Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஹுசைன் அப்துல் சத்தார் -- நோயியல் துறையில் ஒரு மந்திரச்சொல்.
Posted By:peer On 4/18/2020 7:41:57 PM

 

Pathology என அறியப்படும் நோயியல் பற்றிய அறிவியல் பாடங்களை கொடூர அரக்கனாக நினைத்து பாடம்படிக்க ஓடி ஒளிந்த மாணவர்களை , ஆரம்ப பாடசாலை குழந்தைகளை போல குதூகலித்து வந்தமரச்செய்த ஒரு நோயியல் மருத்துவர் ஹுசைன் அப்துல் சத்தார் ஆவார். நோயியலை பற்றிய விரிவுரைகளை எளிமைப்படுத்திய கையோடு அதனை எப்படி துரிதமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற டெக்னிக்குளை கற்றுக்கொடுத்து அமெரிக்காவில் பல மருத்துவர்களை உருவாக்கிய சத்தார் -- நவீன நோயியல் மருத்துவ உலகின் தந்தை என பலராலும் போற்றப்படுகிறார். மிக எளிமையாக அவரை, The Celebrity of Medical Science என கவுரவப்படுத்துகிறது அமெரிக்க மருத்துவ உலகு.

அமெரிக்கர்கள் இவரை எந்தளவிற்கு ஒரு நட்சத்திர அந்தஸ்த்தில் வைத்து பார்க்கிறார்கள் என்றால் டீ சர்டுகளில் இவரது படத்தை பதிந்து கடைகளிலும் ஆன்லைனிலும் விற்பனை செய்வது வரை போற்றிப்புகழ்கிறார்கள். டீ சர்டுகளில் அவரது உருவத்தை பதித்து அதற்கு கீழ் Hussain Sattar is my Homeboy (எங்க வீட்டு பிள்ளை) என்ற வாசகத்தை பொறித்து வைத்துள்ளனர்.மருத்துவ மாணவர்கள் மாத்திரமல்லாது மற்ற அனைவரும் இதனை வாங்கி அணிய ஆர்வப்படுகின்றனர். சத்தார் ஒரு மருத்துவர் மட்டுமல்லாது அவர் ஒரு மார்க்க அறிஞருமாவார். இவரை பற்றிய சிறுகுறிப்பு இங்கே காணலாம்.

அமெரிக்கவாழ் இஸ்லாமியரான சத்தார், பிறந்தது 1972, இல்லினியாஸ் மாகாணத்திலுள்ள சிகாகோ நகரில் ஆகும். சிகாகோவிலேயே பிறந்து அங்கேயே படித்து வளர்ந்த அவர் 1993ல் தனது பிஏ- பயாலஜி படிப்பை முடித்தார். அதன் பிறகு சிகாகோ மருத்துவ பல்கலையில் சேர்ந்த அவர் நோயியல் துறையை தனது கிளையாக எடுத்துக்கொண்டு படித்து வந்தார். அங்கே அவருக்கு அறிமுகமான , பாகிஸ்தானியரான ஷேக் ஸூல்பிகார் அஹமது நக்ஷ்பந்தி என்ற பாத்தாலஜி துறை பேராசிரியரால் கவரப்படுகிறார்.

பேராசிரியரின் அறிவுக்கூர்மையும் சத்தாரை கவருகிறது. 8 முதல் 3,000 மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகுப்பானாலும் சரி மருத்துவர் ஷேக் ஸூல்பிகார் கையில் ஒரு குறிப்புச்சீட்டை கூட கொண்டு வர மாட்டார். புத்தகங்கள் அனைத்தும் அவரது தலையில் ரிஜிஸ்டராகி இருக்குமோ என்கிற அளவுக்கு அனைவரது கேள்விகளுக்கும் சரியான பதில் கொடுத்து அசத்துவார். அவரது வெண்மையான நீண்ட தாடி, எப்போதும் உதட்டில் ஒரு சிறு புன்னகை, பாகிஸ்தானியருக்கே உரிய அந்த நீள ஜுப்பா மற்றும் லூஸ் பேன்ட்ஸில் இருக்கும் அவரை காணும்போது மருத்துவர் என யாரும் நம்பமாட்டார்கள் மாறாக அவரை ஒரு மரியாதைக்குறிய மதகுருவாகவே காண்பார்கள்.

ஷேக் ஸூல்பிகார் மருத்துவம் மட்டுமல்லாது இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளை போதிக்கும் ஒரு சூபியும் ஆவார். இவர்கள் இருவரது நட்பு பேராசிரியர் - மாணவர் என்பதை தாண்டி மிகவும் உள்ளார்ந்த நட்பாக இருந்தது. ஷேக் அவர்களின் வேண்டுகோளை ஏற்றி சத்தார் தனது நான்காமாண்டு படிப்பினை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் பயணமானார். அங்கு பஞ்சாபின் சாஹிவால் நகரிலுள்ள ஜாமியா ஃபரீதியாவில் ( Faridia Islamic University, Sahiwal) இணைந்து மார்க்கப்பாடங்களை கற்க தொடங்கினார்.

பஞ்சு மெத்தையிலும், சில்வர் ஸ்பூனிலும் புழங்கிய சத்தாருக்கு பாகிஸ்தான் பனிமலை அடிவாரத்தில் களிமண் தரையில் அமர்ந்து பாடம் படிப்பது சிரமமாக இருந்தது. பாகிஸ்தானில் அது பல்கலைக்கழகம் என்றாலும் ஆரம்ப பாடம் பயில்வோருக்கு அங்கே வகுப்பறைகள் அனைத்தும் களிமண் பூசப்பட்ட நான்கு சுவரும் மேலே ஒரு கூரையும் தான் இருக்கும் . குளிர்காலத்தில் உறைய வைக்கும் பனியும், வெயில்காலத்தில் ஆளை உருக்கும் வெப்பமும் நிலவும். அந்த சூழலில் சுமார் ஏழாண்டுகாலம் தனது மதரஸா பாடத்தை முடித்துவிட்டு மீண்டும் சிகாகோ திரும்பினார் சத்தார். இப்போது மீண்டும் University of Chicago Pritzker School of Medicine ல் இணைந்து அனாடமி மற்றும் மெடிக்கல் பாத்தாலஜி துறைகளை தேர்ந்தெடுத்து படிக்க தொடங்கினார்.

மருத்துவராக பணியாற்றியபடியே படிப்பை தொடர்ந்த காரணத்தால் அவருக்கு மனநெருக்கடியும் பாடத்தில் மனம் போகாத நிலையுமாக இருந்தது. அப்போது படிப்பினூடே கிடைத்த விடுமுறையில் சிரியாவிற்கும் மத்திய தரைகடல் நாடுகளிலும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்த பிறகு அவருக்கு ஒரு தெளிவு கிடைத்தது. அதுவரை Dr. Edward Goljan எழுதிய பாத்தாலஜி புத்தகம் தான் மருத்துவ மாணவர்களின் என்சைக்ளோபீடியாவாக திகழ்ந்தது. ஆனால் அந்த புத்தகத்தில் உள்ளதை படிக்க ஒருவருக்கு அவரது வாழ்நாளும் போறாது என்கிற நிலையில் இருந்தது. அத்தனை சிக்கலான புரிந்துகொள்ள மிகவும் நுணுக்கமான சொற்களையுடைய ஒரு வரட்டு புத்தகமாக அது இருந்தது.

அந்த புத்தகத்தில் உள்ளதை படித்தால் ஆர்வமாக பாத்தாலஜி பயில வரும் மாணவனும் மனம்வெதும்பி ஓடிவிடுவான் என்கிற நிலையில் தான் சத்தார், தன் துறை சார்ந்த விபரங்களை புத்தகமாக வெளியிட விரும்பினார். மிக மிக எளிமையாக, சிறு குழந்தையும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தனது புத்தகம் இருக்க வேண்டும் என எண்ணினார். அதற்காக இரவு பகலாக ஒன்பது மாதங்களை செலவு செய்தார். புத்தகம் எழுத நேரம் போறாத காரணத்தால் அவர் தன்னுடைய உறக்கத்தை கூட தியாகம் செய்ததாகவும் , பல்கலையிலிருந்து வீட்டுக்கு போகும் வழியில் காரில் கிடந்து உறங்கியதாகவும் அச்சமயத்தில் சத்தாருக்கு வாகனத்தை ஓட்டி உதவி செய்த மற்றொரு மருத்துவர் கூறுகிறார்.

அவ்வாறு அவர் அல்லும் பகலும் உழைத்து எழுதிய புத்தகத்திற்கு 100 டாலர் மட்டுமே விலை வைத்திருந்தார். அதை வாங்க யாரும் முன்வரவில்லை. எந்தவொரு பதிப்பகத்தாரும் அந்த புத்தகத்தை வாங்கவும் புரமோட் செய்யவும் விரும்பவில்லை., இறுதியாக சத்தாரின் மாணவர் ஒருவர் அளித்த ஊக்கத்தாலும் அவர் கொடுத்த யோசனையாலும் தனது புத்தகத்தை தானே ஆன்லைன் வகுப்புகள் நடத்தி புரமோட் செய்ய முன்வந்தார் சத்தார். வீட்டின் மேல்தளத்தில் அவரது மனைவியும் இரு குழந்தைகளும் இருப்பார்கள், பேஸ்மண்டில் அமர்ந்து யூடியூப் வீடியோக்கள் தயாரித்துக்கொண்டிருப்பார் சத்தார் . குளிருக்கு இதமான ஹீட்டரை கூட ஆன் செய்ய மாட்டார், தனது வீடியோவில் ஆடியோ கிளாரிடி வேண்டுமென்பதற்காக ஹீட்டரின் சப்தம் இடைஞ்சலாக இருக்குமென கூறுவாராம்.

அவ்வாறு 2011ல் தொடங்கிய அவரது யூடியூப் வீடியோக்களுக்கு பிறகு அவரது புத்தகம் பிரபலமானது, சுமார் 12 பதிப்பகத்தார் அந்த புத்தகத்தை கேட்டு அவருக்கு ஆர்டர் கொடுத்தனர். அதுபோக சத்தார் நடத்திய பாத்தாலஜி வகுப்புகள் இத்தனை எளிமையானதாக இருக்கும்பட்சத்தில் யார் வேண்டுமானாலும் மருத்துவம் பயிலலாம் என்ற எண்ணம் அமெரிக்க மாணவரிடையே உருவானது. 6 மில்லியன் மணிநேரம் ஓடிய அவரது யூடியூப் வகுப்புகள் இப்போது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. அவரது இணையதளமான பாத்தோமா.காம் என்ற தளம் , மாணவரிடையே மிகப்பிரபலம் அடைய தொடங்கியது. 3 மாதம் அமர்ந்து ஒருவர் படிக்கும் பாத்தாலஜி பாடங்களை வெறும் 15 நிமிடத்தில் புரிய வைக்கும் சத்தாரின் வீடியோ என அமெரிக்க பல்கலைக்கழகங்களால் புகழாரம் சூட்டப்பட்டது. அவ்வாண்டு மருத்துவ மாணவரின் தகுதி தேர்வுக்கான வழிகாட்டி புத்தகமான United States Medical Licensing Examination (USMLE) Step 1 -- பாடநூலை தயாரிக்க சத்தாருக்கு அனுமதியளிக்கப்பட்டது. 30 மாணவர்கள் மட்டுமே சேரும் இந்த துறைக்கு 90 மாணவர்கள் இடம் கேட்டு அந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தனர். அப்போது முதல் இப்போது வரை ஆயிரக்கணக்கான பாத்தாலஜி மாணவர்களின் ஹீரோவாக சத்தார் திகழ்ந்துவருகிறார். கடந்த 20 ஆண்டு காலமாக பாத்தாலஜி பாடத்திட்டத்தின் மீதிருந்த ஒரு கெட்ட பெயரை துடைத்து, அதுவொரு அருமையான பாடம் என மாணவர்கள் விரும்பி வந்து சேரும் துறையாக மாற்றியுள்ளார் சத்தார்.

அமெரிக்க மாணவர்கள் மட்டுமல்லாது உலக நாடுகளிலுள்ள பாத்தாலஜி மாணவர்களும் சத்தாரின் யூடியூப் வீடிநோக்களையே வகுப்பறைகளாக மாற்றிக்கொண்டுள்ளனர் என்றால் அது மிகையில்லை. பயோகெமிஸ்ட்ரி, அனாடமி, பாத்தாலஜி ஆகிய மூன்று துறையையும் உள்ளடக்கிய சிக்கலான பாடத்திட்டங்களை எளிமைப்படுத்திய சத்தார் , தனது ஷேக்கும் விருப்பத்திற்குறிய பேராசிரியருமான ஸூல்பிகார் அஹமது அவர்களுக்கே இந்த புகழனைத்தும் என கூறி பெருமைப்படுகிறார். ஷேக் அவர்கள் எழுதிய அரபு இலக்கண புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார் சத்தார்.

பாகிஸ்தானில் பயின்ற காலத்தில் சத்தார், அரபு இலக்கணம், ஹனபிச்சட்டங்கள் மற்றும் உஸூல், உலமா பயின்று பட்டங்கள் பெற்றுள்ளார். மருத்துவ பாடங்களுக்கு இடையே அவர் மார்க்கப்பாடங்கள் நடத்தும் அறிஞராகவும் திகழ்கிறார். தமது குருவிடம் தஸவுஃப் எனும் தியான பயிற்சி பெற்றுள்ள சத்தார் எப்போதும் எங்கும் தரையில் அமரும் பழக்கமுடையவராகவே உள்ளார். உலகில் எந்த நாட்டிற்கு சென்று மேடைப்பிரசங்கம் செய்தாலும் அவர் மேடையில் நாற்காலிகளை தவிர்த்து தரையில் அமருகிறார். மருத்துவ வீடியோக்களில் கூட பெரும்பாலும் தரையில் அமர்ந்து தான் விளக்கம் கொடுக்கிறார். தற்போது மார்பகத்தை தாக்கும் நோயியல் மற்றும் பெண்களின் மகப்பேறு கால நோயியல் குறித்த துறையில் மருத்துவராக பணியாற்றும் சத்தார், சிகாகோ பல்கலையின் பாத்தாலஜி துறையின் துணை பேராசிரியர் ஆவார்.

2010ல் "Fundamentals of Classical Arabic” and a manual on Hanafi fiqh entitled, “The Stairs to Bliss.” ஆகிய இரு இஸ்லாமிய மார்க்க ஆய்வு புத்தகங்களையும் வெளியிட்டார். தற்போது அவருக்கு மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர்.அமெரிக்க வாழ் மருத்துவரான அவரது உலக பிராயணங்களின் போது அவர் கடைபிடிக்கும் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் காண்பவரை வியக்கச்செய்கிறது.

மருத்துவம் சார்ந்த சொற்கள், நோய்களின் பெயர்கள், அது உண்டாகும் தாக்கங்கள் பற்றிய Medical ,Clinical and Scientifical சார்ந்த சொற்கள் மற்றும் விரிவாக்கங்களை மிக எளிமையாக்கித்தந்த சத்தார் உலகளவில் மருத்துவ மாணவர்களின் ஆதர்ஸ நாயகனாக திகழ்கிறார்.

-Nasrath rosy






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..