Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
கல்யாணம் நின்று விடுமானால் .. உயிர் வாழ்வது கேள்விக்குறியாகிவிடும்... சோகம் தீருமா?
Posted By:peer On 1/2/2020 7:55:59 AM

அந்த இளம் பெண்
தன் வீட்டு கிணற்றடியில்
தனியாக நின்று கொண்டிருந்தாள் .

சொல்ல முடியாத சோகம் அவள் நெஞ்சுக்குள் !

காரணம் அவள் திருமணமே நின்று போகும் நிலைமை ஏற்பட்டிருந்தது. எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் வரவில்லை. என்ன செய்வதென்றே அவளுக்கும் அவள் குடும்பத்துக்கும் புரியவில்லை .

அவள் மொபைலை எடுத்து , தன் வருங்கால கணவனுக்கு போன் செய்தாள்.

அவனும் பெரும் சோகத்தில்தான் இருந்தான் : “என்ன செய்வதென்றே எனக்கும் தெரியவில்லை."

“ஆனால் எப்படியாவது இந்த கல்யாணம் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் உயிர் வாழ்வது...”
தொடர்ந்து பேச முடியாமல் ஃபோனிலேயே அழ ஆரம்பித்தாள் அவள்.

“சரி சரி, தயவு செய்து அழாதே ! கண்டிப்பாக ஆண்டவன் ஏதாவது ஒரு வழியை காட்டுவான். நீ ஒருபோதும் அழக்கூடாது."

அவள் கண்ணீரை தன் முந்தானையால் துடைக்க தலை குனிந்தபோது தற்செயலாக அவளது காலடியில் கிடந்த அந்த காகிதத்தை கவனித்தாள். அது ஏதோ ஒரு பத்திரிகையின் கிழிந்து போன பக்கம். அதில் அவள் கண்ணில் பட்ட அந்த செய்தி. அதை படிக்க படிக்க அவள் முகம் மலர்ந்தது .

மறுபக்கத்தில் வருங்கால கணவன் பதட்டத்துடன் கூப்பிட்டான் : “ஹலோ ஹலோ !”

இவள் அதற்குள் அந்த துண்டு பேப்பரில் இருந்த செய்தியை படித்து முடித்திருந்தாள். "ஹலோ, ஒரு சந்தோஷமான செய்தி; ஆண்டவன் நமக்கு நல்ல வழி காட்டி விட்டான்."

“என்ன சொல்கிறாய் நீ ? எனக்கு எதுவும் புரியவில்லை."

“நீங்கள் உடனே பக்கத்து ஊரில் இருக்கும் அப்துல் லதிப் பாய் வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து வாருங்கள்."

“அந்த முஸ்லிம் பெரியவர் வீட்டுக்கா ? எதற்கு ?”

அவள் அந்த பேப்பரில் தான் படித்ததை அவனிடம் பகிர்ந்து கொண்டாள் .

அடுத்த அரை மணி நேரத்தில் அவன் அந்த இஸ்லாமிய பெரியவர் அப்துல் லதிப் வீட்டில் இருந்தான் .

“யாரப்பா நீ ? என்ன விஷயமாக என்னை தேடி வந்திருக்கிறாய் ?”

அவன் தனது கல்யாணம் , பணப் பற்றாக்குறையால் நின்று போக இருப்பதை கண்ணீரோடு சொன்னான் . அவனது வருங்கால மனைவி சொன்ன விஷயத்தையும் சொன்னான் .

அப்துல் லதிப் கேட்டார் : “என்ன சொன்னாள் உன் வருங்கால மனைவி ?”

“நீங்கள் மிகுந்த இரக்க குணம் கொண்டவராம் .”

அவர் அமைதியுடன் கண்களை மூடி அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார் .

அவன் தொடர்ந்தான் : "கல்யாணம் செய்ய முடியாமல் திண்டாடும் பணப் பற்றாக்குறை உள்ள குடும்பங்களில் உள்ளவர்களுக்கு உங்கள் செலவில் நீங்களே கல்யாணம் செய்து வைத்திருக்கிறீர்களாம் . கடந்த பதினைந்து வருடங்களாக இப்படி செய்து வருகிறீர்களாம் ."

“உண்மைதான் !"

“இதுவரை 105 திருமணங்களுக்கு மேல் இப்படி உதவி செய்திருக்கிறீர்களாம்.”

“அதுவும் உண்மைதான் ; ஆனால்...ஆனால் நீயோ இந்து மதத்தை சார்ந்தவன். நான் உதவி செய்த அந்த குடும்பங்கள் எல்லாமே எங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்த குடும்பங்கள். அதை உன் வருங்கால மனைவி சொன்னாளா ?”

“அதையும் சொன்னாள். ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் உங்களை பார்த்து வர சொல்லி இருக்கிறாள். அதனால்தான் நானும் வந்திருக்கிறேன்."

அப்துல் லதிப் சற்று நேர அமைதிக்குப் பின் சொன்னார் : “ டீ கொண்டு வர சொல்லி இருக்கிறேன். குடித்து விட்டு கொஞ்சம் பொறுத்திரு ! தொழுகைக்கான நேரம் இது . தொழுது விட்டு வந்து விடுகிறேன்.”

அவன் தன் நம்பிக்கையை முழுவதுமாக இழந்திருந்தான் .
அவர்தான் தெளிவாக சொல்லி விட்டாரே, இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் திருமணத்துக்கு உதவி செய்வதாக !

“இன்னும் நான் எதற்காக இங்கே காத்திருக்கிறேன் ?”

அப்துல் லதிப் இதற்குள் தொழுகையை முடித்து விட்டு வந்திருந்தார்:“அட , இன்னும் நீ டீயை குடிக்கவில்லையா ?”

“இல்லை, நான் புறப்படுகிறேன்."

“பொறு தம்பி, சுட சுட வேறு டீ கொண்டு வர சொல்கிறேன் . இருவரும் சேர்ந்து அருந்தலாம் . அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். தொழுகையில் உன்னுடைய வேண்டுதலை அல்லாஹ்வின் முன் வைத்தேன். அதற்கு அல்லாஹ் பதிலும் கொடுத்து விட்டான் ”

அவன் அசையாமல் அவர் சொல்வதை கவனித்துக் கொண்டிருந்தான் .

அப்துல் லதிப் தன் அருகிலிருந்த குரானை எடுத்து, அதில் ஒரு பக்கத்தை புரட்டி வாசித்தார் : “தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள் .”

குரானை மூடி வைத்து விட்டு அப்துல் லதிப் கேட்டார் : “புரிந்ததா ?”

அவன் புரியவில்லை என தலையசைத்தான் .

அப்துல் லதிப் சுருக்கமாக சொன்னார் : “உன் கல்யாணத்தை என் செலவில் நானே நடத்துகிறேன் தம்பி .”
அவன் ஆச்சரியத்தில் பேச்சு வராமல் தடுமாறினான் : “ஐயா , நிஜமாகவா சொல்கிறீர்கள் ?”
.
“ஆம் , இதுவரை இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் திருமணத்துக்கு உதவி செய்து இருக்கிறேன் . முதன் முதலாக ஒரு இந்துவின் கல்யாணத்தை இப்போதுதான் நடத்த போகிறேன் ; இனி தொடர்ந்து எல்லா மதத்தில் உள்ளவர்களுக்கும் இந்த மாதிரி உதவிகளை செய்வேன்."

“ரொம்ப நன்றி ஐயா !”

“போய் உன் வருங்கால மனைவிக்கு நன்றி சொல் . அவளால்தானே என்னை தேடி நீ இங்கு வந்தாய் ?” புன்னகையுடன் அவனை அனுப்பி வைத்தார் அப்துல் லதிப்.

2016 ஜூனில் அந்த கல்யாணம் இந்து முறைப்படி சிறப்பாக நடந்தது .

கல்யாண செலவுகளை முழுவதுமாக ஏற்றுக் கொண்டது மட்டும் அல்ல; கல்யாணம் நடத்தி வைப்பதற்கான புரோகிதர் சரியான நேரத்தில் கிடைக்காததால் , வேறு ஒரு புரோகிதரை கூட அப்துல் லதிப்தான் ஏற்பாடு செய்திருந்தார் .

ஏகப்பட்ட பரிசுப் பொருட்களையும் அந்த இந்து தம்பதிகளுக்கு வாரி வழங்கி இருக்கிறார் அப்துல் லதிப் .

பரிசுகளை கொடுக்கும்போது அந்த மணப்பெண்ணிடம் இப்படி சொன்னார் அப்துல் லதிப் : “அன்பு மகளே , நானும் கூட உனக்கு நன்றி சொல்ல வேண்டும் . உன்னால்தானே எல்லா மதத்தில் உள்ளவர்களுக்கும் உதவும் எண்ணம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது !”

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இந்த திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் எல்லோருமே மணமக்களை வாழ்த்தியதோடு, மதங்களை கடந்த மனித நேயம் கொண்ட அப்துல் லதிப் அவர்களையும் மனதார வாழ்த்தினார்கள்.

நாமும் கூட அந்த மாமனிதரை வாழ்த்தலாமே !

“ஆலமரம் போல நீ வாழ
அங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட‌
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட‌...”

வாழ்த்துக்கள் அப்துல் லதிப் அவர்களே !

இன்ஷாஅல்லாஹ் ,
இது போல ஏராளமான நன்மைகளை நீங்கள் செய்ய வேண்டும் ;
நாங்களும் செய்ய வேண்டும் !








Moral Story
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..