Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 1-5
Posted By:Hajas On 9/4/2015 3:58:13 AM

 எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள், சாபங்கள் மற்றும் பல........பாகம் 1 - 5

by : David Praveen

முகவுரை :

 

எகிப்தின் மர்மங்கள் கட்டுரையை தொடங்குவதற்கு முன்பு அது குறித்து சில வார்த்தைகள் எடுத்துப்போடலாம் என்று நினைத்தேன்.

என்னுடைய இயல்பின் காரணமாக (வாயை வைத்துக்கொண்டு சும்மாயில்லாமல் உரிமை, பொது நீதி, சமதர்மம் என்று பேசி, நடந்து எனக்கு நானே சூனியம் வைத்துக்கொள்வது) பத்து ஆண்டுகளில் ஏழு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறேன்.

நான் வேலை பார்த்த அனைத்து பன்னாட்டு நிறுவனங்களிலும் என்னுடைய சக ஊழிய நண்பர்களை வரலாற்று விசயங்களை பேசி வசியப்படுத்திவிடுவது உண்டு.

ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக விழாவிற்கு அவர்களுக்கு மகுடி ஊதி அழைத்து சென்றுவிடுவேன். சொல்லிவைத்தார்போல அவர்கள் அனைவரும் கேட்கும் புத்தகம் என்னத் தெரியுமா சகோஸ் எகிப்து நாகரீகம் குறித்த புத்தகம் வேண்டும் அதிலும் தமிழில் வேண்டும் என்பதுதான்.

நம்முடைய நாகரீகமாக கருதப்படும் சிந்துவெளி நாகரீகம் தொடர்பாக எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்கு என்னவோ ஈர்ப்பு எல்லாம் எகிப்திய மம்மிகள் மீதும் பிரமிடுகள் மீதுமே இருக்கிறது.

நாம்தான் குண்டு சட்டி குதிரை பந்தையத்திற்கு பழக்கப்பட்டவர்கள் ஆயிற்றே பிறகு எங்கிருந்து தமிழில் எழுதப்பட்ட எகிப்திய நாகரீகம் குறித்த புத்தகத்தை அவர்களுக்கு அடையாளம் காட்டுவது. அற்புதமான ஆங்கில புத்தகங்களை ரிபர் செய்தாலும் அது வேண்டாமே நம் தாய்மொழில் படிக்கும் நெருக்கம் வருமா என்று கேட்டார்கள். வாஸ்தவம்தான். ஆனால் தமிழில் அப்படியான புத்தகங்கள் இருந்தால்தானே அவர்களுக்கு அறிமுகப்படுத்த!

இதனாலேயே ஒரு வருடம் என்னுடன் புத்தக திருவிழாவிற்கு வரும் நண்பர்கள் அடுத்த வருடம் வரமாட்டார்கள். அவர்களுக்கு வேண்டியது கிடைக்காததால். எகிப்திய நாகரீகம் குறித்த என் நண்பர்களின் ஆர்வத்தை தூண்டியதில் பெரும் பங்கு ஆலிவுட் படங்களுக்கு உண்டு.

திரைப்படங்களால் ஒரு நாகரீகத்தைக் குறித்து அறிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வத்தை மக்களிடம் தூண்ட முடியுமென்றால் ஏன் நம்முடைய திரைப்படங்களால் நம்முடைய மக்களை நம்முடைய நாகரீகத்தைக் குறித்து அறிந்துகொள்ளத் தூண்டிவிட முடிவதில்லை?

எகிப்து நாகரீகம் குறித்து தெரிந்துக்கொள்ள வாசகர்கள் ஆவலாக இருக்கும்போது அந்த தலைப்பில் தமிழில் புத்தகங்கள் வராததற்கு காரணமென்ன?

இந்த இரண்டும் படைப்பாளிகளின் சாபக்கெடா, தமிழ் வாசகர்களின் சாபகெடா....

(இந்த தலைப்பில் அனேகமாக நான்தான் தமிழில் முதலில் கட்டுரை எழுதுகிறேன் என்பதை எப்படி சுற்றிவைளைத்து உங்கள் மூக்கை தொட்டு சொல்லிவிட்டேன் பார்த்தீர்களா........என்ன சென்மன்ட நீயெல்லாம் அப்படின்னு திட்ட வாயெடுத்தீங்க எகிப்திய மம்மிகளை உங்க மேல ஏவிவுட்டுருவேன் பாத்துக்கங்க...)

 

பாகம் 1

இந்த கட்டுரையை எழுத (மன்னிக்கவும் தட்சு செய்ய, இப்பலாம் யாருங்க எழுதிகிட்டு) உட்கார்ந்த போது எகிப்திய நாகரீகத்தின் சுவாரசியமான சில விசயங்களை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் நண்பர்களின் வேண்டுகோளும் சரி என பட்டதால் எழுதுவதுதான் எழுதுகிறோம் கொஞ்சமே கொஞ்சம் விரிவாக இந்த கட்டுரையை எழுதலாம் என்று மனம் மாறியது. மனம் மாறிவிட்டாலும் கடலின் அலையில் காலை நனைப்பதற்கும் ஆழ் கடலில் நீந்துவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறதுதானே.

வரலாற்று ஆய்வாளர்களுக்கு, தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு என்று பலருக்கு எகிப்திய நாகரீகம் ஒரு கடல் போன்றது. அதில் முடிந்தவரை நீந்தப் பார்க்கலாம் நண்பர்களே. ஒரு ஊருல ஒரு ராசா இருந்தாராம் அப்படின்னு ஆரம்பிச்சா இன்றைக்கு குழந்தைகள் கூட கேட்கமாட்டார்கள். ஆகையால் அங்கொன்றும் இங்கொன்றுமாக (random) சுவாரசியமான விசயங்களைப் பிச்சுப்போட்டு அவைகளை பின்பற்றி ஒரு முழுமையான எகிப்திய நாகரீகம் குறித்த அறிமுகத்தை எழுத முயற்ச்சி செய்கிறேன்.

கடல்போன்ற வரலாறும் தகவல்களும் கொண்ட எகிப்துப் போன்ற ஒரு நாகரீகத்தை பற்றி இப்படி சொல்ல முயற்ச்சிப்பது சோதனை முயற்ச்சித்தான். ஒரு கோர்வையாக வரவில்லை என்று நான் உணரும்போது அதை நேர் படுத்திட முயற்ச்சி செய்வேன். வாசகராகிய நீங்களும் அப்படி உணரும்போது எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

பொதுவெளியில் எகிப்தின் அதி சுவாரசியமான விசயங்களாகப் பார்க்ப்படுவது பிரமிடுகள் மற்றும் மம்மிகள். எகிப்து நாகரீகத்தின் மன்னர்களை பாரோ (pharaoh) என அழைக்கவேண்டும் என்றுத் தெரியாதவர்கள் கூட பாரோ துத்தன்காமூன் (Tutankhamun) குறித்து அறிந்துவைத்திருப்பார்கள். எகிப்திய பாரோக்களிலேயே 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டு உலக மக்களால் பரவலாக அறியப்பட்டவர் துத்தன்காமூன்.

தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களைவிட பழம்பொருட்களை கடத்தும் மேற்கத்திய பெரும் பணக்காரர்களால் அதிகமாக தேடப்பட்டது துத்தன்காமூனுடைய கல்லறை. அதில் இருப்பதாக நம்பபட்ட தங்க, பழங்கால பொருட்கள் அடங்கிய புதையலே அதற்கு காரணம். புதையல் என்றால் துணி மூட்டையாக கட்டும் அளவிற்கு இருக்கலாம் இல்லை ஒரு பெட்டியில் அள்ளும் அளவிற்கு இருக்கலாம் என்று அவசரப்பட்டுவிடாதீர்கள்.

எகிப்திய பாரோக்களின் அரசவையில் அதிகாரியாக இருந்தவர்களின் கல்லறைப் புதையல் என்றாலே பல அறைகள் முழுவதும் போட்டும் அடைக்கும் அளவிற்கு இருக்கும். அப்படியானால் பாரோக்களின் கல்லறை புதையலை லாரி லாரியாகத்தான் நீங்கள் வீட்டிற்கு எடுத்துவரவேண்டும். இத்தனைக்கும் பாரோக்களை பிரமிடுகளில் அடக்கம் செய்துவிட்டு அரச பரிவாரம் நகர்ந்த மறு நிமிடமே கல்லறை திருடர்கள் (Tomb Raiders) பிரமிடுகளுக்குள் நுழைந்துவிடுவார்கள். வண்டி வண்டியாக உள்ளே தங்கம் இருந்தால் யார்தான் விட்டுவைப்பார்கள். 

David Praveen's photo.
 
 கல்லறைத் திருடர்களால் பல ஆயிரம் ஆண்டுகள் சூரையாடப்பட்டும் பிரமிடுகளில் புதையல் பொருட்கள் எஞ்சியிருந்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த புதையல் பொருட்களைத் திருடத்தான் மேற்கத்திய பெரும் பணக்காரர்களும் 19-ஆம் நூற்றாண்டுத் தொடங்கி இரண்டாம் உலகப்போர் காலம் வரை துடியாய் துடித்து. அந்த புதையல் பொருட்களைத் திருடி பணம் பண்ணுவதற்கு அல்ல அந்த புதையல் பொருட்களை தங்களுடைய வீடுகளில் சேமித்து தங்களுடைய செல்வத்தை மற்றவர்களுக்கு படம் காட்டத்தான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் எகிப்து நாகரீக பழமைப் பொருட்களை சேகரிப்பது என்பது சாதாரணப்பட்ட காரியமல்ல. வரலாற்று அறிவும் தொல் பொருள் தேடல் அறிவும் கொண்ட ஒரு நபரை பிடிக்கவேண்டும். அவருக்கு உண்மையிலேயே அத்தகைய அறிவு இருக்கிறதா என்று தெரிந்துக்கொள்ளவேண்டும். பிறகு அவரை எகிப்திற்கு அனுப்பி தொல் பொருட்களை தேட வைக்கவேண்டும். எகிப்திற்கு சென்ற நபர் எவ்வளவு நாட்களில் விலை உயர்ந்த தொல் பொருட்களை கண்டுபிடிப்பார் என்று நிச்சயமாக ஒரு காலவரையரை எல்லாம் சொல்ல முடியாது. வாரங்களாகலாம், மாதங்களாகலாம் ஏன் பல ஆண்டுகள் கூட ஆகலாம்.

அவ்வளவு நாட்களுக்கும் எகிப்தில் இருக்கும் நபருக்கான தனிப் பட்ட செலவுகளையும் விலை உயர்ந்த பழங்கால பொருட்களை அடையாளம் காட்ட கொடுக்க வேண்டிய லஞ்சப் பண செலவுகளையும் இறுதியில் எகிப்திற்கு அனுப்பப்பட்ட நபருக்கான போக்குவரத்து செலவுகளையும் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டிய லஞ்சப் பணத்தையும் சேர்த்தால் யானையைக் கட்டித் தீணிப்போடும் காரியம் போன்றது இது.

இப்படி ஒருவர் இருவர் அல்ல மேற்கத்திய நாடுகளில் பலப் பணக்காரர்கள் எகிப்திற்கு ஆட்களை அனுப்பி எகிப்தின் பழங்காலப் பொருட்களை திருடியிருக்கிறார்கள். பல ஆயிரமாண்டுகால கல்லறைத் திருடர்களையும் கடந்து 19-ஆம் நூற்றாண்டு பணக்காரத் திருடர்களுக்கும் எகிப்திய பாரோ மன்னர்களின் செல்வ செழிப்பு ஈடுகொடுத்திருக்கிறது என்றால் அத்தகைய செல்வ செழிப்பை கட்டியாண்ட பாரோக்களைக் குறித்து நாம் தெரிந்துக்கொள்ள ஆர்வமகாத்தானே இருக்கும்.

அடுத்த தொடரிலும்.......

 

பாகம் 2


துத்தன்காமூனுடைய கல்லறையில் ஏகப்பட்ட தங்கப் புதையல் இருப்பதாக பழங்காலத்திலிருந்தே ஒரு செவி வழி செய்தி எகிப்து முழுவதும் பரவியிருந்தது. அவன் எகிப்தின் 18-வது பாரோ வம்சத்தை சேர்ந்தவன். எகிப்திய வரலாற்றை பாரோக்களின் பரம்பரையை அடிப்படையாக கொண்டுப் பிரிக்கிறார்கள். பதினெட்டாவது வம்சத்தை NEW KINGDOM என்று ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகிறார்கள். இது கி.மு. 1539–1069 வரை ஏறத்தாழ 500 வருடங்கள் நீடித்தது. இதேப் போல 31 பாரோ வம்சம் சுமார் 2300 வருடங்கள் எகிப்தை ஆண்டிருக்கிறது.

துத்தன்காமூனுடைய தந்தை பாரோ Akhenaten. இவர் கி.மு. 1353 – 1336 வரை ஆட்சி செய்தவர். அதிரடிகளுக்குப் பெயர் போனவர். இவருக்கு முன் இருந்த பதினேழு பரம்பரை பாரோக்கள் எவருமே செய்யத் துணியாத ஒரு காரியத்தை செய்து அதுவரை உலகம் அறிந்திருந்த எகிப்தின் முகத்தையே மாற்றிப்போட்டவர். பாரோக்கள் குடிமக்களுக்கும் கடவுளுக்கும் இடையில் இருந்து பூமியில் கடவுளின் உதயிளார்களாக செயல்படுபவர்கள் என்பதே அதுவரை எகிப்தியர்கள் நம்பி வந்த கடவுள் கோட்பாடு. எகிப்திய நாகரீகத்தில் கடவுளர்களுக்கு குறைச்சலே கிடையாது.

பிறப்புக்கு ஒரு கடவுள், இறப்புக் ஒரு கடவுள், சூரியனுக்கு ஒரு கடவுள், சூரிய வெளிச்சத்திற்கு ஒரு கடவுள், இறப்பிற்கு பிறகான மறு வாழ்விற்கு ஒரு கடவுள், இறந்தவர்களை இருட்டின் ஊடாக அடுத்த உலகிற்கு அழைத்துச் சொல்ல ஒரு கடவுள், செழிப்புக் கடவுள், தாய் கடவுள், தந்தைக் கடவுள், சட்டத்திற்கு ஒரு கடவுள்….இப்படிப் போய் கொண்டே இருக்கும்….. Hathor, Bes, Taweret, Amun, Ra, Osiris, Anubis, Shu, Aten……

இத்தகைய கடவுள்களுக்கு என்று சிறப்பு நகரங்களும் நைல் நதி நெடுக்க இருக்கும். இத்தகைய கடவுள்களுக்கு என்று இருக்கும் கோயில்களுக்கு தனி தனிப் பூசாரிக் கூட்டம் இருக்கும். Amun கடவுளுக்கு பூசை செய்பவர்கள் Osiris கடவுளுக்கு பூசை செய்யமாட்டார்கள். Amun கடவுளுக்கு என்று இருக்கும் சிறப்பு நகரங்களில் மற்ற கடவுளர் பூசாரிகளின் அதிகாரம் எடுபடாது இன்னும் சொல்லப்போனால் இந்த பூசாரி கூட்டத்திற்கு இடையில் அதிகாரப் போட்டி தலைவிரித்தாடி இருக்கிறது.

David Praveen's photo.

நம்மூர் மூவேந்தர்களைப் போலவே எகிப்திய பாரோக்களும் அரசியல் ஆதாயங்களுக்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கடவுளரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடி அந்த கடவுள் பிரிவைச் சேர்ந்த பூசாரிகளுக்கு உச்ச அதிகாரங்களை கொடுத்து தங்களுடைய ஆட்சியில் பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்டார்கள். பொதுவாக எகிப்தியர்களின் கண் கண்ட தெய்வங்கள் Amun மற்றும் Ra. இத்தகைய கடவுளர் பூசாரிகளுக்கு என்று தனித் தனியே தலைமை பூசாரிகளும் (high priest) இருப்பார்கள். அரசில் பாரோக்களுக்கு அடுத்து உச்ச நிலை அதிகாரங்கள் கொண்டவர்கள் இந்த தலைமை பூசாரிகள்.

குறிப்பிட்ட பாரோ Amun கடவுளின் பரம பக்தர் என்றால் அந்த கடவுளின் தலைமை பூசாரிக்கு அடிக்கும் உச்ச அதிகார யோகம். மற்ற கடவுளரின் பூசாரிகள் வாலைச் சுருட்டிக்கொள்ள வேண்டியதுதான். கடவுளர்களின் உதவியாளர்கள் பாரோக்கள். மக்கள் பாரோக்களின் வழியாகவே தங்களின் கடவுள்களிடம் வேண்டுதல் செய்ய முடியும். இதன் காரணமாகவே எகிப்தில் கடவுளர்களின் கோயில்களோடு சேரத்து ஒவ்வொரு பாரோவிற்கும் அவருடைய குடும்பத்திற்கு என்று தனியே கோயில்கள் இருக்கும்.

மக்கள் தங்கள் கடவுளரின் கோயில்களுக்கு சென்று வழிப்படுவதுப்போலவே அப்பொழுது ஆட்சியிலிருக்கும் பாரோவின் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வார்கள். பாரோக்களின் கோயில்கள் அவர்களுடைய பிரமிடுகள் இருக்கும் வளாகத்திலேயே அமைத்திருக்கும். ஒரு பாரோ ஆட்சிக்கு வந்ததும் செய்யும் முக்கிய காரியங்களில் ஒன்று தன்னுடைய பிரமிடுக்கான இடத்தை தேர்ந்தெடுத்து பிரமிடு கட்டும் வேலைகளைத் தொடங்குவது. அந்த பிரமிடு வளாகத்திலேயே அவரை மக்கள் வழிபடுவதற்கான கோயில்களும் கட்டப்படும். ஒரு பாரோ இறக்கும்போது அவருக்கு திருப்தி தரக் கூடிய விசயங்களில் ஒன்று அவருடைய பிரமிடு கட்டி முடிக்கப்பட்டு தயாராக இருப்பதும் ஒன்று. பிரமிடு கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே ஒரு பாரோ இறந்துவிட்டால் அது ஒரு குறையாகத்தான் பார்க்கப்படும்.

பாரோக்களின் மூலமே கடவுளை எகிப்தியர்கள் அடைய முடியும் என்கிற கோட்பாட்டை முதல் முறையாக அடித்து நொறுக்கியவர் அகநேத்தன். அடடே அப்படியானால் அகநேத்தன் எகிப்தியர்களின் கடவுள் கோட்பாட்டில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் பாரோக்களின் உதவியில்லாமல் கடவுளர்களை நேரடியாகவே வழிபாடு செய்யலாம் என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது என்று முந்திக்கொள்ளவேண்டாம்.

கடவுளர்களை பாரோக்களின் வழியாக சுற்றி வளைத்துக்கொண்டு வழிபட வேண்டாம் ஏனென்றால் இனி அந்த கடவுளே நான்தான் என்று ஒரேப் போடாகப் போட்டுவிட்டார் அகநேத்தன். ஒட்டுமொத்த எகிப்தும் அதிர்ந்துவிட்டது. மக்கள் அதிரந்தார்களோ இல்லையோ பூசாரிகள் எல்லாம் கதிகலங்கிவிட்டார்கள்.

அடுத்த தொடரிலும்......

  

எகிப்தை சுமார் 2300 வருடங்களாக அரசாண்ட 150-க்கும் மேற்ப்பட்ட பாரோக்களிலேயே படு வினோதமான ஒரேப் பாரோ அகநேத்தன் மட்டுமே. எகிப்திய பிரமிடுகளுக்கும் ஏலியன்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்று இன்றைக்கு சில தொலைக்காட்சிகளும் எழுத்தாளர்களும் கதைகட்டுவதற்கு வழிகாட்டியவர் இந்த அகநேத்தன்.

அகம் பிரம்மாஸ்மி என்று அகநேத்தன் எகிப்தியர்களை மிரள விட்ட சங்கதிகளைப் பார்ப்பதற்கு முன்னர் பிரமிடுகளை குறித்து கொஞ்சம் பார்த்துவிட்டு வரலாம். அகநேத்தன் ஆட்சி காலத்தில் பிரமிடுகள் வழக்கில் இல்லை. அவனுடைய ஆட்சி காலத்திற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே பிரமிடுகளை கட்டும் வழக்கத்தை பாரோக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள்.

அகநேத்தன் காலத்தில் கல்லறைகள் வழக்கிற்கு வந்துவிட்டன. இந்த கல்லறைகளை The Valley of the Kings என்று இன்றைக்கு அடையாளம் காட்டுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பாரோக்களை அடக்கம் செய்யும் மலை முகடுகளை The Valley of the Kings என்று சொல்வதைப் போல பாரோக்களின் குடும்பத்தை சேர்ந்தப் பெண்களை அடக்கம் செய்யும் மலை முகடுகளை The Valley of the Queens என்று அழைக்கிறார்கள். நாம் இரண்டையும் பொதுவாக நித்திரை நிலம் என்று வைத்துக்கொள்வோம்.

David Praveen's photo.

குடைவரை என்கிற கட்டிட அமைப்பை மிகப் பெரிய அளவில் முன்னேடுத்தவர்கள் எகிப்தியர்கள் என்பதற்கு உதாரணம் இந்த நித்திரை நிலம். குடைவரை கட்டிடக் கலை என்பது மலை முகடுகளில் இருக்கும் பாறைகளை குடைந்து கட்டிடமாக மாற்றுவது. (நான் இயக்கிய Ancient Art secrets of India - Mamallapuram என்கிற மாமல்லபுரம் குறித்த ஆவணப் படத்தில் எகிப்தியர்களின் குடைவரை கட்டிடக் கலைக்கும் மாமல்லபுரம் குடைவரைகளுக்கும் இருக்கும் தொடர்பை பற்றிப் பேசியிருக்கிறேன். ஆவணப்படத்தை youtube-ல் பார்க்கலாம்).

இப்படியான கட்டிடத்திற்கு பின் பக்க வழியோ அல்லது பக்கவாட்டு வழியோ இருக்காது முன் பக்க வழி மட்டுமே இருக்கும். முன் வழியாக சென்று முன் வழியாக மட்டுமே வெளியே வர முடியும். இதைத்தான் பாரோக்கள் விரும்பினார்கள். காலம் காலமாக அவர்களுக்கு இருந்த வந்த ஒரு பெரும் தலைவலியை கொஞ்சமாவது குறைத்தது இந்த குடைவரை கல்லறைகள்.

வரம் கொடுத்த சாமியின் தலையிலேயே கைவைப்பதுப்போல கடவுளின் உதவியாளர்களாக தங்களை அறிவித்துக்கொண்ட பாரோக்களின் கண்களிலேயே விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருந்தார்கள் கல்லறை கொள்ளையர்கள். பிரமிடுகளை இந்த கொள்ளையர்கள் சூரையாடுவதை பாரோக்களால் தடுக்கவே முடியவில்லை. பிரமிடுகளில் வைக்கப்படும் தங்கத்தின் அளவை சொல்லிமாளாது. சில பிரமிடுகளில் உட்புற அறைகளில் இருக்கும் கதவுகள் கூட தங்கத்தில் செய்யப்பட்டிருக்கும். சில அறைகளின் சுவர்கள் தங்கத்தில் மூலாம் பூசப்பட்டிருக்கும்.

இத்தோடு தங்கத்தின் கைகள் நின்றுவிடாது. பாரோக்களின் மம்மிபிகேசன் செய்யப்பட்ட உடலை வைக்கும் sarcophagus-களும் சில நேரங்களில் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். Sarcophagus-கள் டன் கணக்கில் எடைக் கொண்டவைகளாக இருக்கும். உதாரணமாக துத்தன்காமூனின் sarcophagus-யை மூடியிருந்தது டன் கணக்கில் எடைக் கொண்ட அவன் முகம் செதுக்கப்பட்ட தங்கப் பலகை. Sarcophagus-கள் உள்ளேயும் தங்க சரிகை வேலைப்பாடுகள் கொண்ட துணிகள் விரிக்கப்பட்டிருக்கும். பாரோக்களின் மம்மிகளும் தங்க சரிகை கொண்ட உடைகளால் சுற்றப்பட்டிருக்கும்.

இதைத் தவிர பிரமிடுகளின் உள் அறைகளில் வைக்கப்படும் முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ரதங்கள், விலங்குகளின் சிலைகள், சமையலறை பொருட்களையும் கணக்கில் எடுத்தால் பிரமிடுகள் எல்லாம் தங்க சுரங்கங்களுக்கு நிகர். இப்படி தங்க சுரங்கங்களாக இருக்கும் பிரமிடுகளை யார்தான் விட்டுவைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிரமிடுகளுக்குள் இருக்கும் பெரும் அளவிலான தங்கத்தை திருட உயிரையும் பணையம் வைக்க கல்லறைத் திருடர்கள் தயங்கவில்லை.

கல்லறை திருடர்களின் அட்டூழியத்தைத் தடுக்க பிரமிடுகளுக்குள் எலிப்பொறிப் போன்ற பெரிய பாறைகளால் ஆன பொறிகளை அமைத்துவைத்தும் பார்த்துவிட்டார்கள் பாரோக்கள் ஆனால் கொள்ளையைத்தான் தடுக்க முடியவில்லை. பிரமிடுகளின் தங்கம் கொள்ளைப் போவதைக் கூட பாரோக்கள் பொறுத்துக்கொண்டார்கள் ஆனால் தங்கத்தை கொள்ளையடிக்கிறேன் பேர்வழி என்று கல்லறைக் கொள்ளையர்கள் செய்த அராசகங்களைத்தான் அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

அடுத்த தொடரிலும்.....

 

பாகம் 4

 

எகிப்தியர்களைப் பொறுத்த வரை மனிதன் இறந்தவுடன் அவன் கரிய இருட்டின் ஊடாக நீரில் பயணம் செய்து மறு உலகை அடைகிறான். இந்த மறு உலக பயணத்தில் மனிதர்களுக்கு வழித் துணையாக வந்து அவர்களை பத்திரமாக மறு உலகில் கொண்டு போய் சேர்ப்பது Anubis கடவுள் (எகிப்தியர்கள் Inpu என்று அழைக்கிறார்கள். Anubis என்பது கிரேக்க வடிவம்). இது மாத்திரமல்ல அனுபிஸ் மேலும் பல காரியங்களையும் செய்வார் அவைகளை சமயம் வருப்போது பார்க்கலாம். அனுபிஸ் மனித உடலில் நரியின் தலை கொண்ட உருவத்திலிருப்பார்.

பாரோக்களைப் பொறுத்த வரைக்கும் மறு உலகிலும் அவர்கள் பாரோக்களாகத்தான் தொடர்வார்கள் என்று நம்பினார்கள். மனித உடலுடன் மறு உலக பயணத்தை மேற்கொள்ள முடியாது. மனிதனின் ஆன்மா மட்டுமே மறு உலகப் பயணத்தை மேற்கொள்ள முடியும். (இறப்பிற்கு எகிப்தியர்கள் இப்படித்தான் அர்த்தம் கொடுத்திருந்தார்கள்). இறந்து மறு உலகிற்கு சென்றவுடன் அந்த உலகில் அவர்களுக்கு மீண்டும் உடல் தேவைப்படும் அல்லவா அப்பொழுது இந்த உலகில் அவர்களுக்கு இருந்த அதே உடலை பயன்படுத்திக்கொள்வதற்குத்தான் எகிப்தியர்கள் இந்த உலகில் இறந்தவுடன் தங்களின் உடல்களை மம்மிக்களாக மாற்றுவது. இறந்த உடல் ஒழுங்காக மம்மிபிகேசன் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அனுபிஸ் கடவுள் அதை சுற்றி சுற்றி வந்து முகர்ந்துப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே மறு உலகிற்கான பயணம் தொடங்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆக மம்மிபிகேசன் செய்யப்பட்ட உடல் அதி முக்கியம். அதிலும் மறு உலகிலும் பாரோக்களாகவே தொடரப் போகும் பாரோக்களுக்கு அது அதி முக்கியத் தேவைதானே. அப்படியாகப்பட்ட மம்மிக்களை எடுத்துப்போட்டு நெருப்பு மூட்டிக் குளிர்காய்ந்தால் எப்படி இருக்கும். கல்லறைக் கொள்ளையர்கள் இந்த காரியங்களை செய்திருக்கிறார்கள். பாரோக்களின் மம்மிக்களை சுற்றியிருக்கும் துணிகளில் இருக்கும் தங்கத்தையும் ஒட்ட ஒட்ட உருக்கி எடுப்பதற்காக மம்மிக்களை அதனுடைய பிரமிடுகளுக்குள் இருந்த இழுத்து எடுத்து வந்து பாலைவனத்தில் போட்டு எறித்திருக்கிறார்கள். துணியில் இருந்த தங்கத்தை உருக்கிய மாதரியும் ஆயிற்று பாலைவனக் குளிரில் நெருப்பு காய்ந்த மாதரி ஆயிற்று ஒரே நெருப்பில் இரண்டு லாபம்.

எந்த உடல் பாரோக்களுக்கு மறு உலகில் அதி முக்கியமோ அதற்கு இந்த உலகிலேயே நெருப்பு வைத்து சாம்பலாக்கினால் எப்படி இருக்கும். மறு உலகில் பாரோக்கள் உடலுக்கு பிச்சையா எடுக்க முடியும். பாரோக்களால் கல்லறைக் கொள்ளையர்களின் இந்த அராசகத்தைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. தங்கத்தை வேண்டுமானால் கொள்ளையடித்துவிட்டுப் போய்தொலையுங்கள் மம்மிக்களை ஒன்றும் செய்யாதீர்கள் என்று அரசாணை வெளியிடாதக் குறைதான்.

இதில் கொடுமை பிரமிடுகளுக்கு காவலாக (overseers) பாரோக்களால் நியமிக்கப்பட்டவர்களே கல்லறைக் கொள்ளையர்களுடன் கூட்டுச் சேர்ந்துக்கொண்டு இந்த காரியங்களை செய்திருக்கிறார்கள். இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கவும் பட்டிருக்கிறார்கள். இத்தகையவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் மரண தண்டனைதான். கல்லறை கொள்ளையில் ஈடுபட்டு பிடிபட்டவர்களை விசாரணை செய்து அவர்களுக்கு தண்டனை விதிக்கும் சம்பவங்களை எகிப்தியர்கள் பப்பைரஸ் சுருள்களில் ஆவணங்களாக எழுதிவைத்திருக்கிறார்கள். இத்தகைய பப்பைரஸ் சுருள்களைப் படிப்பது படு சுவாரசியமாக இருக்கும்.

இன்றையிலிருந்து சுமார் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களின் வாழ்க்கை சம்பவங்களை அவர்களின் கைகளினாலேயே எழுதியப் பதிவுகளாகப் படிக்கும்போது மீண்டும் அவர்கள் நம் கண் முன் இரத்தமும் சதையுமாக உயிர் பெற்று வருவது ஒரு அலாதியான அனுபவம். அதை அனுபவித்துப் பாருங்கள் நண்பர்களே.

பெரும்பாலும் இப்படிப் பிடிபடும் கல்லறைக் கொள்ளையர்களை முடிந்தவரை பாரோக்களுக்கு முன்பு கொண்டுபோய் நிறுத்துவதற்கு முன்பே அவர்களை தப்பிக்க விடுவதையோ அல்லது கொலை செய்வதுப் போன்ற காரியங்களையோ overseer-கள் செய்திருக்கிறார்கள். கல்லறை கொள்ளையர்களை பாரோக்களுக்கு முன்பு கொண்டுபோனால் அந்த திருட்டு பயபுள்ளை நேரம் பார்த்து வெப்பன் சப்ளையரே இவருதான் எசமான்னு தங்களையும் சேர்த்துப்போட்டுக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்கிற பீதிதான்.

தங்களுடைய முன்னோர்களின் மம்மி உடல்களை காப்பாற்ற overseer-களை நியமித்தால் அவர்களின் பிராடுத் தனங்களை தணிக்கை செய்யவே ஒரு தனி விசாரணைக் குழுவை மாத மாதம் பிரமிடுகளுக்கு அனுப்பிவைப்பது தலைவலியை மேலும் திருகு வலியாக்கியது பாரோக்களுக்கு. பிரமிடுகளே வேண்டாம்டா சாமி என்று அவர்கள் முடிவெடுக்கவும் இதுதான் முக்கியக் காரணம். பிரமிடுகளுக்கு மாற்றாக குடைவரைகளை பாரோக்கள் தேர்ந்தெடுத்தார்கள், தங்களுடைய மம்மிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள. குடைவரை கல்லறைகள் பெரும் அளவில் கல்லறை கொள்ளையர்களை வாலாட்டவிடாமல் தடுத்துவிட்டது. குறைந்த பட்சம் பாரோக்களின் மம்மிகள் தப்பின. இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் பெரும்பாலான மம்மிகள் இத்தகைய குடைவரை கல்லறைகளில் இருந்தே வந்தவைகள். பிரமிடுகளில் இருந்த பெரும்பாலான மம்மிகள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே கல்லறைக் கொள்ளையர்களால் எறித்து நாசமாக்கப்பட்டுவிட்டது.

அடுத்த தொடரிலும்.....

 
 

பாகம் 5

 

சரி பிரமிடுகள் சமாச்சாரத்தை இப்பொழுதைக்கு நிறுத்திக்கொண்டு அகநேத்தன் சங்கதிக்கு திரும்புவோம். இவனுடைய உண்மையானப் பெயர் Amenhotep IV. இவனுடைய மனைவி எகிப்தின் பேரழகியாக கருதப்படும் Nefertiti. கிளியோப்பாட்ராதானே எகிப்தின் பேரழகி என்று நீங்கள் கேள்விப்பட்டிருந்தால் சந்தேகமேயில்லை நீங்கள் பள்ளிப் பாட புத்தக வரலாற்றைப் படித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால் பள்ளிக் கூட வரலாற்று பாட புத்தகங்கள் தவறுகளைத்தான் உண்மைகள் என்று சொல்லிக்கொடுக்கும் மிகச் சிறந்த கருவிகள். Nefertiti பின்னாட்களில் தன்னுடைய பெயரை Neferneferuaten என்று மாற்றிக்கொண்டால் கணவன் அகநேத்தனுக்கு பயந்து.

அகநேத்தன் Aten கடவுளின் அதி தீவிர பக்தன். முத்திய பக்தி ஒரு கட்டத்தில் அகநேத்தனை தான்தான் Aten கடவுள் என்று நினைத்துக்கொள்ளும் அளவிற்கு கொண்டுப் போய்விட்டது. பாரோவாக முடி சூட்டிக்கொண்ட ஒரு சில ஆண்டுகளிலேயே தன்னை Aten கடவுள் என்று அறிவித்தான். Amenhotep என்கிறத் தன்னுடையப் பெயரையும் Akhenaten என்று மாற்றிக்கொண்டான்.

இங்கே நாம் கொஞ்சம் எகிப்தியர்களின் கடவுளர்களைப் பற்றித் தெரிந்துக்கொள்வது நல்லது. எகிப்தியர்களின் பழைய – எகிப்தைப் பொறுத்தவரையில் பழைமை என்றாலே அது இன்றையிலிருந்து 7000 வருடங்களுக்கு முந்தையக் காலகட்டம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் - கோயில் எழுத்துக்கள் Atum என்கிறக் கடவுள் இந்த உலகத்தையும் எகிப்தின் அரசர்களையும் படைத்ததாக சொல்கின்றன. இந்த Atum கடவுளை Tem என்றும் அழைப்பார்கள்.

கடவுளுக்கும் பெண்ணின் ஆற்றல் என்பது அவருடைய சக்திகளின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பது எகிப்தியர்களின் பழமை கடவுள் கோட்பாடுகளில் ஒன்று. இதன் காரணமாக எகிப்தியர்களின் கடவுளர் அனைவருக்கும் மனைவிகள் உண்டு. இதன்படி அதும் கடவுளுக்கு Nebhet Hotep என்கிற மனைவி உண்டு. இவர்கள் இருவருக்கும் Shu மற்றும் Tefnut என்று இரண்டு பிள்ளைகள் உண்டு. Shu-வும் Tefnut-வும் சிங்க உருவம் கொண்டவர்கள். இவர்கள் Osiris கடவுளின் அரசாங்கத்தை காவல் புரிபவர்கள். அதும் கடவுளும் Ra என்கிற சூரியக் கடவுளும் ஒன்றுதான் என்றும் கருதப்படுகிறது.

Shu-க்கும் Tefnut-க்கும் பிறந்தவர்கள் Geb மற்றும் Nut. Geb-க்கும் Nut-க்கும் பிறந்தது Isis இப்படியே Osiris, Set Nephthys என்று ஒரு பட்டியல் போகிறது. இப்பொழுதைக்கு இதுவரைக்கும் தெரிந்துகொண்டால் போதும். இந்த கடவுளர்களின் பட்டியலை Ennead of Heliopolis என்று குறிப்பிடுகிறார்கள். அகநேத்தனுக்கு முன்பு 3000 வருடங்களாக அதும் எனப்படுகிற ரா கடவுளையே படைப்பு கடவுளாக எகிப்தியர்கள் வழிபட்டுவர திடுதிப்பென்று நான்தான் படைப்புக் கடவுள், மற்ற கடவுள்கள் இனிக் கிடையாது என்றால் மக்கள் அதிராமல் பிறகு என்ன செய்வார்கள்.

மக்கள் இனி மற்ற கடவுளர்களை வழிபடுவதைவிட்டு Aten கடவுளான தன்னையே வழிபடவேண்டும் என்று கட்டளையிட்டான் அகநேத்தன். அனைத்து கடவுளர்களின் வழிபாடுகளும் நிறுத்தப்பட்டு அவனுடைய வழிபாடே கோயில்களில் நடத்தப்பட வேண்டும் என்று பூசாரிகளுக்கு கட்டளையிடப்பட்டது. தான் கடவுள் என்பதால் தன்னுடைய சிலைகள் மற்ற பாரோக்களின் சிலைகளைப்போல இருக்க கூடாது என்றும் முடிவுக்கட்டினான்.

ஏலியன் போன்ற தலையமைப்பும், கண்ணக் கதுப்புகள் துருத்திக்கொண்டிருக்கும் நீண்ட முகமும், தோள்கள் ஒடுங்கிய மெல்லிய உடலும், அடிவயிறு கொஞ்சம் பெருத்தும், நீண்ட கால்களும் கொண்ட உருவமாக தன்னுடைய சிலையை செதுக்கி தன்னுடைய கல்லறைக் கோயில்களில் மக்கள் வழிபாடு நடத்துவதற்காக நிறுவினான். அகநேத்தனின் இந்த சிலையைப் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஏலியன் உருவமைப்பிலேயே இருக்கும். அகநேத்தன் தன்னை கடவுள் என்று நம்பியதால் மற்ற பாரோக்களின் சிலைகளைப் போல தன்னுடைய சிலைகளையும் வடிக்க அவனுக்கு விரும்பமில்லை.

முடிந்தவரை தன்னுடைய சிலை உருவம் மனித உருவ அமைப்பில் இருக்க கூடாது என்கிற அவனுடைய எண்ணமே அத்தகைய ஒரு சிலை வடிவமாக வெளிப்பட்டது. கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று கற்பனை செய்து தொலைத்தானோ என்னவோ! இத்தோடு நிறுத்தவில்லை கடவுளாகிவிட்ட தனக்காக ஒரு தனி நகரமே உருவாக்கவேண்டும் என்று ஒரு நகரத்தை உருவாக்கினான். நம்முடைய பண்பாட்டில் எப்படி முருக கடவுளுக்கென்று பழனி, திருசெந்தூர் போன்ற முருக வழிப்பாட்டு சிறப்புத் தளங்கள் இருக்கின்றனவோ அதேப்போல எகிப்திய நாகரீகத்திலும் கடவுளர்களுக்கென்று சிறப்பு தளங்கள் உண்டு. உதாரணமாக Thebes நகரம் அமூன் கடவுள் வழிபாட்டிற்குரிய சிறப்பு நகரம்.

அகநேத்தன் என்கிற கடவுளை வழிபட்டு சிறப்பிக்க Akhetaten என்கிற புத்தம் புதிய நகரை உருவாக்கினான். அவனுக்கு முன்பு மூவாயிரம் வருடங்களாக எகிப்திய மக்கள் அறிந்திருந்த மிக முக்கிய நகரங்கள் இரண்டே இரண்டுதான் ஒன்று Thebes மற்றது Memphis. மூவாயிரம் வருடங்கள் பழமையும் சிறப்பும் மிக்க இந்த இரண்டு நகரங்களையும் இழுத்து மூடிவிட்டு அரச பரிவாரங்களை ஒட்டுமொத்தமாக Akhetaten நகரத்திற்கு மாற்றினான். இத்தோடு நிற்கவில்லை அவனுடைய கடவுள் அவதார திருவிளையாடல்கள் உலக மன்னர்கள் ஒருவருமே அவன் காலம் வரையும் அவனுக்கு பிறகும் செய்யாத ஒரு காரியத்தை செய்தான் அவன்.

அடுத்த தொடரிலும்.......

 





General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..