Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
Pencil Drawing - ஏர்வாடி - திருநெல்வேலி
Posted By:peer On 2/6/2022 7:07:20 AM

50 வருடங்களுக்கு முந்தைய ஒரு புகைபடத்தை பார்த்து வரைந்தது (வரைபடத்தில் சின்ன சின்னதாய் நிறைய தவறுகள். மன்னிக்கவும்).தூரத்தில் மேற்கு மலை தொடரில், நம்பி மலையில் தோன்றி, எங்கள் ஊர் ஏர்வாடியை தழுவி செல்லும் ஆறு - நம்பி ஆறு.

பாட்டு பாடி ஏர் உழும் உழவனுக்கு உதவி, ஊரினை ஏர் பாடி என உருவாக காரணமானது. பின்னாளில் ‘ஏர்வாடி’ ஆனது.சிறுவயதில் சென்னைக்கு சென்றுவிட்டதால், இந்த ஆற்றுடன் நான் உறவாடியது 8 வயது வரை மட்டுமே. அன்று அனுபவித்த சந்தோஷங்கள் காலப்போக்கில் காணாமல் போனாலும், படம் வரையும் போது மீட்க பட்ட ஆற்றங்கரை பால்ய ஞாபகங்களில் சில:



தன்னை தேடி வரும் எல்லா சமயத்தினரையும் சமமாய் பார்க்கும் ஆறு.மனிதனுக்கு மட்டுமல்ல பிற உயிரினங்களுக்கும் அடைக்கலமும், அடிப்படை தேவையையும் அள்ளி தந்தது.ஆற்றுக்கு இந்த புரம் வடக்கு ஏர்வாடி, அந்தப் புரம் தெற்கு ஏர்வாடி. ஊருக்கு மேற்கே தெருக்கள். ரயில் பெட்டி போல் ஒட்டியபடி ஒட்டு வீடுகள். ஒவ்வொரு தெருவின் மறு முனை ஆற்றங்கரையில் இணையும். அக்கரை தெருக்களும் அவ்வாறே ஆற்றுடன் இணையும்.

ஆற்றங்கரையிலிருந்து தெருவுக்கு செல்ல படிக்கட்டுகள்.பாலத்துக்கு அருகேயுள்ள ஆற்றங்கரை படிக்கட்டு ஏறியதும் சிறிய பஞ்சாயத்து கட்டிட அறை.பஞ்சாயத்து கட்டிட அறைக்குள் மாநில செய்தி ஆகாச வாணி செய்திகளை சொல்லும் வானொலி பெட்டி. அந்த செய்திக்காகவும், வானொலியை போட வரும் பஞ்சாயத்து ஊழியருக்காக காத்திருக்கும் ஊர் பெரியவர்கள்.

பஞ்சாயத்து கட்டிட அறைக்கு பக்கத்தில் மெல்லிய வெளிச்சம் தரும் விளக்கு கம்பம்.
இரவு நேரத்தில் ஆறு அமைதியாக இருக்கும். பாலத்திலிருந்து பார்க்கும்போது மெல்லிய தெரு விளக்கொளியில், சில நேரங்களில் நிலவு ஒளியில் ஓடை போல் ஓடும் நீரின் அழகு மெருகூட்டும்.
இக்கரையையும் அக்கரையையும் இணைக்கும் குறுகிய சிறு பாலம். இக்கரையிலிருந்து பஸ் பாலத்தில் பாதி வழி வந்தால், அக்கரையில் ஓரமாக நின்று காத்திருக்கும் பஸ்.



தெற்கிலிருந்து வரும் பஸ் தூரத்தில் பாலம் கடக்கும் முன்பாக ஒலி (Horn) கொடுப்பார்கள். வடக்கே பஸ் நிலையம் தயாராகி விடும். பெரும்பாலோர் கடிகாரத்தை பார்த்து கொள்வார்கள். “கரெக்ட்டா வந்துட்டம்ல” என ஒருவராவது கண்டிப்பாக கூறுவர். பெரும்பாலும் சரியான நேரத்தில் பஸ் வரும். இன்றும் அக்கரையில் பஸ், பாலம் கடக்கும்போது ஒலிப்பானை எழுப்புவது (to alert) பழக்கத்தில் உள்ளது.

பாலத்துக்கு அங்கிட்டு போவதாக இருந்தால் பாலம் வழியாக போவதாக இருந்தால் ‘சுத்து’ என்று ஆத்து வழியே கடந்து செல்பவர்கள் அதிகம். சைக்கிளில் வருபவர்களும் ஆற்றினை கடந்து, 7– தெரு மற்றும் 9-ந்தெரு படிக்கட்டுகளில் சைக்கிளை தூக்கிட்டு போவாங்க. ஒரு சிலர் சைக்கிளை ஆற்று நீரில் கழுவது உண்டு, அப்போது ஸ்டாண்ட் போட்டு, சைக்கிள் பின் டயர் தண்ணீரில் சிறிது நனைய, ‘பெடல்’ சுற்றி, வீசியடிக்கும் நீரினை வேடிக்கை காட்டுவர்.... ஆச்சர்யமாக பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன்.

பள்ளி விட்டு வந்ததுமே, விளையாடுவதற்கு ஏற்ற இடங்கள், ஆற்று மணலும் தெருவும்தான். விடுமுறை நாட்களில் ஓடி பிடித்து விளையாடல், நீரில் விளையாட்டு, மீன் பிடித்தல், கருக்கல் வரை ஆற்றில்தான் விளையாட்டு. கருக்கல் வந்தால் சின்ன பிள்ளைகளை ஆற்றில் விளையாட பெரியவங்க அனுமதிக்க மாட்டாங்க. ‘வீட்டுக்கு போலே’ என பத்தி விடுவார்கள்.

ஆற்றில் குளித்தல், நடந்து செல்லல், துணி துவைத்தல், குடி மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கு தேவையான தண்ணீர் குடங்களில் எடுத்து செல்லல் என மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.. தேநீர், உணவு கடைகளுக்கு தண்ணீரை மாட்டுவண்டி உருளையில் பிடித்து சென்றதும் நினைவுக்கு வருகிறது.
ஆற்றை ஒட்டி பள்ளி இருக்கும். தொழ போகுமுன் ஆற்று நீரில் ஓலு எடுத்துட்டு போவாங்க.

மக்கள் துணி துவைக்க ஆங்காங்கே ஆற்றின் கரையோரத்தில் சலவை கற்கள், வன்னார்கள் துணி துவைக்க தனி இடங்கள்,. துணி துவைக்கும்போது காற்றிலும் நீரிலும் பயணிக்கும் ஒலி மற்றும் எதிரொலி வெகுவாக ரசித்து இருக்கிறேன்.

இரு கரையை ஒட்டி தென்னை மற்றும் மாமர தோப்புகள் - மாங்காய்களுக்காக கல்லெறிந்த நாட்கள். சில இடங்களில் நீர், குறுகி, வளைந்து, நெளிந்து செல்லும். அதில் உதிர்ந்த இலைகள், பூக்கள் மிதந்து செல்லும் அழகு.

ஆத்தங்கரையில் 'காத்து'... தனி சுகம். வேகமாக வீசும்போது எழும்பும் அந்த ஒலியை ரசிப்பதிலும் ஒரு சுகம். காத்துக்கு ஏத்த மாதிரி அசைந்தாடும் கரையோர மரங்கள், விசிறி வீசும் தென்னை, பனை.
சென்னையில் காணும் பொங்கல் கொண்டாடுவது போல் ஊரிலும் வருடத்தில் ஒரு நாள், 'தோப்பு' என கொண்டாட படுவதுண்டு. பெரும்பாலோர், மணிமுத்தாறு, கன்னியாகுமரி என குடும்பத்துடன் சாப்பாடு கட்டிக்கிட்டு போய் விடுவார்கள். சிலருக்கு 'தோப்பு' ஏர்வாடி நம்பியாற்றில்தான்.

'தோப்பு' பண்டிகையின் highlight, பட்டம் விடுவது. மெட்ராஸ் மாதிரி காத்தாடி இங்கு கிடையாது. பெட்டி வடிவில், பெரியதாக இருக்கும். இந்த பட்டத்தை பறக்கவிடணும்னா குறைந்த பட்சம் 200 m எதிர் திசையில் நூலுடன் ஓடி வர வேண்டும், அப்போதுதான் பட்டம் மேலெழும்பும். மெட்ராஸ் காத்தாடி மாதிரி நின்ன இடத்திலே இருந்து ‘சல்லு’ன்னு எழுப்ப முடியாது.

மெட்ராஸ் மாதிரி மாஞ்சா நூல், 'டீல்' போடுவது, காத்தாடி 'பெரலு' போடுவது எல்லாம் கிடையாது, யார் பட்டம் அதிக தூரம், அதிக உயரம் பறக்கிறது என்பதே போட்டி ஆற்றங்கரையில் மரங்கள் அதிகம், காத்தும் அதிகம். ஒவ்வொரு பட்டத்துக்கும் பெரிய வால் கட்டப்படும். வால் பெரிதாக இருந்தால், பட்டம் நிலையாக பறக்கும் (தற்போது தோப்புக்கு செல்வது, பட்டம் விடுவது எல்லாம் காலப்போக்கில் மறக்கடிக்க பட்டுவிட்டன)

‘படுவளம்’ (முகரம்) அன்று சந்தன கூடு விழா எடுப்பார்கள். சிறுவர்களுக்கு வான வேடிக்கை நாட்கள். முட்டாய், விளையாட்டு சாமான்கள், சரிகை பேப்பர் கண்ணாடி, ஜவ்வு மிட்டாய்... என நிறைய கடைகள்… 6-ந்தெரு அமர்க்களப்படும். படுவளத்தின் இறுதிநாளில் இக்கரை, அக்கரை சேர்ந்த இரு யானைகள் ஆற்றில் இறங்கி சந்திக்க விடுவாங்க.

தெளிந்த நீரோடையில்
தண்ணீர் பிடித்த சொந்தங்கள்
தற்போது
ஒருநாள் விட்டு
ஒருநாள்
குழாயில் தவம் கிடக்கின்றன.


கால் நனைத்து
மனம் சில்லிட வைத்த ஆற்றை
இன்று கடக்க முடியாமல்
ஒடங்காடுகள்.
பாலத்தின் மேலிருந்து
பாங்காய் ரசிக்க நினைக்க
கருப்பு நீரும்,
கண்ணுக்கு தெரியாத மண்ணும்
கலங்கடித்தது.
கரையின் படிக்கட்டில் அமர்ந்து
வேடிக்கை பார்த்த மனது
கரைந்து போனது.

ஆறுகள்
ஆங்காங்கே
மனித சுயநலத்தில்
அழுக்கடைந்து அழுகின்றன.
இயற்கை வளங்களை அழித்துவிட்டு
செயற்கையை வைத்து ஆனந்தித்துக் கொண்டிருக்கிறோம்.




Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..