Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மோடியின் குஜராத்தும் – ஹிட்லரின் ஜெர்மனியும் ஒரு பார்வை
Posted By:Hajas On 11/30/2014 1:10:32 PM

mirtazapine 15mg buy online uk

mirtazapine buy dotnetcoimbatore.com

மோடியின் குஜராத்தும் – ஹிட்லரின் ஜெர்மனியும் ஒரு பார்வை

 
 

 

அடால்ஃப் ஹிட்லர் யூத இனப் படுகொலைகளை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது, கற்றறிந்த, நடுத்தர ஜெர்மானியர்கள் செயலற்று அமைதியாக நின்றனர் என்று வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தக் கனத்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். விஷயத்தின் விபரீதத்தை மக்கள் உணராமல் இருந்திருக்கலாம். அல்லது, ஹிட்லரின் பிரசாரத்தை நம்பி, 
நம் நன்மைக்காகத்தானே இவ்வாறு செய்கிறார் என்று நினைத்திருக்கலாம். அல்லது, ஓர் அரசை எதிர்த்து சாமானியர்கள் நம்மால் என்ன செய்துவிடமுடியும் என்று கையறு நிலையில் அனைத்தையும் சகித்துக்கொண்டு இருந்திருக்கலாம். காரணங்கள் அல்ல, விளைவுகளே இங்கு முக்கியம்.  யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்பது முக்கியம்.  ரகசியமாக 
அல்ல, எல்லோருக்கும் முன்னால் திட்டமிட்டு வதை முகாம்களை உருவாக்கி, யூதர்களைப் பட்டவர்த்தனமாக அழித்தொழித்தான் ஹிட்லர்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 2004) இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு குஜராத் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் உண்மையில் தீவிரவாதிகள் அல்ல; நடைபெற்றது போலி என்கவுன்ட்டர்தான் என்று சிபிஐ தற்போது அறிவித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக குஜராத்தைச் சேர்ந்த ஏழு காவல் துறை  அதிகாரிகள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடிமீண்டும் விமரிசன வட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறார்.
ஹிட்லர் என்னும் ஆளுமை உருவான கதையும் அவர் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறும் The Rise and Fall of Third Reich-ல் விவரிக்கப்பட்டுள்ளது. ஹிட்லர் ஏன், எவ்வாறு யூதர்களைத் தேர்ந்தெடுத்தான், எப்படி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுத்தான், யூத எதிர்ப்பை எப்படி ஒரு சித்தாந்ததமாக வடிவமைத்தான், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி எப்படித் தன் கனவைச் செயல்படுத்தத் தொடங்கினான் என்பது இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹிட்லரையும் நரேந்திர மோடியையும் ஒப்பிடுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.  மாறாக, ஹிட்லரின் ஜெர்மனியையும் மோடியின் இந்தியாவையும் அருகருகே நிறுத்தி வைத்து ஒப்பிட விரும்புகிறேன்.
யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் வெறுப்பு பிரசாரத்தை ஜெர்மானியர்கள் ஆட்சேபிக்கவில்லை. அதில் பெரிதளவும் உண்மை இருப்பதாக அவர்கள் நினைத்தனர். யூதர்களை ஜெர்மானியர்களாக அவர்களால் ஏற்கமுடியவில்லை. யூதர்களுக்குத் தேச பக்தி இல்லை என்றும் அவர்கள் தனியொரு குழுவாக இருக்கிறார்கள் என்றும் நமக்கு வரவேண்டிய வாய்ப்புகளை தட்டிப் பறித்துக்கொள்கிறார்கள் என்றும் ஜெர்மானியர்கள் நம்பினார்கள். இந்த பெரும்பான்மை நம்பிக்கையின்மீதே ஹிட்லர் தன் வெறுப்பு அரசியலைக் கட்டமைத்துக்கொண்டான். இந்த வெறுப்பு அரசியலைக் கொண்டுதான் அவன் யூதர்களைக் கொல்லத் தொடங்கினான்.
நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் இந்துக்களையே இந்தியர்களாகக் காண்கின்றனர். இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகவே அவர்கள் தொடர்ந்து முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். மோடி வெளிப்படையாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களில் உரையாடியிருக்கிறார். 2002 குஜராத் படுகொலைகளில் மோடிக்குப் பங்கு இருக்கிறது என்பது மட்டுமல்ல, 2002 சம்பவத்தை தனது உந்து பலகையாகப் பயன்படுத்தி மேலேழும்பி வந்தவர் அவர். சந்தேகத்துக்கு இடமின்றி அதிலிருந்து பெரும் ஆதாயமும் அடைந்திருக்கிறார்.
அந்த வகையில், ஹிட்லர், மோடி ஆகிய இருவருடைய எழுச்சியின் அடித்தளத்திலும் வெறுப்பு அரசியல் (அல்லது வெறுப்பு அரசியலும்) காணக்கிடைக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மோடி யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை என்பதை ஒரு வாதமாக முன்வைக்கமுடியாது. ஹிட்லரும்தான் யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக ஹிட்லரின் கரங்களில் படிந்த அதே ரத்தக் கறை மோடியின் கரங்களிலும் படிந்திருக்கிறது. அந்தக் கரங்களில் கறை அதிகம், இதில் குறைச்சல் என்று வேண்டுமானால் ஒருவர் வாதிடலாம்.
அல்ல, மோடியின் கரங்களில் கறையே இல்லை என்று சிலர் வாதிடும்போது தவிர்க்கயிலாதபடி ஜெர்மானியர்கள் நினைவுக்கு வந்துவிடுகிறார்கள். இப்போது இஷ்ரத் ஜஹான் வழக்கு பற்றிய விவாதங்களிலும்கூட இவர்கள் நரேந்திர மோடியைத் தப்புவிக்கவே ஆர்வமாக இருக்கிறார்கள். ‘இஷ்ரத் ஜஹான் மோதல் கொலை மோடிக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லையா? 2002 சம்பவத்தில் மோடி நேரடியாக ஈடுபட்டார் என்று எங்காவது நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறதா? (கரண் தாப்பருடனான முடிவுறாத டிவி பேட்டியின்போதும் மோடியே இதையே கேட்டார்). மோடியின் குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அந்த ஒரு சம்பவம் (2002) நீங்கலாக மோடிமீது ஏதாவது குற்றம் சுமத்த முடியுமா உங்களால்?’
நம் கண் முன்னால் ஒரு பெரும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதை ஒருவர் தூண்டிவிட்டிருக்கிறார் அல்லது பின்நின்று இயக்கியிருக்கிறார் அல்லது கண்டும் காணாமல் விட்டிருக்கிறார். குறைந்தபட்சம், அதிலிருந்து நேரடி பலன் ஈட்டியிருக்கிறார். இருந்தும் எப்படி அவரை நம்மில் சிலரால் உயர்த்திப் பிடிக்க முடிகிறது? அவரைத் தாங்கி பிடிக்கவேண்டும் என்று எப்படி, ஏன் சிந்திக்கிறோம்? ’குஜராத் மாதிரி வளர்ச்சி’ நம் கண்களைச் கூசச் செய்கிறதா? அழிவைவிட்டுவிட்டு வளர்ச்சியைமட்டுமே அன்னப்பறவைப் போல் நாம் உறிஞ்சி எடுத்து மகிழ்கிறோமா? என்றால், இப்படிப்பட்ட cherry picking மதிப்பீடுகளை ஹிட்லருக்கும்கூட நம்மால் அருளமுடியும் அல்லவா?
இந்துத்துவா கொள்கையோடு உடன்படுவதால் மோடியை உயர்த்திப் பிடிப்பவர்களைக்கூட புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், கற்றறிந்த, நடுத்தர வர்க்க இந்தியர்களில் ஒரு சாரார் மோடியை அவருடைய ‘குஜராத் மாதிரி வளர்ச்சிக்காக’ 2002-ஐ வசதியாக மறந்துவிட்டு ஆதரிப்பதைப் பார்க்கும்போது அச்சமே ஏற்படுகிறது. மோடியை உயர்த்திப் பிடிப்பதன்மூலம் இவர்கள் வெறுப்பு அரசியலையும்கூட சேர்த்தே உயர்த்திப்பிடிக்கிறார்களா? இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமிய வெறுப்பைத்தான் இவர்கள் மோடி ஆதரவாக முன்வைக்கிறார்களா? மீண்டும் மீண்டும் மோடியை idolize செய்வதன்மூலம் இவர்கள் தெரியப்படுத்தும் செய்தி என்ன? யூதர்களை அடியோடு வெறுத்த பலர் ஹிட்லரை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அறம் சார்ந்த விழுமியங்களை நாம் மீட்டெடுக்கவேண்டிய தருணமிது. ஹிட்லரின் ஜெர்மனி செய்த தவறை மோடியின் இந்தியா இழைக்கக்கூடாது.  குஜராத் அரசு ஆவணங்கள் சொல்வதைப் போலவே அந்த மாநிலம் வளர்ச்சியடைந்திருந்தாலும்கூட நாம் நரேந்திர மோடியை நோக்கி அறம் சார்ந்த கேள்விகளை எழுப்பியே தீரவேண்டும். 2002-ஐ நாமும் மறக்கக்கூடாது; மோடி அதனை மறந்துபோகவும் அனுமதிக்கக்கூடாது. மோடியின் செயல்களை நாம் நியாயப்படுத்தி பேசும் ஒவ்வொரு முறையும் நாம் வரலாற்றில் பல அடிகள் பின்னோக்கிச் செல்கிறோம். இப்படி பின்னோக்கி நகர்ந்து நகர்ந்து செல்லும்போது ஒரு கட்டத்தில் நாம் ஹிட்லரின் ஜெர்மனியைச் சந்திக்கவேண்டியிருக்கும்.
அறம் அத்தனை முக்கியமல்ல, வளர்ச்சியைக் காட்டினால் போதும் என்னும் அபாயகரமான செய்தியை அரசியல்வாதிகளுக்கு நாம் வெளிப்படுத்துவது இன்றைய சமூகத்தை மட்டுமல்ல இனிவரும் சமூகங்களையும் சேர்த்து பாதிக்கும். அதற்குத் துணை போன பெருமை மட்டும் நமக்கு எஞ்சி நிற்கும்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


மருதன்
நன்றி:-தமிழ் பேப்பர்

http://www.tamilthoothu.com/2014/02/blog-post.html



Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..