Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நமது ஊர் ஏர்வாடி (முதல் பரிசை வென்ற கட்டுரை)
Posted By:peer On 1/13/2013

”நமது ஊர் ஏர்வாடி”

 எழுதியவர்: சிந்தா மதார் , S/o கேப்டன் முகமது மீராசாஹிப் அவர்கள்.

 
(பைத்துஸ்ஸலாம் பேஸ்புக் குழுமத்தின் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசை வென்ற கட்டுரை)

 


அஞ்சல் குறியீட்டு எண் 627103

 

எத்தனையோ..கடிதங்களை தங்களின்  கைகளில் சேர்க்கும் நான் உங்களிடம் என்னைப் பற்றி எழுத நினைக்கிறேன் .

உங்களின் உரைகளை கட்டுகளாக கடிதங்களாய் சேர்ப்பித்த நான் கட்டுரையை கடிதமாகவே சேர்ப்பிக்கிறேன் .

 

ஒரு மிசாவின்..போது ஒரு தமிழ்தலைவர் ஊருக்குள் தஞ்சம் புகுந்த தற்காய் உளவுத்துறையால் உற்று நோக்கப்பட்டவன் நான்....

 

இளவனிகர்குடி பொத்தைக்கோயில் தெற்குமாய் ......மாதாக்கோயில் வடக்குமாய் விரிந்திருக்கும் என் இறக்கைகளின் இதயமாகஇஸ்லாமிய நெஞ்சங்கள் நிறைந்திறுக்கும் ஊர் இது.......

 

ரங்கூன், கொழும்பு இன்னும் வளைகுடா நகரங்களின் கடிதங்களுடன் கண்ணீரையும் ,காதலையும் இன்ன பிற உணர்வுக் குவியலையும் உன் வாசல் சேர்த்தவன் நான் ... இரு பெரும் யுத்தங்களின் போது எல்லையில் நின்ற என் இளைஞருக்காக சேதி வருமா என ஊரில் இருந்த வானொலி மைதானத்தில் கூடி நின்ற கூட்டங்களின் தேச உணர்வும் நெகிழ்ச்சி நிறைந்த ஏக்கங்களும் வடுவாக வரலாறாக புதைந்து கொண்டுதான் இருக்கின்றன காணாமல் போயிருந்த வானொலி திடலுடன் .......

 

வில் வண்டியில் விரைந்து பரமசுக சாலையில் பெற்ற பிரசவங்களும் சிகிச்சைகளும் ....மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேய சாட்சியாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன ...

 

வைகறை தொழுகை முடிவுக்கு முன்பே ஆற்றில் குளித்துவிட்டு கரையேறும் பெண்கள் கூட்டம் ..,ஆறாம் பெருநாளைக்குஆற்றங்கரையில் கூட்டமாய் உறவுகளுடன் இணைத்துக்கொள்ளும் நேசங்களும் ,குழு குழுவாய் குழந்தைகள் நீரில் நீச்சலடித்து ,மீன்பிடித்து ,ஊற்றுநீர் எடுத்து மணல்வீடு கட்டி ,வாழை மட்டைகளுடன் மிதந்த நீர்வெளி நாகரீகங்கள் வற்றிப் போன ஆற்றுடன் சேர்ந்து உலர்ந்துதான் போயிருக்கின்றன ...

 

திருமண நேரங்களில் மூதாதையர்களை நினைவு கொள்ளும் நாகரீகங்கள் மண்ணுடையார் பிரார்த்தனைகளாய் தமிழர் கலாச்சாரத்தை இஸ்லாமிய வழிபாட்டுடன் இணைத்து பயணித்த வாழ்க்கை பண்பாட்டை பறைசாற்றும்.

 

இன்னும் வயது முதிர்ந்தோருக்காக , வயது வந்த பெண்டீர்க்காக திருமண விருந்துகளில் இல்லம் தோறும் உண்டியனுப்பும்எடுப்பு சாப்பாட்டு பழக்கங்கள் விருந்தோம்பலின் இலக்கணத்தை  எடுத்தியம்பும் உலகிற்கு.

 

சிறு சிறு குழந்தைகளும் வேப்பம்முத்துக்களை பொறுக்கி, உண்டியலை நிறைத்து படுகள நாட்களில் செலவிட்டு மகிழ்ந்த தன்னம்பிக்கை தருணங்கள்

பணகுடியில் இருந்து பஞ்சு எடுத்து கை ராட்டில் நூலாக்கி ..சுய உழைப்பில் வறுமையை உடைத்து நிமிர்ந்த பெண்களின் தன்னம்பிக்கை முதுகெலும்புகள்

ஒரு மௌன வீட்டு வரலாறாய் உமலுக்குள் ஒளிந்து கிடக்கும் ..

 

ஒவ்வொரு தெருவுக்கு என்று ஒவ்வொரு கந்தூரிகள் .ஒவ்வொரு கந்தூரியிலும் ஒரு சேரும் உறவுகள் . ஊரே கொண்டாடும்ஊர் கந்தூரி வேறு .... எதிலும் ஒன்று சேர்ந்தே வாழ்ந்திட்ட காலம்எல்லாம் அஞ்ஞான நாட்கள் என்று ஒதுக்கப்பட்டு ..கடந்த காலங்களுடன் கழுவப்பட்டு விட்டன....

 

வீரம் செறிந்த மண் இது இளைஞர்கள் சிலம்பு பயிற்சி பெற்று கற்றதை களப்படுத்தி (சண்டை களத்திற்கு ஏற்ப கற்றதை பண்படுத்தல்) கொண்ட படுகள நாட்கள் எல்லாம் ஜன்டோரா ஓசைக்கு மயங்கி ஆடும் மாயகுழிக்குள் எப்படி விழுந்து சிறைபட்டன ?

 

நாகரிகங்கள் உடைக்கபட்டன வீட்டு முற்றங்களை போலவே…இருப்பினும் புதிய நாகரீக சாளரங்களை கூடத்தில் எழுப்ப கற்று கொண்டோம் வளைகுடா விசாக்களின் பயணங்களில் ....

 

திண்ணை பள்ளிகளில் ஓதல் பயில பலகையும், எழுதியதை அழிப்பதற்கென பயன்படுத்தப்பட்ட மாலா மண்ணும்மட்டும்தானா மறைந்து போயிருக்கின்றன?  மவ்லிது ,ரசுல்மாலை, தலைபாதிஹா, கம்சு கலாச்சாரம் எல்லாமே எப்படி மறைந்து தென்று யாருக்கும் தெரியவில்லை

 

வைகறை தொழுகைக்கு பின்னும் முன்மாலை தொழுகைக்கு பின்னும் பரப்பரப்பாய் இயங்கிய ஊர் இன்று  இளைப்பாற கற்றுக்கொண்டதா....  சோம்பலில் சிக்கி கொண்டதா ........ யாரிடம் கேட்பது ... ஏனிந்த நிசப்த நிலை..

 

பருவக்காற்றில் பறக்க விடப்பட்ட பட்டங்களும் காத்தாடிகளும்  வெட்டப்பட்ட காக்காமுள்ளுடன் காணாமல் போய்விட்டதா..?

 

ஆரவாரம் குறைந்த குழந்தைகளிடம் முகம் காட்ட வெட்கி திசைமாறி விட்டதா பருவக்காற்று..?

 

வெவ்வேறு திசைக்கு திரவியம் தேடி இடைக்கால புலப்பெயெர்ச்சியில் ஊர் கடந்த பிள்ளைகள் சொந்த ஊருக்கு செல்வங்களுடன் சுமந்து வந்த அந்நிய நாகரிகங்கள் ஊருக்குள் தெளிக்கப்பட்ட பின் ,

செல்வத்தின் அடையாளங்களாய் வீடுகள் உயர்ந்தபின்

 நவரா சத்தத்தில் மசூதிக்கு விரைந்த காலங்கள் கடந்து ஒலிபெருக்கி ஓசையிலும் செவிடான காதுகள் தானே மிஞ்சியிருக்கின்றன .

 

இயக்கங்களால் நாம் இயங்க கற்றபின்,

உறவுக்குள் பேச்சுகுறைந்தபின்,

தனித்தனிதீவுதிட்டுகளாய் பிளவுற்று போனபின்,

நவீன வசதியுடன் நான்குசுவற்றுக்குள் வாழ்வை முடக்க கற்றபின் வற்றிப்போய் விட்டன.

 

வளைகுடா நாட்டிலிருந்து ஊர் வரை அன்பையும் பாசத்தையும் இணைக்க தெரிந்த என்னால் இன்று வட்டகைகுள்ளே விழுந்த விரிசல்களையும் சேர்க்க தெரியாமல் மௌனமாகத்தான் உறைந்து போகிறேன் காலத்தின் சாட்சிபோல...

 

தூரத்தில்இருந்து வரும் கடிதங்களும் கடிதங்களில் புதைந்திருந்த நேசங்களும்  .. பட்டினிவயிறுடன் துருப்பிடிக்க பட்டிருந்தன அஞ்சல் பெட்டிகளும் உறவு மறந்த உள்ளங்களைபோல ...

 

பட்டினி வயிறுடன் நேசங்களின் உணர்வுகளையும் ,பாசங்களின் பாசைகளையும் , சாந்தியும் சமாதானத்தையும் உங்கள் உதடுகளின் உச்சரிப்பை தாண்டி உள்ளங்களிலும் தேடி ஏங்கி தவிக்கும் நான்......

 

உன்னுடன் ஒன்றென கலந்த,

 அஞ்சல் குறியீட்டு எண் 627103





Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..