என்னைக் கவர்ந்த பெருமானார் (ஸல்) - தமிழன்பன்.


நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி விவேகானந்தர் மிகத் தெளிவாக குறிப்பிடுவார் - சகோதரத்தை உலகிற்கு கொண்ர்ந்த தூதர் என்று. இஸ்லாத்தை பொருத்தவரை சமயம் என்றோ, மதம் என்றோ சொல்லுவதில்லை. மார்க்கம் என்று சொல்லுவார்கள் - வழி என்று சொல்லுவார்கள்.

இஸ்லாம் ஒரு வழி, வாழும் வழி. அவ்வளவு தான் வாழும் வழியை வாழ்ந்து காட்டியவர் நபிபெருமானார். நபிபெருமானார் தம் செய்தியை மனித குலத்திற்கு வழங்குகையில் "எனக்கு பின்னால் இரண்டை விட்டு செல்கின்றேன் ஒன்;று திருக்குர்ஆன் இன்னொன்று என்னுடைய வாழ்க்கை" என்றார்

நபிகளாரின் துணைவியார் ஆயிஷா நாச்சியார் கூறுகையில் "அவர் வாழ்க்கை திருக்குர்ஆனாக இருந்தது" என்கிறார். திருக்குர்ஆனிலேயே "நீர் அழகிய முன் மாதிரியாக படைக்கப்பட்டிருக்கிறீர்" என்று அவரது வாழ்க்கையின் வருகை எப்படிப்பட்டது என்்று சொல்லப்பட்டிருக்கிறது.

நபி பெருமானார் இறைத்தூதராக வந்து மனித குலத்திற்கு மனித நேயத்தைப் புகட்டினார்கள். மனிதராகவே வாழ்ந்து சென்றார்கள். அரேபிய நாட்டு அதிபராக வாழ்ந்தபோதும் மனிதராகவே வழ்ந்தார்கள். போர்க்களத்தில் வெற்றிகளை ஈட்டிய போதும் மனிதராகவே வாழ்ந்தார்கள். தொழுகை நடத்துகிற இடத்தில் இமாமாக நிற்கிறபோது கூட மனிதராக வாழ்ந்தார்கள். நமக்கு அதுதான் முடிவதில்லை!

நான் ஒரு கவிதையில் எழுதினேன். தலைப்பு வைராக்கியம் என்பது

எங்கள் ஊரில் ஒருவர்
ஊராட்சி மன்ற உறுப்பினரானார்
ஒன்றியத் தலைவரானார்
சட்ட மன்ற உறுப்பினரானார்
அமைச்சரானார்
அயல் நாட்டு தூதரானார்
இறுதிவரை
மனிதராகாமலேயே மரணமானார்

அந்த ஆசாமி வைரக்கியமாய் இருந்திருக்கின்றார் மனிதன் ஆகி விடக்கூடாதென்று. மனிதனானால் இதெல்லம் கிடைக்காது என்று இறுதிவரை வைராக்கியமாய் மனிதராகாமலே இருந்து இறந்து போனார்

நபிகள் நாயகம் ஒரு மனிதராக ஏழையாக உலகத்தில் வாழ்க்கையைத் தொடங்கி மனிதராக வாழ்ந்து மறைகிறபோதும் எந்த சொத்தையும் விட்டுச் செல்லவில்லை. அவரிடத்தில் பலங்களும் பலவீனங்களும் இருந்தன என்று சொல்கிற போதும்கூட மனிதனுக்கிருந்த பலவீனங்கள் அவரிடத்தில் இல்லை. ஏனெனில் குழைந்தையாக - சிறுவராக வாழ்ந்த போதே நல்லியல்போடு வாழ்ந்தார்கள்

அல் அமீன் - அஸ்ஸாதிக் என்று பெயர்கள் பெற்றார்கள். இவற்றுக்கு வாய்மையளார் நம்பிக்கையாளர் என்று பொருள்.

அரேபிய நாட்டு அதிபராக வாழ்ந்து மறைகிற போதுங்கூட ஒரு சாதாரண ஈச்சம் பாயில்தான் மரணித்தார்கள், ஒட்டு போட்ட சட்டையோடு! அப்பொழுதும் கூட கேட்கிறார்கள் யாருக்கேனும் எதையேனும் தரவேண்டியுள்ளதா? என்று. இது அவரது மரணம் எப்படி இருந்தது என்பதை உணர்த்துகிறது சாதாரண மனிதர்கள் அப்படி இருப்பது இல்லை அதானால்தான் அவரைப்பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறோம்.

பத்ரு போர்க்களத்திலிருந்து பிடித்து வரப்பட்ட போர்க்கைதிகளைப் பார்த்து " இங்கு யார் யாருக்கு எழுதப் படிக்கத் தெரியுமோ - அவர்கள் எல்லாம் இங்குள்ள எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு எழுதப்படிக்க கற்பித்து கொடுத்தால் விடுதலை என்றார்கள்

புனிதப் போரில் மாண்டு போன 1000 பேருக்கு எடுக்கிற ஜனாஸா(பிரேத) தொழுகையில் கலந்து கொள்வதற்கு சமமானது, அறிவோடு சேர்ந்து இந்த உலகத்தின் படைப்புகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பது என்றொரு ஹதீஸ் வருகிறது. ஓர் எழுத்தாளனின் பேனா மை, போர்க்களத்தில் சிந்தப்படுகிற குருதிக்குச் சமமானது என்று ஓர் இடத்தில் குறிப்பிடப்படுகிறது. இவை யெல்லாம் மக்கள் கல்வி கற்க வேண்டுமென்ற அண்ணலாரின் அக்கறையை, முயற்சியைக் காட்டுகிறது.

அது மட்டுமல்ல அந்தக் காலத்தில் அரபு நாட்டின் பள்ளி வாசலையே பாட சாலையாக நபிகள் நாயகம் நடத்தி வந்தார்கள். இமாம் நின்று தொழுகை நடத்துவார். தொழுகை நடந்து முடிந்த மறுவேளைகளிலே உலகியல் கல்வி கற்பிக்கப்படும். இந்த உலகத்தில் வாழ்கிற வாழ்க்கையை வரைமுறைப் படுத்துகிற - செப்பம் செய்கிற கல்வியை கற்பதை வற்புறுத்துவதற்காக அந்த 'சுஃபா" மேடையில் ஏற்பாடு செய்தார்கள் நபிகளார் அதுவும் எப்படித் தெரியுமா?

பகலில் கற்க முடியாதவர்கள் மாலை நேரத்தில் வந்து கற்கலாம் என்று முதன் முதலில் உலகில் மாலை நேரக் கல்லூரியை ஏற்படுத்தியவர் நபிகள் நாயகம். மாலைக் கல்லூரியில், பகலெல்லாம் உழைக்கிறவர்கள் இரவில் வந்து கற்கலாம். நபிகள் பெருமானார் அறிவைப் போற்றியவர். கல்வியைக் கற்பித்தவர். அதனால்தான் கல்வியைத் தேடுகிற போது கூட எப்படித் தேடவேண்டுமென்றால் இழந்த ஒரு பொருளைப் பெற தேடுவதுபோல் தேட வேண்டும் என்ற்hர்.

நபிகள் அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்தாம். அதனால் தான் அவரை உம்மி நபி என்று சொல்கின்றோம். அனால் அவர்கள் எழுதப் படிக்கத் தெரியதவர்களே தவிர பெரிய மெய்ஞ்ஞானக் களஞ்சியமாக இருந்தார்கள். மெய்யறிவு வேறு படிப்பறிவு என்பது வேறு. மெய்யறிவு என்பது காலாகாலாமும் நிலைத்து நிற்கக்கூடிய கருத்துக்களை உள்ளடக்கிப் பொதிந்து நிற்பதாகும்.

புத்தருக்கு இன்றைக்குள்ள 10 வயது பையனின் படிப்பறிவு இருக்காது. கம்பயூட்டரைப் பற்றிப் புத்தருக்கு தெரியுமா? திருவள்ளுவருக்குத் தெரியுமா எலக்ட்ரானிக்ஸைப் பற்றி? ஆனால் அவர்களுடைய மெய்யறிவு இன்றளவும் நாம் கருதத்தக்கதாய், போற்றத்தக்கதாய் இருக்கின்றது. மெய்யறிவு வேறு படிப்பறிவு வேறு. நபிகள் நயகம் மெய்யறிவினால் நிரம்பி இருந்தார்கள் என்பதால்தான் அவரே படிக்கத்தக்கப் பாடமாய் இருந்தார்கள். கல்வியைப் பற்றி அவரை விட அழகாக யாரும் கூறவில்லை. மார்க்கங்களிலேயே இஸ்லாம்தான் கல்வி கற்க வேண்டியது கட்டயாம் என்று கூறுகிறது.

திருகுர் ஆனில் ஓர் அதிகாரமே உண்டு. "அல்கலம்" என்று, எழுதுகோலின் பெயரால். "தெரியாதனவெல்லாம் இறைவன் கற்பித்தான் எழுதுகோலால் என்று தொடங்குகிற போது, எழுதுகோல் ஒரு அத்தியாயத்தின் தலைப்பாகிறது. இறைவனை நோக்கி தொழுகிற போதும், "இறைவா என் அறிவினை விரிவு செய்வாயாக" என்று வேண்டுவது இஸ்லாம். அறிவை விரிவு செய்வாயாக என்று ஆன்மீகவாதிகள் பெரும்பாலும் சொல்வதில்லை, சமயவாதிகள் சொல்வதில்லை. ஏனென்றால் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள் ஆபத்தாகிப் போய்விடும். நம்பிக்கைகளுக்கு என்பதாலே! நம்பிக்கைகளின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும் என்பதனால் அறிவை பெருக்குவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. ஆனால் இஸ்லாத்தில் "என் அறிவை விரிவு படுத்து!" என்று சொல்கிற போது பரந்த அறிவு என்பது மனிதனுக்கு இறைஉணர்வைப்போல் அவசியமானது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

"இந்த உலக வாழ்க்கையில் நீ ஒரு வியாபாரியாக இரு. இங்கு தீன் வேறு துனியா(உலகம்); வேறு என்பது கிடையாது" என்று உலகிற்;கு நபிகள் எடுத்து சொன்னது முதன்மையானது என நான் கருதுகிறேன். அதற்;கு முன் அப்படி இல்லை. உலகியலில் ஈடுபட்டிருக்கின்றவன் என்ன குற்றத்தை வேண்டுமானால் உலகில் செய்யலாம். அதற்கு புரோகிதர் இருக்கிறார் அவரிடம் சொன்னால் அவர் ஓதுவதை ஓதி நம்மைக் காப்பாற்றிவிடுவார். அவர் வேறு இவர் வேறு. அவர் மறுமை உலகோடு அந்தரங்கமாகக் கடிதத் தொடர்பு வைத்துள்ளவர். நமக்கு இந்த உலகத்தில் மட்டும்தான் தொடர்பு. புரோகிதரிடம் சொன்னால் அவர் அங்கு செய்தி அனுப்பிச் சரி செய்து விடுவார். இப்படியெல்லாம் இல்லாமல் மனிதன் நேர்மையாக நடக்க வேண்டும் என்று உணர்த்தினார்கள் நபிகளார்.

இமாம் கஸ்ஸாலி அவர்கள் ஒரு பொருளை வாங்கும் போது ஒரு குன்றிமணியளவு குறைத்து வாங்கிவிடுவதும் கொடுக்கிற போது ஒரு குன்றிமணியளவு சேர்த்துக் கொடுப்பதும் சிறந்த வாணிகம் - தீன்வழி வாணிகம் என்பார்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வியாபாரம் உட்பட வாழ்வின் எல்லாத் துறைகளையும் வழிபாடாக - மாற்றியவர்கள் ஆவார்கள். பெருமானார் பல பேருக்கு நடுவிலே போய் தன்னைக் கரைத்து கொள்வார்களே தவிர முதலில் போய் அமர மாட்டார்கள். பேசுகிற போதுங்கூட ஒரு பெண் பேசுவது போல் பேசுவார்கள். நாணமுடையவர்கள்; மெல்லச் சிரிப்பவர்கள். ஒட்டகத்தின் மீது ஏறி வருகிற போது கூட சிறுவர்களை - முதியவர்களைக் கண்டால் தாம் இறங்கிக் கொண்டு அவர்களை உட்கார வைத்து அழைத்துப் போவார்கள். இது தான் மனித நேயம்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறுதியில் ஒட்டுப் போட்ட சட்டையோடு மரணித்தார்கள். அப்போது அவர் அரேபியாவின் அதிபதியாக இருந்தார். எளிமை என்பதை அவரிடத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு முறை கட்டிலில் படுத்திருந்து முதுகெல்லாம் கோடு கோடாய்த் தழும்புகள் பதிந்து இருந்த போது தோழர்கள் கூறினார்கள் உங்களுக்கு நாங்கள் ஒரு படுக்கையை வாங்கித் தருகிறோம் படுத்துக் கொள்ளுங்கள். உடம்பெல்லாம் இப்படிக் காய்ப்புக் காய்த்து வரி வரியாக முதுகெல்லாம் கோடுகள் இருக்கின்றனவே? என்று உள்ளம் குமுறியபோது நபிகள் நாயகம் அவர்கள் ஒரு விளக்கம் தந்தார்கள்.

இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு யாத்திரை! இந்தப் பயணத்திலே ஒரு சிறிது நேரம் தங்குவது போல் இந்த உலக வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்கிறது. மர நிழலில் யாத்திரை செய்பவன் தங்குவது போல் இந்த உலகத்தில் வாழ்க்கை பெற்றிருக்கின்றேன். யாத்திரை செய்கின்றவன் மர நிழலில் தங்கிப் புறப்படுகையில் மர நிழலைச் சுருட்டிக் கொண்டா போவான்? எனறுக் கேட்டார்கள்.

மரணித்திற்கு முன் மரணித்து விடு என்று ஒரு ஹதீஸ் இருக்கிறதே. இதை ஆழமாக சிந்தித்தால் எத்தனையோ பொருள்கள் கிடைக்கும்.

பத்ருப் போரில் தோற்றுப் போனவர்களைப் பிடித்துக் கொண்டு வந்த போது, அந்த அடிமைகளில் தனக்கு வீட்டு வேலைகள் செய்வதற்கு ஒருவர் தேவை என்று பாத்திமா நாச்சியார் (அருமை மகள்) கேட்டார்கள். தம்முடைய அருமை மகளுக்குத் திருமணமான போது மாவரைக்கும் ஒரு கல், மாவு போடும் ஒரு பை இதைத்தான் கொடுத்தார் நபிகள் நாயகம். அந்தக் காலத்தில் ஒன்றுமில்லாதவர் வீட்டுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நபிகள் நாயகத்தின் பாத்திமா நாச்சியார் வீட்டைத்தான் சொல்வார்கள்.

அதிகாரம் செல்வ பலம் உடைய நபிகளாரின் மகள் வீடு வறுமை கோலத்தில் இருந்தது. அந்த மகளைத்தான் தம் மடி மீதும் மார்பு மீதும் போட்டு கொஞ்சிக் கொஞ்சி போற்றி வளர்த்தார்கள் பெருமானார்.

அப்படிப்பட்ட மகள் தண்ணீர் இறைத்தும் மாவரைத்தும் காய்ப்புக் காய்த்து இருந்த கைகளைப் பார்த்துக் கண்ணீர் மல்க கூறுகிற நபிகள் நாயகம், "மகளே! உனக்குத் தருவதற்கில்லை. தந்தையை இழந்த குடும்பங்கள் இருக்கும், தனயனை பறி கொடுத்த குடும்பங்கள் இருக்கும். அவர்கள் வீட்டுக்கு உதவி செய்ய அனுப்பப்படுவார்களே தவிர, உனக்குத் தருவதற்கில்லை மகளே போய் ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வேலைகளைச் செய்" என்கிறார். பத்ருப் போர் முடிவில் நம்முடைய கண்களைக் கலக்கக் கூடிய ஒரு சம்பவம் இது.

மக்காவில் அந்த நாளில் கிழவி ஒருத்தி தினமும் நபிகளார் மீது குப்பை கொட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாள். அவள் ஒரு நாள் திடீரென்று இந்தப் "புண்ணியப் பணியை" நிறுத்திவிட்டாள். இது ஏனென்று அந்தம்மா வீட்டுக்குப் போய் பார்க்கிறார் பெருமானார். அந்த மூதாட்டி நோயினால் படுத்து கிடக்கிறார். அவரது அருகில் அமர்ந்து ஆறுதலாய், ஆண்டவன் உங்களுக்கு விரைவில் நலனையும் நல் அருளையும் நல்கட்டும் என்று வேண்டுகிறார் நபிகள் நாயகம். அந்த வயதான மூதாட்டியின் கண்களிலிருந்து பொட்டுப் பொட்டாக நீர்த்துளிகள் விழுந்தன. அந்த கண்ணீர்த்துளியில் வளர்ந்ததுதான் "தீனுல் இஸ்லாம்". அந்த கண்ணீர்த்துளிகளில் நபிகள் நாயகத்தினுடைய சிறப்பை உலகத்திற்கு உணர்த்தும் செய்தி உள்ளது.

மக்காவில் நபிகளாருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். இவர் புதிதாக ஏதோ சொல்கிறார். ஓரிறைவன் என்கிறார். இவையெல்லாம் அந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவை. மக்களால் செரிக்க முடியாதவை.

இறைவனுக்கு உருவமில்லை. இறைவன் ஒருவனே.

தமிழிலேயும் நாம் படிக்கிறோமல்லவா?

"ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லாற்காயிரம் திரு நாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ" என்று மாணிக்கவாசகர் பாடவில்லையா?

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"- என்று திருமந்திரம் சொல்ல வில்லையா?

"இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதெ" என்று திருநாவுக்கரசர் சொல்லவில்லையா?

சொன்னார்கள் ஆனால் இவர்கள் ஆயிரம் திருநாமத்தையும் திருவுருவத்தையும் விடவில்லை. நபி பெருமானார் அதை வீழ்த்தினார்.

கஅபாவிலே ஏகப்பட்ட சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையெல்லாம் தம்முடைய அருமை மருமகனார் அலீயின் தோள் மீது நின்று கொண்டு கோலினால் தட்டித்தட்டி தகர்த்தார்கள். "இவையெல்லாம் இறைவனல்ல மனிதன் படைத்த உருவங்கள்". என்று.

இதைத்தான் செய்கு தம்பிப் பாவலர் பாடும் போது

"வானுமில்லை நீருமில்லை
வாயுமில்லை தேயுமில்லை
நானுமில்லை நீயுமில்லை
நாளுமில்லை கோளுமில்லை
பானுமில்லை மீனுமில்லை
பாரமதி யோடு வெளி
தானுமில்லை"
என்றும்

"விண்ணுமில்லை மண்ணுமில்லை
மேலுமில்லை கீழுமில்லை
பெண்ணுமில்லை ஆணுமில்லை
பேடுமில்லை மூடுமில்லை
தண்ணுமில்லை சூடுமில்லை
சார்ந்தசர ணாதிகளின்
கண்ணுமில்லை"
என்றும் பாடுகிறார்.

இப்படி இல்லை இல்லை என்று கூறிக் கொண்டு "ஏகமெனும் கத்தநிலை நத்தாமோ? " என்று பாடி முடிக்கிறார்.

இவர் இல்லை இல்லையென்று ஏன் பாடிக் கொண்டு போகிறார் தெரியுமோ! இவையெல்லாம் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருப்பவற்றை இல்லையென்று மறுதலிப்பது முதல் வேலை! அப்படு மறுதலிப்பதனால்தான் கலிமாவே "லாயிலாஹா இல்லல்லாஹ" இல்லை என்று எதிர்மறைச் சொல்லிலிருந்து தொடங்குகிறது


இவையெல்லாம் கடவுள் இல்லையென்று கட்டாயாகமாக உணர்ந்தார்கள். தன்னை தோளில் சுமப்பதில் சற்று சிரமப்படும் மருமகனைப் பார்த்து நகைச்சுவையாக கூறுவார்கள்; "என்னப்பா, நபித்துவத்துவத்தின் கனம் தாங்க முடியவில்லையா?" அதற்குப் பிறகு மருமகனை தம் தோள் மீது நிற்க வைத்து கோலைக் கொடுத்து "தட்டப்பா" என்று கூறி எல்லா உருவங்களையும் தட்டித் தகர்த்தெறியச் செய்தார், இது அந்தக் காலம்.

ஒரு சமயம் இறந்து போன யூதனுடைய சடலம் ஒன்று எடுத்து வரப்படுகிறது. நபிகள் பெருமானார் தம் இடைத்தை விட்டு எழுந்துநின்று அந்த யூதனின் பூத உடலுக்கு மரியாதை செலுத்துகிறார்கள். மாற்று சமயவத்தவரையும் மதிக்க வேண்டும் என்று உலகத்துக்கு கற்றுக் கொடுத்தவர்; பரந்த்துப் பட்ட விசாலமான மனது படைத்தவர் அவர்.

உலகம் முழுவதும் தழுவிக் கொள்ளுகிற சகோதரத்துவம் அவரிடம் இருந்தது. சகோதரர்களாக இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக, எந்தப் பூசல்கள் வந்தாலும் அந்தப் பூசல்களைக் கடந்து நாம் இணைந்து வாழ வழி இருக்கிறது என்பதை உணர்த்தியவரும் அவர்தாம்! அப்படிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களும் வாழ்க்கை முறைகளும் பெருமானார் வாழ்வில் நிரம்பிக் கிடக்கின்றன.

மீலாது மேடை ஒன்றில் "எம்பெருமானார், எம்பெருமானார்" என்று கூறிக் கொண்டிருந்தார் ஒருவர். அடுத்துப் பேசிய நண்பர் கூறினார். "இனிமேல் எம்பெருமானார் என்று சொல்லாதீர்கள். நம்பெருமானார் என்று கூறுங்கள்." என்று. ஏனெனில் எமக்கு என்று தனி உரிமை பாராட்டால் அவரை "நம்மவர்" என்று பொதுமைப்படுத்துவதே அவருக்கு நாம் செய்யும் சிறப்பு.

இன்றைய உலகத்தில் உழைக்கிற மக்களின் வாழ்க்கையைப் பார்த்து பரிதாபப் படுகிறவர்கள், சாமுதாயத்தை மாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் சமுதாயத்தில் ஏராளம். நபிகள் நாயகம் என்ன நினைத்தார்கள் தெரியுமா? எல்ல நேரங்களிலும் தொழுது கொண்டிருப்பவனை விட அவனுக்கும் சேர்த்து உழைக்கின்றானே அவன் தான் உன்னதமானவன் என்று கூறினார்கள்.

ஒருவர் எப்போது பார்த்தாலும் பள்ளிவாசலில் தொழுது கொண்டே இருக்கிறார். நபிகள் நாயகம் அவரைப் பார்த்தார். எப்படி இந்த மனிதர் எப்போதும் எந்த நேரத்திலும் பள்ளியில் இருக்கிறார்? சாப்பாட்டிற்கு என்ன செய்கிறார்?எப்படி சம்பாதிக்கிறார்? என்றா கேள்விகள் நபிகள் நாயகத்தின் மனதில் எழுந்தன. விசாரித்தார். அவரது தம்பி சம்பாதித்து இவருக்குத் தருகிறார் என்ற பதில் கிடைத்தது. இவரைவிட இவரது தம்பியே சிறந்தவர். தொழுகையிலேயே முழு நேரமும் உட்கார்ந்து கொண்டு அன்றாடத் தேவைகளுக்கு உரியதை உழைத்துப் பெற வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் மறந்து போயிருக்கும் இவரை விட இவரது தம்பியே சிறந்தவர் என்றார் அண்ணலார்.

இன்னொரு ஹதீஸ{ம் மிகத் தெளிவாகச் சொல்லும். உழைப்பவருடைய வியர்வை உலருமுன் அவருக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று. பாட்டாளி வர்க்கத்தினர் மீது அவருக்கு இருந்த பரிவு உணர்ச்சியை காட்டுகின்ற மிகச் சிறந்த ஹதீஸ்.

உழைப்பவன் உண்மையாக உழைக்க வேண்டும். வியர்வை வரும் வரை உழைக்க வேண்டும் என்ற கருத்தும் இதில் உள்ளது.

எனவே இப்படிப்பட்ட ஹதீஸ்களைப் பார்க்கிற போதும், அண்ணலெம் பெருமானாரின் வாழ்க்கையைப் படிக்கிற போதும் மிகச் சிறந்ததொரு முன் மாதிரியான வாழ்க்கை, திறந்து வைத்த ஒரு புத்தகமாக நம் முன் காட்சி அளிக்கிறது. அதில் ஒளிவு மறைவில்லை. புரியாத புதிர்களில்லை, மாய மந்திரங்கள் இல்லை. ஜோடனை வேலைகள் ஏதுமில்லை. எளிமையான தெளிவான நீரோடை போன்ற ஒரு வாழ்க்கை நம்மை அழைப்பதற்குக் காத்துக் கிடக்கிறது. நாம் புறப்படத் தாயாராவோம் என்று கூறி விடை பெறுகிறேன்.

நன்றி

தமிழன்பன்.