Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
யூத தேசியத்தின் வரலாற்று ஆதாரம் - 01
Posted By:peer On 1/19/2018 2:12:03 AM

யூத தேசியக் கோட்பாட்டின் தந்தையாகக் கருதப்பட்டவர் தியோடர் ஹெர்ஸல் ஆவார். இவர் 1896 ஆம் ஆண்டில் யூத அரசு என்ற நூலை எழுதினார். 'தங்களுக்கென ஒரு யூததேசம் வேண்டும் என்ற உறுதிப்பாட்டைக் கொண்ட யூதர்கள் தங்களுக்கு சொந்தமான ஒரு தேசத்தைப் பெறுவார்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய முதல் வரியுடன் தமது நூலை துவக்கியிருந்தார். இவருக்கு முன்பும் கூட வேறு சில யூத அறிவு ஜீவிகள் யூதர்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கருத்துகளைப் பரப்பி வந்தனர்.

யூகோஸ்லோவியா நாட்டில் வாழ்ந்து வந்த ராபியெஹுதா அல்கலே என்பவர் 1840 ஆம் ஆண்டில் ஸியோனிசக் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக வெளியிட்டார். 1861 ஆம் ஆண்டில் ஜெர்மானிய யூதரான ஹெர்ஸ்கனிஷர் ஜியோனைத் தேடி என்ற நூலை எழுதினார். 1862 ஆம் ஆண்டில் மோசஸ் ஹெஸ் என்பவர் ரோமும் ஜெருஸலமும் என்ற நூலை எழுதினார். 1882 ஆம் ஆண்டில் லியோ பின்ஸ்கர் என்பவர் சுயமாக விடுவித்தல் என்ற பிரசுரத்தை வெளியிட்டார்.

உலக யூதர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு ஒரே வழி அவர்களுக்கென ஒரு தனித் தேசியம் அமைக்கப்படுவதுதான் என்று தியோடர் ஹெர்ஸல் குறிப்பிட்டார். ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வாழும் யூதர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சமுக கலாச்சர வாழ்வில் பங்கேற்பதன் மூலம் தாங்கள் தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள். எனவே அவர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து வெளியேறி யூதர்களின் தேசமாக இஸ்ரேலில் குடியேற வேண்டும்.

யூதர்களின் தேசமாக ஃபலஸ்தீன் தேசம் தேர்ந்தெடுக்கும் முன்பு துருக்கி, கென்யா, உகாண்டா, சைப்ரஸ், சினாய், இத்தாலியிடம் இருந்த
திரிபோலி, மொசாம்பிக், காங்கோ போன்ற பல பகுதிகள் கருத்தில் கொள்ளப்பட்டன. இறுதியாக ஃபலஸ்தீன் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஃபலஸ்தீன் தெரிவு செய்யப்படுவதை நியாயப்படுத்துவதற்க்காக ஃபலஸ்தீன் கடவுளால் யூதர்களுக்கு வழங்கப்பட்ட தேசம் என்று ஸியோனிஸ்ட்கள் கூறினர். அதற்கு ஆதாரமாக விவிலியம் பழைய ஏற்பாடு நூலின் பிரிவு 18 - ஐ அவர்கள் மேற்கோள் காட்டினார்.

அப்பிரிவில் வரும் காணப்படும் வாசகங்கள் பின்வருமாறு:

" அந்த நேரத்தில் கடவுள் ஆபிரஹாமுக்கு ஒரு உறுதி மொழியினை அளித்தார். எகிப்தின் ஆற்றிலிருந்து நைல் நதி மாபெரும் நதியாகிய யூப்ரடீஸ் நதி வரை உள்ள தேசத்தை உங்களில் வழித்தோன்றலுக்கு நான் வழங்குவேன்" அந்த விவிலிய வாசகங்களுடன் இணைத்துக் கூறப்படும் கதை பின்வருமாறு அமையும்.

கிறிஸ்து பிறப்பதற்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பு புராதன நாகரீகத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் மெசபடோமியா நாடு- இன்றைய ஈராக்கைச் சேர்ந்த ஆபிரஹாமும், அவருடைய இனக்குழுவினரும் கடவுளால் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசத்தை நோக்கி சென்றனர். எகிப்து வழியாக கானான் நாட்டிற்கு வந்து ஆடுமாடுகளை மேய்த்து வாழ்ந்து வந்தனர். ஆபிரஹாம் அங்கேயே இறந்துவிட்டார். அவருடைய உடல் ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரையில் புதைக்கப்பட்டது என்று யூத வரலாறு கூறுகின்றது.

ஆபிரஹாம் மரணமடைந்த பிறகு ஜெருஸலமில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஆபிரஹாமின் இனக்குழுவைச் சேர்ந்த ஹீப்ரூக்கள் எகிப்து நாட்டிற்குச் சென்றதாகவும் அங்கு எகிப்தின் பாரோ மன்னர்களால் 400 ஆண்டுகள் அடிமைகளாக்கப்பட்டதாகவும் யூத வரலாறு கூறுகின்றது.

அடிமைகளாக இருந்த ஹீப்ரூக்கள் கி.மு. 1250 ஆம் ஆண்டில் மோசஸ் என்பவரின் தலைமையில் தப்பிச்சென்று 40 ஆண்டுகள் பாலைவனப்பகுதியில் சுற்றித் திரிந்தனர். அப்போது கடவுள் தோன்றி மோசஸுக்கு பத்து கட்டளைகள் பிறப்பித்தார். அதன்படி அவர்கள் ஃபலஸ்தீன் நாட்டை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் மோசஸ் இறந்துவிடவே, ஜோஸ்வா என்பவர் தலைமையில் தாங்கள் பயணத்தைத் தொடர்ந்த ஹீப்ரூக்கள் ஃபலஸ்தீன் சென்று அதன் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றினார்களாம்"

யூதர்களின் ஆட்சி டேவிட் மற்றும் சாலமன் மன்னர்களின் காலத்தில் உச்சகட்ட புகழுடன் திகழ்ந்ததாகவும், சாலமன் மன்னர் காலத்தில் ஜெருஸலத்தின் மோரியா குன்றின் மீது கட்டப்பட்ட யாக்கோவா கடவுளின் கோவில் கி.பி. 70 ஆம் ஆண்டில் நிகழ்ந்த படையெடுப்பின் போது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாம். ஜெருஸலத்தில் யூதக் குடியிருப்புப் பகுதிகளுக்குக் கீழே 10 அடி அகலத்தில் அக்கோவிலின் சுவர் ஓன்று எஞ்சியுள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் மூதாதையர்கள் விரட்டியடிக்கப்பட்டதை நினைவு கூறும் விதத்தில் இந்த சுவர்களின் முன் வாரம் மும்முறை கூடி தமது சக்ரவர்த்தியின்
வீழ்ச்சியை நினைத்து யூதர்கள் அழுது புலம்புவார்களாம். இந்தப் பழக்கம்காரணமாக இது புலம்பல் சுவர் என்று அழைக்கப்படுகின்றது.

ஃபலஸ்தீன் பகுதியுடன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தங்கள் தொடர்பு குறித்த சம்பவங்களின் அடிப்படையில் அங்கே யூதத் தேசம்
உருவாக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

மேற்க் கூறப்படும் சம்பவங்கள் எத்துனை சதவிகிதம் உண்மை என்பது ஆய்விற்கு உட்பட்டதாகும். பொய் சில நேரங்களில் உண்மையுடன் வரும். இறுதி வேதமான அல் குர் ஆன் பேசும் பனூ இஸ்ரவேலர்கள்- இஸ்ராயீலின் வாரிசுகள் குறித்தான உண்மைகளுக்கும், விவிலியம் பேசும் சம்பவங்களையும் அலசி ஆராய வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

பனூ இஸ்ரவேலர்கள்- இஸ்ராயீலின் வாரிசுகளுக்கும், யூதர்களுக்கும் உண்டான வேறுபாடுகளை மிகச்சரியாக சரியாக புரிந்து கொண்டால்
ஃபலஸ்தீன் பிரச்சினை என்பது தேசியம் சார்ந்த அரசியல் பிரச்சினையா? அல்லது ஆன்மிகம் சார்ந்த அரசியல் பிரச்சினையா? என்பது மிக தெளிவாகப் புரியும்.

(தொடரும்)

- அபூஷேக் முஹம்மத்




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..