Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பொதுச் சிவில் சட்டமா? அல்லது திட்டமா?
Posted By:peer On 10/29/2016 7:38:20 AM

symbicort forte turbuhaler

symbicort singlvkuchyni.cz

 இன்று பரவலாக எல்லா தளங்களிலும் விவாதிக்கப்படுவது முத்தலாக்கை முன்னிறுத்தி இந்தியா முழுமைக்கான பொதுச் சிவில் சட்டமே. இதனை யார் கூறுவதென்றால் இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் முஸ்லீம் பெண்களின் நலன் நாடும்? தனது மனைவியான திருமதி. யசோதா பென் அவர்களின் நலன் நாடிய? மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி.

முஸ்லிம் பெண்களை பாதிக்கும் முத்தலாக் முறையை ஒழிப்பேன் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகிறார். ஆனால் அவர் தனது மதத்தைச் சார்ந்த, இன்னும் குறிப்பாக தனது கட்சி ஆட்சியின் பிரதமர் திரு. மோடி அவர்களின் மனைவிக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி கிஞ்சிற்றும் கவலை கொள்ளாதது ஏன்? அவரும் பெண்தானே? அது போன்று திரு. மோடி அவர்களும் தனது மனைவியைப் ( என்ற பெண்ணின் பாதிப்பைப் ) பற்றி கவலை கவலை கொள்ளாமல், பிற மதத்துப் பெண்களைப் பற்றி அக்கறை கொள்வதேன். அவரின் மனைவிக்கு இந்திய அல்லது இந்துச் சட்டத்தின்படி இவ்வளவு வருடங்கள் தீர்வு கிடைக்கவில்லையே. ஆனால் அவர் ஒரு இஸ்லாமியப் பெண்ணாக இருந்திருந்தால் “ குலா” என்ற மணவிலக்கு பெற்று சிறப்பான முறையில் வாழ்ந்த்திருப்பாரே?

ஒரு சட்டம் அல்லது நடைமுறை தவறாக பயன்படுத்தாமல் முறையாக பயன்படுத்தலாம் என்று கூறுவதில் தவறில்லை. ஆனால் ஒரு சில நேரங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக அதனை நீக்குவது என்பது எவ்வாறு சரியாகும்? அப்படி என்றால் இந்தியாவில் உள்ள அனைத்துச் சட்டங்களும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதற்காக அனைத்துச் சட்டங்களையும் ரத்து செய்வது சாத்தியமா?. அல்லது முடியுமா?

காலில் அணியும் செருப்பை விட கால் பெரிதாக இருந்தால் காலை வெட்ட வேண்டுமா அல்லது காலுக்குத் தகுந்தாற்போல் செருப்பைச் சரிசெய்ய வேண்டுமா?. இவர்கள் காலை வெட்டச் சொல்கிறார்கள் செருப்பை சரிசெய்வதற்கு பதிலாக.

இங்கு நாம் சொல்வது, முத்தலாக் சட்டம் சரியாகத்தான் உள்ளது. ஏனெனில் அது இந்த உலகத்தையும், அதில் வாழும் மனிதர்களையும் படைத்த வல்ல இறைவனின் சட்டம். அது தவறாக இருக்க ஒரு போதும் வாய்பில்லை. ஆனால் அதனை செயல்படுத்துவதில் தான் ஒரு சில தருணங்களில் தவறு நேரிடுகிறது. எனவே அதனை செயல்படுத்துவதில் உள்ள ( தவறான புரிதல்களோடு) தவறுகளை களைய வேண்டும் என்பதே சரியாக இருக்க முடியும். இதனை செயல் படுத்துபவர்களுக்கும் ( ஜமாஅத்தினருக்கும்) தலாக், குலா பற்றிய சரியான புரிந்துணர்வு தேவை.

பொதுச்சிவில் சட்டம் பேசுபவர்கள் ஆண்களால் பயன்படுத்தப்படும் தலாக்கைப் பற்றி பேசுவார்களே ஒழிய, இஸ்லாத்தில் மட்டுமே பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு விவாகரத்து முறையான “ குலா” வைப் பற்றி வாய் திறப்பதில்லை. ஆண்கள் சொல்லும் “தலாக்” முறையை விட பெண்கள் சொல்லும் “குலா” முறை மிகவும் எளிதானது. மேலும் காலம் மிக குறைவானது. ஆண்கள் செய்யும் தலாக்கிற்கு முறையான காரணங்கள் வேண்டும். ஆனால் பெண்கள் சொல்லும் குலாவிற்கு எந்தக் காரணமும் தெளிவாகச் சொல்லத் தேவையில்லை.

இதிலிருந்து இஸ்லாம் பெண்களுக்கு ஆண்களை விடஅதிகமான உரிமையையும், சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது என்பது ஒரு சாதாரண மனிதனுக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.

“தலாக்” “குலாஃ” வின் விதிமுறைகள் இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்களில் பெரும்பாலோருக்கும் சமுதாயத்தலைவர்களுக்கும் இந்தச்சட்டங்கள் தெரிவதில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

இந்தியா முழுமைக்குமான பொதுச் சிவில் சட்டம் சாத்தியமா என்று நோக்கினால், அது சாத்தியமேயில்லை. ஏனெனில் இங்கு கிரிமினல் சட்டமே பொதுவாக இல்லை. மாநிலத்திற்கு, மாநிலம் மாறுபடுகிறது. உதாரணம் மது அருந்துதல், வரி விதித்தல், வாகனச் சட்டம், விபசார விடுதிக்கு அனுமதி போன்ற இன்னும் பலச் சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. இன்னும் குறிப்பாக பெட்ரோல், டீஸல் விலையே எல்லா மாநிலங்களிலும் ஒன்று போல் இல்லை. இந்நிலையில் எல்லா மதத்திற்கான பொதுச் சட்டம் எவ்வாறு சாத்தியம்?

பொதுசிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் வழி காட்டும் நெறிமுறையில் குறிப்பிட்டுள்ளதே என்று கூறுகிறார்கள். ஆம். அதில் கூறப்பட்டிருக்கும் பல நெறிமுறைகளில் இதுவும் ஒன்று. அவ்வளவே. ஆனால் அதற்கு முன்பாக செயல்படுத்த வேண்டிய பல விசயங்கள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. அவை இந்திய மக்கள் அனைவருக்குமான கல்வி, சுகாதாரம், மது ஒழிப்பு பற்றிய எந்த அக்கறையும் இல்லை.

இன்னும் இதில் வேடிக்கை என்னவென்றால் பீகார் அரசு கொண்டு வந்த மது விலக்கு திட்டத்தை நீதிமன்றம் சில நடைமுறைகளைக் கூறி ரத்து செய்கிறது. ஆனால் இன்னொரு புறம் நீதி மன்றம் பொதுச்சிவில் சட்டம் பற்றி மத்திய அரசிடம் கருத்து கேட்கிறது. ஏன் இந்த முரண்பாடு. ஏன் எனில் மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகள், விபத்துகள் மிக அதிகம் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆனால் அதற்கு காரணமான மதுவை ஒழிக்க அரசும் முன் வரவில்லை. நீதிமன்றங்களும் அரசிடம் பொது சிவில் சட்டம் பற்றி கருத்து கேட்டது போல் மது விலக்கு குறித்து கேட்கவில்லை. காரணம் என்ன? மது என்பது அரசுக்கு வருமானம் ஈட்டி தருகிறது. அதனால் அது மனிதனுக்கு ஏற்படும் தீங்குகளைப் பற்றி அரசுகள் கவலை கொள்வதில்லை என்பது புலனாகிறது.

பிரிவு 25: இந்திய அரசியலமைப்பு சட்டம் - 1950: இந்திய நாட்டில் வாழும் அனைவருக்கும் எந்த சமயத்தையும் தழுவவும், தழுவியபடி வாழவும், பரப்பவும் உரிமை உண்டு. ஆனால் பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி, நல வாழ்வு, ஆகியவற்றிற்கு பங்கம் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மது விலக்கு, கல்வி:

“உணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யவேண்டும்.” என்று இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950ல் ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள, பிரிவு 47 கூறுகிறது.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் அல்லது கல்வி சட்டம் (RTE) 4 ஆகஸ்ட் 2009 இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த கல்வி உரிமை சட்டம் இந்தியாவில் 6 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி முக்கியத்துவத்தை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 21A கீழ் விவரிக்கிறது சட்டம். மாநிலங்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், அனைத்து குழந்தைகளுக்கும், பதினான்கு வயது பூர்த்தி ஆகும் வரை, இலவச மற்றும் கட்டாய கல்வி, வழங்க முயற்சி செய்ய வேண்டும்.

எலிகளைப் பாதுகாக்க பூனை சட்டம் போட நினைத்தால் எலிகளின் நிலை என்ன ஆகும்? அது போன்று தான் தற்போது உள்ள திரு. மோடி தலைமையிலான அரசும்.

இன்னும் சொல்லப் போனால் நமது நாட்டின் பரம்பரை எதிரி என்று சொல்லக்கூடிய இஸ்லாமிய மத நாடான பாக்கிஸ்தானில் கூட இந்து மக்கள் அனைத்து உரிமையையும் பெற்று வாழ்கின்றனர். அவர்களுக்கு என்று தனிச் சட்டமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்து மக்களின் எந்த போராட்டமும் இன்றி அவர்களின் கோரிகையை ஏற்று அவர்களுக்கென தனித் திருமணச் சட்டத்தை சமீபத்தில் வழங்கியுள்ளது. ஆனால் மதச் சார்பற்ற நாடான இந்திய நாடான இங்கு ஒரு மதத்தின் சிவில் உரிமையைப் பறிக்க நினைக்கிறது.

நமக்கும் சில கேள்விகள் எழுகின்றன. ஆம். நம் இந்தியாவில் எப்போது இந்து சமய சகோதரர்கள் மத்தியில் ஜாதி ஒழிந்து சமத்துவம் நிகழும்?. எல்லோரும் எப்பொழுது ஏற்றத் தாழ்வின்றி கோயிலின் கருவறைக்குள் நுழைய முடியும்?. மனுஸ்மிருதி கூறும் நால் வர்ணம் மாறி ஒரே உயர் வர்ணமாக எப்பொழுது மாற முடியும்? தான் விரும்புகிற ஜாதிக்கு மாற சுதந்திரம் உண்டா அல்லது மாறுவதை மாற்று ( உயர் ) ஜாதியினர் ஏற்றுக் கொள்வார்களா? அல்லது இந்து சமயம் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது ஏற்றுக் கொள்ளும் படி அரசு சட்டம் இயற்ற முடியுமா?. இது போன்ற எண்ணற்ற கேள்விகளை நாம் எழுப்ப முடியும். கட்டுரையின் நீட்சி கருதி எழுதவில்லை.

இது நிகழ்ந்த பின் பொதுச் சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி அரசு சிந்திக்கட்டும்.!!!

அரசியல் அமைப்புச்சட்டம் 25-இன் படி ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய அடிப்படை உரிமையை சுட்டிக் காட்டுகிறது என்பதை இவ்வரசு உணர்ந்து செயல்படும் என்பதில் நமக்கு ஐயம் இல்லை என்று உறுதியாக நம்புவோம்.

“தலாக்” “குலா” பற்றிய முழு விபரங்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

- K.முஹம்மது இத்ரீஸ் ஷாபி




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..