான் கொண்ட தெளஹீதை நிலை நாட்டும் பணியிலேயே கண்ணாயிருத்தல், எந்த நிலையிலும் தனது இறைவனின் திருப்பொருத்தமே தனது வாழ்வின் இலட்சியம், அதற்காக அன்பு மனைவியை இழக்க நேரிட்டாலும், அன்பு மகளை இழக்க நேரிட்டாலும், அது சாதாரண தியாகமே என்ற உயர்ந்த எண்ணம், தனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து, மடியும் வரை அல்லாஹ்வுக்கென்றே வாழ்ந்து, மடிந்த தியாக வாழ்க்கை இவை அனைத்தும் நமக்கு அழகிய முன்மாதிரிகளாக அமைந்துள்ளன. “இப்ராஹிமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்.” (குர்ஆன் 3 : 95)

இப்றாஹிம்(அலை) அவர்களின் தந்தை ஆஜர் ஒரு புரோகிதர். பெரியார்களின் சிலைகளை வடித்து, தெய்வங்கள் என்று மக்களை நம்பவைத்து, அவற்றை வியாபாரம் செய்வது கொண்டு பிழைப்பு நடத்துபவர். இந்தத் தீய செயல் இப்றாஹிம்(அலை) அவர்களின் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளத்திலே தீ எனச் சுடுகின்றது. பால் மணம் மாறாத அந்தப் பாலப் பருவத்திலேயே தன் தந்தையை நோக்கிச் சொல்கிறார்கள்.

“என் அருமைத் தந்தையே, உங்கள் கைகளால் வடித்தெடுத்த இந்தப் பெரியார்களின் சிலைகளை தெய்வமென்று நம்பி, மக்களை வழிபடச் சொல்கிறீர்களே? இது நியாயந்தானா? நமது அற்ப உலக வாழ்வுக்காக மக்களை நரகப் படுகுழியில், படு நாசத்தில் விழச்செய்வது சரிதானா? நாளை நம்மைப் படைத்த அந்த அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் விடுவானா?” என்று கேள்விக் கணைகளை அடுக்கடுக்காக அள்ளி வீசினார்கள். பெற்ற தந்தைக்கோ அளவு கடந்த கோபம் வருகின்றது. நான் பெற்ற பிள்ளை என்னையே எதிர்ப்பதா? எனது குடும்ப, வயிற்றுப்பிரச்சனையில் மண்ணை அள்ளிப் போடுவதா? என்று அங்கலாய்க்கிறார். “மகனே! இதுதான் நமது பிழைப்படா! இதை விட்டால் நாம் உயிர்வாழ்வது எப்படியடா! குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்பாக வந்து முளைத்திருக்கிறாயே!” என்று அதட்டுகிறார்.

நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் இந்த இடத்தில் பெற்று வளர்த்த தன் தந்தைக்கு வழிப்படுவதை விட, தன் தந்தையையும் தன்னையும் மற்றும் அகிலமனைத்தையும் படைத்துப் போஷித்துப் பரிபாலித்து வரும், அந்த அல்லாஹ் ஒருவனுக்கு வழிப்படுவதே தனது தலையாய கடமை என்ற தெளிவான முடிவுக்கு வருகிறார்கள். தனது செயல் தன்னையும் தனது குடும்பத்தையும் உலக வாழ்வில் பாதிக்கிறதே என்பதையும் பொருட்படுத்தாமல், மக்களிடம், “மக்களே இந்தப் பெரியார்களின் சிலைகள் மனிதக் கைகளால் செய்யப்பட்டவை – வெறும் சிலைகளே! இவற்றாலோ, இவற்றுற்குரிய பெரியார்களாலோ, உங்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை! இவற்றையோ, இவற்றிற்குரியவர்களையோ வணங்குபவர்கள் அறிவீனர்களே! நஷ்டவாளிகளே! அப்படிப்பட்டவர்கள் இப்பெரியார்களின் சிலைகளை வாங்கிக் கொள்ளலாம்” என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் தந்தை ஆஜருக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியது போல் வேதனையைக் கொடுத்தது. கடுங்கோபமுற்று மகனைப் பார்த்து, “நீ என் கண்ணிலும் விழிக்காதே; உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்”, என்று வீட்டை விட்டே துரத்தி அடிக்கிறார்.

“இதிலிருந்து நீ விலகிக் கொள்ளவில்லையானால் உன்னை நிச்சயமாகக் கல்லால் எறிவேன்; என்னை விட்டும் என்றென்றும் தூரப்போய்விடு” (குர்ஆன் 19 : 46) என்றார்.

ஆதரிப்பார் யாரும் இல்லாமலும் ஒதுங்குமிடம் இன்னதென்று தெரியாத நிலையிலும் அந்த இளம் வயதிலேயே அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வைத்துத் தனித்துத் தனது உலக வாழ்வைத் துவக்குகிறார்கள் இப்ராஹீம்(அலை)அவர்கள். அடுக்கடுக்காக இடுக்கண்கள் வந்த போதிலும் கொண்ட கொள்கையை, ஏகத்துவ பிரச்சாரத்தை, சிலை, கபுரு உடைப்புப் பிரச்சாரத்தை இப்ராஹிம்(அலை)அவர்கள் கை விடுவதாக இல்லை. துணிவாகத் தொடர்கிறார்கள். ஒரு இடத்திலே வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு. ஒரு பெரிய சிலையின் தோளிலேயே ஆயுதத்தை மாட்டிவைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள். தாங்கள் வணங்கும் தெய்வங்கள் இவ்வாறு சின்னா பின்னப்படுத்தப்பட்டு நொறுங்கிக் கிடப்பதைக் கண்ட ஊர் மக்கள் பதை பதைக்கிறார்கள். கடுமையான கோபத்திற்குள்ளாகிறார்கள். விசாரிக்கும் போது, இப்ராஹிம் என்ற பெயராம், வாலிபனாம், அவன் தான் நமது தெய்வங்களை ஏளனம் செய்கிறவன்; அவன் தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அழைத்து வந்து – இல்லை இழுத்து வந்து இப்ராஹிம் (அலை) அவர்களை விசாரிக்கின்றனர். “என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அதோ அந்தப் பெரிய சிலையிடம் கேட்டுப் பாருங்கள்” என்று அந்த மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். “தன் முன்னால் நடந்தது கூடத் தெரியாத வெறும் சிலைகளையா தெய்வம் என்று வணங்குகிறீர்கள்” என்று குத்திக் காட்டுகிறார்கள்:- (குர்ஆன் 21:60-67) துணிச்சலாக, சிலை வணக்கம் கூடாது என்று எடுத்துரைக்கிறார்கள். பிரச்சனைமுற்றி இறுதியில் மன்னன் நம்ரூதின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப்படுகிறார்கள். மன்னன் என்ற பயமோ நடுக்கமோ இப்றாஹிம்(அலை) அவர்களுக்குச் சிறிதும் இல்லை. தைரியமாக நெஞ்சுயர்த்தி தான் கொண்டுள்ள அல்லாஹ் ஓருவன் மட்டுமே என்ற கொள்கையை மன்னனிடம் எடுத்து சொல்கிறார்கள், முடிவு, நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். அல்லாஹ் (ஜல்) உத்தரவு கொண்டு, கரிக்கும் நெருப்புக் குண்டம் சுகம் தரும் சோலையாக மாறுகின்றது. (குர்ஆன் 21:68,69)

நபி இப்றாஹிம்(அலை) அவர்களுக்கு, இதோடு சோதனை முடிந்து விட்டதா? இல்லை! மீண்டும் தொடர்கின்றது -தொடர்கதை போல், அன்புக்கினிய ஆசை மனைவியையும், பல்லாண்டு காலம் ஏங்கி, இறைவனிடம் பன்முறை வேண்டிப் பெற்ற அருமைப் பச்சிளம் பால்குடி மகனையும், மனித சஞ்சாரமே அற்ற பக்கா(மக்கா) பாலைவனத்தில் கொண்டு விடுமாறு இறை உத்தரவு வருகின்றது. இதனால் இறைவனுக்கு என்ன லாபம் என்று சிந்திக்கவில்லை இப்ராஹிம் (அலை). பந்தம், பாசம், ஆசை அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இறை உத்தரவைத் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடியானின் கடமை என எண்ணி, இறை உத்தரவை நிறைவேற்றத் துணிகிறார்கள்.

ஆதரிப்பார் யாரும் இல்லாத கடும்பாலை வனத்திலே அருமை மனைவியையும், அன்பு மகனையும் கொண்டு போய் விட்டு விட்டு நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு திரும்புகிறார்கள் நபி இப்றாஹிம்(அலை). “எங்களுக்கேன் இந்தக் கடுஞ்சோதனை? இதைத்தான் உங்கள் இறைவன் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறானா?” என்ற பாச மனைவியின் கேள்விக்கு, “ஆம்!” என்ற பதிலே இப்றாஹிம்(அலை) அவர்களிடமிருந்து கிடைக்கின்றது. அப்படியானால் அந்த இறைவன் எங்களுக்குப் போதுமானவன் என்று அன்பு மனைவியாரும் ஆறுதல் அடைகிறார்கள்.

நாட்கள் செல்கின்றன. கொண்டு வந்த உணவுப் பொருள், தண்ணீர் அனைத்தும் தீர்ந்து விட்டன. பசியின் கொடுமையினால் பச்சிளம் பாலகனுக்குப் பால் இல்லை. பல நாட்கள் தாயும், சேயும் பட்டினி. பசி தாங்காது சேய் வீறிட்டு அழுகின்றது. தனயனின் பசித்துயர் தாங்காது, தாயின் உள்ளம் படாத பாடு படுகின்றது. மகனின் பசி போக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்த பட்சம் வரளும் நாவை ஈரப்படுத்திக் கொள்ளக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்காதா? என்று ஏங்குகின்றது பெற்ற உள்ளம். அதற்காக இங்கும் அங்கும் ஓடுகிறார்கள் – அன்று அவர்கள் ஓடிய ஓட்டத்தை அல்லாஹ் பொருத்திக் கொண்டான். தனயனின் கால்களுக்கடியிலேயே “ஜம் ஜம்” நீரைப் பெருக்கெடுத்தோடச் செய்து, ஹஜ்ஜுக்கு வரும் ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்கள் அன்று ஓடிய அந்த மலைகளுக்கிடையே ஓடுவதை ஹஜ்ஜின் ஒரு அமலாகவும், ‘ஜம்ஜம்” தண்ணீரை ஒரு புனிதப் பொருளாகவும் ஆக்கி விட்டான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். துன்பம் முடிவுற்றதா? இல்லை! சோதனை இன்னும் தொடர்கின்றது.

பச்சிளம் பாலகன் வளர்ந்துஒடியாடித் திரிகின்ற பருவம். இடையிடையே இப்ராஹிம்(அலை) பக்கா(மக்கா) வந்து அன்பு மனைவியையும், ஆசை மகனையும் பார்த்துச் செல்கிறார்கள். ஒரு நாள் நபி இப்றாஹிம்(அலை) அவர்கள், பல்லாண்டு ஏங்கிப் பன்முறை இறைவனிடம் வேண்டிப் பெற்ற அருமை மகனை தன் கைகளாலேயே அறுத்துப் பலியிடும் கனவொன்றைக் காண்கிறார்கள். இங்கு, நபிமார்களின் கனவில் ஷைத்தான் வர முடியாது என்பதால் இறை உத்தரவு என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அது தான் போலும். அவனது நாட்டத்தை நிறைவேற்றுவதே அடியானாகிய தனது கடமை என முடிவெடுத்து, தனது கனவைச் செயல்படுத்த அன்பு மகனிடம் விபரிக்கிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் இஸ்மாயில்(அலை) அவர்கள் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்தப் பதில் நமது சிந்தனைக்குரியது. “அன்புத் தந்தையே அல்லாஹ்வின் கட்டளைப்படிச் செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் அதில் என்னை நீங்கள் பொறுமையாளர்களாகவே காண்பீர்கள்” (குர்ஆன் 37,102) என்று மிக அழகாகப் பதில் கூறுகிறார்கள்.

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! இந்த இடத்திலே, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முன்னால், தங்கள் பந்தம், பாசம், ஆசை, அபிலாசைகள் அைனத்தும் ஒன்றுமே இல்லை; அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவுச் செய்வதே அடியார்களின் தலையாய கடமை என்பதைத் தந்தையும், தனயனும் எந்த அளவு உணர்ந்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்து பாருங்கள். ஆம்! தாங்கள் கண்ட கனவைச் செயல்படுத்த, பெற்ற மகனைத் தன் கரங்களாலேயே அறுத்துப் பலியிடத் துணிந்து அழைத்துச் செல்கிறார்கள். எந்த உள்ளமும் பதை பதைக்காமல் இருக்க முடியாது. கடுமையான சோதனைக்கட்டம். இப்றாஹிம்(அலை) கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பிள்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையின் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்கிறான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை. ஷைத்தானைக் கல்லால் அடித்துத் துரத்துகிறார்கள். ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று, கலைக்கப் பார்க்கிறான். பெற்ற மனம் பித்து என்பார்கள். ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்று கூறி ஷைத்தான் அடித்துத் துரத்துகிறார்கள். இறுதியில் பலியிடப் போகும் மகனை நெருங்குகிறான். சாகச வார்த்தைகளைக் கூறுகின்றான். “தந்தையோ வயது முதிர்ந்தவர்; நீயோ வாழ வேண்டிய வயது. உலக வாழ்க்கையை இனிமேல் அனுபவிக்க வேண்டும். இந்த நிலையில் உன்னைப் பலியிடப் போகின்றாரே உன் தந்தை. அதற்கு நீ இடங் கொடுக்கலாமா?” தனயனும் ஷைத்தானின் சாகச வார்த்தையில் மயங்கவில்லை. ஷைத்தானுக்கு அங்கும் தோல்வி. இறைவனது விருப்பம் அதுவானால் தந்தைக்கோ, தாய்க்கோ, தனயனுக்கோ அதில் என்ன உரிமை இருக்க முடியும்? ஓடிப்போ! என்று கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள். தந்தை, தாய், தனயன் மூவரின் செயல்களை அல்லாஹ் பொருத்திக் கொண்டு அதன் ஞாபகார்த்தமாக ஹாஜிகள் இன்றும் மூன்று இடங்களில் கல் எறிவதை, ஹஜ்ஜின் ஒரு அங்கமாக ஆக்கி இருக்கிறான். அல்லாஹ் (ஜல்) இறுதியில் இப்றாஹிம்(அலை) அவர்கள் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களைக் கீழே கிடத்திக் கழுத்தில் கத்தியை ஓட்டத் தயாராகிறார்கள்.

ஆம்! மனிதன் தன்னுடைய கட்டளைகளுக்கு எந்த அளவு வழிப்பட்டு நடக்கிறான்? என்று அல்லாஹ் சோதிக்கிறானேயல்லாமல் அந்தச் சோதனையால் மனிதன் முன் காணப்படும் வேதனையில் சிக்க வைக்க வேண்டுமென்பது, அல்லாஹ்(ஜல்)வின் விருப்பமன்று. எண்ணற்ற தடங்கல்கள் ஏற்பட்ட பின்பும் தனக்கு வழிப்படும் ஒரே நோக்கம் தவிர வேறு நோக்கம், தந்தை, தாய், தனயன் மூவருக்கும் இல்லை; இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக நிருபிக்கப்பட்ட பின் அந்த வேதனை அவர்களுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நாடினான் போலும்! இதோ இறைவன் கூறுகிறான், “ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்றாஹிம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, யா இப்றாஹிம்! என்றழைத்தோம். திட்டமாக நீர் ஒரு கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கும் நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தமாக) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்றாஹிம் – இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.” (குர்ஆன் 37 :103 -110)

இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக உணர்வை அல்லாஹ்(ஜல்) ஏற்றுக்கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும்வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான். ஆம்! அல்லாஹ்வின் சோதனையில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டால், அதன் முடிவு எல்லை இல்லா மகிழ்ச்சியே அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவங்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதாக ஆகி விட்டதால், அந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நமக்கு ஒரு ஈதையே(பெருநாளைேய) அல்லாஹ்(ஜல்) கொடுத்திருக்கிறான். வருடா வருடம் ஹாஜிகள் நிறைவேற்றும் பல கடமைகள் இந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த நபி இப்றாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவராலும் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட கஃபத்துல்லாவை வலம் (தவாஃப்) வருவதை ஒரு வணக்கமாகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவர்கள் நின்று கஃபத்துல்லாவைக் கட்டிய இடத்தை (மகாமே இப்றாஹிம்) தொழும் இடமாக அல்லாஹ் ஆக்கி விட்டான். (குர்ஆன் 2:125)

தியாகத் திருநாள் தரும் படிப்பினை இவைதான். நாம் அல்லாஹ்வின் அடிமைகள். அவனே நமது எஜமானன். நாம் அவனுக்காகவே வாழ்ந்து, அவனுக்காகவே மடிவதே நமது நீங்காத இலட்சியமாகும்.

“(நீர்) கூறும்! எனது தொழுகை, எனது ஹஜ்ஜின் கிரியைகள், என் வாழ்வு, என் மரணம் (அனைத்தும்) ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே.” (குர்ஆன் 6: 162)

எந்த ஒரு காரியத்திலும் நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளை விட, அல்லாஹ்(ஜல்)வின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதே நமக்கு வெற்றியையும் இறுதியில் மகிழ்ச்சியையும் அளிக்கும். மறுமையில் ஈடில்லா பெரும் பேறுகளைத் தரும். நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளுக்கு இடம் கொடுத்தால், ஷைத்தானின் வலையில் சிக்கி விடுவோம். நாம் எதை எதிாபார்த்தோமோ, அந்தச் சந்தோசமும் நம்மை விட்டுப் போய்விடும். இறுதியில் ஷைத்தான் நம்மை மீளா நரகில் கொண்டு சேர்த்து விடுவான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது. அதிலிருந்து மீட்சி இல்லாமலும் போகலாம். ஆகவேவ இது விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது கடமை. படிப்பினை பெறுவோமாக! ஆமீன்.

நன்றி: http://annajaath.com/?p=92

 




Religious
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..