Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஒரு ஓட்டுநர், உதவிப் பேராசிரியராய் வளர்ந்தார்.
Posted By:Hajas On 10/31/2017 3:21:50 AM

ஒரு ஓட்டுநர், உதவிப் பேராசிரியராய் வளர்ந்தார்.

 

ஆண்டு 1982, இடம் : ஹைதராபாத்.

மூத்த விஞ்ஞானி அவர்.

Image result for முனைவர் கதிரேசன்

அரசால் ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியபடியே பணியாற்றி வந்தார். தினமும் காலையில் விடுதியில் இருந்து புறப்பட்டு, பணி நடைபெறும் தளத்திற்குச் செல்வார்.

மாலையிலோ அல்லது இரவிலோ மீண்டும் விடுதிக்குத் திரும்புவார். இவரது பயணத்திற்காக, மகிழ்வுந்து ஒன்றினையும், ஓட்டுநர் ஒருவரையும், அரசு வழங்கியிருந்தது.

கதிரேசன்.

பத்தொன்பது வயதில், இராணுவத்தில் சிப்பாய் ஆகச் சேர்ந்தார்.

இராணுவத்தில் இணைந்த அடுத்த ஆண்டே திருமணம். ஒரு மகன், ஒரு மகள். அளவான மகிழ்வான குடும்பம்.

ஒரு நாள், புதிதாய் ஒரு உத்தரவு வந்தது. பணி மாறுதல் உத்தரவு.

மூத்த விஞ்ஞானிக்கு மகிழ்வுந்து ஓட்டுநராய் உடனே பணியில் சேர வேண்டும்.

வேலை மிகவும் குறைவு ஓய்வோ மிக மிக அதிகம். செய்தித் தாட்களைப் படிப்பது, கிடைக்கும் புத்தகங்களைப் படிப்பது என்று பகல் பொழுதை, ஓய்வு நேரத்தை, மெதுவாய் நகர்த்திக் கொண்டிருந்தார்.

ஒரு நாள், காலைப் பயணத்தின் போது, விஞ்ஞானி கேட்டார்.

கதிரேசன், என்ன படித்திருக்கிறீர்கள்?

பத்தாம் வகுப்பபில் தோல்வி அடைந்தவன் ஐயா நான். அதுவும் ஆங்கிலத்தில் மட்டும்,

பதில் சொல்வதற்குள், சற்று கூனிக் குறுகித்தான் போய்விட்டார்.

ஒரு பாடம்தானே, ஆங்கிலப் பாடத்தில் எளிதாய் வெற்றி பெற்றுவிடலாம், படியுங்களேன் என்றார்.

மகிழ்வுந்து வேகமாய் விரைந்து கொண்டிருந்தாலும், கதிரேசனின் மனம் திடீரென கிறீச்சிட்டு நின்றது. ஆங்கிலம் படிப்பதா? நானா?

கதிரேசனின் தயக்கத்தை உணர்ந்து கொண்ட, விஞ்ஞானி கூறினார்.

நான் உதவுகிறேன், நீங்கள் படியுங்கள்.

விரைவிலேயே இருவரும், ஆசிரியரும் மாணவருமாய் மாறிப் போயினர்.

பணி முடிந்ததும், மாலை வேலைகளில், ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணத்தை மிக எளிமையாய் சொல்லிக் கொடுத்தார்.

ஒரே வருடத்தில் கதிரேசன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவராய் மாறினார்.

+2 படிக்கலாமே?

படி, உன்னால் முடியும்.

தனித் தேர்வராய், +2 படிப்பில், கதிரேசன் சேர்ந்தார்.

படிப்பிற்கான செலவினையும் விஞ்ஞானி ஏற்றுக் கொண்டார்.

பணி முடிந்து, மாலை விடுதிக்குத் திரும்பியதும், தினமும் ஒரு போட்டி நடக்கும்.

விஞ்ஞானி நூலகத்து நூல்களையும், கதிரேசன் தன் பாட நூல்களையும் படிக்க வேண்டும். யார் அதிகம் படிக்கிறார்களோ, அவர்களே வென்றவராவர்.

கதிரேசனுக்குப் போட்டி பிடித்துப் போனது.

51.4 சதவித மதிப்பெண்களுடன் +2 தேர்வில் வெற்றி பெற்றார்.

Small aim is a crime - சிறிய இலக்கு, குற்றத்திற்குச் சமம்.

பி.எஸ்ஸி., கணினி அறிவியல் படி என்றார். கதிரேசனின் விருப்பமோ, வேறாக இருந்தது. இருவரும் பேசி, ஒரு முடிவிற்கு வந்து, இளங்கலை வரலாற்றைத் தேர்ந்தெடுத்தனர்.

அஞ்சல் வழிக் கல்வி.

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், உலக வரலாற்றை, அதிலும் குறிப்பாக, இரு உலக யுத்தங்களைக் கதை போல் சொல்லிக் கொடுத்தார்.

கதிரேசனுக்கு நாள் தோறும் வியப்பு கூடிக் கொண்டே போனது. இவர் உண்மையிலேயே அறிவியல் விஞ்ஞானியா?அல்லது வரலாற்று ஆய்வாளரா? என்னும் சந்தேகம் கூடிக் கொண்டே போனது.

51 விழுக்காடு மதிப்பெண்களுடன், இளங்கலையில் வெற்றி. விஞ்ஞானி மகிழ்ந்தார்.

கதிரேசனின் குடும்பம் ஆனந்தக் கூத்தாடியது.

முதுகலைப் பட்டம் படியேன்

விஞ்ஞானி மேலும் உற்சாகப் படுத்தினார்.

இளங்கலை மட்டுமே பயின்றுள்ள விஞ்ஞானி, தன் ஓட்டுநரை முதுகலைப் பட்டம் படி, படி என்று உற்சாகமூட்டினார்.

எம்.ஏ., பொலிடிக்கல் சயின்ஸ்.

பல தடைகள் வந்தபோதும், கதிரேசன் மனம் தளராமல் படித்தார். ஒரு முறை, குடும்பச் சூழலால், ஒரு தேர்வினையேத் தவற விட்டுவிட இருந்தார்.

தேர்வு எழுத சென்னைக்குச் சென்றாக வேண்டும். பயணிக்கப் போதுமான நேரமில்லை.

விஞ்ஞானி பார்த்தார். சற்றும் யோசிக்காமல், சற்றும் தயங்காமல், வானூர்தியில் சென்னைச் செல்ல, தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்தார்.

பத்து ஆண்டுகள். பத்தே ஆண்டுகள்

பி.ஏ., எம்.ஏ., பி.எட்., எம்.எட்.,

கதிரேசன் படித்த படிப்புகள், அவரின் பெயரின் எழுத்துக்களை விட அதிகமாய் நீண்டன.

பத்தாண்டுகள் நிறைவுற்றபோத, இராணுவம், கதிரேசனைத் திரும்ப அழைத்தது.

1992 இல், தன் குருவைப் பிரிய மனமின்றிப் பிரிந்தார்.

1998 இல் விருப்ப ஓய்வு பெற்றுத் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

பணி ஓய்வு பெற்றபோதும், தன் ஆசிரியர் உள்ளத்தில் ஏற்றி வைத்த, படிப்பு, படிப்பு என்னும் ஒளி விளக்கு, மட்டும், சற்றும் ஒளி குன்றாமல் பிரகாசித்துக் கொண்டே இருந்தது.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்டப் படிப்பிற்கு (டாக்டரேட்) பதிவு செய்தார்.

முனைவர் கதிரேசனாய் உயர்ந்தார்.

முனைவர் கதிரேசன்

இன்று, திருநெல்வேலி, அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்.

நண்பர்களே, பத்தாம் வகுப்பில் தோல்வியுற்ற, ஒரு ஓட்டுநரை, அந்த ஓட்டுநருக்குள், அவருக்கே தெரியாமல், ஒளிந்திருந்த, மறைந்திருந்த, கல்வி ஆர்வத்தை, இனம் கண்டு, ஆர்வமூட்டி, ஆதரவளித்து, படிக்க வைத்து, உயர்த்திய, அந்த உன்னத உள்ளத்திற்குச் சொந்தக்காரர், உயரிய மனிதர் யார் தெரியுமா?

மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்....

https://www.facebook.com/groups/baithussalam/permalink/1481605201908192/

http://karanthaijayakumar.blogspot.com/2017/06/blog-post_30.html




Career Counselling
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..