Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
கொய்யாலா ! சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம்.
Posted By:Hajas On 9/3/2014 6:43:16 AM

flagyl

flagyl

கொய்யாலா ! சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம்.

சென்னை தனது 375-வது தினத்தைக் கொண்டாடி வருகின்றது. இந்தியாவில் எந்தவொரு நகரவாசிகளும் தமது நகரத்தை இந்தளவுக்கு நேசிப்பார்களா எனத் தெரியாது. ஆனால் சென்னையில் வாழும், வாழ்ந்த எவருமே சென்னையை வெறுக்கவே முடியாது. அது தான் சென்னையின் தனிச்சிறப்பே ஆகும். பழமைக்கும் புதுமைக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் சென்னைக்கு என நானூறு ஆண்டு கால வரலாறும், தனித்துவமான கலாச்சார பின்னணியும் இருப்பதும் வியப்பான உண்மையாகும். 
 
வந்தாரை வாழ வைக்கும் சென்னை என மிகப் பெருமையாக இந்த நகரத்தைப் பற்றிக் கூறுவார்கள். இப்படிச் சொல்வது எவ்வளவு பொருத்தமானது என்பதை இங்கு வாழும் ஒவ்வொருவரும் நன்கு அறிவார்கள். சென்னை உலகத்தரத்திலான துபாயோ, சிங்கப்பூரோ கிடையாது தான். ஏனெனில் சென்னை என்பது சென்னை மட்டுமே. அது மிகவும் தனித்துவமானது. 
 
தமிழைக் காக்கும் சென்னை: தமிழர்கள் தம் மொழி மீது அதிகப்பற்று உடையவர்கள் என்பது உலகறிந்த உண்மை. தமிழர்கள் மட்டுமல்ல உலகில் தன் மானம் மிக்க எந்தவொரு இனமும் தமது மொழி, மரபு, பண்பாடு உட்பட தமது மூதாதையர் அளித்த அனைத்தையும் கொண்டாடுவதோடு அவற்றை போற்றி பாதுகாக்கவும் செய்வார்கள். ஒரு மொழி என்பது தொடர்ந்து பல நூறாண்டு வாழ்வது என்பது பெரும் சவாலான விடயமாகும். ஒவ்வொரு நாளும் ஒரு மொழி உலகின் எங்கோ ஒரு மூலையில் அழிந்து வருகின்றது. மேலும் பல மொழிகளைப் பேசுவோர் தமது தாய் மொழியைக் கைவிட்டு அரசியலாதிக்க, பொருளாதார வளமிக்க மொழிகளைப் பேசத் தொடங்கியும் விட்டனர். 
 
உலகின் பல்வேறு நகரங்களின் தாய்மொழியானது கால ஓட்டத்தில் அழிந்து போய்விடுகின்றன. சில மொழிகளோ ஆதிக்க மொழிக்குள் புதைந்து காணாமல் போய் விடுகின்றது. ஒரு சில மொழிகள் ஆதிக்க மொழிகளின் தாக்கத்தை உள்வாங்கி, அடிப்படை நிலையில் மட்டும் தனது தனித்துவ பாங்கோடு பயணிக்கின்றது. காலப் போக்கில் இந்த மொழிகள் முற்றாக கரைந்து விடக் கூடும்.  இவ்வாறான நிலையில் ஒவ்வொரு மொழியும் தத்தமது அரசியல், பொருளாதார சூழலுக்கு ஏற்ப தம்மை பாதுக்காக்கவே முயல்கின்றது. அதன் மூலம் தமது தனி அடையாளத்தையும், அம் மொழி வாழ்ந்து கொண்டிருக்கும் மண் மீதான உரிமையையும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

மொழிக்கு அந்த மொழி பேசும் மக்கள் தேவை, அந்த மக்கள் அந்த மொழியை பேச வேண்டும். அந்த மக்கள் காலச் சக்கரத்தின் ஆதிக்கத்தில் உயிர்ப்புடன் இருந்தாலே அவரது மொழியும் வாழும். அந்த மக்கள் தமது பொருளாதாரத்தையும், அரசியல் அதிகாரத்தையும் இழந்து விட்டால் அவரது மொழியும் மாய்ந்து விடும். இந்த வகையில் சென்னையர்கள் கெட்டிக்காரர்கள். பார்ப்பனர்கள், பல்லவர்கள், வடமொழியினர், தெலுங்கர், கன்னடர், உருதினர், ஆங்கிலேயேர் என தொடர்ந்து வேற்று மொழி ஆதிக்கத்தின் ஆட்சிக்குள் சிக்கிக் கொண்டாலும். இறுமாப்புடன் அழிந்து போகாமல், இலகுத் தன்மையோடு வந்தாரினையும் வசப்படுத்தி தமது பொருளாதாரம், அரசியல் அதிகாரம் போன்றவற்றை பெற்றும் தமது மொழியை முற்றாக மறக்காமல், அழிக்காமல் தொடர்ந்து பேசி வருகின்றனர் என்பதே சென்னையின் புகழாகும்.

அந்த வகையில் இந்திய விடுதலையின் பின் இந்தி ஆதிக்கம் ஏற்பட்ட போது வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது, ஆனால் இன்று சென்னையில் நவீன ஆங்கிலத் தாக்கம் மிகுந்து இருக்கின்ற போதும் கால வெள்ளத்தில் ஆங்கிலத்தின் வலு குறையும் போது சென்னையின் தமிழ் அழியாமல் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே உயிர்வாழும்.

இன்று மும்பையும், ஐதரபாத்தும், பெங்களூரும் தனது சொந்த மொழிகளை முற்றாக இழந்து விட்டது. சொந்த அடையாளங்களை தொலைத்து நிற்கின்றது. வந்தாரின் மொழியாதிக்கமும், கலாச்சார ஆதிக்கமும் அங்கு மிக அதிகம். ஆனால் சென்னையிலோ அவ்வாறு எதுவும் நடக்கவில்லை மாறாக வந்தாரே சென்னையைக் கொண்டாடும் நிலை ஏற்பட்டது.  ஏனெனில் இந்தியாவிலேயே இந்தி ஆதிக்கமோ, வேறு எந்த மொழி ஆதிக்கமோ இல்லாத ஒரே நகரம் சென்னை தான். சொல்லப் போனால் தமிழின் அழகியலும், தமிழின் தனித்துவமும், தமிழர்களின் குறிப்பாக சென்னையர்களின் விருந்தோம்பல் குணமும் தெலுங்கர்களையும் தமிழர்களாக மாற்றி விட்டது. மார்வாரிகளைக் கூட தமிழ் படிக்க வைத்துள்ளது. வந்தார்கள் எவரும் தமது ஆதிக்கத்தை இங்கு செலுத்தவில்லை, மாறாக உள்ளூர் வாசிகளோடு இரண்டறக் கலந்துவிட்டார்கள். இலங்கையத் தீவிரவாதிகள் சென்னையில் வன்முறைக் கலாச்சாரத்தை விதைத்த போதும் கூட சென்னை மக்கள் இலங்கை அகதிகளை அன்போடு அரவணைத்துக் கொண்டார்கள் என்பதும் தனிச் சிறப்பு. 
 
சென்னையின் குப்பங்களில் வாழும் ழகரம்: சென்னையின் பூர்வ மொழி வழக்கினை பரிகாசம் செய்யாதவர்கள் கிடையாது. திரைப்படம், இலக்கியம், இங்கு குடியேறிய பலரும் கூட சென்னையின் தமிழை கிண்டல் செய்வார்கள். ஆனால் தமிழகத்தின் எந்தவொரு பகுதியை விடவும் பிற மொழி ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து இருந்த போதும், எத்தனையோ இக்கட்டான நிலையிலும் இங்குள்ள உழைக்கும் மக்கள் தமது தாய்மொழியை மறக்கவில்லை. ஆம் பிறமொழி கலப்புகள் இங்கு நிறையவே உண்டு. ஆனால் அவற்றை எல்லாம் தாக்குப் பிடித்து தக்க வைத்து, சந்தர்பங்களில் சுத்தம் செய்து கொண்டு மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்த மொழி சென்னை மொழி என்றால் அது மிகையாகாது. சென்னை உட்பட தொண்டை நாட்டுத் தமிழில் இன்றளவும் தமிழின் சுத்தமான ஒலியான ழகரத்தை சரியாகவே உச்சரிக்கின்றனர். ஒரு சில இடங்களில் அது வழுவி யகரம் போல பிறர் காதுகளுக்கு கேட்பதுண்டு. ழகரத்தை ளகரம் எனப் பேசிப் பழகிய பிற வழக்குத் தமிழர்களுக்கு அச்சு அசலானா retroflex ழகரம் யகரம் போல மயக்கம் தருவது இயல்பே.
 
மடராசன் மேடுராசன் மெட்ராஸ் கட்டுக்கதை: அரைவேற்காட்டு ஆராய்ச்சியாளர்கள் சிலர் முட்டாள் தனமான ஆராய்ச்சிகளோடு கிளம்பியுள்ளார்கள் போலும். மெட்ராஸ் தமிழாம், சென்னை தெலுங்காம். கொடுமைடா..  மெட்ராஸ் என்பதற்கு மேடுராசன்பட்டினம் என்று பெயர் இருந்ததாக எவ்வித சான்றும் கிடையாது. நரிமேடு என்ற பெயர் இருந்தத்தாக செவி வழி தகவல்கள் உண்டு.  இவர்களின் வழியில் ஆராய்ச்சி செய்தால் சதுரங்கப்பட்டினம் என்ற சட்ராஸ் என்பதை சேடுராசன்பட்டினம் என மாற்றிவிடுவார்கள் போல. ஹிஹி..
 
மற்றபடி மடராசன் என்ற மீனவக் கதையும், போர்த்துகேயே பெயர், இஸ்லாமிய மதராஸா தான் மெட்ராஸ் ஆனதாக கூறியது எல்லாம் ஆதாரமற்றவை என்பதை ஏற்கனவே பலர் நிராகரித்துவிட்டனர்.  மெட்ராஸ் என ஏன் பெயர் வந்தது என பிரித்தானியோரோ, அதற்கு முன் எந்தவொரு ஆய்வாளரோ தகவல் தரவே இல்லை. 
 
சென்னை நகரம் உருவான போது, வெள்ளையர் நகரம், கறுப்பர் நகரம் என இரண்டு உருவாகியது. வெள்ளையர் நகரம் மெட்ராஸபட்டணம் என அழைக்கப்பட்டது கறுப்பர் நகரம் சென்னாப்பட்டணம் என ஆரம்பம் முதலே அழைக்கப்பட்டது. 
 
சென்னையை தெலுங்காக காட்டும் சதி: "சென்னை மறுகண்டுபிடிப்பு" நூலில் "சென்னை நகரின் வேர் தெலுங்கு" எனும் சர்ச்சைக்குரிய தகவல் இருக்கிறது. 
 
"கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஆண்ட்ரூ கோகனும் ஃபிராசிஸ் டேயும் வெங்கடப்பா, ஐயப்பா என்ற வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக்குகள் பூந்தமல்லியில் அளித்த நிலத்தை நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் சோழமண்டலக் கடற்கரையில் பிரிட்டிஷ் ஆட்சிபீடமாக வளர்ந்த ஒரு நிறுவனத்தை அந்த இடத்தில் அமைத்தனர். சென்னையின் கதை இங்கே ஆரம்பிக்கிறது" என்று அவர் குறிப்பிடுகிறார்.
 
கூடவே "ஆங்கிலேயர்களுக்கு சென்னைப் பகுதியை அளித்த சந்திரகிரி ராஜாவின் உள்ளூர் நாயக்குகளான தாமர்ல சகோதரர்கள், சென்னப்ப நாயக் என்ற தங்களது தந்தையின்  ஞாபகார்த்தமாக அந்தக்குடியிருப்புக்கு சென்னப்பட்னம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினர்" என்று பெயர்க் காரணத்தைக் குறிப்பிடும் எஸ். முத்தையா, அதன் தொடர்ச்சியாக "நகரின் வேர் தெலுங்காக இருந்தாலும், தனித்தமிழ் விசுவாசிகள் இந்தப்பகுதியை சென்னை என்று அழைக்கத் தொடங்கினர்" என்கிறார். (பக்கம் 14)
 
இதே போன்று, ஆந்திர பிரதேசம் தோன்றியது குறித்த வீக்கிபீடியா கட்டுரையில், "வரலாற்று ரீதியிலும் புவியியல் ரீதியிலும் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி. ஆங்கிலேயர்கள் இங்கே தொழிற்சாலை அமைக்க 1639 இல் அனுமதி கேட்டது, இப்பகுதியை ஆட்சி செய்த வெலமா சாதியைச் சேர்ந்த தாமர்ல வெங்கடாத்ரி நாயகுடுவிடம்தான். 1920 ஆம் ஆண்டுக்கு பின்பு சென்னை மாகானத்திலும் தேசிய அரசிலும் தமிழர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் விளைவாகவே சென்னை தமிழ்நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
 
மெட்ராஸ் மேட்டர்ஸ் எனும் நூல் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி என்கிறது. "1998 ஆம் ஆண்டில் மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என்று மாற்றும் போது 'சென்னை' என்பதன் மூலம் தமிழ் அல்ல என்பதற்கான ஆதாரங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த தெலுங்கு பேசும் சென்னப்ப நாயக்கர் எனும் சந்திரகிரி அரசரின் தளபதி ஆங்கிலேயருக்கு அதனை அளித்ததால்தான் அவரது பெயரில் சென்னை நகரம் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
 
நரசய்யாவின் மதராசப்பட்டினம் நூலில் "தாமர்ல வெங்கடாத்ரி வம்சத்தினர் காளஹஸ்தி ராஜாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவ்வம்சத்தில், ஐந்தாவதாக வந்தவர் தாமரல குமார சின்னப்ப நாயுடு என்பவர். இவர் பெயரில்தான் சென்னக்குப்பம் என்ற ஒரு இடம் இருந்ததாகவும் அறிகிறோம். இந்தப் பெயர்தான் சென்னை என்ற பெயரின் ஆரம்பமும் ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 33).
 
ஆக மொத்தத்தில், வெங்கடப்பா நாயக்கர் என்பவர் ஃப்ரான்சிஸ் டேயிடம் சென்னையை அளித்ததாலும், அவரின் தந்தைப் பெயரே "சென்னப்ப நாயக்கர்" என்பதாலும் - அவர்கள் தெலுங்கு நாயுடு அல்லது வெலமா சாதியினர் என்கிற கருத்தில் - "சென்னை நகரின் வேர் தெலுங்கு" என்றும், "சென்னை ஆந்திராவின் பகுதி" என்றும் இப்போதும் பேசப்படுகிறது.
 
சென்னை என்ற பெயருக்கு காரணமானவர்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல. சென்னப்ப நாயக்கர் ஒரு தமிழரே! சோழர்கள், பல்லவர்கள், காடவராயர்கள், கடைசியாக தாமல் நாயக்கர்கள் என வரலாற்றின் பெரும்பாலான காலம் தமிழர்களாலேயே சென்னைப்பகுதி ஆளப்பட்டு வந்தது. இந்த வரலாற்றை மாற்றி, சென்னை தெலுங்குப் பகுதி என பொய்யாகக் கட்டமைக்கின்றனர். அதற்கு 'சென்னை' பெயரைப் பயன்படுத்துகின்றனர்.  
 
சென்னாக்குப்பமும் தமிழ் நாயக்க வன்னியர்களும்:  தாமல் நாயக்கர்கள் என்போர் தமிழ்நாட்டில் தற்போது காஞ்சிபுரத்துக்கும் ராணிப்பேட்டைக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாமல் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்த ஊர் பல்லவர் காலத்தில் தாமர் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள தாமல் ஏரி பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்டது.
 
"தாமல், பழமையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி மாநகரத்தின் அரணாக விளங்கியுள்ளது. ஏனெனில், இது வடக்கு மற்றும் மேற்குப்புறத்திலிருந்து வரும் அரசர்களின் படையை காஞ்சி செல்லும் முன் எதிர்கொள்ளும் ஓர் போர்க்களமாக இருந்துள்ளது...இங்கு வன்னியர் (அல்லது நாயக்கர்) குலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்....
 
தாமலில் அதிகளவு காணப்படும் இனமான நாயக்கர், விஜயநகரப் பேரரசு ஆட்சியில் சிறந்த போர் வீரர்களாக விளங்கியுள்ளனர். இவர்களே காஞ்சிக்கு எதிரான படையெடுப்புகளை தாமலில் முறியடித்து காஞ்சியைக் காத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. இவர்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் போர் வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும், ஆளுனர்களாகவும் மற்றும் நாயக்க அரசர்களாகவும் இருந்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறது சென்னை சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேசனின் வெளியீடான "வரகீசுவரர் கோவில்" எனும் தாமல் வரலாற்று நூல். இந்தநூலை எழுதியவர் சி.பி.ராமசாமி அய்யரின் வாரிசான முனைவர் நந்திதா கிருஷ்ணா.
 
தாமல் கிராமத்தில் இப்போதும் வன்னிய நாயக்கர்களே மிகப் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.
 
விஜயநகரப் பேரசின் வழிவந்தவர்களான சந்தரகிரி அரசர் இரண்டாம் வெங்கட்டாவின் ஆட்சிக்காலத்தில் அவரது தலைசிறந்த தளபதியாக விளங்கியவர் தாமல் சென்னப்ப நாயக்கர். அதன் காரணமாகவே அவர் விஜயநகர அரசின் கீழ் சிற்றரசர் நிலைக்கு உயர்ந்துள்ளார். சென்னப்ப நாயக்கரின் புகழைப் போற்றும் வகையில் தூசி மாமண்டூரில் சென்னசாகரம் எனும் ஏரி வெட்டப்பட்டது. அவரது பெயராலேயே சென்னக்குப்பம் எனும் ஊரும் அமைக்கப்பட்டது. அவருக்குப்பின்னர் அவரது மகன் வெங்கடப்ப நாயக்கர் சிற்றரசர் அல்லது ஆளுனராக இருந்துள்ளார். அவரை பாளையக்காரர் என்றும் குறிப்பிடுகின்றனர்.
 
ஆங்கிலேயர்கள் சென்னை நகரில் தமது நிறுவனத்தை அமைக்க முயன்றபோது தாமல் வெங்கடப்ப நாயக்கர் வந்தவாசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். அவருக்கு கீழே தாமல் அய்யப்ப நாயக்கர் பூந்தமல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் (இந்த அய்யப்ப நாயக்கர் பெயரால் அமைந்த ஊர்தான் அய்யப்பன் தாங்கல்). இவர்களிடம் 15000 வீரர்களைக் கொண்ட பெரும் போர்வீரர் படை இருந்துள்ளது. எனவே, சந்தரகிரி அரசரிடம் மிகுந்த ஆதிக்கம் செலுத்துபவராக இவர்கள் இருந்துள்ளனர்.
 
பழவேற்காட்டுக்கும் சாந்தோமுக்கும் இடையிலான கடற்கரை இவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களிடம் தான் ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று தமது நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். உண்மையான  சென்னையின் கதை இங்கேதான் ஆரம்பிக்கிறது (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852)
 
"ஒருகட்டத்தில் தாமல் நாயக்கர்கள் விஜயநகர அரசரை எதிர்க்கும் அளவிற்கும் சென்றுள்ளனர். 1642 ஆம் ஆண்டில் விஜயநகர அரசுப்பொறுப்பை ஏற்ற விஜயநரத்தின் கடைசி அரசரான சிறீரங்க ராயரை தாமல் வெங்கடப்ப நாயக்கர் ஏற்கவில்லை. இதனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்தார் சிறீரங்க ராயர். ஆனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரின் தம்பியும் அவரது உறவினர்களும் நெருக்குதல் கொடுத்ததன் காரணமாக அவரை விடுதலை செய்து மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார் சிறீரங்க ராயர்" என்கிறது தஞ்சை நாயக்கர்கள் எனும் வரலாற்று நூல் (Nayaks of Tanjore, By V. Vriddhagirisan 1942)
 
'1756 ஆம் ஆண்டு சென்னை சைனா பசார் எனும் இடத்தில் கட்டப்பட்ட புதிய நகரக் கோவில் எனும் கோவிலுக்காக தாமல் மரபில் வந்த காளஹஸ்தி ராஜாவின் சார்பில் 100 பகோடாக்கள் அளிக்கப்பட்டதாக' சென்னையின் முந்நூறாவது ஆண்டுவிழா மலர் 1939 கூறுகிறது. (The Madras Tercentenary Commemoration Volume,  By Madras Tercentenary Celebration Committee, 1939) 
 
ஆங்கிலேயர்களுக்கும் தாமல் வெங்கடப்பா நாயக்கர்களுக்கும் இடையேயான உடன்படிக்கை பற்றி 1852இல் விரிவாகக் குறிப்பிட்டுள்ள ஹென்றி டேவிட்சன் லவ், "தாமல் குடும்பத்தினரை இப்போது காளஹஸ்தி ராஜா பிரதிநிதிதுவப்படுத்துகிறார்" என்று குறிப்பிடுகிறார். (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852) அதாவது, தாமல் பரம்பரையினர் வலுவிழந்த பின்னர் அவர்களது உரிமைகளை காளஹஸ்தி ராஜா பயன்படுத்தியுள்ளார்.
 
ஆக, காளஹஸ்தியில் வாழ்ந்த தெலுங்கு வெள்ளாமர் சாதி வெலுகோட்டி ஜமீந்தார்கள் பிற்காலத்தில் தாமல் மரபினர் என்று கூறப்பட்டுள்ளனர். இந்த பிற்காலத் தகவலை வைத்துக்கொண்டு - தாமல் சிற்றரசர்கள் காலஹஸ்தியைச் சேர்ந்தவர்கள் என்றும், அதனால் அவர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்றும் வரலாற்றை தலைகீழாக மாற்றியுள்ளனர்.
 
 
சென்னிக் குப்பத்து சென்ன கேசவ பெருமாள் திருக்கோவில்: வெள்ளையர்கள் உருவாக்கிய செண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகே சென்னா கேசவப் பெருமாள் கோயில் அமைந்திருந்தது. இன்றளவும் அது அங்கு உள்ளது. அந்த பகுதி ஜார்ஜ் டவுன் என்று அழைக்கப்படுகின்றது. 
 
சென்னா கேசவப் பெருமாள் வீற்றிருந்தப் பகுதி சென்னிக் குப்பம் என அழைக்கப்பட்டு பின்னர் அது சென்னாப் பட்டினம் என மாறியது. இந்த பெருமாளின் பெயரில் உள்ள சென்னா என்ற நாமமே பின்னர் சென்னை என மாறி முழுச் சென்னைக்குமான பெயராக உருவாகியது.  சென்னா என்றால் கன்னடத்திலும், தெலுங்கிலும் நல்லது, அழகு, அருமை என்ற பொருள் இருக்கின்றது. இதன் வேர்ச்சொல் தமிழில் இருந்து வந்ததாகும். 
 
சென்னையில் பட்டணம் பெருமாள் கோவில் எங்கிருக்கிறது என்று விசாரித்தால், நிச்சயம் உங்களை ஏற இறங்கப் பார்ப்பார்கள். ஆனால் ஒரு காலத்தில் இந்த நகரின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்திருக்கிறது இந்தக் கோவில். அவ்வளவு ஏன், மெட்ராசிற்கு சென்னை என்ற பெயர் வரக் காரணமே இந்த கோவில்தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
 
மெட்ராஸ் என்ற மணல்வெளியில் கிழக்கிந்திய கம்பெனியார் குடியேறுவதற்கு முன்பிருந்தே திருவொற்றியூர், மயிலாப்பூர் போன்ற இடங்களில் புராதன கோவில்கள் இருந்தன. ஆனால் இவை எல்லாம் அப்போது மெட்ராஸ் என்ற எல்லைக்குள் வரவில்லை. அந்த வகையில் மெட்ராஸ் நகருக்குள் கட்டப்பட்ட முதல் பெரிய கோவில் சென்ன கேசவப் பெருமாள் கோவில்தான்.
 
தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினர். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது.ஆங்கிலேயர்கள் 1639ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதைத் தொடர்ந்து சென்னை நகரம் உருவானது.1646ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை 19 ஆயிரம். 
 
ஃபிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் சந்திரகிரி மன்னரிடம் இருந்து இந்த பகுதியை 1639இல் குடிக்கூலிக்கு பெற உதவியாக இருந்த திம்மண்ணா என்ற வணிகர்தான் இந்த கோவிலைக் கட்டியவர். 1640களில் தாம் கட்டிய இந்த கோவிலை, ஏப்ரல் 24, 1648இல் நாராயணய்யர் என்பவருக்கு திம்மண்ணா தானமாக அளித்ததற்கான ஆவணங்கள் இருக்கின்றன. இந்த கோவில் அப்போது கோட்டைக்கு வெளியே தற்போது உயர்நீதிமன்ற கட்டடம் இருக்கும் இடத்தில் இருந்தது. சென்னையின் பூர்வகுடிகள் வசித்த அந்த பகுதி முழுவதும் கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்டது. அந்த பகுதி சென்னாப்பட்டணம் என 1649-யிலேயே அழைக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக எஸ். முத்தையா தெரிவிக்கின்றார்.

திம்மண்ணாவின் ஆவணங்களில் சென்ன என்றல்ல சென்னை என்று தமிழில் தான் எழுதப்பட்டிருப்பதை JBP More அவரே தெரிவிக்கின்றார்.
 
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கிருந்தபடி சென்னைவாசிகளுக்கு அருள் பாலித்த சென்ன கேசவப் பெருமாளுக்கு 1757இல் ஆபத்து வந்தது. அடிக்கடி கோட்டையைத் தாக்கும் பிரெஞ்சுப் படைகளை சமாளிப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு யோசனை தான் இந்த ஆபத்தை வரவைத்தது. கோட்டையைச் சுற்றி இருக்கும் அனைத்து கட்டடங்களையும் இடித்து தரைமட்டமாக்கிவிட்டால் எதிரிப் படைகள் தூரத்தில் வரும் போதே உஷாராகிவிடலாம் என்பதுதான் அந்த யோசனை.
 
இதன்படி கோட்டைக்கு வெளியில் இருந்த கருப்பர்நகரக் குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சென்ன கேசவப் பெருமாளும் இதற்கு விதிவிலக்கல்ல என்று சொல்லிவிட்டது கிழக்கிந்திய கம்பெனி. ஒரு வழியாக கோவிலை இடித்து விட்டார்களே தவிர அதனால் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பை கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களால் சமாளிக்க முடியவில்லை. எனவே தற்போதைய பூக்கடை பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட கருப்பர் நகரத்தில் சென்ன கேசவப் பெருமாளுக்கு கோவில் கட்டித் தருவது என முடிவு செய்யப்பட்டது.
 
லார்ட் பிகட்டுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த மணலி முத்துகிருஷ்ண முதலியார், இன்றைய பூக்கடை பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை இதற்காக தானமாகக் கொடுத்தார். மேலும் சில இடங்களை அதற்குரிய மாற்று இடங்களைக் கொடுத்து உரியவர்களிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி பெற்றுத் தந்தது. இவ்வாறு சென்ன கேசவப் பெருமாள் கோவிலுக்காக சுமார் 24,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இதுதவிர 1173 பகோடாக்களையும் (அன்றைய பணம்) கம்பெனி தானமாக வழங்கியது. மணலி முத்துகிருஷ்ண முதலியார் தமது பங்காக 5000 பகோடாக்களை அளித்ததோடு உள்ளூர்வாசிகளிடம் இருந்து நன்கொடையும் வசூலித்து மொத்தம் 15,000 பகோடாக்களை சேகரித்தார். இந்த பணத்தைக் கொண்டு 1762இல் கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
 
இந்த இடத்தில்தான் கதையில் ஒரு திருப்பம். சென்ன கேசவப் பெருமாளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கூடவே சென்ன மல்லீஸ்வரருக்கும் ஒரு கோவில் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. ஆக இரண்டு கோவில்களைக் கட்டும் பணி களைகட்டியது. ஆனால் பல காரணங்களால் இந்த பணிகள் தாமதமாகி 1780 வரை நடைபெற்றன. கிழக்கிந்திய கம்பெனியார் உதவியால் கட்டப்பட்ட இந்த கோவில், கம்பெனி கோவில் என்றும் சில காலம் அழைக்கப்பட்டு வந்தது.
 
உயர்நீதிமன்றம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த மூலவர் தான் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் ஹைதர் அலியின் படை எடுப்பின்போது, பழைய கோவிலில் இருந்த மூலவரை காப்பாற்றுவதற்காக அதனை கோவில் குருக்கள், திருநீர் மலைக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் மணலி முத்துகிருஷ்ண முதலி ஈடுபட்டாலும், அவருக்கு அது கிடைக்கவில்லை. எனவே திருநீர்மலைக் கோவிலில் இருந்து ஒரு சிலையைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததாக நரசய்யா தனது மதராசப்பட்டினம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
 
அன்றில் இருந்து இன்று வரை மணலி முத்துகிருஷ்ண முதலியின் குடும்பத்தினர்தான் இந்த கோவிலை நிர்வகித்து வருகின்றனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மணலி கிருஷ்ணசாமி முதலியார், சரவண முதலியார் உள்ளிட்டவர்களின் கருங்கல் சிலைகள் இந்த கோவில் தூண்களில் நம்மை வரவேற்கின்றன.
 
ஒரு காலத்தில் ஜூன் மாதம் நடைபெறும் பெரியாழ்வார் திருவிழாவின் போது, நாகஸ்வர கலைஞர் ஒருவரை இங்கு வரவழைத்து 10 நாட்கள் இசைக் கச்சேரி வெகு விமர்சையாக நடத்தப்பட்டிருக்கிறது. 1917ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியாழ்வார் திருவிழாவில் பிரபல நாகஸ்வர கலைஞர் டி.என். ராஜரத்தினம் பிள்ளை இந்த கோவிலில் இசைக் கச்சேரி செய்திருக்கிறார். கோவிலுக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் தெருவில் நின்றபடி ஏராளமானோர் இந்த மயக்கும் இசையை ரசித்திருக்கிறார்கள்.
 
இப்படி நாகஸ்வரங்களை ரசித்துக் கொண்டிருந்த சென்ன கேசவப் பெருமாளும், சென்ன மல்லீஸ்வரரும் இப்போது தேவராஜ முதலி தெருவிலும், நைனியப்பன் தெருவிலும் விரைந்து கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்ஷாக்களின் மணி ஓசையை அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
சென்னி - சென்னை என்பதன் வேர்ச்சொல்: செம் என்றால் தூய்மை, அழகு, நல்லது என்ற பொருள் இருக்கின்றது. அதில் இருந்தே செம்மை, சென்னை என்ற பல சொற்கள் உருவாகின. செந்தமிழ், சென்னியர் என்ற சொற்களும் இவற்றில் இருந்து பிறந்தவை. சென்னி என்பது சோழர்களின் பெயர்களில் ஒன்றாகும். சென்னி என்றால் சிறப்பு, உயர்ந்தது என்ற பொருள் உண்டு. 
 
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே (புறநானூறு) என புறநானூற்றில் கூட உண்டு. பெரும்பூட் சென்னி என்ற சோழ மன்னன் பற்றி சங்க இலக்கியங்களில் கூட குறிப்புகள் உண்டு. 
 
இந்த சென்னி என்ற பெயரில் பல ஊர்கள் தமிழகத்தில் உள்ளது. சென்னி மலை என்ற ஊர் கூட உண்டு. வட தமிழகத்திலும், தென் கருநாடகம், தென் ஆந்திரப் பகுதிகளில் பல ஊர்களில் சென்னா கேசவப் பெருமாள் என்ற பெயரில் வைவண கோயில்கள் இருக்கின்றன. இந்த சென்னா என்ற சொல் சென், சென்னி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தது என்பதை தாங்கள் எந்த தமிழாசிரியரிடம் வினவி அறிந்து கொள்ளலாம். 
 
சென்னி என்றால் தலை, கன்னம், அழகிய முகம் என்ற பொருள் தரும் தமிழ் சொல் என தி பரோ, எமினோ உருவாக்கிய சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் திராவிட சொல்லகராதி காட்டுகின்றது. [ Ta. ceṉṉi head, summit, elephant's temple; ceṉṉi, ceṉṉai cheek. ]
 
என்ன பொருத்தம் பாருங்கள் பெருமாளுக்கு வைக்கப்பட்ட பெயராக இருந்து, அது அந்த கோவில் இருந்த குப்பத்துக்கு பெயராகி இன்று உலகின் மாபெரும் நகரங்களில் ஒன்றுக்கு பெயராகி விளங்குகின்றது. சென்னை என்ற இந்த நகரமே தமிழ்நாட்டுக்கு தலைநகரகாவும், தென்னிந்தியாவுக்கே அழகிய முகமாகவும் திகழ்கின்றது. வியப்பான ஒற்றுமை அல்லவா. 
 
அத்தகைய சென்னி என்ற சொல்லில் இருந்தே சென்னாக் குப்பம், சென்னாப் பட்டினம், சென்னை என்ற பெயர் உருவாகி இருக்கின்றது. தமிழர்களாகிய நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டு பெயரிட்டு மகிழ்ந்துள்ளோம். இன்று சென்னை என்றால் தெரியாத ஊரே இல்லை. 
 
இழிவான மதராசி உயர்வான சென்னைவாசி: மெட்ராஸ் என்ற பெயர் வடக்கில் அவமானப் படுத்தப்படும் ரீதியில் மதராசி என்ற இழிச்சொல்லாக மாறிவிட்ட நிலையில், அதனை மீண்டும் ஏற்பது தேவையற்ற ஒன்று. சென்னையின் புது அடையாளம் மிகுந்த உயர்ந்த நிலைகளில் இந்த நகரத்தை கொண்டு சென்றுள்ளது.  தொழில்நுட்பத் துறையில், வாகன் உற்பத்தித் துறையில், கல்வித் துறையில் என பல துறைகளில் சென்னை முன்னனியில் இருக்கின்றது.

சென்னை சூப்பர் கிங்கிஸ் அணிக்கு பின்னால் சென்னைக்கு ஓ ! போடு என்ற நிலைமை வந்துவிட்டது. மதராசி என்ற அடையாளங்கள் காணாமல் போய்விட்டது.

சென்னையில் இருந்து உலகத் தரத்தில் உயர்ந்துள்ள ஆஸ்கார் வென்று இந்தியிலும், தமிழிலும் இசை மாமேதையான ஏ. ஆர். ரகுமானின் நகரம் இது. உலக அரங்கில் தமிழின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி மலையாளிகள், கன்னடர்கள் கூட தமிழ் மெட்டுக்களை பாடும் அளவுக்கு கொண்டு வந்த கோலிவுட்டின் பிறப்பிடம் இது. 
 
இந்தி ஆதிக்கத்தை நிறுத்தி ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக மாற்றிய கட்டாய இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை கொண்டு வந்த நகரம் இது. உலகின் இரண்டாம் மிகப் பெரிய கடற்கரை இங்கு உண்டு. ஆசியாவின் மிகப் பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம், ஆசியாவின் மிகப் பெரிய நால்வட்ட மேம்பாலம் கிண்டி மேம்பாலம் ஆகியவை இங்குள்ளது. 
 
உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகமும் இங்குள்ளது. உலகின் இரண்டாவது நகராட்சியாக லண்டனுக்கு அடுத்தபடியாக உருவாக்கப்பட்டதும் சென்னை தான். 
 
இந்தியாவிலேயே குற்றங்கள் குறைந்த நகரமும் இது தான். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றம் மிகவும் குறைந்த நகரமும் இது தான். அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முதன் முதலாக உருவாக்கிய நகரமும் இதுவே.

கால்டுவெல், ஜியு போப் போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் மதம் பரப்ப வந்தார்கள், ஆனால் தமிழ் கற்று தமிழர்களாக மாறிப் போனார்கள் என்பது வரலாறு.

சென்னை தனது மொழியையும் விட்டுக் கொடுத்ததில்லை, மற்ற நகரங்கள் போல வந்தாரின் மொழியாதிக்கத்துக்குள் வீழாமல் வந்தாருக்கும் தமிழ் கற்றுக் கொடுத்த நகரம் இது. பல்லவர்கள் வந்த போதும், விஜயநகரத்தார் வந்த போதும், ஏன் ஆங்கிலேயே முதல் இன்றைய பிகாரிகள் வரை அனைவரும் இங்கு வந்ததும் தமிழைக் கற்றுக் கொடுத்த ஊர் இது.
தனது அடையாளத்தையும் விட்டுக் கொடுக்காமல், மொழியையும் விட்டுக் கொடுக்காமல், பொருளாதாரத்திலும் பின்னடையாமல் வீறு நடை போடும் சென்னை மாநகரம் இன்று உலகின் முக்கிய நகரமாக திகழ்கின்றது என்பது நமக்கு எல்லாம் மிகப் பெருமையான விடயமாகும். 375 என்ன சென்னை ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வாழும் என்பதே உண்மை. 
 
 
 
www.kodangi.net/2014/08/chennai-is-tamil-word-a-hidden-history.html



General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..