Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 59
Posted By:Hajas On 7/22/2017 6:21:43 AM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்

Episode 58: ஜின்களால் மனித உடல்களில் மேலாட முடியுமா? - தொடர்ச்சி...

Episode 59: ஜின்களும் மனிதர்களும் உடலுறவு கொள்ள முடியுமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

 


ஜின்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் பௌதீக ரீதியான ஆற்றல்கள், மற்றும் ஆதிக்க அதிகாரங்கள் ஆகியவற்றை நாம் மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் குறிப்பிட்டுக் காட்டும் பொழுது, இவற்றை மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் அனேகமான சந்தர்ப்பங்களில் இந்த உண்மையை நையாண்டி செய்வதற்குக் கையில் எடுக்கும் ஓர் ஆயுதம் தான், ஜின்களோடு உடலுறவு கொள்வது சம்பந்தமான கேலிப் பேச்சுக்கள்.

அதாவது, “ஜின்களோடு கூட மனிதர்கள் உடலுறவு கொள்ள முடியுமென்று எவனாவது கூறினால், அவனை விடவும் பைத்தியக்காரன் உலகில் இருக்கவே முடியாது” என்ற கருத்தில் இவ்வாறான பகுத்தறிவு வாதிகள் நக்கல், நையாண்டிகளை அவிழ்த்து விடுவதுண்டு.

எனவே, இந்த நையாண்டிக்கும், தீர்க்கமான தெளிவுகளை உள்ளடக்கிய, மார்க்க அடிப்படையிலான, தர்க்க ரீதியிலான ஒரு பதில் வழங்கப் படுவது அவசியம். இந்த அவசியத்தைக் கருத்திற் கொண்டே இந்த எபிசோட் அமைந்திருக்கும் இன் ஷா அல்லாஹ். உண்மையில் பைத்தியக்காரன் யார் என்பது இந்தக் கட்டுரையின் இறுதியில் இன் ஷா அல்லாஹ் சிந்திப்போருக்குத் தெளிவாகி விடும்.

“மனிதர்களோடு ஜின்கள் உடலுறவு கொள்ள முடியுமா?” எனும் இந்தக் கேள்விக்கான சுருக்கமான பதில், “ஆம்; நிச்சயமாக முடியும்; இதற்கான முகாந்திரங்கள் தாராளமாக இருக்கின்றன” என்பது தான். ஜின்கள் குறித்த மார்க்க ஆதாரங்களைச் சற்று ஆழமாக நோக்கும் போது இந்த நிலைபாட்டைத் தான் இஸ்லாம் ஊர்ஜிதப் படுத்துகிறது என்பதை நியாய உணர்வோடு சிந்திப்போரால் இலகுவாகக் கண்டுகொள்ளலாம்.

இந்த உண்மையை இஸ்லாம் எவ்வாறு சரிகாண்கிறது என்பதை இனி நாம் சில தர்க்க ரீதியான வாதங்களுடனும், தகுந்த ஆதாரங்களுடனும் அறிந்து கொள்ள முயற்சிப்போம்:

ஆதாரம் 1:
அவற்றில் (சுவர்க்கக் கூடாரங்களில்) பார்வைகளைக் கட்டுப் படுத்திக் கொண்ட கன்னியர் இருக்கின்றனர். இவர்களுக்கு முன்னர், அவர்களை (அந்தக் கன்னியரை) எந்த மனிதனும் தீண்டியதில்லை; எந்த ஜின்னும் கூட தீண்டியதில்லை.
(அல்குர்ஆன் 55:56)

ஆதாரம் 2:
அவற்றில் (கூடாரங்களில்) நல்ல, அழகு மிக்க கன்னியர் இருக்கின்றனர்.
ஆகவே, உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்யாக்குவீர்?
ஹூர் (எனும் அழகுக் கன்னியர்), கூடாரங்களினுள் மறைத்து வைக்கப் பட்டிருப்பர்.
ஆகவே, உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்யாக்குவீர்?
இவர்களுக்கு முன்னர், அவர்களை (அந்தக் கன்னியரை) எந்த மனிதனும் தீண்டியதில்லை; எந்த ஜின்னும் கூட தீண்டியதில்லை.
(அல்குர் ஆன் 55:70-74)

சுவர்க்கவாசிகளுக்கு ஜோடியாக அல்லாஹ் வழங்க இருக்கும் “ஹூர்” எனும் அழகுக் கன்னியர்களைப் பற்றி வர்ணிக்கும் மேற்கண்ட குர்ஆன் வசனங்களில், நாம் இங்கு கவனம் செலுத்தும் வாசகம் “இவர்களுக்கு முன்னர், அவர்களை எந்த மனிதனும் தீண்டியதில்லை; எந்த ஜின்னும் கூட தீண்டியதில்லை” எனும் வாசகம் தான்.

இந்த வாசகத்தினுள் ஒரு பேருண்மையை அல்லாஹ் சூசகமாகச் சொல்லிக் காட்டுகிறான். அது தான், மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் இடையில் உடலுறவு நடப்பது, உடற்கூற்றின் அடிப்படையில் சாத்தியமே எனும் உண்மை. இதைப் புரிந்து கொள்வதற்கு, முதலில் நாம் ஒருசில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அடிப்படை 1:
சுவர்க்கத்தில் நமக்கு “ஹூர்” எனும் கன்னியரை அல்லாஹ் ஜோடியாகத் தருவதன் அடிப்படை நோக்கமே, விரும்பியவாறெல்லாம் அவர்களோடு உடலுறவு கொண்டு, இன்பம் அனுபவிக்கத் தான். இது நாம் ஏற்கனவே அறிந்த உண்மை.

அடிப்படை 2:
இந்தக் குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் “தீண்டியதில்லை” எனும் சொல் மூலம் நாகரீகமாகக் குறிப்பிடுவது, “உடலுறவு கொண்டதில்லை” என்பதைத் தான். அதாவது, “இவர்களுக்கு முன்னர் அவர்களோடு (ஹூர் கன்னிகளோடு) எந்த மனிதனோ, அல்லது எந்த ஜின்னோ உடலுறவு கொண்டதில்லை; அவர்கள் கன்னி கழியாதவர்கள்” என்பது தான் இந்த வாசகத்தின் நேரடி அர்த்தம். இதை யாருமே மறுத்ததில்லை; மறுக்கவும் முடியாது.

அடிப்படை 3:
“எந்த மனிதரும், ஜின்களும் இதற்கு முன் அந்த ஹூர் கன்னியரோடு உடலுறவு கொண்டதில்லை” என்று அல்லாஹ் இங்கு கூறுவதாக இருந்தால், மனிதர்களோடு உடலுறவு கொள்வது போலவே, ஜின்களோடும் உடலுறவு கொள்ளத்தக்க ஓர் உடற்கட்டமைப்பு ஹூர் கன்னியருக்கு இருந்தால் மட்டுமே இவ்வாறு சொல்வது சாத்தியம்.

அடிப்படை 4:
மனிதர்களுக்கு இருப்பது போலவே தான் ஜின்களுக்கும் பாலுணர்வு, மற்றும் அது சார்ந்த ஆசைகள் / தேவைகள் உள்ளன. மேலும், மனிதர்கள் உடலுறவு கொள்வது போன்ற அதே அடிப்படையில் தான் ஜின்களும் உடலுறவு கொள்கின்றன. இந்த உண்மை கூட இந்த வசனத்தின் மூலம் ஊர்ஜிதமாகிறது.

அடிப்படை 5:
மனிதன் என்பது ஒர் இனம். அதே போல், ஜின் என்பது வேறோர் இனம். சுவர்க்கத்தில் இருக்கும் “ஹூர்” எனும் கன்னியர் என்பது இன்னோர் இனம். ஆக மொத்தத்தில் இங்கு மூன்று இனங்களைப் பற்றி மட்டுமே இந்த வசனத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது; நான்காவது ஓர் இனம் பற்றிக் குறிப்பிடவே இல்லை.

இப்போது இந்த அடிப்படைகளை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு, மேற்கண்ட குர்ஆன் வசனத்திலுள்ள “இவர்களுக்கு முன்னர் அவர்களோடு (ஹூர் கன்னிகளோடு) எந்த மனிதனோ, அல்லது எந்த ஜின்னோ உடலுறவு கொண்டதில்லை; அவர்கள் கன்னி கழியாதவர்கள்” எனும் கருத்தைச் சற்று சிந்தித்துப் பார்க்கும் போதே உண்மை புரிந்து விடும்.

அதாவது மனிதர்கள் உடலுறவு கொள்வதற்கென்று “ஹூர்” எனும் கன்னியர்கள் சுவர்க்கத்தில் இருப்பது போல், ஜின்கள் உடலுறவு கொள்வதற்கென்று தனியாக வேறோர் இனம் இருப்பதாக இங்கு அல்லாஹ் கூறவில்லை. மாறாக, மனித, ஜின் ஆகிய இரண்டு சாராரும் உடலுறவு கொள்வதற்காகவென்று ஒரேயோர் இனத்தைத் தான் அல்லாஹ் சுவர்க்கத்தில் ஏற்பாடு செய்துள்ளான். அந்த ஒரே இனம் தான் “ஹூர்” எனும் இனம்.

மனித, ஜின் ஆகிய இரண்டு வெவ்வேறு இனத்தவர்களோடு உடலுறவு கொள்ளக் கூடிய விதத்தில் ஹூர் எனும் இனத்தின் உடற்கூறுகள் பொதுப்படையாக அமையப் பெற்றிருக்கின்றன என்றால், அந்த இரண்டு (மனித, ஜின்) இனத்தவர்களது உடற்கூற்று அமைப்புகளும் தமக்குள் ஒருவரோடு ஒருவர் உடலுறவு கொள்வதற்கும் ஏற்ற உடற்கூற்று அமைப்பாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

இதை எளிய கணித வாய்ப்பாட்டின் மூலம் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்:

A = B மற்றும் B = C என்றால், A = C என்பது தான் உள்ளே பொதிந்திருக்கும் உண்மை.

இதே அடிப்படையில்...
மனிதருக்கும் ஹூர் கன்னியருக்கும் இடையில் உடலுறவு சாத்தியம்...
ஜின்களுக்கும் ஹூர் கன்னியருக்கும் இடையில் உடலுறவு சாத்தியம்..
என்றால்....
மனிதருக்கும், ஜின்களுக்கும் இடையில் உடலுறவு சாத்தியம்.

இந்த உண்மை தான் இங்கு சூசகமாக உணர்த்தப் பட்டுள்ளது.

எந்தவொரு சொல்லையும் வீணாகவோ, காரணமின்றியோ அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுவதில்லை. குர்ஆனிலுள்ள ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த ஞானத்தின் அடிப்படையிலேயே அல்லாஹ்வால் கோர்க்கப் பட்டுள்ளன.

மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் இடையில் உடலுறவு நடப்பது சாத்தியமே இல்லையென்றிருந்தால், இங்கு சொல்லப்பட்டிருக்கும் வசனக் கோர்வையை அல்லாஹ் வேறு மாதிரியே அமைத்திருப்பான்.

உதாரணத்துக்கு, மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் ஜோடிகளாக என்று தனித்தனி இனத்தவர்கள் சுவர்க்கத்தில் இருப்பார்கள் எனும் கருத்தையே இங்கு அல்லாஹ் விதைத்திருப்பான். மனிதர்களுக்கு “ஹூர்” எனும் கன்னியர் இருப்பது போல், ஜின்களுக்கென்று வேறொரு பெயரில் இன்னோர் இனம் இருப்பதாக நிச்சயம் கூறியிருப்பான்.

அல்லது, ஜின்களுக்குரிய ஜோடிகளைக் குறிப்பிடாமல் விட்டு விட்டு, மனிதர்களுக்கு மட்டும் உரிய ஜோடிகளாக இந்த ஹூர் எனும் கன்னியரைக் குறிப்பிடும் விதமாக “எந்த மனிதரும் தீண்டியதில்லை” என்று மட்டுமே கூறியிருப்பான்; மேலதிகமாக இங்கு தேவையில்லாமல் ஜின்களையும் கொண்டு வந்து கோர்த்திருக்கவே மாட்டான்.

ஆனால், இவ்வாறெல்லாம் அல்லாஹ் இங்கு செய்யவில்லை. வேண்டுமென்றே இந்த வசனக் கோர்வையைத் திட்டமிட்டே அமைத்தது போல், “எந்த மனிதரும் தீண்டியதில்லை; எந்த ஜின்னும் கூட தீண்டியதில்லை” என்று அல்லாஹ் இங்கு அழுத்திக் கூறுகிறான். இதன் மூலம் அல்லாஹ் இங்கு விதைக்கும் கருத்து ஒன்றேயொன்று தான். மனித, ஜின் இரண்டு இனத்தவர்களும் சுவர்க்கத்தில் “ஹூர்” எனும் ஒரே இனத்தவர்களோடு தான் உடலுறவு கொள்ளப் போகிறார்கள் எனும் கருத்துத் தான் அது. இதை விட வேறெந்த அர்த்தமும் இதற்கு இல்லை.

எனவே, இந்த வசனத்தின் அடிப்படையில், மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் இடையில் உடலுறவு நடப்பது முற்றிலும் சாத்தியம் என்பது இங்கு மறுக்க முடியாதவாறு நிரூபணமாகிறது. இரண்டு சாராரும் தமக்குள் உடலுறவு கொள்வதற்கு ஏற்ற உடற்கூற்று அமைப்புக்களோடு தான் படைக்கப் பட்டுள்ளார்கள் என்பதும் இங்கு நிரூபணமாகிறது.

ஆகவே, உண்மையில் இனி நாம் யோசிக்க வேண்டியது, “மனிதர்களுக்கும், ஜின்களூக்கும் இடையில் உடலுறவு சாத்தியமா?” என்பது பற்றி அல்ல; அவ்வாறு உடலுறவு கொள்வது மார்க்கத்தின் பார்வையில் அனுமதிக்கப் பட்டதா? அல்லது பாவ காரியமா? என்பதைப் பற்றி மட்டும் தான் சிந்திக்க வேண்டும். உண்மையில் இது குறித்துத் தான் பகுத்தறிவாளர்கள் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

மனித ஜின் இனத்தவர்களுக்கிடையில் உடலுறவு சாத்தியம் என்பதை நிரூபிக்க இந்த ஆதாரம் மட்டுமல்ல; இன்னும் பல ஆதாரங்கள் மார்க்கத்தில் உண்டு. அவ்வாறான இன்னும் ஒருசில ஆதாரங்களையும் கூட இனி பார்க்கலாம்:

ஆதாரம் 3:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஜாபிர் (ரழி) அறிவித்ததாவது:
உங்களில் யாராக இருந்தாலும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், ஷைத்தான் பங்கேற்கிறான். ஒருவர் உணவு உண்ணும் போது கூட, அதிலும் அவன் (ஷைத்தான்) பங்கேற்கிறான். ஆகவே, உங்கள் உணவில் ஒரு கவளம் தவறுதலாகக் கீழே விழுந்தால் கூட, அதையும் பொறுக்கியெடுத்து, சுத்தப்படுத்தி நீங்கள் உண்டு விடுங்கள்; ஷைத்தானுக்கு (உண்பதற்கு) அதை விட்டு விட வேண்டாம். மேலும், ஒருவர் சாப்பிட்டு முடியும் போது, அவர் தனது விரல்களையும் சூப்பிச் (மிச்சம் வைக்காமல்) சாப்பிடட்டும். ஏனெனில், அந்த உணவின் எந்தப் பாகத்தில் பரக்கத் இருக்கிறதென்பது அவருக்குத் தெரியாது.
(ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 36, ஹதீஸ் 177)

இந்த ஹதீஸ் வாயிலாகவும், மேலும் இது சார்ந்த மேலும் பல ஹதீஸ்கள் வாயிலாகவும் நமக்கு மேலும் சில உண்மைகள் புலப்படுகின்றன. அவற்றுள் ஒருசில உண்மைகள் இங்கு குறிப்பிடத்தக்கவை.

உண்மை 1:
இங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மனித வாழ்வில் ஷைத்தான் பங்கேற்பதைப் பற்றிக் குறிப்பிடும் போது, தொழுகை, நோன்பு போன்ற நல்லமல்களைப் பாழ்படுத்தும் விதமாக மட்டும் ஷைத்தான் பங்கேற்கிறான் என்று குறிப்பிடவில்லை. மாறாக, மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஷைத்தானும் பங்கேற்க வருகிறான் என்பதை இங்கு நேரடியாகவே சொல்லிக் காட்டுகிறார்கள்.

உண்மை 2:
மேலும், ஷைத்தான் பங்கேற்கும் இந்தப் பங்கேற்றல் என்பது, ஆன்மீக அடிப்படையிலான பங்கேற்றலை மட்டும் குறிக்கவில்லை; லௌகிக, பௌதீக அடிப்படையிலான பங்கேற்றலையும் சேர்த்தே இது குறிக்கிறது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு உணவை எப்படிப் பங்கு போட்டுக் கொள்வானோ, அதே போன்ற அடிப்படையிலேயே இங்கு ஷைத்தானும் பங்கேற்க வருவதாக நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதை நாம் குழப்பங்களின்றி, எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கு நபி (ஸல்) அவர்கள் உணவு உண்பதைக் கூட உதாரணமாகச் சொல்லிக் காட்டியுள்ளார்கள்.

அதாவது, இதைக் கொஞ்சம் விரிவு படுத்திக் கூறுவதென்றால், நாம் உண்ணும் உணவில் பங்கேற்பதன் மூலம், அதிலிருக்கும் போஷாக்கிலும், பரக்கத்திலும் ஒரு பாதியைத் தான் உறிஞ்சிக் கொள்ள / அனுபவிக்க ஷைத்தான் முயற்சிப்பது போலவே தான், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அவன் முயற்சிக்கிறான்.

உண்ணும் உணவு மட்டுமல்லாது, உறங்கும் உறக்கம், அணியும் ஆடை, செய்யும் தொழில்... இப்படி எல்லாவற்றிலுமே பாதியைத் தான் அனுபவிக்கவும், அதன் மூலமும் அந்த மனிதனை இன்னுமின்னும் நஷ்டத்துக்கும், கஷ்டத்துக்கும் ஆளாக்கவுமே ஷைத்தான் முயற்சிக்கிறான் என்பது தான் இந்த ஹதீஸ் நேரடியாகவே கூறும் உண்மை.

இந்தக் காரணத்தையும் கருத்திற் கொண்டு தான், நமது எந்தக் காரியத்திலும் ஷைத்தான் நுழைந்து, அதில் கிடைக்கும் பிரயோசனத்தில் பாதியைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்லக் கூடாது என்பதற்காக, நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் போதும், அதை அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கவும், ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரவும் ஏராளமான துஆக்களை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

உணவு உண்ணும் போது, உறங்கச் செல்லும் போது, ஆடை அணியும் போது, வீட்டுக்குள் நுழையும் போது, வீட்டை விட்டு வெளியேறும் போது... இப்படி நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு காரியத்தையும் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கவும், ஷைத்தானிடமிருந்து அவற்றைப் பாதுகாக்குமாறு பிரார்த்திக்கவும் அல்லாஹ்வின் தூதர் நமக்கு ஏராளமான துஆக்களைக் கற்றுத் தந்திருப்பது, அவற்றிலெல்லாம் ஷைத்தானிய ஜின்கள் பங்குதாரராக வந்து சேர்ந்து விடக் கூடாது என்பதற்காகவும் தான்.

இந்த உண்மையைத் தான் நம்மில் அனேகமானோர் உணர்ந்து கொள்ளத் தவறி விட்டோம். தவறியதன் விளைவாகவே, ஜின்களால் ஏற்படும் தீங்குகள் பற்றிய சரியான தெளிவு இல்லாத ஒரு சமூகமாக இன்று நாம் பரிணமித்திருக்கிறோம்.

இதே அடிப்படையில் தான் நமது வாழ்வில் உடலுறவு எனும் அம்சமும் அமைந்திருக்கிறது. எல்லாக் காரியங்களிலும் ஷைத்தான் பங்கேற்க வருவதைப் போல், கணவன் மனைவிக்கிடையில் உடலுறவு நடக்கும் போதும் அதிலும் மூன்றாவது ஆளாகப் பங்கேற்க ஷைத்தானிய ஜின்கள் உற்சாகத்தோடு ஓடி வருகின்றன.

எனவே தான், இந்த இடத்திலும் ஷைத்தான்கள் வந்து பங்கேற்று விடக் கூடாது என்பதற்காக, தம்பதிகள் உடலுறவு கொள்ள ஆரம்பிப்பதற்கு முன் ஓதுவதற்கென்றே பிரத்தியேகமான துஆக்களை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

இந்த துஆக்களைச் சரிவ ஓதி, அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்ட பின் உடலுறவு கொள்ள ஆரம்பிக்கும் தம்பதிகளுக்கு இடையில் எந்தவொரு ஷைத்தானிய ஜின்னுக்கும் மூன்றாவது ஆளாக இடையில் நுழைந்து, அந்த உடலுறவில் தானும் பங்கேற்க முடியாது. இதன் விளைவாக, இவ்வாறான உடலுறவு மூலம் பிறக்கும் சந்ததிகளின் இரத்தத்தில் ஷைத்தானிய ஜின்களின் மரபணுக் கலப்படம் இருக்காது. எனவே, இவ்வாறான குழந்தைகளிடம் ஸாலிஹான தன்மைகள் அதிகம் காணப்படும்.

அதே நேரம் இவ்வாறு துஆ கேட்காமல் உடலுறவு கொள்வோரின் நிலைமை பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவர்களுக்கிடையில் உடலுறவு நடக்கும் போது, ஷைத்தானிய ஜின்களும் அதற்குள் புகுந்து விளையாடுவதை யாரும் தடுக்க முடியாது. அதன் விளைவாக அவர்களுக்குக் கிடைக்கும் சந்ததிகளின் இரத்தத்தில் ஷைத்தானிய மரபணுக்களின் கலப்படம் அதிகம் இருக்கும். இதன் விளைவாக இவ்வாறான குழந்தைகள் வளரும் போது, அவர்களிடம் ஸாலிஹான தன்மைகளுக்குப் பதிலாக ஷைத்தானியத் தன்மைகளையே அதிகம் அவதானிக்கலாம்.

இந்த உண்மைகளைப் பின்வரும் ஹதீஸ்கள் அழகாக உறுதிப் படுத்துவதைப் பார்க்கலாம்:

ஆதாரம் 4:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்ததாவது:
உங்களில் யாராவது தம் துணைவியோடு உடலுறவு கொள்ள ஆரம்பிக்கும் போது “பிஸ்மில்லாஹ், அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான், வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஃஸக்தனா” என்று கூறிய பின் உடலுறவு கொண்டால், (அந்த உடலுறவின் மூலம்) குழந்தை கிடைத்தால், அந்தக் குழந்தைக்கு ஷைத்தானால் எந்தத் தீங்கும் இழைக்க முடியாது.
(ஸஹீஹுல் புகாரி: பாடம் 80, ஹதீஸ் 83)

ஆதாரம் 5:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்ததாவது:
உங்களில் யாராவது தம் மனைவியோடு உடலுறவு கொள்ளும் போது, “அல்லாஹும்ம ஜன்னிப்னிஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஃஸக்தனி” (யா அல்லாஹ், என்னிலிருந்து ஷைத்தானைத் தூரமாக்குவாயாக; மேலும், எனக்கு நீ அருள்வதனிடமிருந்தும் (பிறக்கும் குழந்தையிடமிருந்தும்) ஷைத்தானைத் தூரமாக்குவாயாக) என்று கூறட்டும். இதன் பிறகு அவர்களுக்கு (இதன் மூலம்) ஒரு கிழந்தை கிடைத்தால், அந்தக் குழந்தையின் மீது (நேரடி) ஆதிக்கம் செலுத்தவோ, அல்லது அந்தக் குழந்தைக்குத் தீங்கிழைக்கவோ ஷைத்தானை ஒருபோதும் அல்லாஹ் அனுமதிப்பதில்லை.
ஸுனன் இப்னு மாஜா: பாடம் 9, ஹதீஸ் 1994
தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்)

மேலே நாம் முன்வைத்த விளக்கங்களை அச்சொட்டாக ஊர்ஜிதப் படுத்தும் விதமாகவே இந்த இரண்டு ஹதீஸ்களும் அமைந்திருக்கின்றன என்பதைச் சிந்திப்போர் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ஹதீஸில் கேட்கப் படும் துஆவின் வாசகங்களைச் சற்று உன்னிப்பாக அவதானிக்கும் போது கூட இந்த உண்மை பின்வருமாறு மேலும் ஊர்ஜிதமாகிறது.

“யா அல்லாஹ், என்னிலிருந்தும், இந்த உடலுறவின் மூலம் கிடைக்கும் குழந்தையிலிருந்தும் ஷைத்தானைத் தூரமாக்குவாயாக” என்று பிரார்த்திக்கச் சொல்லி நபியவர்கள் கூறியிருப்பதிலிருந்தே, ஒவ்வோர் உடலுறவிலும் ஷைத்தானிய ஜின்கள் பங்கேற்க வருகின்றன என்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பிறக்கும் குழந்தையில் கூட ஷைத்தானிய ஆதிக்கம் கலந்து விடும் அபாயம் உண்டு என்பதையும் இது உறுதிப் படுத்துகிறது.

அதாவது, பாதுகப்பற்ற உடலுறவின் போது, கணவனின் விந்து, மனைவியின் முட்டை ஆகிய இரண்டும் மட்டுமல்லாமல், ஷைத்தானிய ஜின்களின் மரபணுக்களைப் போன்ற கண்ணுக்குத் தெரியாத மூன்றாவதொரு சக்தியும் இங்கு கலப்படமாவதன் மூலமே அந்தக் குழந்தை கருக்கொள்ள ஆரம்பிக்கிறது என்பது தான் இதன் பொருள். இதன் விளைவாகத் தான் அந்தக் குழந்தையிடம் தாய், தந்தை ஆகியோரின் மனித மரபணு ஆதிக்கம் மட்டுமல்லாது, ஷைத்தானிய ஆதிக்கமும் மேலதிகமாக ஏற்படுகிறது. இந்த உண்மையையும் மேலே குறிப்பிட்ட “இப்னு மாஜா” அறிவிப்பின் இறுதிப் பகுதி வாசகங்கள் உறுதிப் படுத்துகின்றன.

ஜின்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் ஆற்றல்களில் அனேகமானவற்றை மறுக்கும் பகுத்தறிவு வாதிகள் சிலவேளை மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களுக்கு வேறொரு வியாக்கியானம் கொடுக்க முனைவதுண்டு. எனவே, அதையும் இங்கு தொட்டுக் காட்டி, அதிலிருக்கும் அறியாமைகளுள் சிலதையும் அடையாளப் படுத்தி விட்டே தொடர்வது சிறந்ததென்று கருதுகிறேன்.

பொதுவாக இந்த ஹதீஸுக்குப் பகுத்தறிவு வாதிகள் விளக்கம் சொல்லும் போது, “இங்கு ஷைத்தானிடமிருந்து உடலுறவின் போது பாதுகாவல் தேடச்சொல்லி நபியவர்கள் கூறியிருப்பது, பௌதீக ரீதியிலான பாதுகாவலை அல்ல. மாறாக, இஸ்லாம் காட்டித்தராத தவறான வழிகளில் மனைவியைப் புணர்வது போன்ற பாவ காரியங்களைச் செய்வதற்கு ஷைத்தான் உள்ளத்தில் ஊசலாட்டம் மூலம் தூண்டி விடாமல் பாதுகாவல் தேடுவதையே இது குறிக்கிறது” எனும் அடிப்படையில் ஒரு சமாளிப்பு வாதத்தை முன்வைப்பதுண்டு.

ஆனால், இந்த வாதம் தவறானது; அறிவீனம் மிக்கது. இந்த வாதத்தில் இருக்கும் அறிவீனத்தைப் பல வழிகளில் நிரூபிக்கலாம். அவற்றையெல்லாம் இங்கு பதிவு செய்து கொண்டிருப்பது நமது நோக்கமல்ல. இருந்தாலும், நமது தலைப்பின் சம்பந்தம் கருதி, அவர்கள் வாதத்திலிலுக்கும் அறிவீனங்களில் ஒன்றை மட்டும் இங்கு தொட்டுக் காட்டுகிறேன்.

உள்ளத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் தவறான உடலுறவு வழிமுறைகளைச் செய்யத் தூண்டுவதிலிருந்து மட்டும் தான் ஷைத்தானிடம் பாதுகாவல் தேடுவதை இந்த ஹதீஸ் குறிப்பிடுவதாக இருந்திருந்தால், “என்னை விட்டும் ஷைத்தானைத் தூரமாக்குவாயாக” என்று சொல்வதோடு மட்டும் இந்த துஆ முற்றுப் பெற்றிருக்க வேண்டும். அல்லது, “என்னையும், என் துணைவியையும் விட்டு ஷைத்தானைத் தூரமாக்குவாயாக” என்ற கருத்திலாவது துஆ அமைந்திருக்க வேண்டும்.

மேலும், “இதன் மூலம் பிறக்கும் சந்ததியையும் ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாயாக” எனும் மேலதிக துஆ கூட இங்கு அர்த்தமற்றதாகி விடும். ஏனெனில், உடலுறவின் போது செய்யப்படும் பாவமான காரியங்களுக்கும், பிறக்கும் சந்ததிக்கும் இடையில் இவர்கள் வாதப்படி பார்த்தால் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இதை இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்திக் கூறுவதென்றால், உடலுறவின் போது இஸ்லாம் தடுத்திருக்கும் பாவ காரியங்கள் இரண்டே இரண்டு மட்டும் தான். ஒன்று, மனைவி மாதவிடாயில் இருக்கும் நிலையில் அவளுடன் புணர்வது; மற்றது, மனைவியின் மலவாயில் வழியாகப் புணர்வது. இந்த இரண்டு தடைகளையும் தவிர மார்க்கத்தில் வேறெந்தக் காரியத்துக்கும் கலவியில் தடையில்லை.

பகுத்தறிவு வாதிகளின் வாதத்துக்கு அமைய, இந்த இரண்டு பாவங்களில் ஒன்றைச் செய்வதற்கு மட்டும் தான் கலவியின் போது ஷைத்தானால் தூண்ட முடியும் என்றாகி விடுகிறது. இதில் வேடிக்கை என்ன தெரியுமா? பகுத்தறிவு வாதிகள் கூறுவது போல், உடலுறவின் போது இந்த இரண்டு பாவங்களில் எந்தப் பாவத்தைச் செய்வதற்கு ஷைத்தான் தூண்டினாலும், அதன் மூலம் ஒருபோதும் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லையென்பது தான் இங்கு மறைந்திருக்கும் தர்க்க ரீதியான உண்மை.

அதாவது, மாதவிடாய்க் காலத்தில் என்ன தான் உடலுறவு கொண்டாலும், ஒரு பெண் கருத்தரிக்க வழியே இல்லை. எனவே, இந்த முதலாவது பாவத்தின் மூலம் குழந்தை பிறப்பதற்கு அறிவியல் அடிப்படையில் கூட வாய்ப்பே இல்லையென்பது இங்கு நிரூபனமாகி விட்டது.

இரண்டாவது பாவத்தின் நிலை இதை விடவும் வினோதமானது. மலவாயில் வழியாக உடலுறவு கொள்ளும் போது, விந்து கர்ப்பப்பையைச் சென்றடைவதற்கு சுத்தமாக வழியே இல்லை. அது மலத்தோடு மலமாகக் கழிவறையைத் தான் சென்றடையும். எனவே, இந்தப் பாவத்தின் அடிப்படையில் கூட குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றாகி விட்டது.

ஆகவே, பகுத்தறிவு வாதிகள் கூறுவது போல், இந்த இரண்டு பாவ காரியங்களைச் செய்வதற்குத் தூண்ட விடாமல் தான் இங்கு ஷைத்தானிடமிருந்து பாதுகாவல் கேட்கப் படுகிறதென்றால், இந்தப் பாவங்களின் மூலம் தான் குழந்தை பிறக்க வழியே இல்லையென்று ஆகி விட்ட பிறகு, பிறக்கவே முடியாத ஒரு குழந்தையைப் பாதுகாக்குமாறு இங்கு நபியவர்கள் முட்டாள் தனமாகத் தான் துஆ செய்யச் சொல்லித் பணித்தார்கள் என்று தான் இவர்கள் சொல்ல வருகிறார்களா? சம்பந்தமோ, சாத்தியமோ இல்லாத ஒன்றுக்காக துஆ கேட்கும்படி விவரங்கெட்ட அடிப்படையில் பணிப்பதற்கு நபியவர்கள் ஒன்றும் பகுத்தறிவு வாதிகளைப் போல் அரைவேக்காடு அல்ல.

ஆக, இங்கு உள்ளத்தில் ஊசலாட்டம் ஏற்படுத்துவதன் மூலம், பாவகாரியம் செய்வதற்கு ஷைத்தானிய ஜின்கள் தூண்டுவது மட்டுமல்லாமல், பௌதீக ரீதியிலான வேறு தீங்குகளும் கூட உடலுறவின் போது ஷைத்தானிய ஜின்களால் ஏற்படுத்தப் படுகின்றன எனும் கருத்துத் தான் மேலோங்கி நிற்கிறது.

இந்தக் கருத்து மேலோங்குகிறது என்பதன் மூலம் இங்கு வெளிப்படும் கருத்து என்னவென்றால், மனிதர்களோடு உடலுறவில் பங்கு கொள்ளும் ஆற்றல் ஜின்களுக்கும் இருக்கிறது என்பது தான்.

ஏற்கனவே நாம் பார்த்த குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு இந்த ஆதாரங்களையும் சேர்க்கும் போது, நமது வாதம் இன்னும் இங்கு வலுவாக நிற்கிறது.

இனி, இதன் தொடர்ச்சியாக மேலும் சில ஆதாரங்களை நாம் இன்னொரு கோணத்திலிருந்து அடுத்த எபிசோடில் பார்க்கலம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்


Episode 60 : ஜின்களும் மனிதர்களும் உடலுறவு கொள்ள முடியுமா? (தொடர்ச்சி...)





Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..