Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்...! ஒரு அனுபவப் பகிர்வு!
Posted By:peer On 5/8/2012

lexapro and weed interaction

lexapro weed effects redirect lexapro weed effects

hjertemagnyl alternativ

hjertemagnyl drug open

திருவிளையாடலில் ஒரு வசனம் வரும் " பிரிக்க முடியாதது எதுவோ?" என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக " இந்தியாவும் லஞ்சமும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார்! இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும் நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை!

லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!

அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது! ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம்! என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள் ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன்.. தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்!

சம்பவம் ஒன்று. விமானத்தை விட்டு இறங்கி ஒரு பேருந்தில் கொண்டு போய் குடிநுழைவு வாசலில் ( Immigration Check point ) இறக்கிவிட்டனர். என்னதான் அடிக்கடி வந்துபோனாலும் விமானத்தில் ஏறியதுமுதல் சொந்த பந்தங்களை காணும் ஆவல்தான் வீடு போய் அவர்களை பார்க்கும்வரை இருக்கும்! ஒவ்வொருவருமே அந்த ஆசைகளை சுமந்துதான் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஒரு விமானம் முழுவதும் வந்த பயணிகளுக்கு மூன்றே மூன்று அதிகாரிகள்தான்! அதுகூட மிட்நைட் என்பதால் அதிகாரிகள் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம்! ஆனால் அதன்பிறகு நடந்ததுதான் கொடுமை!

நாங்கள் வரிசையில் நிற்கும்போதே ஒருவர் உள்ளே இருந்து வந்து ஒரு பெயரை சொல்லி அழைத்துக்கொண்டே வந்தார், உடனே அவர் பெயர் சொல்லி அழைத்த நபர் தன் மனைவியோடு வரிசையின் கடைசியில் இருந்து வந்து எந்தவித கூச்சமும் இல்லாமல் வாயெல்லாம் பல்லாக வரிசையில் நிற்பவர்களை கடந்து அந்த ஊழியரை பின்தொடந்து சென்றார்! அதிகாரிகளும் அவர்களுக்கு முதலில் செக் செய்து அனுப்புகின்றனர்! அந்த ஒருவர் மட்டும் அல்ல அதன் பிறகும் இதேபோல இன்னும் இரண்டுபேரை அந்த ஊழியர் அழைத்துக்கொண்டு சென்றார்! எந்த நாட்டு இன்டர் நேசனல் ஏர்போர்ட்டிலும் காணக்கிடைக்காத காட்சி அது! அருகில் நின்று கொண்டிருந்தவர் சொன்னார், அவர்கள் அந்த விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஏதாவது ஒரு அதிகாரிக்கு உறவாக இருக்கும் என்று! அப்படியே உறவு இல்லையென்றாலும் இதேபோல் செல்ல வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்!

அதாவது, நம்மை வரவேற்க வந்தவர்கள் இதற்கென சிலரை பிடித்து தள்ளுவதை தள்ளி நாம் பெயரை அவர்களிடம் கொடுத்துவிட்டால் போதும், அவர்களும் கடமை தவறாமல் நம்மை வரிசையில் நிற்கவிடாமல் உறவு என்று சொல்லி அழைத்துவிடுவார்கள்! இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும், சிங்கபூர் நான் பிழைக்க வந்த நாடுதான், ஆனால் நிரந்தரவாசியாக இருந்தால்கூட போதும் எந்த நாட்டிற்கு போனாலும் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் குடிநுழைவுக்கு எந்த வரிசையிலும் நிற்க வேண்டாம், எனது இந்தியன் பாஸ்போர்ட்டை வைத்து ஆட்டோ ஸ்கேனிங்கில் வந்து விடலாம். ஆனால் சொந்த நாட்டில் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்துகொண்டு இந்த அவலங்களை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!

சம்பவம் இரண்டு.

ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து வந்தால் அடுத்து லக்கேஜ் கலெக்சன். இந்த முறை எனக்கு ஒரே ஒரு செக் இன் லக்கேஜ் மட்டுமே, இங்கு ஐ.டி. ஷோவில் வாங்கிய ஒரு LED T.V . இங்கு அதை செக் இன் செய்து கன்வேயரில் அனுப்புவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனென்றால், இதுபோல எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்களுக்கு தனி கன்வேயர்! ஆனால் திருச்சி கன்வேயர் பற்றி சொல்லவே வேணாம், புது விமான நிலையத்தில் இப்படி ஒரு டிசைனிங்?! அந்த கன்வேயரில் வரும் உங்கள் லக்கேஜ் சேதப்படாமல் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்! சரி.. அதைப்பற்றி தனியாகவே எழுதலாம் அவ்வளவு இருக்கு! பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த காரணங்களால் டிவி போன்ற ஹேண்டில் கேர் ஐட்டங்களை கன்வேயரில் அனுப்பாமல் தனியாக சைடில் உள்ள வாசல் வழியாக எடுத்து வைப்பார்கள், எனது டிவி யையும் எடுத்து வைப்பார்கள் என்று காத்துகொன்டிருந்தேன், ஆனால் எடுத்துவைத்தபாட்டைக் காணும்! ஆனால் மற்றவர்கள் ஒவ்வொருவராக எடுத்துகொண்டு சென்றார்கள். சரி.. அருகில் சென்று கேட்கலாம் என்று அங்கு சென்றேன், நான் போனதுமே அங்கு உள்ள ஒரு ஊழியர் வந்து " உங்களது என்ன பொருள் சார்?" என்றார், நானும் டிவி என்று மாடலையும் சொன்னேன், கேட்டுக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார், நானும் பரவாயில்லை நல்ல சர்வீஸ் என்று நினைத்தேன்! ஆனால் கொஞ்ச நேரத்திலே என் நினைப்பில் அவர் மண் அள்ளிப்போட்டார்! வேகமாக வெளியில் வந்து " இருக்கு சார், கொஞ்சம் கவனிங்க எடுத்துட்டு வர்றேன்" என்றார்!

எனக்கு முதலில் புரியவில்லை, பின்னர்தான் கவனித்தேன் அருகில் இருப்பவர்கள் நூறு ரூபாயை அவர் கைகளில் திணித்துவிட்டு தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டனர்! நான் அவரிடம் கேட்டேன் " ஏன் சார்..பணம் கொடுக்கலைனா நம்ம திங்க்ஸ எடுக்க முடியாதா? எடுத்து வைக்கிறதுதானே அவங்க வேலை? என்றேன், அவரும் " சார்.. நாம சண்டை போடலாம்.. முதலில் நமக்கு நேரம் இல்லை. இரண்டாவது உங்க டிவி 40,000 ரூபாய்னு வைங்க, இந்த நூறு ரூபாய்க்கு பார்த்தா, உள்ளேயே வச்சு சம்திங் டேமேஜ் பண்ணிட்டு கன்வேயர்ல டேமேஜ் ஆயிருச்சுன்னு சொல்வாங்க" என்றார்! அதிர்சியுடனே அந்த நாய்களுக்கு எலும்புத்துண்டை வீசிவிட்டு டிவியை எடுத்துகொண்டு வந்தேன்! இதையும் மீறி நகரும்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த கான்ஸ்டபிள் " தம்பி.. கொடுக்கவேண்டியதை கொடுத்திட்டிங்களா? என்றார்! இத்தனையும் கன்வேயர் ரூமுக்குள் இருந்த ஒரு கஸ்டம் ஆபிசர் நன்றாக கண்காணித்துக் கொண்டிருந்தார்! யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று! கூட்டுக்கொள்ளை!

சம்பவம் மூன்று.

டிவியை எடுத்துகொண்டு அடுத்து சுங்கச் சோதனை! கண்டிப்பாக டிவி போன்ற சாதனங்களுக்கு சுங்கவரி ( TAX ) உண்டு என்று தெரியும். ஏற்கனவே ஒருமுறை கட்டி இருப்பதால் அதற்கு தயாராகவே வந்தேன். தனியாக இதற்கென இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் சென்று எனது டிவி மாடல் மற்றும் விலைகளை சரி பார்த்து 3750 ரூபாய் கட்ட சொன்னார்கள்! எனக்கும் சந்தோசமே, ஏனென்றால் இதற்குப் பில் கொடுத்துவிடுவார்கள்! ஒரு பைசா கூட அந்த அதிகாரிகள் எடுக்க முடியாது! சரி என்று கட்டப் போகும்போது அதில் இருந்த ஒரு அதிகாரி எனக்கு பின்னால் வந்து மெதுவாக " தம்பி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அந்தப்பக்கம் சைட்ல சோபால உட்காந்திருக்கதுதான் எங்க சீனியர் ஆபிசர்! அவர் இப்ப போயிருவார், அவர் போனதும் 2000 மட்டும் கொடுத்திட்டு உங்க டிவிய எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்!

மேலும் " நேரம் காலம் தெரியாம இங்க வந்து உக்காந்துகிட்டு எங்க பொழப்புல மண்ண போடறான்" என்று அந்த சீனியர் ஆபிசரையும் திட்டிக்கொண்டே சென்றார்! இந்தியன் படத்துல நிழல்கள் ரவிய கமல் கொல்லப்போகும் போது அவருக்கே லஞ்சம் கொடுக்கிறேன்னு நிழல்கள் ரவி சொல்லும்போது கமல் ஆயாசமா கன்னத்துல கைய வச்சிக்கிட்டு சொல்லுவாரே " உன்னை கொல்றதுல தப்பே இல்லடான்னு" அதுதாங்க அப்ப மனசுல வந்துச்சு! சரி நீ ஆணியே புடுங்க வேண்டாம்னு முழு தொகையும் கட்டிட்டு டிவியை எடுத்துக்கிட்டு வெளில வந்துட்டேன்!

சம்பவம் நான்கு.

எல்லாத் தொல்லைகளும் முடிந்து அப்பாடான்னு வெளில வந்து லக்கேஜ் எல்லாவற்றையும் காரில் ஏற்றிவிட்டு திரும்பினா, நான் கொண்டுவந்த ட்ராலிய வாங்குறதுக்காக ஒரு ஊழியர் தயாராக நின்றார்! பரவாயில்ல... இந்த சர்விசாவது நல்லா இருக்கு என்று நினைப்பதற்குள் அதற்கும் ஒரு சம்மட்டி அடி! ட்ராலியை எடுத்துகொண்டு தலைய சொரிந்தார் அந்த ஊழியர், " என்னப்பா என்ன வேணும்?" என்றேன், "பார்த்து கவனிங்க சார், ட்ராலிய தள்ளிட்டு உள்ள போகணும்" என்றார்! நானும் விடாமல் " போங்க.. அதுக்குதானே உங்களுக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்காங்க?" என்றேன்,

" என்ன சார் நீங்க? ஒவ்வொருத்த ரெண்டு வெள்ளி, பத்து வெள்ளின்னு கொடுத்துட்டுப் போறாங்க, இதுக்குப் போய் கணக்கு பார்க்குறீங்க?" என்றார் சாதரணமாக! எனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரிடம் சொன்னேன் " அண்ணே. இன்னும் சிங்கபூர்ல தினக்கூலிக்கு வர்ற நம்ம ஆளுங்களுக்கு ஒரு நாள் சம்பளமே 18 வெள்ளிதான்! இங்க ட்ராலி தள்ளியே அவ்வளவு சம்பாதிக்க முடியும்னா எனக்கும் ஒரு வேலை இங்க வாங்கித் தாங்க, நானும் வந்து ட்ராலி தள்ளுகிறேன்" என்றேன்! அந்த முனகியபடியே திரும்பிச் சென்றார்! கண்டிப்பாக கெட்ட வார்த்தையில் திட்டியபடியே சென்றிருப்பார்!

சம்பவம் ஐந்து.

எல்லாவற்றையும் கடந்து வீட்டுக்குச் செல்லும் ஆர்வத்தோடு விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால், கொஞ்ச தூரத்தில் போலிஸ் செக் போஸ்ட்! அதை தொடும் முன்னரே ஒரு போலிஸ் வந்து நிறுத்தச் சொல்லி கை காட்டினார், நிறுத்தியவுடன் டிரைவர் சீட் பக்கம் குனிந்தார் அவர், என்னவோ என்று கண்ணாடியை இறக்கினால் குப்பென்று அடித்தது சரக்கு வாடை! டிரைவர் சீட்டில் இருந்த என் மாமாவிடம் " என்ன புதுசா? கவனிச்சிகிட்டு போய்க்கிட்டே இருங்க, ஐயா உள்ளதான் இருக்காரு" என்றார்!

உடனே என் மாமாவும் ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டவும் " ஓக்கே ரைட்..போய்க்கிட்டே இருங்க" என்று கை காட்டி அனுப்பி வைத்தார்! நான் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன், அவர் சொன்ன ஐயா, நன்றாக தூங்கியபடி டியூட்டி பார்த்துக் கொண்டிருந்தார்! மாமாவிடம் கேட்டேன் " நாம பணம் கொடுக்கலைனா என்ன பண்ணுவாங்க?" என்று, "என்ன பண்ணுவாங்க? சந்தேகமா இருக்கு செக் பண்ணனும்னு லேட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் மோசமான ஆளுங்களா இருந்தா, கஞ்சா பாக்கெட்ட அவங்களே போட்டு நம்ம கார்ல இருந்துதான் எடுத்ததா வழக்கு போடுவாங்க" என்றார்! அரசாங்க அதிகாரிகளைப் பற்றிய மக்களின் இந்தப் பயம்தான் அவர்களை மேலும் லஞ்சமயமாக வாழவைத்து கொண்டிருக்கிறது!

சம்பவம் ஆறு.

விடுமுறையை சந்தோசமாக கழித்துவிட்டு திரும்ப சிங்கை வர அதே திருச்சி விமான நிலையம்! சரி.. எந்தப் பிரச்னையும் இருக்காது, ஏனென்றால் என்னிடம் செக் இன் லக்கேஜ் இல்லை! ஒரு ஹேன்ட் லக்கேஜ் மற்றும் லேப் டாப் மட்டுமே என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் அப்போதும் லஞ்சம் தன் கோரப் பற்களை காட்டியபடி என்னை வரவேற்றது! இந்தமுறையும் இமிக்ரேசனில் நீண்ட வரிசை! இன்னும் கொடுமை என்னவென்றால், மூன்று விமானங்கள் குறைந்த நேர இடைவெளியில் கிளம்பும், மூன்று விமான பயணிகளையும் கையாள அதே மூன்று அதிகாரிகள் மட்டுமே! நான் சிங்கைக்கு வரும் பயண நேரத்தைவிட விமான நிலையத்தில் செலவழிக்கும் நேரம் அதிகம்! ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து உள்ளே போகும் முன் ஒரு கஸ்டம் ஆபிசரும் அவருக்கு துணையாக ஒரு போலிசும் இருந்து பாஸ்போர்ட்டை செக் செய்து அனுப்புவார்கள்.

என் பாஸ்போர்ட்டை வாங்கி புரட்டிப் பார்த்த அந்த போலிஸ் " என்ன தம்பி.அடிக்கடி வந்து போவீங்க போல? உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதே இல்லை, கவனிச்சிக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்! அந்த நேரம் பார்த்து டைகர் ஏர்வேசின் செக்கிங் எஜன்ட் வர, நான் நழுவி எஸ்கலேட்டரில் ஏற ஆரம்பித்தேன், அவரும் விட வில்லை என் பின்னாடியே வந்துவிட்டார்! " தம்பி..கவனிச்சிட்டு போங்க" என்று! திரும்பவும் மேலே ஒரு பெண் என் போர்டிங் பாஸை செக் செய்து ஓக்கே சொல்லவும் உடனே உள்ளே போய் விட்டேன்! உள்ளே போய் எல்லா ஃபார்மாலிடீஸ் முடிந்தபின் திரும்பிப் பார்த்தேன், அப்பவும் அவர் இடுப்பில் கை வைத்து என்னை முறைத்தபடியே நின்றார்! என்னைப்போல அடிக்கடி வந்து செல்பவர்களையே இவர்கள் இந்தப் பாடு படுத்தினால், அதிகம் படிக்காமல் முதல் முறை வெளிநாடு செல்பவர்களை இவர்கள் என்ன பாடு படுத்துவார்கள்? பணம் கொடுத்தால்தான் பயணமே சாத்தியம் என்று சொன்னாலும் சொல்வார்கள்! இவர்களுக்கு ஏன் இந்தப் பிழைப்பு?

இந்த நீண்ட கட்டுரையை படித்து முடிக்கும் உங்களுக்கே இவ்வளவு ஆயாசமாக இருக்கும்போது, இதை ஒவ்வொரு பயணத்திலும் அனுபவிக்கும் பயணிகளின் நிலையை நினைத்துப்பாருங்கள்! பல வெளிநாட்டினர் வந்துபோகும் இது போன்ற இடங்களில் நம் மானத்தை நேரடியாக விமானத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஊழல் அதிகாரிகள்! இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் லஞ்சத்தை தவிர்த்து வாழவே முடியாத சூழ்நிலையில் கொண்டுவந்து தள்ளிவிட்டது இந்த அதிகார வர்க்கம்! லஞ்சம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாத குழந்தைகளை லஞ்சம் கொடுத்துதான் பள்ளியில் சேர்க்கிறோம்! லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்று போதிக்க வேண்டிய ஆசிரியரே லஞ்சம் கொடுத்துதான் அந்த வேலைக்கு வருகிறார்! லஞ்சம் வாங்குவதை கண்காணித்து கண்டிக்க வேண்டிய காவல்துறை லஞ்சத்தில் திளைத்து கொண்டிருக்கிறது! சட்டங்களை கடுமையாக்க வேண்டிய மந்திரிகள் லஞ்சத்தை கமிஷன் என்று பெயர் மாற்றி வைத்து வாங்குகின்றனர்! ஆக மொத்தம் இந்தியாவிற்கு தேசிய வியாதி என்று ஒன்றை தேர்வு செய்தால் அதற்கு சரியான தேர்வு இந்த லஞ்சம்!

என்றும் அன்புடன்,

P. குண சேகரன்
தோஹா, ஸ்டேட் ஆப் கத்தார்.

Source: http://www.vaigai.net/search/label/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

 






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..