Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
இந்திய விடுதலைப் போரில் இந்துக்களும் முஸ்லிம்களும்
Posted By:peer On 8/15/2022 5:16:57 AM

 

1857 -களில் அடர்ந்து வந்தன ஆங்கில படைகள் இந்தியாவைக் காவுகொள்ள. அதே வேகத்தில் அவர்களை எதிர்கொள்ள எழுந்தார்கள் முஸ்லிம்களும் இந்துக்களும்.

மே திங்கள் 1857-இல் தான் தொடங்கியது இந்தியாவின் முதல் விடுதலைப் போர்.

இந்துக்களும் முஸ்லிம்களும் அப்போது காட்டிய ஒற்றுமையை இனி எப்போதாவது இந்தியா சந்திக்க வேண்டும் என்றால் இப்போதைய பாசிசம் வேரோடும் வேரடி மண்ணோடும் கெல்லி எறியப்பட வேண்டும்.

இந்திய வரலாற்றாசிரியர்களால் முதல் சுதந்திரப் போர் என்றும், ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தால் சிப்பாய் கலகம் என்றும் வர்ணிக்கப்படும் 1857 போர். நானா சாஹிப், பகதூர்ஷா ஜாஃபர், மௌலவி அஹ்மது ஷா, தாந்திய தோப், கான் பகலூர் கான், ராணி லெட்சுமி பாய், பேகம் ஹஸரத் மகால், அசீமுல்லாஹ் கான், பெரோஷ்ஷா போன்றவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதே!

இதில் எல்லா மதத்தவர்களும் ஒன்றுபோல் தங்கள் உயிரையும், உடைமைகளையும் தந்தார்கள். அந்த விடுதலைப் போரில் மௌலவிகளும், பண்டிட்களும் (கஷ்மீர் பிராமணர்களுக்கு இன்னொரு பெயர்) ஜமீந்தார்களும், விவசாயிகளும், வியாபாரிகளும், வழக்கறிஞர்களும், பணியாட்களும் பட்டதாரிகளும், பாமரப் பெண்களும், மாணவர்களும், இளைஞர்களும் ஜாதி, மதம், நிலம், மொழி என இவற்றையெல்லாம் பற்றி எள் மூக்கின் அளவுகூட கவலைப்படாமல் பொங்கி எழுந்தார்கள். ஒன்றாய் ஒரே அணியில் நின்றார்கள்.

ஆங்கிலேயர்களை ஆட்டங்காண வைத்தார்கள். மே, 11,1857-இல் ஷாபகதூர்ஷா ஜாஃபர். அவர்களை இந்தியாவின் ஏகபோக ஆட்சியாளர் என அறிவித்தார்கள். ஆனால் ஷாபதூர்ஷா ஜாஃபர் அவர்களின் படையில் இடம் பெற்றிருந்தவர்களில் 70 விழுக்காடுகள் இந்துக்கள்தாம். (இன்றைய சூழலில் இதனை எடுத்துக்காட்டிட திருக்கின்றது, ஆனால் அன்றைக்கு அப்படி ஒரு நிலை இருக்கவில்லை.)

இந்த அறிவிப்பின் தளகர்த்தர்களாய் வீற்றிருந்தவர்கள், நானா சாஹிப், தாந்தியாதோப், லஷ்மிபாய் ஆகியோர் ஆவார்கள்.

அன்றைக்கிருந்த அன்பு கெழுமிய சகோதரத்துவ சூழலில் யார் தலைமை தாங்கு கின்றார்கள்? யார் வழி நடத்துகின்றார்கள்? என்பதைப் பற்றியெல்லாம் அந்தப் போர் வீரர்கள் கவலைப்படவில்லை. அங்கு கவலையும், கருத்தும் யார் எவ்வளவு தியாகம் செய்வது என்பதும், யார், யார் எவ்வளவு வெள்ளைப் படைகளைக் காவு கொள்வது என்பதும்தான்.

இந்த விடுதலை வேட்கையும், இந்து முஸ்லிம் ஒற்றுமையும், ஒரு பகுதியில் மட்டுமோ, ஒரு பிராந்தியத் தில் மட்டுமோ நிலைத்திருக்கவில்லை. நாடெல்லாம், பரவிக் பாரதமெல்லாம் கிடந்தன.

அதேபோல் இந்துக்களும் முஸ்லிம்களும் செய்த தியாகங்கள் ஒரு தளர்த்திலோ ஒரு களத்திலோ கட்டுண்டு கிடக்கவில்லை. மாறாக எல்லாத் தளத்திலும், எல்லாக் களத்திலும் விரிந்துவியாபித்து நின்றது. அப்படி எல்லா தளத்திலும் தழும்பி நின்ற தியாக வரலாற்றின் சிலவற்றை இங்கே தருகின்றோம்.

அயோத்யா மௌலவி

1). இன்று அயோத்யாவில் வீற்றிருந்த பாபரி மஸ்ஜித்-ஐ கொண்டுதான் தேசத்திற்கு இரண்டகம் செய்வோர். இந்தியக் குடிமக்களை இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் பிரித்துக் காட்டுகின்றனர்.

ஆனால் அன்று இந்த அயோத்தியாதான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் ஒப்பற்ற சாட்சியாக விளங்கிற்று.

இங்கேதான் மௌலவிகளும், மகந்த்கள் என்ற கோயில் பூஜாரிகளும் - நிர்வாகிகளும் ஒன்றாய் நின்று ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள்.

இந்த மௌலவிகளுக்கும், மகந்த்களுக்கும் பின்னால்தான் பாமர முஸ்லிம்களும், பாமர இந்துக்களும் அணி திரண்டார்கள். பொது எதிரியாம் ஆங்கிலேயர்களை வீழ்த்திட பிற்றை நாட்களில் ஆங்கிலேயர்களுக்கெதி ராக ஆயுதம் ஏந்தி போராடினார்கள் என்பதற்காக மரண தண்டனை தந்தபோது பாமர முஸ்லிம்களும், பாரம இந்துக்களும் ஒன்று போலவே தூக்கிலே தொங்கினார்கள்.

பெரும்பாலான மரண தண்டனைகளில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒரே
தூக்கு மரத்தில் தான் தூக்கிலே போட்டார்கள்.

அன்றைய அயோத்யாவில் ஒப்பாரும் மிக்காருமில்லாத ஓர் மார்க்க அறிஞர். அவருடைய பெயர் மௌலானா அமீர் அலீ. இவரை மக்கள் அயோத்யா மௌலவி என்றே அழைப்பார்கள். இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ‘ஜிஹாத்' அறிவிக்கப்பட்டவுடன் (இந்த ஜிஹாதை லக்னோவில் அறிவித்தவர் மௌலவி அஹ்மது ஷா அவர்கள்தாம் ஜிஹாதிற்கு அதாவது ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆயுதந்தாங்கிய போருக்குத் தயாரானார்கள் மக்கள்.

ஆனால் அங்கே அயோத்யாவில் இந்தப் போருக்கு இந்த ஜிஹாதிற்கு ஆண் மக்களை அணி திரட்டிக் கொண்டிருந்தவர், அயோத்யாவின் கீர்த்திமிக்க ஹனுமான் கார்க்கி, கோயிலின் நிர்வாகி, பாபா இராமச் சந்திரதாஸ் அவர்கள்தாம்.

அயோத்யா மௌலவி அமீர் அலீ அவர்கள், இந்த பாபா இராமச்சந்திர தாஸ் அவர்களின் அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்கள். அத்தோடு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களையும், தங்களோடு இந்த ஜிஹாதில், அதாவது ஆங்கிலேயர்களுக்கு எதிரான பெரும் போரில் தன்னோடு இணைத்துக் கொண்டார்கள்.

மோதினார்கள் ஆங்கிலேயே பெரும்படையுடன், அழிவுகளை ஏற்படுத்தினார்கள். இறுதியில் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியும், இவர்கள் பெரும்படையும், இருவரையும் ஒன்று போலே ஒன்று சேர்த்து கைது செய்தது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை அணி சேர்த்ததற்காகவும், ஆங்கிலேயர்களுக்கு அதிகமான சேதங்களை உண்டாக்கியதற்காகவும், அயோத்திய மௌலவியும் பாபா இராமச் சந்திரதாஸ் அவர்களும் ஒன்று போலவே மரண தண்டனையைப் பெற்றார்கள். அயோத்தியாவிலுள்ள "குபர்டீலா” Kuber Teela என்ற இடத்திலுள்ள ஒரு புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். ஒரே நேரத்தில் ஒரே மரத்தில் இரண்டு பேருக்கும் தூக்கு!

ஆச்சாகான் மற்றும் ஷாம்பு பிரசாத் சுக்லா

அதே அயோத்தியாவில் மேலும் இரண்டு நண்பர்கள் ஒருவர் ஆச்சாகான் என்ற முஸ்லிம், இன்னொருவர் ஷாம்பு பிரசாத் சுக்லா என்ற இந்து. இவர்கள் இரண்டு பேரும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஜிஹாதிற்கு, ஆயுதந்தாங்கிய போருக்குத் தயாரானார்கள்.

அந்நேரம் அயோத்தியா இடம்பெற்ற பைஜாபாத்-ஐ ஆட்சி செய்து கொண்டிருந்தவர் இராஜாதேவ். பக்த்சிங், இந்த ராஜா இந்த இரண்டு நண்பர்களும், அதாவது ஆச்சாகான் அவர்களும் ஷாம்பு பிரசாத் சுக்லாவும் காட்டிய வீரத்தாலும், விவேகத்தாலும் பெரிதும் கவரப்பட்டார். தனது படைகளை இந்த இரண்டு பேரின் ஆணையின் கீழ் ஒப்படைத்தார்.

இந்த இரண்டு இணை பிரியா நண்பர் களும் பரங்கிப் படைகளுடன் மோதினார்கள். பயங்கரமான இழப்புகளை அந்தப் பரங்கிப் படைகளுக்கு, (ஆங்கிலேயப் படைகளுக்கு) ஏற்படுத்தினார்கள். பரங்கிப்படைகளை வென்றே காட்டினார்கள்.

ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளால் ஆங்கிலேயர்கள் அரண்போய் நின்றார்கள். இந்தியாவின் இதரப்பகுதிகளில் ஆங்கிலேயர்களுடன் மோதியதில் சிலபல இடங்களைத் தவிர இதர இடங்களில் இந்திய விடுதலைப் போர் வீரர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் சொல்லிமாளாது.

ஆனால் அயோத்தியா நண்பர்கள் ஆச்சாகான், ஷாம்பு பிரசாத் சுக்லா ஆகிய இருவரும் ஈட்டிய வெற்றி ஈடு இணையற்றது அன்றைய நாட்களில். ஆனால் அந்த வெற்றியை ஓராண்டுக்குள் தங்கள் சூழ்ச்சியால் பறித்துக் கொண்டார்கள் பரங்கியர்கள்.

ஒருமுறை தங்கள் சூழ்ச்சியால் வெற்றி கண்ட பரங்கியர்கள், இந்த இரண்டு நண்பர்களையும் தேடிப் பிடித்தார்கள். இரண்டு பேரையும் ஒன்றாக மக்கள் மன்றத்தில் நிறுத்தி சித்திரவதைச் செய்தார்கள். இரண்டு பேர்களின் தலையையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அனைவரின் பார்வையிலும் வைத்துக் கொய்தார்கள்.

போரில் மட்டும் நண்பர்களாக இருக்கவில்லை இந்த அயோத்தியா நண்பர்கள் மரணத்தையும் நண்பர்களாகவே சந்தித்தார்கள்.

இத்தனையும் நடந்தது அந்த அயோத்தி வைத்துதான். முஸ்லிம்களையும் இந்துக்களையும் ஒன்றாய்ப் பிணைத்து ஆங்கில ஏகாதிபத்தியத்தை திணற அடித்த அயோத்யாவை மையமாகக் கொண்டுதான் மகோன் மத்தர்கள் இன்று இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் ஈனச் செயலைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆங்கிலேயர்கள் புத்தியையும், வியூகத்தையும் இன்றளவும் பின்பற்றி வருகின்றார்கள்.

ஏனெனில் அன்று இந்துக்கள் முஸ்லிம்கள் இவர்கள் இணைந்து ஆங்கிலப் படைகளுக்கு ஏற்படுத்திய அழிவுகளுக்கு அளவில்லை. ஆகவே ஆங்கிலேயர்கள் இந்த இழப்புகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் அயோத்யாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் காட்டும் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும், சிதைத்து சின்னா பின்னமாக்கிட வேண்டும் எனத் திட்டம் போட்டார்கள். அந்த திட்டத்தை மெல்ல மெல்ல செயல்படுத்தினார்கள்.

1857-களில் ஆங்கிலேயர்கள் தங்கள் சந்திப்புக்களில் அதிகமாக விவாதிப்பது "Ayodhay unity அயோத்யா ஒற்றுமை” என்பதாகத்தான் இருந்துது. ஏனெனில் அயோத்யா ஒற்றுமையை குலைக்கவில்லை என்றால் ஆங்கிலேயர்களால் வாழ்ந்திட முடியாது என்ற நிலை. தங்களுடைய சூழ்ச்சியால் அந்த ஒற்றுமையைக் குலைத்து விட்டார்கள்.

அதை அப்படியே கவ்விப் பிடித்துக் கொண்டார்கள் பிற்றைநாள் தேசத் துரோகிகள். அதில் வெற்றியும் கண்டு விட்டார்கள். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. மஹந்த்களும், கியான்தாஸ்களும் அன்றுபோல் இன்றும் முஸ்லிம்களிடம் அன்பாய் இருக்கின்றார்கள். முடிந்தவரை இந்த பாசிஸ்ட்டுகளை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
(விளக்கம் பெற : 2016 டிசம்பர் வைகறை வெளிச்சம் படியுங்கள்)

முதல் விடுதலைப் போரின் இன்னொரு வரலாற்றுத் தடம்

அது இப்படி அமைகின்றது. கோட்டா KOTA STATE பேரரசு. இப்போது இது இராஜஸ்தானில் உள்ள ஒரு முக்கிய இடம். இதனை மகாராவ் "MAHA RAO" என்பவர் ஆட்சிச் செய்து கொண்டிருந்தார். இவர் ஆங்கிலேயர்களின் அடிவருடி.

“மகாராவ்” -இன் அமைச்சர் அவையில் ஒரு சிறந்த அதிகாரி. அவர் பெயர் லாலா ஜெய் தயாள் பாட்னாகர். இவர் மிகவும் சிறந்த அறிஞர். பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். பாரசீக மொழி, உருது, ஆங்கிலம் ஆகியவற்றில் அதீத பாண்டியத்தியம்.

இந்தப் பன்மொழிப் புலமையில் பல மொழிகளிலும் வரும் நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர். இவருக்கு கோட்டாவின் ஆட்சியாளர் “மகாராவ்” ஆங்கிலேயர்களின் அடிவருடியாக இருந்தது அறவே பிடிக்கவில்லை. ஆகவே மகாராவ் சேவையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் நாட்களை எண்ணி, எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அங்கே மெஹ்ராப்கான் என்ற படைத்தளபதி, ஆங்கிலேயர்களுக்கெதிரான (ஜிஹாதிற்கு) ஆயுதந்தாங்கிய பெரும் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள விரும்பினார் லாலா ஜெய்தயாள் பாட்னாகர். அரசவையிலிருந்து விடுவித்துக் கொண்டார். இந்தப் புரட்சிப் படையில் தன்னைப் பிணைத்துக் கொண்டார்.

ஆங்கிலேயப் படைகளை அசாதாரணமான ஆற்றலோடு எதிர்த்தார்கள். ஆங்கிலேயப் படைகள் மண்ணைக் கவ்வின. கூலிக்குச் சண்டை போட வந்தவர்கள் புறமுதுகிட்டு ஓடினார்கள். ஆனால் சுற்றியிருந்த சில இளவரசர்கள் காலைவாரிவிட்டு விட்டார்கள். ஆங்கிலேயர்களுக்கு விலை போய் விட்டார்கள். இதனால் “கோட்டா” வீழ்ந்துவிட்டது. ஆனாலும் மெஹ்ராப்கான் அவர்களும், லாலா ஜெய்தயாள் பாட்னாகர் அவர்களும் மேற்கொண்ட போர்க் கோலத்தைக் கலைக்க வில்லை. 1857-இல் தொடங்கிய போரை தொடர்ந்து கொண்டே இருந்தார்க்ள. 1859 வரை இது தொடர்ந்தது.

ஒழிந்தும், மறைந்தும் வாழ்ந்தார்கள். போரைத் தொடர்ந்தார்கள். மெஹ்ராப் கான் அவர்களும், லாலா ஜெய் தயாள் பாட்னாகர் அவர்களும் அங்கேயும் ஓர் துரோகி இருவரையும் காட்டிக் கொடுத்துவிட்டான்.

ஆங்கிலேயர்கள், இருவரையும் ஒன்றாய்க் கைது செய்து செப்டம்பர் 17, 1860-இல் இருவரையும் ஒரே நேரத்தில் தூக்கில் போட்டார்கள். இருவரையும் கோட்டாவில் வைத்துத்தான் தூக்கில் போட்டார்கள். இருவரும் ஒன்றாய்த்தான் வீர மரணத்தைத் தழுவினார்கள்.

ஜெய்ன் மதத்தவரை புதை...! முஸ்லிம்களை எரி... ஆங்கிலேயர்களின் உத்தி..!

இது இப்போது ஹான்சி நகரம் ஹரியானா மாநிலத்தில் இருக்கின்றது. இங்கே இரண்டு நண்பர்கள் ஒருவர் ஜெய்ன் மதத்தைச் சார்ந்தவர். பெயர் குக்கும் சந்த் ஜெயின், இன்னொருவர் முஸ்லிம் பெயர் முனீர்பேக்.

இவர்கள் இருவரும் “அறிவைத் தேடுவதில் வல்லவர்கள். இதனால் நெருங்கிய நண்பர்களாக ஆகிவிட்டார்கள். இவர்கள் இருவரும் தங்கள் எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் அப்பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்தவர்கள். கணித மேதைகள், இலக்கிய வட்டத்திலும் பெயர் பெற்றவர்கள். கணிதத் துறையில் பல ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தவர்கள்.

மே-11, 1857-இல் ஷா பகதூர் ஷா அவர்களை புரட்சி அரசின் ஆட்சியாளர் என அறிவித்தவுடன், பகதூர் ஷா இந்த இரு மேதைகளையும் தனது ஆலோசகர்களாக நியமித்துக் கொண்டார்கள்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆயுதந்தாங்கிய போர் உச்சக் கட்டத்தை எட்டியபோது இவர்கள் இருவரையும் மேற்கு டெல்லியின் தளபதிகளாக நியமித்தார்கள் ஷா பகதூர் ஜாஃபர் அவர்கள். இவர்கள் இருவரும் ஆங்கிலேயப் படைகளைப் படிப்படியாக வெற்றிக் கொண்டார்கள். ஆங்கிலேயர்கள் செய்வதறியாது திணறினார்கள்.

ஆங்கிலேயர்களின் பலவீணத்தைத் புரிந்துகொண்ட இவர்கள். பாசியாலாவை வெற்றி கொண்டார்கள். ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து அதை விடுவித்தார்கள். அடுத்து கபுர்தலாவை நோக்கி நகர்ந்தார்கள். அதனையும் விடுவித்தார்கள். தொடர்ந்து நாபா, கஷ்மீர் ஆகியவையும் விடுவிக்கப்பட்டன. புட்டப்படி என்ற இடமும் ஆங்கிலேயர்களின் கைகளிலிருந்து விடுவிக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆயுதங்களால் வெல்ல முடியாத போதெல்லாம், சூழ்ச்சிகளையே நம்பி நின்றார்கள். சில குறுநில மன்னர்களை விலைக்கு வாங்கினார்கள். ஹூக்கும் சந்த் அவர்களையும், முனீர்பேக் அவர்களையும் கைது செய்தார்கள். யாரும் இனி தங்களை எதிர்க்கும் மன வலிமையைப் பெற்று விடக் கூடாது என்பதை அறிவித்திட அவர்களை பொதுமக்கள் முன்னாலேயே வைத்து சித்ரவதை செய்தார்கள். கொலை செய்தார்கள். அவர்களின் உடல்களை அவர்கள் கொண்டிருந்த மத நம்பிக்கைகளுக்கெதிராக புதைத்தார்கள், எரித்தார்கள்.

ஜெயின் மதத்தைச் சார்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மாட்டார்கள், எரிப்பார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் அவருடைய உடலை அடக்கம் செய்தார்கள். இதனை ஹுக்கும் சந்தின் உறவினர். 13 வயதே நிரம்பிய ஒருவர் இதனை எதிர்த்தார். அவரையும் தூக்கிலே போட்டார்கள்.

அதபோல் முஸ்லிம்கள் இறந்தவர்களின் உடலை எரிக்க மாட்டார்கள். அடக்கம் செய்தார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் முனீர்பேக் அவர்களின் உடலை எரித்தார்கள்.

மால்வாவின் இந்து முஸ்லிம் வீரர்கள்

"மால்வா நில பரப்பு" அப்போது இந்தியாவின் மத்திய பகுதி என அறியப்பட்ட பகுதியில் இருந்தது. இப்போது மத்திய பிரதேஷ் மாநிலத்திலிருக்கின்றது.

1857-கள் இந்தப் பகுதி ஆங்கிலேயர்களைக் கதிகலங்க வைத்தப் பகுதிகளில் ஒன்று. இந்தப் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கெதி ராகப் படை நடத்திக் கொண்டிருந்த மாவீரர்கள், தாந்தியாதோப், ராவ் சாஹிப், இராணி லெட்சுமி பாய், பெரோஸ் ஷா, மௌலவி பாசில் ஹக்.

இந்த மௌலவி பாசில் ஹக் அவர்கள் நாடறிந்த ஒரு மார்க்க அறிஞர். ஆனால் அவர் இந்த அணியில் தன்னை இணைத்துக் கொண்டு தான் தலை சிறந்த போர்த் தளபதி என்பதை நிரூபித்தார்.

இந்த அணி அதாவது, தாந்தியாதோப், ராவ் சாஹிப், இராணி லெட்சுமிபாய், பெரோஸ் ஷா, ஆகியோர் 80,000 (எண்பதாயிரம்) பேரைக் கொண்ட ஒரு பெரும்படையைத் திரட்டினார்கள்.

இவ்வளவு பெரிய படையை திரட்டி விட்டார்கள் என்ற செய்தியே ஆங்கிலேயர்களைக் கதிகலங்கிட வைத்தது.

ஒரே முகமாக ஆங்கிலேயர்களைத் தாக்கினார்கள். ஆங்கிலேயர்கள், தினமும் பல்லாயிரக் கணக்கானோரை பணம் தந்து தங்களது பட்டாளத்தில் சேர்த்துக் கொண்டே இருந்தார்கள். ஆனாலும் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்திட இயலவில்லை.

இந்த பெரும்படை ஆங்கிலேயர்களின் கைகளிலிருந்த பகுதிகளை ஒவ்வொன்றாக விடுவித்துள்ளது.

ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்த பல இந்திய மன்னர்களையும், இந்திய இளவரசர்களையும், கப்பம் கட்டுவதிலிருந்து விடுவித்தார்கள்.

இந்தப் படை1857-ஐகடந்து 1858களிலும் வெற்றிகளை ஈட்டியது. ஆங்கிலேயர்கள் சுமார் ஓராண்டு இந்தப் பெரும்படை ஏற்படுத்திய இழப்புகளைத் தாங்கிட வேண்டியதிருந்தது. தங்கள் ஆட்சியின் கீழிருந்த இடங்கள் ஒவ்வொன்றாக விடை பெற்றுக் கொண்டிருந்தன.

இறுதியில் 1858-இல் “ரானடோன்” என்ற இடத்தில் வைத்து டிசம்பர் 17 ஆம் தேதி ஒரு பெரும் போர் நடைபெற்றது. இதில் இந்தப் பெரும்படையை ஆங்கிலேயப் படைகள் சுற்றி வளைத்தது.

ஆனாலும் இந்தப் பெரும்படையை வெற்றி கொள்வதில் ஆங்கிலேயர்களுக்கு ஒரு பெரும் சிக்கல் இருந்தது. அது மௌலவி பாசில் ஹக்கின் அணி. இந்த அணி ஆங்கிலப் படைகளின் அனைத்து சூழ்ச்சிகளையும் வென்றது. எஃகால் வார்க்கப்பட்ட கோட்டை போல் நின்று விட்டார்கள். தங்களை ஆங்கிலேயர்களின் குரூரமான ஆயுதங்களுக்குத் தந்தார்களே அல்லாமல், ஆங்கிலேயர்களை முன்னேறிட விடவே இல்லை.

இதனால் தாந்தியாதோப் தன்னுடைய போரை தொடர்ந்து கொண்டே இருந்தார். அவருடைய படைகள் 1859 வரை ஆங்கிலேயர்களை பெரும், பெரும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கிக் கொண்டே இருந்தார்கள். இறுதியில் மௌலவி பாசில் ஹக் அவர்களின் தோழர்கள் 480 பேரும் வீர மரண மடைந்தார்கள்.

காரணம் நார்வார் பகுதியை ஆட்சி செய்த மான்சிங் என்ற குறுநில மன்னர் ஆட்காட்டி வேலையைச் செய்து விட்டான். இதனால் தாந்தியதோப், ராவ் சாஹிப், பெரோஸ்ஷா ஆகியவர்களைக் காத்து நின்ற அரண் பாசில் ஹக் வீர மரண மடைந்தார்கள்.

எனினும் தாட்சிய தோப் அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து நடந்த கீழ் அறுப்பு வேலைகளால் தாந்தியாதோப் அவர்களை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். அவரை டிசம்பர் திங்கள் 18, ஆம் நாள் 1859 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்கள்.

ஆனால் ராவ் சாஹிப் அவர்களும் நானா சாஹிப் இன் ஒன்றுவிட்ட சகோதரர் பாண் டுரங்க சதாசிவன் அவர்களும் இணைந்து இந்த விடுதலைப் போரை 1862 வரை தொடர்து சென்றார்கள்.

ஜம்மு பகுதியை ஆண்டு கொண்டிருப்பதை மராட்டிய ஆட்சியாளர்கள் காட்டிக் கொடுத்ததால் ஆட்சியாளர்கள் ராவ் சாஹிப்-ஐ ஆங்கிலேயர்கள் கைப்பற்றி காண்பூரில் வைத்துத் தூக்கிலே போடப்பட்டார்.

ஆனால் பெரோஷ் ஷா ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் செய்து கொண்டே இருந்தார். அவரைப் பிடிக்க இயலவில்லை. அவர் தப்பித்துச் சென்று மேற்கு ஆசிய நாடுகளிடம் படை உதவிகளையும், ஆயுத உதவிகளையும், இந்திய விடுதலைக்காகக் கேட்டார் கிடைக்கவில்லை. இறுதியில் மக்கா சென்றார். அங்கே 1887-இல் மரணித்தார்.

- M.குலாம் முஹம்மது M.A., நிறுவனர் "விடியல் வெள்ளி" ஆசிரியர் "வைகறை வெளிச்சம்"

தொடர்புக்கு: 8148129887






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..