Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மனதைத் தொட்ட பதிவு...!
Posted By:peer On 10/24/2018 7:06:00 PM

 

பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.

அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.

""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''

""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?''

அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.

""நான் <உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.''

பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.
வாங்கிப் பார்த்த ஆனந்த், ""அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான்.

அதில், "அன்புள்ள ஆனந்துக்கு, அப்பா எழுதுவது. ஆசிர்வாதம். கடிதம் கொண்டு வரும் ராமசாமி, என் நண்பன். ரொம்ப கஷ்ட ஜீவனம். இவரது ஒரே பிள்ளை, சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டான். விபத்துக்கான இழப்பீடு கிடைத்தால், ராமசாமியும், அவர் மனைவியும் வாழ, ஓரளவாவது உதவியாக இருக்கும்.

""விபத்து சம்பந்தமான போலீஸ் விசாரணை, விபத்து ஏற்படுத்திய டிராவல்ஸ் வேன் உரிமையாளர் தர ஒப்புக் கொண்ட இழப்பீடு போன்ற சகல விவரங்களையும் சேகரித்து, அவரிடம் கொடுத்தனுப்பி இருக்கிறேன். சென்னையில், தலைமை அலுவலகத்தில் தருவார்களாம்... சென்னை அவருக்கு புதிது. நீ கொஞ்சம் அவருக்கு உதவி செய்தால் நல்லது; செய்வாய் என்று நம்புகிறேன். மற்றபடி உடம்பை பார்த்துக் கொள். பொங்கலுக்கு கண்டிப்பாக ஊருக்கு வர வேண்டும். உன் அப்பா பரமேஸ்வரன்...' என்று எழுதப்பட்டிருந்தது.

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார் ராமசாமி.
ஒரு வினாடி யோசித்தவன், சட்டென சாவி எடுத்து வந்து, கேட்டைத் திறந்தான்.

""வாங்க சார்... உட்காருங்க...'' என்றவன், டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். தயங்கியபடி உள்ளே வந்த ராமசாமி, தண்ணீரை வாங்கிப் பருகினார்.

""சாப்பிட்டீங்களா?''

""இல்லே... வழியிலே இரண்டு வாழைப் பழம் சாப்பிட்டேன். பஸ் லேட்டு, காலையில காரைக்கால்லே கிளம்பினா, சாயங்காலம் மெட்ராஸ் போயிடலாம்ன்னு உங்கப்பா சொன்னார். பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சு... அதான்... அகாலத்திலே வந்து...''

""அதனாலே என்ன... பரவாயில்லை.''

பிரிட்ஜை திறந்து பார்த்தான் ஆனந்த்.

தோசைமாவு இருந்தது. நான்கு தோசை சுட்டு, மிளகாய் பொடி, எண்ணெய், தண்ணீர் கொண்டு வந்து, டேபிள் மேல் வைத்தான்.

""சாப்பிடுங்க... இதோ வர்றேன்,'' என்றவன், வாசல் பக்கம் மொபைலுடன் போனான்.

திரும்பி வந்த போது, சாப்பிட்டு முடித்து, கை நிறைய பேப்பர்களுடன் காத்திருந்தார் ராமசாமி.

""சொல்லுங்க... என்ன நடந்தது?'' என்று, அவர் எதிரில் அமர்ந்து, பேப்பர்களை வாங்கிப் பார்த்தான்.

பையனின் போட்டோ இருந்தது. 22 வயதில், அழகாக, பதவிசாக இருந்தான் பையன். ஆனந்துக்கு கண்கள் கலங்கின.

முகத்தை துடைத்துக் கொண்டார் ராமசாமி.

""இவனுக்கு முன்னாலே பிறந்த நாலஞ்சு பேரும், சின்ன வயசிலேயே போய் சேர்ந்துட்டாங்க... இவன் தான் தங்கினான். மகேஷ்ன்னு பேர்; கஷ்டப்பட்டு படிக்க வெச்சேன்... பொறுப்பான பிள்ளை. ஸ்காலர்ஷிப்லயே பி.இ., முடிச்சான். வேலை கிடைச்சுட்டா, நம்ம கஷ்டம் தீர்ந்துடும்ன்னு வாய்க்குவாய் சொல்வான்; வேலையும் கிடைச்சுது. என்னையும், என் மனைவியையும், நிற்க வச்சு நமஸ்காரம் செய்துட்டு, மெட்ராஸ் கிளம்பினான். பஸ் ஸ்டாண்ட் போக, ரோடு கிராஸ் செய்யறப்போ, வேகமா வந்த டிராவல் வேன் மோதி, ஸ்பாட்லேயே...'' மேல் துண்டால் முகத்தை மூடி, குலுங்கினார் ராமசாமி; பேசாமல் அவரையே பார்த்தான் ஆனந்த்.
அவராகவே தொடர்ந்தார்.

""அந்த வேன் சொந்தக்காரர், நஷ்ட ஈடு தர ஒத்துக்கிட்டார். முதல்லே அதை வாங்கவே மனசு ஒத்துக்கல. பிள்ளையை பறி கொடுத்துட்டு, அந்த பணத்திலே சாப்பிடறதான்னு வெறுப்பா இருந்தது. உங்கப்பா தான் எனக்கு ஆறுதல் சொல்லி, வாங்கிக்க சொல்லி வற்புறுத்தினார். எனக்கு நிரந்தரமா ஒரு வேலையும் கிடையாது. என் மனைவி ஏற்கனவே நோயாளி, பிள்ளை போன துக்கத்திலே, படுத்த படுக்கையாயிட்டா... எங்களை பகவான் அழைச்சுக்கற வரை, சாப்பிட்டுத் தொலைக்கணுமே... அதனாலே, கடைசியா நஷ்ட ஈடு வாங்கிக்க சம்மதிச்சேன். உங்கப்பா தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து, இங்கே அனுப்பி வெச்சார். என் பிள்ளை உங்களுக்கு உதவி செய்வான்னு
லெட்டர் கொடுத்தார்.''

""செய்யறேன்... கண்டிப்பா உதவி செய்றேன்,'' என்று எழுந்தவன், அவர் படுக்க, பாயும் தலையணையும் கொடுத்தான்.
மறுநாள் காலை, காபி போட்டு அவருக்கு கொடுத்து, தானும் குடித்து, குளித்து விட்டு வந்தான்.

அவரும் குளித்து விட்டு வர, இருவருமாக பைக்கில் கிளம்பினர்.

""இங்கே நுங்கம்பாக்கம்ன்னு இருக்காமே... அங்கே தான் ஹெட் ஆபீஸ் இருக்காம்.''

""நுங்கம்பாக்கம் பக்கம் தான். நான் கூட வந்து செஞ்சு தர்றேன்,

வழியில் ஓட்டலில் டிபனை முடித்து, டிராவல் ஆபீஸ் வந்தனர்.
பார்மாலிடீஸ் எல்லாம் முடித்து, "செக்' கைக்கு வர மதியானம் ஆகி விட்டது.

""ரொம்ப நன்றிப்பா... எனக்காக ரொம்ப சிரமப்பட்டுட்டே. நான் இப்படியே ஊருக்கு கிளம்பறேன். இப்ப பஸ் புடிச்சா, ராத்திரிக்குள்ளே காரைக்கால் போயிடலாம். என் மனைவி தனியா இருக்கா; துணைக்கு ஆள் இல்லை...''

""நானே பஸ் ஏத்தி விடறேன் வாங்க,'' என்றவன், ஓட்டலுக்கு அழைத்துப் போய், அவர் மறுத்தும் கேளாமல், சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டான்.
கோயம்பேடு வரை, பைக்கில் அழைத்துச் சென்று, காரைக்கால் பஸ்சில் ஏற்றி விட்டான். டிக்கட் வாங்க என்று ஐநூறு ரூபாயை, பிடிவாதமாக அவர் சட்டைப் பையில் திணித்தான்.

""ஒரு நிமிஷம்...'' என்று போனவன், ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தான்.

""ஊர் போய் சேர எத்தனை நேரம் ஆகுமோ, வழியிலே சாப்பிட்டுக்குங்க...'' என்று, டிபன் பொட்டலம், தண்ணீர் பாட்டில் அடங்கிய பையை, அவரிடம் கொடுத்தான்.

அவர் நெகிழ்ந்தார்.

""என்னாலே உனக்கு ரொம்ப சிரமம்ப்பா. லீவு வேறே போட்டுட்டு, எனக்காக அலைஞ்சிருக்கே... ஊருக்கு போனதும் முதல் வேலையா உங்கப்பாவைப் பார்த்து நன்றி சொல்லணும்.''

ராமசாமி உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டே போக, அமைதியாக அவர் பக்கத்தில் அமர்ந்தான், ஆனந்த்.

""ஒரு விஷயம் சார்... நீங்க தேடி வந்த ஆனந்த் நான் இல்லே...''
ராமசாமி திடுக்கிட்டார்.

""என்னப்பா சொல்றே?''

""ஆமாம்... நீங்க அட்ரஸ் தப்பா வந்துட்டீங்க... நான் இருக்கிறது, யோகானந்தம் நகர் எக்ஸ்டன்ஷன். நீங்க, மெயின் யோகானந்தம் நகர் போயிருக்கணும். அது, கிட்டத்தட்ட, 2 கி.மீ., தொலைவில இருக்கு.''

ராமசாமிக்கு, "குப்'பென வியர்த்தது.

""அடடா... தப்பு செய்துட்டேனே... ரொம்ப ரொம்ப சாரிப்பா. நீ, நான் வந்தவுடனேயே சொல்லியிருக்கலாமே... அனாவசியமா எதுக்கு எனக்காக மெனக்கட்டு...''

.
அவரைத் தடுத்தான் ஆனந்த்.

""நீங்க வந்தது ராத்திரி பத்தரை மணிக்கு... மெட்ராஸ்ல இருக்கிறவங்களுக்கே, இங்க அட்ரஸ் தேடி கண்டு பிடிக்கறது கஷ்டம்; நீங்க மெட்ராசுக்கு புதுசு வேற. அதிலேயும், நீங்க வந்த காரியத்தை பத்தி தெரிஞ்சதுலே, எனக்கு மனசு சங்கடமா போயிட்டது...

""அதான் உங்களை சாப்பிட சொல்லிட்டு, லெட்டர்லே இருந்த நம்பருக்கு கால் போட்டு பேசினேன். நீங்க அட்ரஸ் மாறி வந்த விஷயம் கேட்டு, உங்க நண்பர், அதான் அந்த ஆனந்தோட அப்பா ,ரொம்பவே வருத்தப்பட்டார். அவர் கிட்டே, அவர் பிள்ளையோட நம்பர் கேட்டு வாங்கிப் பேசிட்டு... பொழுது விடிஞ்சதும், ஒரு ஆட்டோவிலே உங்களை அனுப்பி வைக்கலாம்ன்னு இருந்தேன்.

""ஆனா, மொபைல் போன்ல பேசினது ஆனந்தோட மனைவி. அவர் ஆபீஸ் விஷயமா டில்லி போயிருக்காராம். வர ஒரு வாரம் ஆகுமாம். அப்பதான் முடிவு செய்தேன். நேரடியா, நானே உங்களுக்கு உதவி செய்திடலாம்ன்னு... எந்த ஆனந்துன்னா என்ன சார்... நஷ்ட ஈடு உங்களுக்கு கிடைக்க, நான் உதவியா இருந்தேனேன்னு, நிம்மதி என் மனசிலே நிறைஞ்சு இருக்கு. அது போதும் சார்...''

டிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் ஏற, எழுந்தான் ஆனந்த்.
அவன் கைகளைப் பற்றி கண்ணில் ஒற்றிக் கொண்டார் ராமசாமி. அவன் உள்ளங்கை, ராமசாமியின் கண்ணீரால் நனைந்தது.

""நல்லா இருப்பா... நல்லா இரு... வேறென்ன சொல்றது?''
பதினைந்து வருடங்களுக்கு முன் செத்துப் போன தன் அப்பாவை நினைத்துக் கொண்டான்.

"அப்பா... நீங்க இப்ப உயிரோடு இருந்து, இது மாதிரி லெட்டர் கொடுத்தனுப்பி இருந்தாலும், கண்டிப்பா உதவி செஞ்சிருப்பேன். என் வளர்ச்சியை பார்க்காமலே போயிட்டீங்களே... யாரோ ஒருத்தருக்கு பிள்ளையா இருந்து, அவர் நண்பருக்கு உதவி செய்திருக்கேன் அப்பா... உங்களுக்கு திருப்தி தானே?'
கனத்த மனதுடன், பஸ்சை விட்டு இறங்கினான் ஆனந்த்.




Moral Story
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..