Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 37
Posted By:Hajas On 1/9/2017 2:34:30 AM

naltrexone buy

buy naltrexone

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
=============================

by - Abu Malik

தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்

Episode 36: இஃப்ரீத் (ஆற்றல் மிக்கது):

Episode 37: அவாமிர் (குடியிருப்போர்):

Image may contain: one or more people and text

அவாமிர் (குடியிருப்போர்):
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவர்கள் இன்னொரு வகையான ஜின் இனத்தவர்கள். மனிதர்கள் வசிப்பதற்காகவென்று கட்டப்படும் வீடு போன்ற கட்டடங்களில், “அவாமிர்” எனும் இந்த ஜின் இனத்தவர்களும் அவ்வப்போது வந்து குடியிருக்க ஆரம்பித்து விடுவார்கள். சில நேரங்களில் அது மனிதர்கள் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கும் குடியிருப்பாக இருக்கலாம்; சில வேளைகளில் அது மனிதர்கள் குடியிருக்காமல் வெறுமனே பூட்டி வைத்திருக்கும் வீடுகளாகக் கூட இருக்கலாம். எங்கெல்லாம் இவர்களுக்கு வாய்ப்பு அமையுமோ, அங்கெல்லாம் இந்த ஜின் இனத்தவர்கள் வந்து “செட்டில்” ஆகி விடுவதற்கே முயற்சிப்பார்கள்.

“அவாமிர்”களைப் பொருத்த வரை, எடுத்த எடுப்பிலேயே இவர்கள் அனைவரும் இப்லீஸின் படையணியைச் சேர்ந்த ஷைத்தான்கள் என்று கூறி விடக் கூடாது. ஏனெனில், இவர்களில் ஒரு சாரார் கெட்டவர்களாகவும், இப்பீஸைச் சார்ந்த ஷைத்தான்களாகவும் இருக்கும் அதே வேளை, இவர்களில் இன்னுமொரு சாரார் நல்லவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள் என்பதே மார்க்கம் கூறும் உண்மை. எனவே இவர்கள் குறித்து நாம் முடிவெடுக்கும் போது, அவர்களது நடவடிக்கைகளை வைத்தே முடிவெடுக்க வேண்டும்.

இனி இவர்கள் குறித்து மார்க்கம் கூறியிருக்கும் சில ஆதாரங்கள் வாயிலாக இவர்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்:

ஆதாரம் 1:
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்த செய்தி:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது “பாம்புகளையுக் கொல்லுங்கள்; (குறிப்பாக) முதுகில் இரண்டு கோடுகளைக் கொண்ட பாம்பையும், வால் கட்டையான பாம்புகளையும் கொல்லுங்கள். ஏனெனில், அவை கண்பார்வையை அழித்து விடும்; மேலும், (கர்ப்பிணிப் பெண்களின்) கருவையும் கலைத்து விடும்” என்று கூறியதை நான் கேட்டேன்.
ஒருமுறை நான் ஒரு பாம்பைக் கொல்வதற்காகத் துரத்திக் கொண்டிருந்தேன். அப்போது அபூ லுபாபா (ரழி), “அதைக் கொல்ல வேண்டாம்” என்றார். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாம்பைக் கொல்லுமாறு எமக்குக் கட்டளையிட்டார்களே” என்று கூறினேன். அதற்கு அவர், “(உண்மை தான்); ஆனால், பிறகு அன்னவர்கள் வீடுகளினுள் வாழும் பாம்புகளைக் கொல்வதைத் தடுத்தார்கள்” என்று பதிலளித்தார்.
இதன் அறிவிப்பாளர் ஸுஹ்ரி மேலும் கூறினார்:
“இவ்வாறு வீடுகளில் குடியிருக்கும் பாம்புகள் “அல்-அவாமிர்” (எனும் ஜின் இனம்) ஆகும்”
ஸஹீஹுல் புகாரி: பாடம் 59, ஹதீஸ் 106

ஆதாரம் 2:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூ ஸஈத் குத்ரி (ரழி) அறிவித்ததாவது:
மதீனாவில் ஜின்களின் ஒரு கூட்டத்தார் இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறார்கள். எனவே, எவரொருவர் இந்த “அவாமிர்”கள் (குடியிருக்கும் ஜின்கள்) யாரையாவது கண்டால், மூன்று தடவை அதற்கு (வீட்டை விட்டுச் செல்லுமாறு) அறிவுறுத்தட்டும். அதன் பிறகும் அது அங்கு தென்பட்டால், அவர் அதைக் கொன்று விடட்டும். ஏனெனில், நிச்சயமாக அது ஷைத்தான் ஆகும்.
(ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 39, ஹதீஸ் 192)

ஆதாரம் 3:
அபுஸ்ஸாஇப் அறிவித்த செய்தி:
ஒருமுறை நாம் அபூ ஸஈத் குத்ரி (ரழி) அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். அப்போது அவர் தொழுது கொண்டிருந்தார். எனவே நாம் அவர் தொழுது முடிக்கும் வரை உட்கார்ந்திருந்தோம். அப்போது வீட்டின் அறைக்குள் (இன்னோர் அறிவிப்பில் கட்டிலுக்கு அடியில்) ஒரு சலசலப்புச் சத்தம் கேட்டது. நான் அங்கு பார்த்த போது ஒரு பாம்பைக் கண்டேன். உடனே அதைக் கொல்வதற்காக நான் துள்ளியெழுந்தேன். ஆனால், (தொழுது கொண்டிருந்த அபூ ஸஈத் குத்ரி) அவர்கள், என்னை அமருமாறு சைகை செய்தார். எனவே, நான் அமர்ந்து விட்டேன். அவர் தொழுகையை முடித்த பிறகு, வீட்டிலிருந்த ஓர் அறையைச் சுட்டிக் காட்டி, “இந்த அறை உமக்குத் தெரிகிறதா?” என்று கேட்டார். நான், “ஆம்” என்றேன். (பிறகு) அவர் கூறினார்:

“புதிதாக திருமணம் செய்துகொண்ட ஒரு வாலிபர் முன்பு எம்மோடு இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஆகழ்ப் போருக்காக நாம் சென்றிருந்த போது, பகல் பொழுதுகளில் அந்த வாலிபர், வீட்டுக்குச் சென்று தனது (புது) மனைவியைப் பார்த்து விட்டு வருவதற்கு (அடிக்கடி) அனுமதி கேட்பவராக இருந்தார். ஒரு நாள் அந்த வாலிபர் (வீட்டுக்குச் செல்ல) அனுமதி கேட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அனுமதி கொடுத்த பின்), “உனது ஆயுதத்தையும் கூடவே கொண்டு செல். ஏனெனில், குரைஸா கோத்திரத்தவர் குறித்து நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள். அவ்வாறே அந்த வாலிபர் தனது ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு சென்றார். வீட்டை அடைந்த போது, தனது மனைவி முன் வாசலில் இரண்டு கதவுகளுக்கும் நடுவில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். (தன் மனைவி, ஒழுக்கம் கெட்டு, வேறு யாரையும் வீட்டுக்குள் அனுமதித்து விட்டாளோ என்று) பொறாமையோடு அந்த வாலிபர் அவளைத் தாக்குவதற்காகத் தனது ஈட்டியை நீட்டிப் பிடித்தவாறு விரைந்தார். உடனே அவள், “உங்கள் ஈட்டியை ஒரு புறம் வைத்து விட்டு, நான் வெளியே வரக் காரணம் என்னவென்பதை உள்ளே வந்து பாருங்கள்” என்று கூறினாள். அவர் உள்ளே சென்று பார்த்த போது, பிரம்மாண்டமான ஒரு பாம்பு படுக்கை மேல் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தது. உடனே அவர் தனது ஈட்டியை அந்தப் பாம்பின் உடலினுள் சொறுகி, அதைக் குத்தி எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்தார். ஆனால், குத்தப் பட்டுத் துடித்துக் கொண்டிருந்த பாம்பு அவரைத் திருப்பித் தாக்கியது. அதில் முதலில் இறந்தது பாம்பா, அல்லது வால்பரா என்பது யாருக்கும் தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் வந்து நாம் இதை அறிவித்து, இறந்து போன அந்த வாலிபரைத் திரும்பவும் உயிர்பெறச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கோரினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தோழருக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய (சில) ஜின்கள் இருக்கிறார்கள். எனவே, அவர்களில் யாரையாவது நீங்கள் (பாம்பின் வடிவில்) கண்டால், மூன்று நாட்கள் அதற்கு (வீட்டை விட்டு வெளியேறுமாறு) அறிவுறுத்துங்கள். அதன் பிறகும் அது அங்கு தென்பட்டால், அதைக் கொன்று விடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்” என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 39, ஹதீஸ் 190)

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பு வாயிலாகவும் பதிவாகியிருக்கிறது. அதில் மேலே குறிப்பிட்ட இதே செய்தியோடு மேலதிகமாக இன்னும் ஒருசில செய்திகளும் சொல்லப் பட்டிருக்கின்றன. அந்த அறிவிப்பு பின்வருமாறு:

அஸ்ஸாஇப் அறிவித்ததாக அஸ்மா பின்த் உபைத் அறிவித்த செய்தி:
ஒருமுறை நாம் அபூ ஸஈத் குத்ரி (ரழி) அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். அங்கு நாம் உட்கார்ந்திருக்கும் போது கட்டிலுக்கு அடியில் ஒரு சலசலப்புச் சத்தம் கேட்டது. நாம் பார்த்த போது, அங்கு ஒரு பெரிய பாம்பு இருந்தது.....
(தொடர்ந்து வரும் செய்திகளெல்லாம், மேலுள்ள ஹதீஸின் அதே வாசகங்கள்)...

(ஹதீஸின் இறுதிப் பகுதியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பதிவாகியிருக்கும் மேலதிக செய்தி:

“நிச்சயமாக இந்த வீடுகளில் வயதானவர்கள் (ஜின்கள்) வசிக்கிறார்கள். எனவே, அவர்களில் ஒருவரை நீங்கள் (பாம்பு வடிவில்) காணும் போது, மூன்று நாட்களுக்கு அவர்கள் வசிப்பதற்குக் கடினமானதாக (வீட்டுச் சூழலை) ஆக்குங்கள். அதன் பிறகு அது சென்று விட்டால் (நல்லது); அவ்வாறின்றி (தொடர்ந்தும் அது இருந்தால்), அதைக் கொன்று விடுங்கள். ஏனெனில், அது ஒரு காஃபிராகவே இருக்கும்.”

மேலும் நபி (ஸல்) அவர்கள், “(பாம்பு தீண்டியதால் கொல்லப்பட்ட) உங்கள் தோழரைக் கொண்டு சென்று அடக்கம் செய்யுங்கள்” என்றும் கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 39, ஹதீஸ் 191)

ஆதாரம் 4:
நாஃபி’ அறிவித்த செய்தி:
இப்னு உமர் (ரழி) அவர்கள் பாம்புகளைக் (கண்ட இடத்தில்) கொல்பவராகவே இருந்தார்கள். ஆனால், வீட்டினுள் வசிக்கும் பாம்புகளைக் கொல்ல வேண்டாமென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடுத்ததாக அபூ லுபாபா (ரழி) அறிவித்ததன் பிறகு (அவ்வாறான பாம்புகளைக்) கொல்வதை விட்டு விட்டார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: பாடம் 59, ஹதீஸ் 119)

ஆதாரம் 5:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவித்ததாவது:
ஒரு மனிதன் தனது வீட்டுக்குள் நுழையும் போதும், உணவு உண்ண ஆரம்பிக்கும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் (பிஸ்மில்லாஹ் கூறினால்), அப்போது ஷைத்தான் “(இங்கு) நமக்கு தங்குமிட வசதியோ, இராப் போசணமோ (இனி) இல்லை” என்று கூறுகிறான். அந்த மனிதன் வீட்டுக்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூரவில்லையென்றால், ஷைத்தான் “நமக்கு (இங்கு) ஒரு தங்குமிடம் கிடைத்து விட்டது” என்று கூறுவான். மேலும், அந்த மனிதன் உணவு உண்ணும் போது அல்லாஹ்வை நினைவுகூரவில்லையென்றால், ஷைத்தான் “நமக்கு (இங்கு) தங்குமிட வசதியும், இராப் போசணமும் கிடைத்து விட்டது” என்று கூறுகிறான்.
ஸுனன் இப்னு மாஜா: பாடம் 34, ஹதீஸ் 61
தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்) /
ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 36, ஹதீஸ் 136

ஆதாரம் 6:
ஹுதைஃபா அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு நாம் விருந்துக்குச் செல்லும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் உண்ணத் தொடங்கும் வரை நாம் உணவில் கை வைக்க மாட்டோம். ஒருமுறை நாம் அன்னவர்களோடு ஒரு விருந்துக்குச் சென்றிருந்தோம். (உண்ணுவதற்கு ஆய்த்தமாகும் போது) ஒரு சிறுமி அவசர அவசரமாக யாரோ தள்ளி விட்டது போல் ஓடோடி வந்து, உணவில் கை வைக்க எத்தனித்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக் கொண்டார்கள் (உணவை அள்ள அனுமதிக்கவில்லை). அதைத் தொடர்ந்து ஒரு பாலைவனக் கிராமவாசி அரபி, (அதே போல் அவசரமாக) யாராலோ துரத்தப்படுவது போல் வந்தார். அவரது கையையும் அன்னவர்கள் பிடித்துக் கொண்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உண்ணப்படும் உணவு, தனக்கு அனுமதிக்கப் பட்டதாகவே ஷைத்தான் (ஜின்) கருதுகிறான். அவன் தான் சிறுமியை இங்கு வர வைத்து, அதன் மூலம் இந்த உணவைத் தனக்கும் அனுமதிக்கப் பட்டதாக்கிக் கொள்ள முயன்றான்; நான் அவளது கையைப் பிடித்து (தடுத்து) விட்டேன். மேலும், ஒரு பாலைவனக் கிராமவாசியை அவன் (மீண்டும்) இங்கு கூட்டி வந்து, அதன் மூலம் இதைத் (உணவை) தனக்கும் அனுமதிக்கப் பட்டதாக்கிக் கொள்ள முயன்றான். எனவே, அவரது கையை நான் பிடித்து (தடுத்து) விட்டேன். என் உயிர் எவன் வசம் இருக்கிறதோ, அவன் மீது சத்தியமாக இவளது கையோடு ஷைத்தானின் கையும் எனது பிடிக்குள் அகப்பட்டிருந்தது.
(ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 36, ஹதீஸ் 133)

விளக்கம்:
மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம் நமக்குப் பல உண்மைகள் தெரிய வருகின்றன. அவற்றை எளிமைப்படுத்தி நாம் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்:

பொதுவாக மனிதர்கள் குடியிருக்கும் வீடுகளில் தாமும் வந்து, கூடவே குடியிருப்பதை “அவாமிர்” எனப்படும் இந்த ஜின் இனத்தவர்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு குடியிருக்க வரும் இந்த அவாமிர்கள் அனேகமான சந்தர்ப்பங்களில் நமது கண்ணுக்குத் தெரியாதவாறு, தமது இயல்பான வடிவத்தில் குடியிருப்பார்கள். அல்லது அரிதாக சில சமயங்களில் நமது கண்ணுக்குத் தெரியக் கூடிய, பாம்பு போன்ற வடிவங்களில் கூட வந்து குடியிருக்க முயற்சிப்பார்கள்.

இவ்வாறு குடியிருக்கும் அவாமிர்கள் எல்லோருமே நல்லவர்கள் என்றும் சொல்வதற்கில்லை; கெட்டவர்கள் என்று சொல்வதற்கும் இல்லை. சில வேளை அவர்கள் நல்ல ஸாலிஹான அவாமிர்களாகவும் இருக்கலாம்; சில வேளை அது கெட்ட ஷைத்தானாகவும் இருக்கலாம்.

மேலும், மனிதர்களோடு பங்காளிகளாக அவர்கள் வீடுகளில் குடியிருப்பது மட்டுமல்லாமல், மனிதர்களது உணவிலும் கூட பங்காளிகளாகக் கூட்டுச் சேர்ந்து கொள்ளவே ஜின் இனத்தவர்கள் முயற்சிக்கிறார்கள் எனும் உண்மையும் இந்த ஹதீஸ்கள் மூலம் ஊர்ஜிதமாகிறது.

இனி இன்னும் சில ஆதாரங்கள் மூலம் மேலும் சில உண்மைகளையும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்:

ஆதாரம் 7:
மனிதர்கள் (ஏற்கனவே) குடியிருக்காத (பூட்டி வைக்கப்பட்டிருக்கும்) ஒரு வீட்டுக்குள் எவரேனும் நுழைவதாக இருந்தால், அவர் (அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்) “எங்கள் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக” என்று கூறட்டும்.
முவத்தா மாலிக்: பாடம் 53, ஹதீஸ் 1765

ஆதாரம் 8:
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
மனிதர்கள் குடியிருக்காத (பூட்டி வைக்கப் பட்டிருக்கும்) ஒரு வீட்டுக்குள் ஒரு மனிதர் (முதலில்) நுழையும் போது, அவர் “அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீது ஸலாம் உண்டாகட்டுமாக” என்று கூற வேண்டும்.
அல் அதப் அல் முஃப்ரத்: பாடம் 43, ஹதீஸ் 5
தரம்: ஹஸன் (அல்பானி)

விளக்கம்:
இந்த ஹதீஸ்கள் மூலம் மேலும் சில உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அதாவது, மனிதர்கள் குடியிருக்காமல், வெறுமனே பூட்டி வைக்கப் பட்டிருக்கும் வீடுகளில் நல்ல / முஃமினான அவாமிர்கள் (ஜின்கள்) வந்து குடியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை இந்த ஹதீஸ்கள் மறுக்க முடியாதவாறு உறுதிப் படுத்துகின்றன.

அதாவது, யாருமே குடியிருக்காத வீட்டுக்குள் நுழையும் போது “அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீது சலாம் உண்டாகட்டும்” என்று கூறுவதாக இருந்தால், ஏற்கனவே அந்த வீட்டுக்குள் அல்லாஹ்வின் நல்லடியார்கள் யாராவது குடியிருக்க வேண்டும். மனிதர்கள் தான் அங்கு ஏற்கனவே இல்லையென்று ஆகி விட்டது. எனவே, இது உள்ளே வசிக்கும் முஃமினான “அவாமிர்”களுக்குச் சொல்லப் படும் ஸலாம் தான் என்பது சந்தேகத்துக்கிடமின்றி இங்கு நிரூபணமாகிறது.

மனிதர்கள் குடியிருக்கும் வீடுகளில் மனிதர்களோடு ஒன்றுக்குள் ஒன்றாக வசிப்பதற்குக் கெட்ட ஜின்கள் ஏன் வருகின்றன?

மனிதர்கள் வசிக்காமல் பூட்டி வைக்கப் பட்டிருக்கும் வீடுகளில் நல்ல ஜின்கள் வந்து குடியிருப்பதன் தாத்பர்யம் தான் என்ன?

இவ்வாறான பல கேள்விகள் இப்போது நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும். இந்தக் கேள்விகளுக்கான விடைகள் உண்மையில் மிகவும் எளிமையானவை. அதை அனைவரும் இலகுவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நமது எளிய மொழி நடையில் பின்வருமாறு கூறுகிறேன்:

முஃமினான நல்ல மனிதர்கள் வாழும் வீடுகளில் பொதுவாகக் கெட்ட அவாமிர்களுக்கு (ஷைத்தான்களுக்கு) அனுமதி மறுக்கப் பட்டு விடும். அதாவது, வீட்டினுள் நுழைதல், உணவு உண்ணுதல் போன்ற ஒவ்வொரு காரியங்களிலும் அந்த முஃமின்கள் அல்லாஹ்வின் பெயரை நினைவுகூருவோராக இருப்பதனால், அவ்வாறான வீடுகளில் வசிப்பதற்கும், அங்கு பரிமாறப்படும் உணவு போன்றவற்றில் பங்கெடுப்பதற்கும் ஷைத்தானிய ஜின்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விடுகிறது. இதன் விளைவாக அனேகமான கெட்ட அவாமிர்கள் அங்கிருந்து தூரமாகி விடுகின்றன.

அதே நேரம், அந்த வீட்டில் ஒருவேளை முஃமினான நல்ல அவாமிர்கள் ஏற்கனவே குடியிருந்து கொண்டிருப்போராக இருந்தால், அவர்கள் ஒரு போதும் மனிதர்களின் உணவுகளில் கைவைக்க மாட்டார்கள். ஏனெனில், அந்த உணவுக்குச் சொந்தக்காரனாக இருக்கும் மனிதரிடம் அனுமதி கேட்காமல், அவர்களது உணவில் கைவைத்தல் என்பது திருட்டு எனும் பாவகாரியம் என்று அல்லாஹ் எச்சரித்திருப்பதால், முஃமினான அவாமிர்கள் ஒருபோதும் அந்த உணவில் திருட்டுத்தனமாகக் கைவைக்க மாட்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால், நல்ல அவாமிர்கள், ஏற்கனவே மனிதர்கள் குடியிருக்கும் வீடுகளை விட்டு அனேகமான சந்தர்ப்பங்களில் தாமாகவே வெளியேறி விடுவார்கள். ஏனெனில், இன்னொருவர் வீட்டில் அனுமதியில்லாமல் குடியிருப்பது கூட மார்க்கம் தடுத்த செயல் என்பதால், அனேகமான சந்தர்ப்பங்களில் அவர்களாகவே வெளியேறி விடுவார்கள். யாருமே குடியிருக்காமல், வெறுமனே பூட்டிக் கிடக்கும் வீடுகள் ஏதாவது கிடைத்தால், அங்கு சென்று, யாருக்கும் தொல்லை கொடுக்காமல் அவர்கள் குடியமர்ந்து விடுவார்கள்.

இதையும் மீறி சில நல்ல அவாமிர்கள் அரிதாக ஒருசில சந்தர்ப்பங்களில், நியாயமான காரணங்களையொட்டி, மனிதர்கள் குடியிருக்கும் வீடுகளில் குடியிருக்க நேர்ந்தாலும், அந்த வீட்டில் குடியிருக்கும் மனிதர்களது அன்றாட வாழ்வில் அவர்கள் குறுக்கிட மாட்டார்கள். தமது பாட்டுக்குத் தமது பணியை அவர்கள் அங்கு செய்து கொண்டிருப்பார்கள்.

இதற்கு மாற்றமாக, முஃமின் அல்லாத காஃபிர்கள் / முஷ்ரிக்குகள் / கெட்டவர்கள் வாழும் வீடாக ஒரு வீடு இருந்தால், அந்த வீட்டின் நிலவரம் எப்படியிருக்கும் என்பதைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அல்லாஹ்வின் பெயர் அடிக்கடி நினைவுகூரப்படும் ஒரு வீடாக அந்த வீடு இருக்காது. எனவே, கெட்ட / ஷைத்தானிய அவாமிர்கள் அங்கு வந்து கூட்டம் கூட்டமாகக் குடியிருக்க ஆரம்பித்து விடுவார்கள். இவ்வாறான வீடுகளில் குடியிருக்கும் மனிதர்களது அன்றான நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் இந்த அவாமிர்கள் தாமும் பங்காளிகளாக ஆகிக் கொள்வார்கள்.

மேலே பட்டியலிடப்பட்ட ஹதீஸ்கள் மட்டுமல்லாது வேறு பல ஹதீஸ்கள் வாயிலாகவும் இந்த உண்மைகள் மறுக்க முடியாதவாறு உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதாவது, மனிதர்கள் வாழும் வீடுகளில் எந்தெந்தக் காரியங்களில் மனிதர்கள் ஈடுபடுகிறார்களோ, அவற்றிலெல்லாம் தாமும் ஒரு பங்காளியாக சேர்ந்து கொள்ளவே ஷைத்தானிய ஜின்கள் முயற்சிக்கின்றன.

உணவு, உடை, உறையுள், கழிப்பிடம், படுக்கை... என்று ஒன்று விடாமல், அனைத்திலும் மனிதர்களோடு தாமும் ஒரு பங்காளிகளாக ஆகிக் கொள்ளவே ஷைத்தானிய ஜின்கள் முயற்சிக்கின்றன என்பதைப் பல மார்க்க ஆதாரங்கள் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கின்றன. இதனால் தான், அன்றாடம் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் போதும், ஷைத்தானிய ஜின்களிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கக் கோரும் துஆக்களை ஓதிக் கொள்ளுமாறு மார்க்கம் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. இவை குறித்து மேலும் பல விளக்கங்களை இன் ஷா அல்லாஹ் பிறகு நோக்கலாம். இப்போதைக்கு வீடுகளில் தங்கும் அடிப்படையோடு மட்டும் நமது ஆய்வைச் சுருக்கிக் கொள்வோம்.

இவ்வாறு கெட்ட “அவாமிர்”கள் மனிதர்களின் வீடுகளில் வந்து குடிகொள்ள ஆரம்பிக்கும் போது, அதன் விளைவாக அந்த வீடுகளில் பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.

உதாரணத்துக்கு, அந்த வீட்டில் உண்ணும் உணவில் பரக்கத் இருக்காது; ஏனெனில், அதையெல்லாம் ஷைத்தான்கள் உறிஞ்சிக் கொள்வார்கள்.
அந்த வீட்டில் உறங்கும் உறக்கத்தில் நிம்மதியிருக்காது; ஏனெனில், அதையும் பக்கத்தில் படுக்கும் ஷைத்தான்கள் கெடுத்து விடும்.
அந்த வீட்டில் மேற்கொள்ளப்படும் அன்றாட நடவடிக்கள் மூலம், நல்ல விளைவுகளுக்கு பதிலாகத் தீய விளைவுகளே அதிகம் வெளிப்படும்; ஏனெனில், அவற்றினுள் ஷைத்தானிய அவாமிர்கள் தமது கைவரிசையைக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.
சுருக்கமாகக் கூறுவதென்றால், அந்த வீட்டில் முடுமையும், தரித்திரமும், முஸீபத்துக்களுமே குடிகொள்ள ஆரம்பிக்கும்.

குறிப்பு:
இங்கு “பரக்கத் இல்லாமல் போதல்”, “தரித்திரம் பிடித்தல்” என்ற வாசகங்களின் மூலம் உணர்த்தப் படுவதெல்லாம் செல்வச் செழிப்பான வாழ்க்கை இல்லாமல் போதல் என்பதல்ல. ஏனெனில், இஸ்லாத்தின் பார்வையில் பரக்கத் என்பது செல்வம் அல்ல. செல்வம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தம்மிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி காணும் நிலையைத் தான் பரக்கத் என்று மார்க்கம் கூறுகிறது. ஷைத்தான்கள் குடியிருக்கும் வீட்டில் திருப்தியான / மனநிம்மதியுடனான வாழ்க்கை இல்லாமல் போகும் என்பது தான் தரித்திரம் / முடுமை என்பதன் மூலம் இங்கு உணர்த்தப் படும் கருத்து என்பதையும் புரிந்து கொள்க.

இதுவரை முன்வைக்கப்பட்ட விளக்கங்கள் எதையும் எனது ஊகத்தின் அடிப்படையில் நான் முன்வைக்கவில்லை. ஏனைய பல மார்க்க ஆதாரங்களோடு “அவாமிர்” குறித்த ஹதீஸ்களை இணைத்து நோக்குவதன் மூலமே இந்த விளக்கத்தை நான் அடைந்திருக்கிறேன். உதாரணத்துக்கு ஒன்றை இங்கு விளக்கிக் காட்டுகிறேன். இதை வைத்து ஏனையவற்றையும் இதே அடிப்படையில் வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.

சகுனம் பற்றிய ஹதீஸ்களோடு, அவாமிர் பற்றிய இந்த ஹதீஸ்களையும் இணைத்துப் புரியும் போது நான் முன்வைத்திருக்கும் விளக்கங்கள் தான் சரியானவையெனும் உண்மை வெளிப்படும். அது எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைக் கொஞ்சம் இனி விரிவாக நோக்கலாம்:

ஆதாரம் 9:
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
ஒரு மனிதர் (அல்லாஹ்வின் தூதரிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே, முன்பு நாம் ஒரு வீட்டில் குடியிருந்தோம். அங்கு நாம் எண்ணிக்கையில் மிகைத்தவர்களாகவும், அதிக சொத்துக்களுடனும் இருந்தோம். பிறகு நாம் வேறொரு வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். அங்கு நமது எண்ணிக்கையும், சொத்துக்களும் குறைந்து விட்டன” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பழைய வீட்டுக்கே) திரும்பிச் செல்லுங்கள்; அல்லது (புது வீட்டை) காலி செய்து விடுங்கள். ஏனெனில், அது (புது வீடு) வெறுக்கத்தக்கது” என்று கூறினார்கள்.
அல் அதப் அல் முஃப்ரத்: பாடம் 39, ஹதீஸ் 12
தரம்: ஹஸன் (அல்பானி)

ஆதாரம் 10:
இப்னு உமர் (ரழி) அறிவித்ததாவது:
(ஒருமுறை) சகுனம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சகுனம் என்பது எதிலாவது இருக்குமென்றால், அது வீடு, பெண், குதிரை ஆகியவற்றிலேயே இருக்கிறது” என்று கூறினார்கள்.
ஸஹீஹுல் புகாரி: பாடம் 67, ஹதீஸ் 32

ஆதாரம் 11:
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்ததாவது:
“கெட்ட சகுனம் என்பது, குதிரை, பெண், வீடு ஆகிய மூன்றிலுமே இருக்கிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.
ஸாஹீஹுல் புகாரி: பாடம் 56, ஹதீஸ் 74

ஆதாரம் 12:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டுத் தன் தந்தை அறிவித்ததாக ஸாலிம் அறிவித்த செய்தி:
சகுனம் என்பது மூன்று விடயங்களில் மட்டுமே இருக்கும்:
ஒரு பெண், ஒரு குதிரை, அல்லது ஒரு வீடு.
ஸுனன் நஸாஈ: பாடம் 28, ஹதீஸ் 8
தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்)

ஆதாரம் 13:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்ததாவது:
தொற்றுநோய் என்பது கிடையாது; பறவை சகுனமும் கிடையாது. ஆனால், ஒரு கெட்ட சகுனம் என்பது மூன்று விடயங்களில் இருக்கலாம்: ஒரு பெண், ஒரு வீடு, அல்லது ஒரு மிருகம் (குதிரை).
ஸஹீஹுல் புகாரி: பாடம் 76, ஹதீஸ் 68

விளக்கம்:
இந்த ஹதீஸ்களின் தொகுப்பு மூலம் நாம் புரிந்து கொள்ளும் உண்மை என்ன?

சகுனம் என்பது, மூடநம்பிக்கையாளர்கள் நம்பிக் கொண்டிருப்பது போல், வாழ்வின் எல்லா அம்சங்களையும் தீர்மாணிக்கக் கூடிய ஓர் அம்சம் கிடையாது. பறவை சகுனம், ஆந்தை சகுனம் என்பன போன்ற அடிப்படைகளில், தொட்டதுக்கெல்லாம் சகுனம் பார்க்கும் வழிமுறை மார்க்கத்தில் கிடையாது.

அதே நேரம், ஒரு மனிதனுக்கு அமையும் வீடு, வாழ்க்கைத் துணை, மற்றும் வாகனம் ஆகியவற்றில் மாத்திரம், சகுனத்துக்கு நிகரான சில மறைவான சக்திகளின் ஆதிக்கங்கள் இருக்கத் தான் செய்கின்றன.

இது தான் சகுனம் பற்றிய ஹதீஸ்கள் அனைத்தின் தொகுப்பிலிருந்தும் வெளிப்படும் உண்மை. இனி இந்த உண்மையை “அவாமிர்” குறித்த ஹதீஸ்கள் மூலம் பெறப்பட்ட உண்மைகளோடு சேர்த்து நோக்கும் போது பெறப்படும் பேருண்மையின் சாராம்சம் என்ன?

சுருக்கமாகக் கூறினால்... ஒரு வீட்டில் குடியிருக்கும் “அவாமிர்” எனப்படும் ஜின்களின் தன்மைகளுக்கு அமையவும் அந்த வீட்டின் பரக்கத் என்பது தீர்மாணிக்கப் படும். முஃமினான நல்ல அவாமிர்கள் குடியிருக்கும் வீடாகவோ, அல்லது எந்த அவாமிர்களும் இல்லாத வீடாகவோ ஒரு வீடு இருந்தால், அந்த வீட்டில் பரக்கத் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அதே நேரம், ஷைத்தானிய அவாமிர்கள் குடியிருக்கும் வீடாக ஒரு வீடு இருந்தால், அந்த வீடு தரித்திரம் பிடித்த வீடாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இது தான் இந்த விளக்கங்களின் தொகுப்பினுள் மறைந்திருக்கும் பேருண்மை.

இந்த உண்மையைத் தான் காஃபிர்களும், மூடநம்பிக்கையாளர்களும் “நல்ல சகுனம்” / “கெட்ட சகுனம்” என்ற அடிப்படையில் தவறாகப் புரிந்திருக்கிறார்கள்.

இந்தத் தவறான புரிதலைத் திருத்தி, சரியான அடிப்படையில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே சகுனம் பற்றிய ஹதீஸ்கள் வாயிலாகவும், “அவாமிர்” எனப்படும் ஜின்கள் பற்றிய ஹதீஸ்கள் வாயிலாகவும் நபி (ஸல்) அவர்கள் நமக்குப் பல செய்திகளைக் கூறியிருக்கிறார்கள்.

இப்போது, இந்த விளக்கத்தின் அடிப்படையில் அவாமிர் பற்றிய ஹதீஸ்களையும், சகுனம் பற்றிய ஹதீஸ்களையும் எல்லாம் ஒருங்கிணைத்து, மீண்டும் ஒருமுறை நேரம் ஒதுக்கி, நிதானமாக வாசித்துப் பாருங்கள். நாம் முன்வைத்திருக்கும் விளக்கம் எந்த அளவுக்கு மார்க்கத்தோடு பொருந்திப் போகிறது என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

அவாமிர்கள் குறித்து நமது சக்திக்குட்பட்ட வரை ஓரளவு பார்த்து விட்டோம். இனி அடுத்த கட்டத்துக்குப் போகலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

Episode 38 : நவீன உலகில் ஜின் இனத்தவர்கள் 




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..