Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 62
Posted By:Hajas On 8/21/2017 8:29:19 PM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

 தொடர் 5: சூத்திரதாரிகள்

Episode 61: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians)

 

Episode 62: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 1:

Image may contain: text

நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 1:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உலக வரலாற்றில் தோன்றிய எல்லா வழிகெட்ட இறைநம்பிக்கைச் சித்தாந்தங்களினுள்ளும் Reptilian / Draconian எனும் நகருயிர் சார் ஜின் இனத்தவர்களின் ஆதிக்கம் ஊடுறுவியிருப்பதாகக் கடந்த எபிசோடில் குறிப்பிட்டோம். ஆதிகாலம் முதல் உலகில் தோன்றிய அனைத்து சித்தாந்தங்களினுள்ளும் இந்த நகருயிர் ஆதிக்கம் எந்த அளவுக்கு ஊடுறுவியிருக்கின்றது என்பதை முதலில் நாம் சில வரலாற்றுத் தடயங்கள் வாயிலாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்: 

தடயம் 1 - பைபிள்:
இன்றைய உலகில் பைபிள் என்று அழைக்கப்படும் நூல், குர்ஆனைப் போன்ற ஓர் இறைவேதமல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், பைபிள் எனும் இந்த வேத நூலுக்குள் இருக்கும் ஒவ்வொரு பாகமும், ஒரு காலத்தில் அல்லாஹ்வால் அருளப்பட்ட குர்ஆனைப் போன்ற ஓர் இறைவேதமாக இருந்தவை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். 

அதாவது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட இன்ஜீல் வேதமும், அதற்கும் முன்னர் வாழ்ந்த மூஸா (அலை), தாவூத் (அலை) ஆகியோருக்கு அருளப்பட்ட தவ்ராத், மற்றும் ஸபூர் வேதங்களும் கணிசமான அளவுக்கு மாசுபடுத்தப்பட்ட நிலையில் ஒன்றுதிரட்டப்பட்டு, மூன்று வேதங்களின் அரைகுறை வடிவங்கள், மற்றும் ஏராளமான தனநபர்களின் கைச்சரக்குகள் ஆகியவை அனைத்தும் ஒரு கதம்பமாகத் தொகுக்கப் பட்டிருக்கும் ஒரு நூல் தான் இன்று பெரும்பான்மைக் கிரித்தவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கும் பைபிள் என்று அழைக்கப் படுகிறது. 

சுருக்கமாக இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், பைபிளில் இருக்கும் அனேகமான செய்திகள், தனிநபர் கைச்சரக்குகளின் கலப்படமாக இருந்தாலும், மொத்த பைபிளுமே பொய்யென்று யாருமே சொல்லிவிட முடியாது. ஏனெனில், ஒரு காலத்தில் மூஸா (அலை), தாவூத் (அலை), ஈஸா (அலை) ஆகியோருக்கு அல்லாஹ் அருளிய உண்மையான வேதங்களின் ஒருசில மிச்சம் மீதிகள் இன்றும் பைபிளில் ஆங்காங்கே மூலைமுடுக்குகளில் எஞ்சியிருக்கடத் தான் செய்கின்றன.

இவ்வாறு எஞ்சியிருக்கும் உண்மையான தகவல்களுள் ஒன்றையே பின்வரும் பைபிள் வசங்கள் சுட்டிக் காட்டுகின்றன என்பதே எனது நிலைபாடு:

விரியன் பாம்புப் பரம்பரைகளே, நீங்கள் தீயவர்களாயிருக்க, நல்லவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசும்.
(மத்தேயு 12:34) (King James Version)

இவ்வசனத்தில் (ஷைத்தானைச் சார்ந்த) ஒரு தீய சமூகத்தவரைப் பார்த்து “விரியன் பாம்புப் பரம்பரைகளே” (விரியன் பாம்புக் குட்டிகளே) என்று விழிக்கப் படுகிறது. இங்கு “விரியன் பாம்புகள்” என்பதன் மூலம் அர்த்தம் கொள்ளப் படுவது வேறு யாருமல்ல; இப்லீஸும், அவனைச் சார்ந்த ஷைத்தான்களுமே. அதாவது, இப்லீஸ் என்பவனும், அவனைச் சார்ந்த ஷைத்தான்களும் விரியன் பாம்பு போன்ற ஏதோ ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள் (Reptilians) என்பதே இங்கு மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கும் செய்தி.

இதை இன்னும் உறுதிப் படுத்தும் விதமாகப் பின்வரும் வசனமும் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது:

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கிய சகல வன ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை (ஏவாளை) நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” என்றது.
(ஆதியாகமம் 3:1)

இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் சம்பவம், ஆதம் (அலை), மற்றும் ஹவ்வா (அலை) ஆகியோர் சுவர்க்கச் சோலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த தடுக்கப்பட்ட மரத்தின் கனியை அவர்களைப் புசிக்கச் செய்வதற்குத் திருட்டுத்தனமாக அங்கு வந்த இப்லீஸ், ஹவ்வா (அலை) அவர்களை நம்ப வைத்து ஏமாற்றும் காட்சியையே வர்ணிக்கிறது.

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்ட விதத்தில் தான் சம்பவம் அப்படியே நிகழ்ந்தது என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. ஒருவேளை இவ்வாறு நடந்திருக்கலாம்; அல்லது சற்று மாற்றமான ஒழுங்கில் கூட இந்தச் சம்பவ நிகழ்ந்திருக்கலாம். அதை விலாவாரியாக இங்கு ஆய்வு செய்வது நமது நோக்கமல்ல. இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம், இப்லீஸைக் குறிக்க இங்கு கையாளப்பட்டுள்ள சொல், “சர்ப்பம்” (பாம்பு) என்பது தான். 

அதாவது, இந்த வசனத்தின் பிரகாரம் இப்லீஸ் என்பவன் ஏதோ ஒருவகையான “சர்ப்பம்” (நகருயிர்) எனும் இனத்தைச் சார்ந்த ஒருவன் என்பது தான் இங்கு ஊர்ஜிதப் படுத்தப் படுகிறது. இதை நமது பாஷையில் கூறுவதென்றால், Reptilian (நகருயிர்) ஜின் இனத்தைச் சார்ந்த ஒருவனே இப்லீஸ் எனும் நமது வாதத்தை இந்த வசனம் அழகாக ஊர்ஜிதப் படுத்துகிறது.

பைபிள் கூறும் இந்தக் கருத்தை இஸ்லாத்தின் உரைகல்லிலும் வைத்து இங்கு உரசிப் பார்க்க வேண்டியது நமது கடமை. அவ்வாறு உரசிப் பார்த்த பின்பே இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே இந்த அடிப்படையில், மேலுள்ள பைபிள் வசனங்களின் கருத்துக்களை இஸ்லாம் அங்கீகரிக்கிறதா? அல்லது நிராகரிக்கிறதா? இதை உறுதிப் படுத்திக்கொள்ள மார்க்கத்தில் ஏதும் ஆதாரம் இருக்கிறதா? என்பன போன்ற பல கேள்விகளை இங்கு தொடுப்பது அவசியமாகிறது. 

இந்தக் கேள்விகளுக்கான சுருக்கமான பதில், ஆம்; ஷைத்தானைப் பாம்பின் இனம் என்று பைபிள் கூறும் இந்தக் கருத்தை இஸ்லாம் கூட சரிகாண்கிறது. அதை உறுதிப் படுத்தும் பல ஆதாரங்கள் மார்க்கத்தில் இருக்கவே செய்கின்றன.

உதாரணத்து ஜின்களில் சில இனத்தவர்கள் பாம்புகளாக இருப்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய சில செய்திகளை ஏற்கனவே நாம் இந்தத் தொடரின் முந்திய பகுதிகளில் பார்த்தோம். அவ்வாறான ஹதீஸ்களைக் கூட இதற்கு மறைமுகமான ஆதாரங்களாகக் கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல், பொதுவாகவே நகருயிர்கள் விடயத்தில் சற்று வெறுக்கத்தக்க ஒரு நிலைப்பாட்டையே இஸ்லாம் கடைப்பிடித்திருப்பதையும் கூட அவதானிக்க முடிகிறது. உதாரணமாக, “பாம்புகளைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்” / “பல்லிகளைக் கொல்லுங்கள்” / “பல்லி ஒரு தீய பிராணி” / “பல்லி, இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டது” என்பன போன்ற பல செய்திகளை நபியவர்கள் சொல்லியிருப்பதிலிருந்தே, அல்லாஹ்வின் படைப்புக்களில் நகருயிர்கள் எனும் இனம், ஒரு கெட்ட இனம் எனும் ஒரு கருத்தையே மார்க்கம் நமக்கு சூசகமாகச் சொல்லிக் காட்டுவதைப் பார்க்க முடிகிறது. 

இதை இன்னும் உறுதிப் படுத்துவது போலவே உடும்பு இறைச்சி சாப்பிடும் விடயத்தில் நபி (ஸல்) அவர்கள் சற்று மர்மமான முறையில் நடந்து கொண்டிருப்பதையும் பின்வரும் ஹதீஸ்களின் வெளிச்சத்தில் அவதானிக்க முடிகிறது:

ஹதீஸ் 1:
இப்னு உமர் (ரழி) அறிவித்த செய்தி:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் உடும்பு இறைச்சி சாப்பிடலாமா? என்று கேட்டதற்கு அன்னவர்கள், “நான் அதை உண்ணவும் மாட்டேன்; அதை (மற்றவர்களுக்குத்) தடை செய்யவும் மாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 34, ஹதீஸ் 57

ஹதீஸ் 2:
அபூ ஸுபைர் அறிவித்த செய்தி:
ஜாபிர் (ரழி) அவர்களிடம் நான் உடும்பு (சாப்பிடுவது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதர் உண்ண விரும்பாத ஒன்றை (நாம்) உண்ண வேண்டாம்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்) தொடர்ந்தும் கூறினார்: உமர் (ரழி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதை (உடும்பை) ஹராமாக்கவில்லை. மாட்சிமை மிகுந்த அல்லாஹ், பலருக்கு அதைப் பயனுள்ளதாக ஆக்கியிருக்கிறான். இடையர்களின் பிரதான உணவாக அது (உடும்பு) இருக்கிறது. அது இப்போது என்னுடனிருந்தால், நான் அதை உண்டிருப்பேன்” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 34, ஹதீஸ் 71

ஹதீஸ் 3:
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) கூறினார்கள்:
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அன்பளிப்பாக) ஓர் உடும்பு கொண்டுவரப் பட்டது. ஆனால், அன்னவர்கள் அதை உண்ண மறுத்து விட்டார்கள். மேலும் அன்னவர்கள், “எனக்குத் தெரியாது; ஒருவேளை (அல்லாஹ்வால் சபிக்கப்பட்டு) உருமாற்றப்பட்ட முந்திய சமூகத்தவர்களது இனமாகக் கூட இது (உடும்பு) இருக்கலாம்.” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 34, ஹதீஸ் 70

ஹதீஸ் 4:
தாபித் இப்னு வாதி’ஆஹ் (ரழி) கூறிய செய்தி:
ஒருமுறை நாம் ஒரு படையணியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு இருந்தோம். அப்போது நமக்குச் சில உடும்புகள் கிடைத்தன. அதில் ஓர் உடும்பை வறுத்து, அதை நபி (ஸல்) அவர்களின் சபைக்குக் கொண்டுவந்து, அன்னவர்கள் எதிரில் (உண்பதற்காக) வைத்தேன். அப்போது நபியவர்கள் ஒரு குச்சியை எடுத்து, அதன் (உடும்பின்) கால் விரல்களை எண்ணிப் பார்த்து விட்டு, “பனூ இஸ்ரவேலர்களில் ஒரு சமூகத்தவர், நிலத்தில் (ஊர்ந்து) செல்லக் கூடிய ஓர் உயிரினமாக (அல்லாஹ்வால் சபிக்கப்பட்டு) உருமாற்றப்பட்டார்கள். அது எந்த உயிரினம் என்பதை நான் அறியவில்லை.” என்று கூறினார்கள். அன்னவர்கள் அதை உண்ணவில்லை; அதை (மற்றவர் உண்பதைத்) தடை செய்யவுமில்லை.
ஸுனன் அபூதாவூத்: பாடம் 28, ஹதீஸ் 60
தரம்: ஸஹீஹ் (அல்பானி)

மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் நமக்குப் பல செய்திகள் தெரிய வருகின்றன. அன்றைய காலத்தில் இடையர்களின் பிரதான உணவுகளில் உடும்பும் ஒன்றாக இருந்துள்ளதை உமர் (ரழி) அவர்களது கூற்று உறுதிப் படுத்துகிறது. இவ்வாறு பலருக்கும் இது அன்று பிரதான உணவாக இருந்ததையொட்டி, அல்லாஹ் இதை அவர்களுக்குத் தடை செய்யாமல், அனுமதிக்கப் பட்டதாகவே தொடர்ந்தும் அதை விட்டிருக்கலாம்.

அனுமதிக்கப் பட்ட உணவாக இது இருந்த போதும், நபியவர்கள் இதை ஒரு வெறுக்கத்தக்க உணவாகவே நோக்கியிருக்கிறார்கள் என்பதும் இங்கு தெளிவாகத் தெரிகிறது. அது மட்டுமல்லாமல், அல்லாஹ்வால் ஒருகாலத்தில் சபிக்கப்பட்ட ஓர் இனமாக இருக்குமோ என்று கூட அன்னவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள். அதற்கு உதாரணமாக பனூ இஸ்ரவேலர்களை அல்லாஹ் சபித்து உருமாற்றிய நிகழ்வைக் கூட இங்கு சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

உடும்பு இறைச்சியை நபியவர்கள் விரும்பாததற்குரிய காரணத்தை அன்னவர்கள் வெளிப்படையாகக் கூறாமல், பட்டும் படாமல் கூறியிருப்பது ஒருபுறமிருக்க, இன்னொரு விடயம் இங்கு தெளிவாகிறது. 

அதாவது, பண்டைக்கால வரலாறுகளில் அல்லாஹ்வின் கோபத்துக்குள்ளான பலரை அல்லாஹ் சபித்து, உருமாற்றியிருப்பதுண்டு. இவர்கள் மீது அல்லாஹ்வுக்கு இருக்கும் வெறுப்பை வெளிக்காட்டும் விதமாகவே, சபிக்கப்பட்ட, வெறுக்கத்தக்க உயிரினங்களாக இவர்களை அல்லாஹ் உருமாற்றியிருக்கிறான். யார் யாரை எந்தெந்தக் காலங்களில் அல்லாஹ் இவ்வாறு சபித்து உருமாற்றினான் என்பது பற்றிய முழுமையான விபரம், அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது; அல்லாஹ்வின் தூதருக்குக் கூட இது முழுமையாகத் தெரியாது.

இவ்வாறு சபிக்கப் பட்டோருக்கான ஓர் உதாரணமாக மட்டுமே பனூ இஸ்ரவேலர்கள் பற்றிய சில தகவல்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வஹியாக அறிவிக்கப் பட்டுள்ளன என்பது புரிகிறது. இந்த அடிப்படையிலேயே இங்கு நபியவர்கள் “எனக்குத் தெரியாது; ஒருவேளை, உருமாற்றப்பட்ட பனூ இஸ்ரவேலர்களைப் போன்ற ஏதாவதோர் இனமாகக் கூட உடும்பு இருக்கலாம்” என்று தனது ஐயப்பாட்டை வெளிக்காட்டியுள்ளார்கள்.

எது எப்படியோ, இங்கு கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், ஹலாலான ஓர் உணவாக இருக்கும் உடும்பை நபியவர்கள் பல சந்தர்ப்பங்களில் சாப்பிடாமல், வேண்டுமென்றே வெறுத்து ஒதுக்கியுள்ளார்கள். அவ்வாறு வெறுப்பதற்கான காரணமாக, “இது சபிக்கப்பட்ட ஓர் இனமாக இருக்க வாய்ப்புள்ளது” என்பதையே குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், அது எந்த இனம் என்பது பற்றி நபியவர்களுக்குத் துல்லியமாக வஹீ அறிவிக்கப் படாததையொட்டியே, இதை அன்னவர்கள் சந்தேகத்தின் பட்டியலில் வைத்துத்தார்கள். அதே நேரம், அல்லாஹ் இதை ஹராமாக்காமல் விட்டதனால், நபியவர்கள் அதை ஏனையோருக்கு ஹராமாக்கவில்லை.

இதிலிருந்து நாம் புரியும் உண்மை என்னவென்றால், உண்பதற்கு அல்லாஹ் ஹலாலாக்கிய உடும்பு எனும் ஒரு நகருயிர் விடயத்திலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அளவுக்கு வெறுப்பைக் காட்டியிருக்கிறார்களென்றால், ஹராமான ஏனைய நகருயிர்களின் நிலைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

இஸ்லாத்தின் பார்வையில் நகருயிர்கள் என்பவை, வெறுக்கத்தக்க உயிரினங்கள் என்பதை உறுதிப்படுத்த இதுவரை நாம் பார்த்த ஆதாரங்கள் ஓரளவுக்கு மறைமுகமானவை. நமது வாதங்களையும், மேலே சுட்டிக்காட்டிய பைபிள் வசங்களையும் ஊர்ஜிதப் படுத்த, இந்த ஆதாரங்கள் போதுமானவையாக இருந்தாலும், இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைத்தது போல் இன்னும் சில ஹதீஸ்கள் நேரடி ஆதாரமாகவே அமைந்துள்ளன. அவற்றோடு இந்த ஆதாரங்களையும் இணைக்கும் போது, சந்தேகத்துக்கே இடமில்லாதவாறு நமது வாதம் மேலும் உறுதிப் படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை உன்னிப்பாகக் கவனியுங்கள்:

ஹதீஸ் 1:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்ததாவது:
பாம்புகள் பழிவாங்குமென்று பயந்து யார் அவற்றைக் கொல்லாமல் விட்டு விடுகிறாரோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. அவற்றோடு (பாம்புகளோடு) நாம் சண்டையிடத் தொடங்கியது முதல், நமக்கும் அவற்றுக்குமிடையில் என்றுமே சமாதானம் ஏற்பட்டதில்லை.
ஸுனன் அபூதாவூத்: பாடம் 43, ஹதீஸ் 478
தரம்: ஸஹீஹ் (அல்பானி)

ஹதீஸ் 2:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவித்ததாவது:
அவற்றோடு (பாம்புகளோடு) நாம் சண்டை செய்யத் தொடங்கியது முதல், அவற்றோடு நாம் சமாதானமாக என்றும் இருந்ததேயில்லை. எனவே, எவரொவர் அவற்றில் ஒன்றையேனும் பயத்தின் காரணமாகக் கொல்லாமல் விட்டு விடுகிறாரோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல.
ஸுனன் அபூதாவூத்: பாடம் 43, ஹதீஸ் 476
தரம்: ஹஸன் ஸஹீஹ் (அபூதாவூத் / அல்பானி)

ஹதீஸ் 3:
ஸைத் இப்னு அஸ்லம் தனது தந்தையிடமிருந்து கேட்டு அறிவித்த செய்தி:
உமர் (ரழி) அவர்கள் மிம்பர் மீது சொற்பொழிவாற்றும் போது, “மக்களே, உங்கள் வீடுகளைப் புணரமைக்கும் போது, வீடுகளில் வசிக்கக் கூடிய பாம்புகள் (ஜின்கள்) உங்களை அச்சுறுத்தலாம் என்பதால், அவை குறித்து (முன்கூட்டியே) உங்களுக்கு நான் எச்சரிக்கிறேன். அவற்றில் (பாம்பு வடிவிலான ஜின்களில்) முஸ்லிமாக இருப்பது எது என்பதில் உங்களுக்குத் தெளிவில்லாமல் இருக்கலாம். மேலும், அல்லாஹ் மீது சத்தியமாக, அவர்களை (பாம்புகளை) நாம் எதிரியாக நடத்தத் தொடங்கிய காலம் முதல் அவர்களுடன் நாம் என்றுமே சமாதானமாக இருந்ததில்லை” என்று அடிக்கடி கூறுவார்கள்.
அல் அதப் அல் முஃப்ரத்: பாடம் 25, ஹதீஸ் 5

மேலே பட்டியலிடப்பட்ட மூன்று ஹதீஸ்களுக்கும் மேலதிக விளக்கமே அவசியமில்லை. ஏனெனில், யார் வேண்டுமானாலும் பார்த்த உடனேயே புரிந்து கொள்ளும் விதத்தில் இந்த ஹதீஸ் வாசகங்கள் தெளிவான வசன நடையில் அமைந்துள்ளன அமைந்துள்ளன. இனி இந்த ஹதீஸ்களோடு நாம் இணைத்துப் பார்க்க வேண்டியது பின்வரும் குர்ஆன் வசனத்தை மட்டுமே:

நிச்சயமாக அவன் (ஷைத்தான்) உங்களுக்கு பகிரங்கமான எதிரி ஆவான்.
(அல்குர்ஆன் 2:208)

இந்த வசனத்தோடு மேலுள்ள ஹதீஸ்களிலிருக்கும் “பாம்புகளோடு நாம் எதிரியானது முதல், என்றுமே அவர்களோடு நாம் சமாதானமானதில்லை” எனும் வாசகத்தையும் பொருத்திப் பார்த்தாலே உண்மை வெட்டவெளிச்சமாகி விடும்.

அதாவது, இதுவரை நாம் பார்த்த மாக்க ஆதாரங்கள் அனைத்தையும் தொகுக்கும் போது நமக்குப் புலப்படும் உண்மை இது தான்:

இப்லீஸ் என்பவனும், அவனது கூட்டத்தைச் சேர்ந்த ஷைத்தானிய ஜின்களும் மனிதர்களாகிய நமது ஜன்ம விரோதிகள் என்று தான் மார்க்கம் நமக்குக் கூறுகிறது. மேலும், இப்லீஸைச் சார்ந்தோரின் (Reptilian) இனத்துக்குரிய ஜீவராசிகளாகக் கருதப்படும் பாம்பு, பல்லி போன்றவை கூட மனிதர்களாகிய பரம்பரை எதிரிகள். இதனால் தான் இவ்வாறான உயிரினங்களைக் கூட கண்ட இடத்தில் கொல்லுமாறு மார்க்கம் நமக்குக் கட்டளையிட்டுள்ளது.

ஜின்கள் குறித்த அம்சங்களில் ஏராளமானவை இயல்பிலேயே மறைவானவை என்பதால், அவை சார்ந்த தகவல்கள் கூட ஓரளவுக்கு மறைமுகமாகவும், மூடலாகவுமே மார்க்கத்தில் சொல்லப் பட்டுள்ளன. ஆனால், சிந்திக்கும் மக்கள் யாராக இருந்தாலும், ஜின்கள் குறித்த மார்க்க ஆதாரங்களைச் சரியான ஒழுங்கில் தொகுத்து, உற்று நோக்கும் போது உண்மைகளை இலகுவாகக் கண்டுகொள்வதற்கு ஏற்ற விதத்தில் தான் இது குறித்த தகவல்கள் அனைத்தும் மார்க்கத்தில் சொல்லப் பட்டுள்ளன. நம்மில் அனேகமானோர் இன்று செய்து கொண்டிருக்கும் தவறு, சிந்திக்க மறுப்பது தான். இதன் விளைவாகவே உண்மைகள் இதுவரை வெளிச்சத்துக்கு வராமல், உள்ளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன.

Reptilian இனத்தவர்கள் யாரென்பதைச் சிந்திக்கும் மக்கள் புரிந்து கொள்ள இதுவரை நாம் முன்வைத்திருக்கும் சான்றுகளே போதும். இருந்தாலும், இதை இன்னொரு கோணத்திலிருந்தும் நிரூபிக்கும் விதமாக மேலும் சில சான்றுகளை நாம் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்


 

Episode 63: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 2:

 




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..