Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
வந்தே மாதரம் தேசிய கீதமா
Posted By:peer On 2/19/2021 6:52:43 AM

ஆனாரூனா

வரலாற்றைத் திரிப்பதிலும், புரட்டுவதிலும், சிதைப்பதிலும், அடையாளமே தெரியாத அளவுக்குப் புனைவு செய்வதிலும் தேர்ந்த சனாதனிகளும், மனுவாதிகளும் இப்போதும் ஒரு ‘புதிய வரலாறு’ படைக்க விரும்புகிறார்கள்.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் நாடு முழுவதும் ஒரு பாடல் பாடப் பட்டதாம். அந்தப் பாடலைக் கேட்டு ஆங்கில அதிகாரிகளும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் கிடுகிடுத்ததாம். அந்தப் பாடல்தான் இந்தியாவுக்கே சுதந்திரம் வாங்கித் தந்ததாம். அந்தப் பாடல்தான் ‘வந்தே மாதரம்’ எனும் ‘அன்னை வாழ்த்துப் பாடலாம்.
வந்தே மாதரம் எனும் இந்தப் பாடல் 100 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் 7-ஆம் நாள் ஏற்கப்பட்ட தாம்.
அதனால் 2006 செப்டம் பர் 7-ஆம் நாள் வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதத்தில் கல்வி நிலையங்களில் கட்டாயம் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்று சங்கப் பரிவாரங்கள் ஓங்கார முழக்கமிடுகின்றன.

முழங்கட்டும். ஆனால் வந்தே மாதரம் பாடல் இந்தியர்கள் அனைவருக்கு மான தேசியப் பாடல் என்று ஏற்கப்பட்டதாகச் சொல்கிறார்களே, அந்த ஏற்புறுதியை யார் தந்தது? யார் பெற்றது?

வந்தே மாதரம் பாடல் தேசியப் பாடல் என்று இன்று வரையிலும் இந்து மத வெறியர்களும், பார்ப்பனச் சதிகாரர்களும், ஏதும் புரியாத ‘மந்தை’ப் புத்திக் காரர்களும் சொல்லித் திரிகிறார்களே தவிர, இந்திய மக்களோ, அறிவாளிகளோ, மனித நேயர்களோ, பகுத்தறிவாளர்களோ, நேர்மையுணர்ச்சியுள்ளவர்களோ சொன்னதில்லை. அரசியல் சாசனத்திலோ, மரபுவழியிலோ வந்தே மாதரம் அங்கீகரிக்கப்பட்ட தேசியப் பாடல் அல்ல.

1882ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி என்னும் வங்க எழுத்தாளர் ஆனந்த மடம் என்னும் புதினத்தை எழுதினார்.

இந்த நாவலில் தீவிரமான காளி பக்தர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ரகசிய இயக்கம் ஒன்றைத் தொடங்கி சுதந்திரத்துக்காகப் போராடுகிறார்கள். சுதந்திரதேவியை அவர்கள் காளி மாதாவாக வழிபடுகிறார்கள். அல்லது காளிமாதா அவர்களுக்குச் சுதந்திர தேவியாகத் தோன்றுகிறாள். காளி என்பதும் சுதந்திரதேவி என்பதும் அவர்களுக்கு ஒன்றுதான். காளி பக்தி என்பதும் தேச பக்தி என்பதும் ஒன்றேதான்.

இவ்வாறு காளிவடிவில் தேசிய உணர்வையும், தேசிய உணர்வில் காளி தரிசனத்தையும் காணும் இந்த மதத் தீவிரவாதிகள், காளி சிலைக்கு முன் நின்று வழிபடும்போது பாடப் படும் பாடலாக ‘வந்தே மாதரம்’ எனும் பாடல் அந்த நாவலில் வருகிறது.

சுஜலாம் சுபலாம் மலஜய சீதலாம்
சச்ய சியாமலாம் மாதரம்...

என்று தொடங்கும் இந்தப் பாடல் காளிதேவியின் உன்னதங்களை வியந்தேற்றுகிறது. காளிதான் அவர் களுக்குச் சுதந்திரதேவி; பாரத தேவி.

இந்த நாவலில் வரும் காளி பக்தர்களைப் போலவே - இந்துமத சனாதன வெறியர்களின் பயங்கரவாத இயக்கம் - சங்கப் பரிவாரங்கள் - ‘இந்து’தான் இந்தியா, இந்தியா என்றால் ‘இந்து’. ஆகவே இந்துக்களின் நாடே இந்தியா; இந்திய நாட்டினர் அனைவரும் இந்துக்களே. இந்துக்களுக்கே இந்தியா என்று அரசியலில் நுழைந்தது.
இந்த சங்கப் பரிவாரங்களுக்கு பங்கிம் சந்திரரின் ‘வந்தே மாதரம்’ பாடல் பொருத்தமாகவும் பிடித்தமாகவும் இருந்தது.

இந்து மகாசபை, ஜன சங்கம், ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா என்று பலமுகங்களைக் கொண்ட ஆரிய மதவெறிக் கும்பல் தங்களின் தேசிய கீதமாகவே பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் பாடலைத் தங்களுடைய இயக்கத்தின் தேசியப் பாடலாகவே ஏற்றுக் கொண்டார்கள்.

இதே கால அளவில் மகாகவி இக்பால் “ஸாரே ஜஹான்ஸே அச்சா...” என்று தொடங்கும் ஒரு தேசிய எழுச்சிப் பாடலை எழுதியிருந்தார். சங்கப்பரிவாரங்களின் இந்து (பார்ப்பனிய) மதவெறியை ஏற்காத இதர பிரிவுகள் மத்தியில் ‘ஸாரே ஜஹான்ஸே அச்சா’ எனும் இக்பாலின் பாடல் ஆர்வக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் இக்பாலின் தேசியப் பாடலில் மத உணர்வு கலந்திருக்கவில்லை.

ஆனால், கருத்துக்களை உருவாக்கும் சாமர்த்தியர்களான அக்கிரகாரத்து அறிவு ஜீவிகள் பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் பாடல் தான் தேசிய கீதமாகப் பாடப் படவேண்டும் என்று பல தளங்களில் பிரச்சாரம் செய்தார்கள்.

1896-ல் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் தாகூர் கூட இந்தப் பாடலைப் பாடிய துண்டு. அப்போது இந்தப் பாடலுக்குப் பின்னே மறைந்திருக்கும் மதவாத அரசியலை அவர் பார்க்கவில்லை. ஆனால் விரைவிலேயே விழித்துக் கொண்டார். தேசபக்தர்களைவிட மதத் தீவிரவாதிகள் பழைமை வாதிகள் வந்தே மாதரத்துக்கு புகுந்து கொண்டு மானுடம் கிழிப்பதைக் கண்டு அவர் வெறுப்புற்றார்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இந்துமத ஆதரவாளர்களும், தீவிர வாதிகளும் இருந்ததால், வந்தே மாதரம் பாடல் குறித்து விவாதங்கள் எழுந்தன. மகாத்மா என்றழைக்கப்பட்ட காந்தியடிகளோ விஷ்ணு பக்தராகவே விளங்கினார். அவருடைய ‘சுயராஜ்யமே’ ‘ராமராஜ்ய மாக’த்தான் இருந்தது.

நேரு, நேதாஜி போன்ற இளைஞர்களின் உணர்வைப் புரிந்துக் கொண்டு ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்’ என்று இந்து முஸ்லீம் ஒற்றுமையை வெளிப்படுத்துவதுபோல் பாடினாலும், காந்தியடிகள் தன்னை ஒரு ராம பக்தனாகவே ஒப்புதல் அளித்தார்.

வர்ணாஸ்ரம தர்மத்தை அவர் ஒருபோதும் எதிர்த்ததில்லை.

திலகர், காந்தியடிகள் போன்ற சனாதனிகளுக்கும் நேரு, நேதாஜி நகேந்திர தேவா போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்ததால், பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் பாடல் தேசிய கீதமாக ஏற்கப்படவில்லை.

1937இல் காங்கிரஸ் செயற் குழு. (காரியக் கமிட்டி)வில் ‘வந்தே மாதரம்’ மறுபடியும் விவாதத்துக்கு வந்தது. இந்தியாவில் பல மதங்களும், கலாச்சாரங்களும் இருப்பதால், மத உணர்வைத் தூண்டி தேச ஒற்றுமைக்குத் தீ மூட்டிவிடக் கூடாது என்பதில் தாகூர், தேவா, நேரு போன்றவர்கள் உறுதியாக நின்றதால் ‘வந்தே மாதரம்’ ஒதுக்கித் தள்ளப்பட்டது.

1950 ஜனவரியில் கூடிய ‘அரசியல் சாசன நிர்ணய சபை’ தேசிய கீதம் பிரச் னைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.
மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் ‘ஜனகணமன அதிநாயக ஜெயஹே...” என்னும் பாடல் தேசிய கீதமாக ஏற்கப்பட்டது.

தாகூர் இறை நம்பிக்கையுள்ளவராகத் தோன்றினாலும் அவருடைய கடவுள் ஒரு மதத்துக்குள் ஒடுங்கியவரல்ல. அது மானுட நேயமாக விரிந்தது. இருண்ட முலைக்குள் யாரைத் தேடுகிறீர்கள்?
இறைவனையா? அவன் அங்கே ஏது? உழுது பயிரிட்டு அமுதூட்டும் உழவரின் உழைப்பில், பாட்டாளியின் படைப்பில் இறைவனைக் காண முடியாதவனால் எங்கேயும் இறைவனைக் காணமுடியாது என்று எண்ணி எழுதியவர் தாகூர். பல சமயங்களில் புத்தரை அவர் முன்னிறுத்தினார். புத்தர் கடவுள் இல்லை. ஆன்மா இல்லை; மறு ஜென்மம் இல்லை என்று போதித்த பகுத்தறிவாளர்.

அந்தப் பகுத்தறிவுச் சிந்தனைகளை ஏற்ற தாகூர், சோஷலிசத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.
கம்யூனிசம் என்றால் பேய், பூதம் என்று இழிவு செய்யப்பட்ட காலத்தில், சோவியத் யூனியனை ஆதரிப்பதே ராஜதுரோகம் - தேவ நிந்தனை என்று தடை செய்யப்பட்ட காலத்தில், ‘இரண்டாம் உலகப் போரில்’ சோவியத் யூனியன் தோற்குமானால் அது மனித இனத்தின் தோல்வியாகும். வெல்க ஸ்டாலின்; வெல்க சோவியத் யூனியன்’ என்று வாழ்த்தியவர் தாகூர்.

கல்பனாதத், நேதாஜி, சரத் சந்திரர் போன்ற இடது சாரிச் சிந்தனையாளர்களுக்கு உத்வேகமளிக்கும் ஆசானாக, தோழனாக விளங்கியவர் தாகூர்.

‘சிட்டகாங் வீராங்கனை’ என்று போற்றப்படும் கல் பனாதத், வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனையை எதிர்கொள்ள நேர்ந்தபோது அந்த புரட்சிப் பெண்ணின் விடுதலைக்காகப் போராடியவர் தாகூர்.
தாகூரின் இந்த சமூக அக்கறையுள்ள, புரட்சிகரமான சிந்தனைகளையும், நடவடிக்கைகளையும் பிற் போக்காளர்களால் எப்படிச் சகித்துக் கொள்ளமுடியும்?

தாகூரின் இந்த ‘அழகிய’ சித்திரத்தை அசிங்கப்படுத்துவதில் சங்கப் பரிவாரங்கள் எப்போதுமே தீவிரம் காட்டுகின்றன.

இந்தியாவை இந்துக்களின் நாடாக அதாவது மனுதர்மத்துக்கு முன் மண்டியிடும் நாடாக - அடிமைத் தனத்தில் மழுங்கிப் போன சூத்திரர்களின் சிறைக்கூடமாக - மாற்றியே தீரவேண்டும் என்று இட்லரின் ஆவியோடும், சாவர்க்கரின் சாம்பலோடும் திரியும் கூட்டம், பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் பாடலைத் தங்களுடைய தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டிருப்பதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஆனால், அதுவே இந்தியா முழுவதும் பாடப்பட வேண்டும் என்று கூச்சலிடுவதை எப்படி அனுமதிக்க முடியும்?
கவிஞர் சுப்பிரமணியம் (பாரதியார்) “வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என்று தமிழில் பாடியதால் இங்கே பலர் வந்தே மாதரம் என்பது தேசியப் பாடலாக இருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள். இந்தக் கவிஞர் இந்திய விடுதலையை நேசித்தார் என்பது உண்மைதான்.

அதே அளவுக்கு சக்தி உபாசகராகவும், திலகர் பற்றாளராகவும் இருந்தார் என்பதை மறந்துவிடமுடியாது. மூட நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையே; சோஷலிசத்துக்கும், தனிச் சொத்துரிமைக்கும் இடையே; தேசியத்துக்கும், தெய்வீகத்துக்கும் இடையே கவிஞர் எப்போதும் ஊசலாடினார் என்பதும், கடைசிக்கும் கடைசிப் பரிசீலனையில், ‘புரட்சியாவது வெங்காயமாவது’ என்று உடைந்து நொறுங்கினார் என்பதும் அகற்றப்பட முடியாத வரலாற்றுச் செய்திகள்.

பாரதி மீதுள்ள பற்றுதலால் பல காங்கிரஸ்காரர்களும், மதத்தை எதிர்த்துக் கொண்டு அரசியல் நடத்த முடியாது என்று நம்புகிற காங்கிரஸ் தலைவர்களும் கூட அத்வானி கும்பலின் ஆர்ப்பாட்டத்துக்கு முன் ‘ஈனஸ்வரத்தில்’ பேசுகிறார்கள்.

“செப்டம்பர் 7-இல் இந்தியா முழுவதும் கல்வி நிலையங்களில் வந்தே மாதரம் பாடப்படுமா?” என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது-

“சங்கப் பரிவாரங்களின் ஆசைப்படி இந்தியாவை இந்து நாடாக மாற்ற நாங்கள் தயாராக இல்லை” - என்றே அவர் பதிலளித்திருக்க வேண்டும்.

ஆனால் அர்ஜுன் சிங்குக்குப் பழைய வரலாறு தெரியவில்லை.

தேசவிடுதலை என்கிற ஒப்பனையில் வந்தே மாதரம் பாடலில் ‘இந்துத்துவம்’ புகுத்தப்பட்டதை அவரால் உணர முடியவில்லை.

பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதாரின் ‘பரம்பரை’ யுத்தத்தின் கருப்பொருளை அவர் கவனிக்கவில்லை.

‘வம்பு எதற்கு?’ என்கிற தோரணையில் ‘விருப்பமுள்ளவர்கள் பாடிக் கொள்ளலாம்’ என்று பதிலளித்திருக்கிறார்.

‘வந்தே மாதரம்’ இந்தியத் தாய்க்குச் சூட்டப்படும் மணியாரமாக இருக்குமோ என்கிற சந்தேகம் பல தலைவர்களுக்கு.

இல்லை. ‘வந்தே மாதரம்’ மதவெறி நாய்க்கு ஊட்டப்படும் ‘ஊக்க மாத்திரை’.

மனித இரத்தத்தின் மீது இந்து சாம்ராஜ்யம் எழுப்ப விரும்பும் வேதபுரத்தாரின் விபரீத ஆசைதான் ‘வந்தே மாதரம்’.

இது நாடெங்கும் பாடப்படும் போது, ஏதோ கொஞ்ச நஞ்சம் இருக்கும் ஜனநாயகம், மனித உரிமை போன்ற இலட்சியக் கனவுகள் சிரச் சேதம் செய்யப்பட்டிருக்கும்.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..