Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
திருந்தினால் திரை விலகும்.....!
Posted By:Hajas On 8/2/2009

buy naltrexone ireland

naltrexone
கதை தானே என்று ஒதுக்கி விட வேண்டாம். தேவையான பல கருத்துக்கள் அடங்கியுள்ளது. படித்துப் பாருங்கள்.

திருந்தினால் திரை விலகும்.....!   
 
தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன்மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப்பேசிய ஜீனத்பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம் புரிந்தது ஜாபர்அலிக்கு.   
 
"என்ன பாத்திமா, ஷாகிராவிடமிருந்து செய்தி வந்திருக்கா? என்ன சொல்றா உன் மக?"
 
"பேசியது நம்ம பொண்ணுதான்னு எப்படி கண்டு பிடிச்சீங்க!" கண்கள் மலர குழந்தைத் தனமாகக் கேட்டாள் பாத்திமா.  
 
"இதென்ன பெரிய விஷயமா? ஷாகிராவை பெங்களூர் காலேஜ்லே சேர்த்ததிலிருந்து பார்த்துகிட்டு தானே இருக்கேன்.மககிட்டே பேசும்போது உன் முகத்தில் காணும் சந்தோஷத்தை!"  
 
"இருக்காதாபின்னே! மூன்று பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே ஆசை மவளாச்சே.வருஷம் போனதே தெரியலைங்க.ஷாகிராவுக்கு எம்.சி.ஏ பரிட்சை ஆரம்பமாகப்போகுதாம்.முடிஞ்சதும் போன்செய்றாளாம்.. அழைத்துப்போக உங்களை வரச் சொன்னாள்." 
 
"அதுக்கென்ன போயிட்டு வரேன்.சரக்கு எடுக்க சீக்கிரமாக போகணும்.டிபன் எடுத்து வை".   
 
இரவு படுக்கையில்  மெல்ல பேச்செடுத்தாள் பாத்திமா. எந்தக் குடும்ப விஷயமாக இருந்தாலும் இரவு நேரத்தில்தான் ஜாபர் அலி ஓய்வாக செவி கொடுத்து கேட்பார். மற்ற நேரங்களில் டென்ஷன் பார்ட்டிதான். 45 வருடதாம்பத்யத்திய அனுபவம் பாத்திமாவிற்கு.
 
"என்னங்க நம்ம பொண்ணுக்கு படிப்பு முடிஞ்சிப்போச்சு. இனி நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து கல்யாணம் நடத்திவிடுவதுதான் நல்லது.  இப்போதே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிடுச்சிடுங்க. சரியா இருக்கும். "  
 
"ஷாகிரா படிச்ச பொண்ணு. அவ படிப்புக்கு ஏற்ற மாப்பிள்ளையை நம்ப பிள்ளைங்கதான் பார்க்கணும். எனக்கு என்ன விபரம் தெரியும். அவங்க மூன்று பேரையும் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லி போனில் சொல்லிடு." 
 
அடுத்து பேசுவதற்குள்  குறட்டைச் சத்தம்தான் அவரிடமிருந்து பதிலாக வந்தது. கணவருக்கு வியாபார அலைச்சல் அதிகம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.  
 
அன்று ஞாயிற்றுக்கிழமை...........   
 
மூன்று மகன்களும் தொலைபேசி தொடர்பின் காரணமாக அவரவர்களுடைய விலையுர்ந்த கார்களில் முகமதியார்பேட்டை வந்து  இறங்கினர். மகன்களை ஒருசேரக்கண்டதில் ஜாபர் அலிக்கு மட்டில்லா மகிழ்ச்சி.      இருக்காதா பின்னே..........  
 
படிப்பு,பதவி, பெரிய இடத்து மாப்பிள்ளைகள் என்ற அந்தஸ்த்து ஆகிய முகாந்திரம் எல்லாம் ஒரு  சேரக்கண்டதில் பரம திருப்தி அவருக்கு.     
 
மூத்த மகன் அப்துல் சலீம் பி.இ (சிவில்) படித்துவிட்டு சென்னையில் ரியல் எஸ்டேட் மற்றும் சலீம் கன்ஸ்ட்ரகஷன் தொழிலை நடத்திக்கொண்டு குடும்பத்துடன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டான்.
 
இரண்டாவது மகன் அப்துல் மாலிக் பி.காம் முடித்துவிட்டு மதுரைஅரசு பதிவுத்துறை அலுவகத்தில் சார்பதிவாளராக பணிபுரிகின்றான்.மதுரைவாசியாகிவிட்டான்.   
 
மூன்றாவது மகன் அப்துல் வஹாப் பி.எஸ்சி (கெமிஸ்ட்ரி) முடித்துவிட்டு திருச்சியிலுள்ள பால்வளத்துறை நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகின்றான். வீட்டு மாப்பிள்ளையாக இருக்கிறான்.  
 
தங்கையின் திருமணப்பேச்சு சம்பந்தமான விவாதம் நடந்தது. எல்லோருடைய ஒட்டுமொத்தமான  கருத்துக்களும் தங்களுடைய அந்தஸ்த்துக்கேற்ற பணக்கார மாப்பிள்ளையை தேடுவதில்தான் இருந்தது. ஜாபர் அலியின் விருப்பமும் அதுதான். தன் மகளுக்கு ஒழுக்க குணமுள்ள மாப்பிள்ளைதான் வேண்டும் என்ற ஜீனத் - பாத்திமாவின் வேண்டுகோள் எடுபடவில்லை. இறை நாட்டப்படி நடக்கட்டும் என்று அவன் மேல்  பாரத்தைப் போட்டுவிட்டு தன்கைமணச்சுவையோடு வயிறார உணவு பறிமாறி மகன்களை அனுப்பி வைத்தாள் பாத்திமா.   
 
படிப்பு முடித்துவிட்டு வந்த மகளுக்கு வாய்க்கு ருசியாக வித விதமாகச் சமைத்துப் போட்டு மகிழ்ந்தாள் பாத்திமா. அண்ணன்கள் வந்ததையும் மாப்பிள்ளையைப் பற்றிய அவர்களுடைய கருத்துக்களும் தலையசைக்கும் தந்தையைப்பற்றியும் கூறினாள் பாத்திமா. அதைக்கேட்ட ஷாகிராவின் முகம் வாடியது.
 
"ஏம்மா, எல்லோரும் தீன் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்காங்க. அவர்கள் மார்க்கக்கல்வி படிக்கலையா?வாப்பாவும் அவர்கள் வழி செல்கிறாரே?"  
 
"என்னம்மா செய்யறது, உன்னை மதரஸாவில் சேர்த்து படிக்க வைத்தது போலத்தான் அண்ணன்களையும் படிக்க வச்சேன். நீ கருத்தாகப் படிச்சே, பட்டப்படிப்பையும் இஸ்லாமியக்கல்லூரியிலேயே சேர்ந்து படிச்சதாலே தீன் பற்று உனக்கு அதிகமா இருக்கு. ஆனா உன் அண்ணன்கள் சரியா படிக்கலன்னா ஹஜரத் தலையில் ஓங்கிக் கொட்டுவார்னு சாக்கு சொல்லி படிக்காம நின்னுட்டாங்க. ஹஜரத் கொஞ்சம் கண்டிப்பானவர். ஓதுறதுல அசிரத்தையா இருந்தா அவருக்குக் கோபம் வரும். நம்ம நல்லதுக்குத்தானே!. வாப்பாகிட்டேயும் சொல்லிப் பாத்துட்டேன். அவர் வியாபாரம் மூலம் பணம் சேர்ப்பதில்தான் குறியாக இருந்தார். உன் மனசு நோகக் கூடாதுன்னுதான் ஊறுகாய் தொட்டுக்கொள்வதைப்போல பள்ளிக்குப் போய் வருவார்."
 
 (வாழ்க்கை) வசதிகள் அதிகமா இருப்பது செல்வமல்ல;மாறாக போதுமென்ற மனமே (உண்மையான)செல்வமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: புகாரி)  
 
"அரபியில் ஓத வரலைன்னா என்னம்மா? நம்ம உம்மத்துக்களுக்கு மார்க்கம் எவ்வளவு எளிமைப்படுத்தி கொடுக்க முடியுமோ அப்படி கொடுத்துள்ளது. தமிழிலியே இஸ்லாமிய கருத்துக்களையும் மார்க்க நெறிமுறைகளையும் ஆய்வுகளையும் சூராக்களையும் படித்து கடைப்பிடிக்கலாமே! அண்ணிங்க கூடவா எடுத்து சொல்லமாட்டாங்க"  
 
"அட போம்மா,பூவோட சேர்ந்த நாறும் மணம் வீசும் என்பாங்க". இவங்க பூவா இருந்தால்தானே!. இவர்கள் மறுமை வாழ்க்கைக்கு அமல் செய்வதை விட, இவ்வுலக நாகரீக மோகமும் பணம் சம்பாதிக்க கணவன்களுக்கு தவறான வழி காட்டுவதில்தான் ஆர்வமா இருக்காங்க. அவங்க பிள்ளைகளை ஆண்டவன் தான் காப்பாத்தணும்."
 
சந்திரனை மேகம் மறைத்தது போல பாத்திமாவின் முகத்தில் கவலையின் ரேகைகள் படிந்தன. மனவருத்தத்தை மறைத்துக்கொண்டு தாய்க்கு ஆறுதல் கூறினாள் ஷாகிரா.
 
ஓய்வு நேரத்தை பயனுள்ள விதத்தில் செலவிடவும் மார்க்கக் கல்வி பற்றிய செய்திகளை அதிகமா தெரிந்து கொள்ளவும் ஒரு கம்ப்யூட்டர் தேவையென வாப்பாவிடம் கூறினாள் ஷாகிரா. மகளின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாத ஜாபர் அலி அவள் விருப்பப்பத்தை நிறைவேற்றி வைத்தார். மகன்களிடம் இருந்து மாப்பிள்ளைகளின் விபரங்கள்,புகைப்படத்துடன் பதிவுத்தபாலில் வந்து சேர்ந்தன. ஜாபர் அலி மகளைக் கூப்பிட்டார். 
 
"ஷாகிரா,மாப்பிள்ளைகளின் பயோடேட்டா, போட்டோ எல்லாம் வந்திருக்கு. பெரிய இடம் போலிருக்கு, போட்டோவைப் பார்த்தாலே தெரியுது".  
 
ஷாகிரா பயோடேட்டாவை மட்டும் வாங்கிப் பார்த்தாள். அதில் படித்த, அழகான, வசதியான பெண் வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது.  
 
"வாப்பா,எனக்கு இந்த மாப்பிள்ளைகள் பிடிக்கவில்லை"என்றாள் ஷாகிரா.
 
"என்னம்மா சொல்றே, எந்த போட்டோவையும் பார்க்காமலேயே எப்படிம்மா பிடிக்கலைன்னு சொல்றே?"
 
"பயோடேட்டாங்கிறது முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி, மாப்பிள்ளைகளுடைய குணம், நோக்கம்,எ திர்பார்ப்பு எல்லாம் அதிலேயே தெரிஞ்சுக்கலாம். எனக்கு மார்க்கப்பற்றுள்ள, படித்த, எளிமையான மாப்பிள்ளை போதும், வாப்பா; பணம், வசதி எல்லாம் வேண்டாம்".   
 
"என்னம்மா, புரியாத பொண்ணா இருக்கியே! குணம் மட்டும் பத்தாது, பணம் தாம்மா நம்மை வாழவைக்கும்".
 
"வாப்பா, நீங்க புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான். நமக்கெல்லாம் வழிக்காட்டியாக விளங்கும் நாயகமும் அவர்களின் வழித்தோன்றல்களும் பெண்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழும் பாத்திமா நாயகமும் அவர்களின் எளிமையான வாழ்க்கை நெறிமுறைகளும் தான் இஸ்லாத்திற்கு பெருமையைச் சேர்க்கிறது. நீங்கள் நினைப்பதுபோல் இல்லே."  
 
"நம்ம பொண்ணு சொல்றது சரிதாங்க. அவள் விருப்பப்படியே மாப்பிள்ளைப் பார்ப்போம்" என்று ஆதரவாகப் பேசினாள் பாத்திமா.  
 
"சரிம்மா, நீ சொல்றமாதிரி பையனை எங்கேபோய் தேடுவது சொல்லு."  
 
"ஒண்ணும் கஷ்டம் இல்லே வாப்பா, இன்டர்நெட்லே இல்லாத விஷயமே இல்லே. நீங்க அனுமதி கொடுத்தா தேடிப்பார்க்கிறேன்" என்றாள்.  
 
"இதெல்லாம் கூட கம்ப்யூட்டர் செய்யுதா என்ன! புரோக்கருக்கு வேலையே இல்லைன்னு நினைக்கிறேன்."
 
தந்தையின் அனுமதி கிடைத்தது ஷாகிராவுக்கு.   
 
"என் மனம் நாடும் மணாளனை மணம் முடித்து வை." என்று இறைவனிடம் துவா கேட்டாள். நாட்கள், வாரங்கள், மாதங்கள் நகர்ந்தன.
 
"தொழுகை தூக்கத்தை விட சிறந்தது" என்பதால் ஃபஜர் தொழுதுவிட்டு அம்மாவுக்குச் சமையலில் உதவி செய்த பின் கம்ப்யூட்டர் முன்அமர்ந்தாள். இஸ்லாமிய இணையதளம் ஒன்றில் அவள் பார்த்த மாப்பிள்ளையின் விவரம் அவளை வெகுவாகக்  கவர்ந்தது. மார்க்கப்பறுள்ள, ஐவேளைதொழுகும் தன் பெற்றோர்களைப் பராமரிக்கும் பெண் தேவையென குறிப்பிட்டு இருந்தது.  
 
"நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. செல்வத்திற்காக 2.குடும்ப வம்ச பாரம்பரியத்திற்காக 3.அழகிற்காக 4.மார்க்க நல்லொழுக்கத்திற்காக. எனவே மார்க்க நல்லொழுக்கத்திற்காக  பெண்ணை மணந்து வெற்றி அடைந்துக்கொள்.(இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்..." (அறிவிப்பாளர்: அபு ஹுரைரா(ரலி), நூல்: புகாரி. எண்; 5090)   
 
மாப்பிள்ளையின் விவரங்களை ஷாகிரா பெற்றோர்களிடம் தெரிவித்தாள். அவள்  முகத்தில் சந்தோஷத்தைக் காண தவறவில்லை ஜாபர்அலி. வாழப்போகும் மகளின் விருப்பம்தான் முக்கியம் எனக்கருதி மாப்பிள்ளையைப்  பார்க்கப் புறப்பட்டார். ஊரிலிருந்து திரும்பிவந்த ஜாபர்அலியின் முகத்தில் மட்டில்லா மகிழ்ச்சியும் மனநிறையும் தென்பட்டது.  சொல்லப்போகும் செய்தியைக் கேட்க பாத்திமா ஆவலுடன் கணவரின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள்.    
 
"பாத்திமா, நம்ம பொண்ணு தேர்வு செய்த மாப்பிள்ளை அவள் எதிர்ப்பார்த்த மாதிரியே இருக்கார். எளிமையான குடும்பமாக இருந்தாலும் நல்லபெயரைச் சம்பாதித்து வைத்துள்ளார். தொழுகையாளி, அடக்கம், சாந்தமான பேச்சு, பெற்றோர்கள் பழகும் விதம் எல்லாம் மனசு நிறைஞ்சு இருக்கு. நம்முடைய பணமும் அவர்களுடைய குணமும் நம்ம பொண்ணைச் சந்தோஷமாக வாழவைக்கும்!".
 
அவருடைய உள்மனம் ஒரு கணக்குப் போட்டது. தொலைபேசிமூலம் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் மாப்பிள்ளை பற்றிய விவரங்களையும் தங்களுடய விருப்பத்தையும் தெரிவித்தார்...  மூவரும் குடும்பத்துடன் வந்து திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி சொல்லி முடித்தார்.   மூன்று குடும்பங்களும் வந்து இறங்கினார்கள் சுனாமிபோல் ஆவேசமாக. காரசாரமான விவாதங்கள் நடந்தன. தாங்கள் பார்த்த வரன்களை நிராகரித்ததன் காரணமாக தங்கள் கௌரவம், அந்தஸ்த்து எல்லாம் பஞ்சாக பறந்து விட்டது என ஆர்ப்பரித்தனர். அண்ணிகள் தங்கள் பங்குக்கு உபதேசம்செய்தனர். தன் நிலையிலிருந்து தளரவேயில்லை ஷாகிரா.  
 
"அண்ணா, எனக்கு ஆடம்பரமான பணக்கார குடும்பம் வேண்டாம். சொத்துக்களோ, நகைநட்டோ வேண்டாம். மனசுக்கு நிறைந்த  வாழ்க்கையே போதும். மூவரும் ஒன்று சேர்ந்து நடத்தி வைங்க" என்று உருக்கமாக வேண்டினாள்.  
 
அவர்கள் மனம் இரும்பாக இருந்தால்தானே உருக வாய்ப்பிருக்கும்; அதுதான் கல்லாகி விட்டதே.! பிடிவாதமாக எல்லோரும் புறப்பட்டுச் சென்று  விட்டனர். பலமுறை நேரில் அழைத்தும் வர மறுத்து விடவே உறவினர்கள், நண்பர்களை வைத்து படைத்தவன்மேல் பாரத்தைப் போட்டு திருமணத்தை முடித்து விட்டார் ஜாபர் அலி.   மறுவீடு வந்த மருமகனிடம் மகளுடன் வீட்டோடு தங்கிவிடும்படி கேட்டார்.  
 
அதற்குச் சாதிக், "மாமா, உங்களுக்குத் தெரியாதது ஒண்ணும் இல்லே. மகன்கள் இருக்கும்போது வீட்டு மாப்பிள்ளையாக இருப்பது உகந்தது இல்லே. அது முறையும் இல்லே. நான் என் சொந்த காலில் நிற்கவே  ஆசைப்படுகிறேன்.  என் பெற்றோர்களைப் பராமரிக்கும் கடமையும் இருக்கு. மனைவி ஷாகிராவை மட்டும் என்னுடன் அனுப்பினால் போதும். வேறு எதுவும் வேண்டாம். தவறாக நினக்காதீங்க;  அல்லாஹ் போதுமானவன்" என்று  பதில் கூறினான்.  
 
கணவரின் கருத்தையே ஆமோதிப்பதுப்போல் மகளும், "வாப்பா புகுந்த வீடுதான் பெண்களுக்கு சொர்க்கம். அவருக்கும் அவரைப்பெற்றவர்களுக்கும் பணிவிடை செய்யவே விரும்புகிறேன். ஆண்டவன் துணையும் உங்களின் துவா பரகத்தும் போதுமானது" என்றாள்.  
 
பாசம் ஒன்றையே சீதனமாகக்கொண்டு விடைப்பெற்றுச் செல்லும் மகளையும் மருமகனையும் பெருமிதத்தோடுப் பார்த்துக்கொண்டு நின்றார் ஜாபர் அலி. ஜீனத் பாத்திமாவுக்கு கண்கள் குளமாயின. ஜாபர் அலியின் மனக்கணக்கு பொய்த்ததில் அவருக்கு வருத்தமே இல்லை.  
 
பணக்கார வீட்டுப்பெண் என்ற சுவடு  தெரியாமல் மன நிறைவோடு குடும்பம் நடத்தினாள் ஷாகிரா. அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுக்கு ஓதவும் தொழவும் கற்றுக் கொடுத்தாள். பெண்களைக்கூட்டி இஸ்லாமிய நெறிமுறைகளை எடுத்துக்கூறினாள். எல்லோருடைய மனதிலும் நிறைந்து நின்றாள்.  கணவனின் வேலைக்காக நாளிதழ்களைப் புரட்டவும் தவறுவதில்லை. எல்லா பட்டதாரிகளையும் போல சாதிக்கும் வேலை கிடக்காமல் அல்லாடினான். கணவனின் நிலை கண்டு கண்கலங்கிய ஷாகிராவின் பார்வை அன்றைய செய்தித்தாளில் நிலைத்தது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான விண்ணப்பம் ஒன்றை கண்டாள்.  
 
"குருடனுக்குப் பார்வை கிடைத்ததைப்போல" மனம் துள்ளியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கணவனை  வற்புறுத்தினாள். "ஷாகிரா,  இந்தத் தேர்வு எழுத நிறைய செலவாகும். நம் சக்திக்கு ஒத்து வராதும்மா" என்றான்  சாதிக்.  
 
இருவரும் பேசியதைக்கேட்ட அவனது பெற்றோர்கள், "சாதிக், கவலைப்படாதே, நம்முடைய பூர்வீக நிலம் கொஞ்சம் இருக்கு. அவசரத்துக்கு உதவும் என்று தான் வைத்துள்ளோம். அதை விற்று மருமகளின் ஆசையை நிறைவேற்றுப்பா" என்று கூறினார்கள்.  
 
ஈடுபாட்டுடன் படித்து தேர்வு எழுதிய சாதிக் மாநிலத்தில் ஏழாவது இடத்தில் தேர்ச்சி பெற்றான். ஷாகிரா ஐவேளை தொழுகையிலும் துவா கேட்டதும் ஸலவாத்து ஓதியதும் மற்றவர்களுக்கு உதவியதும் வீண் போகவில்லை. மட்டுமின்றி, சாதிக்கின் தேர்வுக்குத் தேவையான விஷயங்களைச் சேகரித்துக் கொடுப்பதிலும் ஷாகிரா நிறைந்து நின்றாள். சாதிக் முகமதுவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. டேராடூனில் பயிற்சி  முடிந்து திருச்சியில் கூடுதல் கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டான். பங்களாவில் தன் பெற்றோர்களுடன் குடியேறினான்.
 
மருமகனின் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் பதவியும் கண்டு ஷாகிராவின் பெற்றோர்கள் பூரித்துப் போனார்கள். மைத்துனரின் முன்னேற்றத்தைக் கண்ட ஷாகிராவின் சகோதரர்கள் மூவரும் பொறாமைப்பட்டார்கள்; எரிச்சலடைந்தார்கள். வாழ்க்கையில் வேகமாக முன்னேற வேண்டும் என்ற வெறி அதிகமாகியது. மனைவிகளின் தூண்டுதல்களின் பேரில் பதவியைப் பயன்படுத்தி தவறான பாதையில் செல்ல ஆரம்பித்து, பிடிபட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர். கேள்விப்பட்ட ஜாபர் அலியும் பாத்திமாவும் நிலைகுலைந்து போனார்கள். 
 
இறைவழி நின்று எல்லோருடைய பாராட்டுகளோடு உயர்ந்து வரும் மருமகன் ஒருபுறம்; பொறாமைத்தீயில் வெந்து, பதவியை இழந்து நிற்கும் பிள்ளைகள் ஒருபுறம்.   இஸ்லாத்தில் பிறந்து, ஐவேளை தொழுகையை மறந்து, செல்வத்தைச் சேர்ப்பதில் கவனமாக இருந்த தனக்கு அல்லாஹ் பாடம் புகட்டிவிட்டான் என்று எண்ணினார். முதன் முறையாக அவருடைய உடல் இறையச்சத்தால் நடுங்கியது; கண்கள் கலங்கியது. இரு கைகளையும் ஏந்தி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டார்.  
 
பதவி நீக்கம் செய்யப்பட்ட மூவரும் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர்.   அண்ணன்களின் செய்தியறிந்து ஷாகிரா கணவருடன் தாய்வீடு வந்தாள். மூவருக்கும் ஆறுதல் கூறினார்கள்.
 
சாதிக் முகமது தன் மைத்துனர்களைப்பார்த்து, "நான் வயதில் உங்களை விட வயதில் சிறியவன். நான் சொல்லப்போவதை யாரும் தவறாக எண்ண வேண்டாம்; சொல்லுவதை என்னுடைய கடமையாக எண்ணுகின்றேன். நீங்கள் மூவரும் பதவியைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கியது, கலப்படம் செய்தது, நம்பியவர்களை ஏமாற்றியது எனப் பல குற்றங்களை செய்துள்ளீர்கள். இதற்கெல்லாம் காரணம் மார்க்கத்தைப்பற்றிய அறிவும் இறையச்சமும் இல்லாததுதான்."
 
"நபிகள் நாயகம் கூறுகிறார்கள்: லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும்.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி), நூல்: இப்னுமாஜா).
 
ஒவ்வொரு முஃமீனுக்கும் புனித குர்ஆனையும் முகமதுநபி(ஸல்) அவர்களின் போதனையையும் படித்து பின்பற்றுவது, மார்க்க அறிவைப்பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.   
 
"எவன் தூய்மையான அச்சமுடையவனாக இருக்கிறானோ அவன்தான் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவன்" (அல் குர்ஆன் 49:13)   
 
"பயபக்தி உடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்; வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்" (அல் குர்ஆன் 29:90-91)
 
முதலில் மைத்துனருடைய அறிவுரைகளை அலட்சியப்படுத்தியவர்கள், பின்னர் அவருடைய பேச்சையும் குர்ஆன் வசனத்தையும் கேட்க ஆரம்பித்தப்பிறகு உண்மையிலேயே இறையச்சத்திற்கு ஆளானார்கள்; முகம் வியர்த்தது. 
 
சாதிக் முகமது மேலும் தொடர்ந்தான்... "உங்களின் தவறான போக்குக்குக் காரணம் நீங்கள் மட்டுமல்ல; சரியான பாதையைக் காட்டத்தவறிய பெரியவர்களும்தான்."
 
ஜாபர் அலி தன் குற்ற உணர்வால் தலை நிமிரவே இல்லே.  
 
"மச்சான் எங்களின் இந்நிலைக்கு முழுக்காரணமும் நாங்கள்தான். எங்களின் தங்கையைப்போலவே எங்கள் மனைவிகள் இருந்து இருந்தால் கூட  இந்நிலை வந்திருக்காது." என வருந்தினார்கள்.  
 
"இனி ஒருவர் மேல் ஒருவர் பழி சொல்லிப் பயனில்லை. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும்."  
 
"எங்களை அல்லாஹ் மன்னிப்பானா?" மூவரின் குரல்களும் தழுதழுத்தது.
 
"உங்கள் தவறுகளை எப்போது உணர்ந்தீர்களோ, அப்போதே அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். இறையச்சம் உடையவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். கவலை வேண்டாம்."
 
மூவரின் இதயங்களின் இருள் திரை விலகி கரையைக்கடந்ததுப் போன்ற ஓர் தெளிவு பிறந்தது.  
 
"முடிந்தவரை மூவரும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு காணுங்கள். தண்டனை காலம் முடிந்ததும் வேலைக்கு முயற்சி செய்கிறேன்." என்றான் சாதிக்.   
 
"வேண்டாம் மச்சான். இனி  எங்களுக்கு வேலைக்குப் போக விருப்பமில்லை. எங்களை நல்வழிப்படுத்தியதே போதும். இனி வாப்பாவுக்கு உதவியாக இருந்து, தீனுக்காக உழைக்கப்போகிறோம். எங்கள் ஊர் பள்ளிவாசலை பெரிதுபடுத்தி மார்க்கக்கல்வியை விரிவாக்குவோம். மறுமை வாழ்வுக்கு அமல்கள் செய்வோம்", மூவரும் மனநிறைவோடு கூறினார்கள்.  
 
தன் பிள்ளைகளின் மாற்றங்களைக்கண்டு மகிழ்ந்த ஜாபர் அலி மருமகனின் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டார். இதனைக் கண்ட ஷாகிராவின் கண்கள் பனித்தன. சாதிக் முகமதுவின் முகத்தில் நிறைவான புன்னகை தவழ்ந்தது.  
 
"அனைத்திற்கும் ஆண்டவன் போதுமானவன்!"   
 
"எவர்கள் நேர்வழியில் செல்லுகின்றார்களோ, அவர்களுடைய நேர் வழியை (இன்னும்)அதிகப்படுத்தி அவருக்கு தக்வாவை-பயபக்தியை(இறைவன்)அளிக்கிறான்". (அல் குர்ஆன் 47:17)
 
ஆக்கம்: ஆர். நூர்ஜஹான் ரஹீம் (கல்லை)



Career Counselling
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..