ஜெயயலலிதாவின் கைது திராவிட அரசியலைக் குறி வைக்கும் இந்துத்வா?

Posted by Haja Mohideen (Hajas) on 9/28/2014 5:56:01 AM

ஜெயயலலிதாவின் கைது திராவிட அரசியலைக் குறி வைக்கும் இந்துத்வா?

 
திராவிட அரசியல் தமிழகத்துக்கு என்னத்தை செய்து கிழித்துவிட்டது, பரவலாக இணைய தளக் கருத்து கந்தசாமிகளில் ஒரு கூட்டம் தொடர்ந்து கூப்பாடு போடும் கேள்வி இது தான். 
 
திராவிட அரசியல் இல்லாமல் போயிருந்தால் தமிழகம் என்ன ஆகியிருக்கும் என்று இவர்கள் சிந்திப்பதில்லை. திராவிட அரசியல் தமிழகத்தை சிங்கப்பூர் ஆக்கவில்லை என்பதை நாம் நன்றாகவே அறிவோம். இந்தியா எங்கும் இருப்பது போல இங்கும் ஊழல் நடக்கின்றது, லஞ்ச லாவணயங்கள் நிறைந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஒருவேளை திராவிட அரசியல் தமிழகத்தில் எழாமல் இருந்திருந்தால் தமிழகத்தின் முதன்மையான கட்சிகளாக எவை இருந்திருக்கும். நிச்சயம் காங்கிரஸ் தான் என்பதில் ஐயமே இல்லை. காமராஜர் காலத்தில் காங்கிரஸ் எழுச்சி கண்டது என்பதும் உண்மை. காங்கிரசுக்கு மாற்றாக கம்யூனிஸ்ட் கட்சி இருந்திருக்கும் ஜீவா போன்றோரது இடதுசாரித்துவ ஆதரவு அலை இங்கு இருந்தது. 
 
திராவிட அரசியல் இங்கு எழாமல் இருந்திருந்தால் தமிழகம் என்னவாகியிருக்கும் என்றால் கேரளம், மேற்கு வங்கம் போல மாறி இருக்கலாம். ஆந்திரம், கருநாடகம் போல மாறி இருக்கலாம். இந்த இரு வாய்ப்புக்களே நிகழ்ந்திருக்கும். தமிழகத்தினை ஒத்த பொருளாதாரம், நிலப்பரப்பு, இந்தி சாராத மொழியுள்ள மாநிலங்கள் இவை தான். அப்போது இங்கு ஊழல் நிகழ்ந்திருக்காமல் போயிருக்குமா? லஞ்சமே வாங்காமல் இருந்திருப்பார்களா? என்ன? நிச்சயம் இது இரண்டும் திராவிட அரசியல் இல்லை என்றாலும் நிகழ்ந்திருக்கும். 
 
இது எல்லோருக்குமே நன்றாகவே தெரியும். அப்படி என்றால் ஏன் சிலர் தொடர்ந்து திராவிட அரசியலை இகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கிய காரணம் மத பேதம், ஜாதிய பேதம் என்பதை மறுக்கவே முடியாது. திராவிட அரசியல் என்பது இரண்டு விடயங்களை சாதித்துள்ளது. திராவிட அரசியல் மதங்களையோ, ஜாதிகளையோ ஒழிக்கவில்லை என்றாலும் அது ஒன்று மதம் சார்ந்து அரசியல் செய்வதை நிறுத்தியுள்ளது. ஜாதிய கட்சிகளை வளர விடாது தடுத்துள்ளது. 
 
திராவிட அரசியல் என்பதை பெரியாரது வழி என தவறாகவே இங்கு கருதப்பட்டு வருகின்றது. திராவிட அரசியல் என்பது பெரியாரது வழியல்ல, அது அறிஞர் அண்ணாவின் வழி என்பது தான் உண்மை. பெரியார் தனித் திராவிட நாட்டை உடனடியாக அடைய வேண்டும் என்றார். அண்ணாதுரையோ திராவிட நாட்டை உடனடியாக அடையத் தேவையில்லை, காலம் கனியும் வரை காத்திருப்போம் என்றார். பெரியார் அரசியலில் குதிக்க மறுத்தார், அண்ணாதுரையோ அரசியல் ஊடாகவே சமூக மாற்றத்தைக் காண இயலும் என்றார். பெரியார் மதங்களை வெறுத்தார். அண்ணாவோ நாத்திகராக இருந்தாலும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மதச்சார்பின்மை அரசியலை முன்மொழிந்தார். பெரியார் கலைப்படைப்புக்கள், சினிமா போன்றவற்றை வெறுத்தார் அண்ணாவோ சினிமா போன்ற ஊடகத்தின் ஊடாக அரசியலை முன்னெடுத்தார். இவ்வாறு பெரியாரது போக்கும், அண்ணாவின் போக்கும் வெவ்வேறானவை. 
 
1949-களில் பெரியாரது கொள்கைகளோடு மாறுபட்டு விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார் அண்ணா. 1965-களில் ஏற்பட்ட இந்தி திணிப்பை எதிர்த்த மாணவர் போராட்டத்தின் எழுச்சியால் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை கைப்பற்றியது. அண்ணாவின் கொள்கைகள் காமராஜரது சமூக வளர்ச்சிக் கொள்கை, பெரியாரது சமூக சீர்த்திருத்தக் கொள்கை இரண்டையும் உள்வாங்கி தமிழகத்தின் அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்லும் வளர்ச்சிக் கொள்கையாக இருந்தது. அண்ணாவின் திமுக-வோடு பார்ப்பனர்களின் ஆதரவு பெற்ற ராஜாஜியின் சுதந்திராக் கட்சி, இஸ்லாமிய ஆதரவு பெற்ற காயிதே மில்லத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவையும் கூட்டணி கொண்டன. அத்தோடு சைவ சித்தாந்த ஆதீனங்கள், ஜெயபிரகாஷ் நாரயணனின் பிரஜா சோசலிசக் கட்சி, மார்க்சிய கம்யூனிசக் கட்சி, தனித் தமிழ் வளர்த்த தமிழரசுக் கட்சி, நாம் தமிழர் கட்சி என சமூகத்தின் அனைத்து பிரிவினரும் இணைந்தே திராவிட அரசியலை முன்னெடுத்தார்கள். 
 
1967-யில் சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி கண்ட திமுக உறுப்பினர்களில் 42 பேர் தலித்களாகவும் இருந்தனர். திராவிட அரசியல் என்பது அண்ணாவின் பார்வையில் தமிழகத்தின் இடைநிலைச் சாதிகள், தாழ்த்தப்பட்டோரது முன்னேற்றத்தோடு பார்ப்பனர்களையும், முஸ்லிம்களையும் இணைத்துக் கொள்வதாகவே இருந்தது. இது தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தை உருவாக்கவும் வழிகோலியது. மரபால் கன்னடம், தெலுங்கர்களாக இருந்த பலரும் திராவிட அரசியல் காலங்களில் தத்தமது தாய் மொழியை கைவிட்டு தமிழையே தாய்மொழியாகவும் ஏற்றுக் கொண்டனர். ஆக தமிழகத்தில் வாழ்ந்த அனைத்து மக்களையும் தமிழர் என்ற அடையாளத்துக்குள் கொண்டு வருவதே அண்ணாவின் எண்ணமாகவும் இருந்தது. இதனாலேயே மதறாஸ் மாநிலம் என்பதை தமிழ்நாடு என மாற்றினார். அத்தோடு இந்தி மொழியை கட்டாயப் படுத்துவதை எதிர்த்து இரு மொழி கொள்கையை கைக் கொண்டார். இந்த இரு மொழி கொள்கையின் தாக்கத்தாலும் இந்தி திணிப்பை எதிர்த்ததாலும் தான் ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் தொடர முடிந்தது. இன்று இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முதலீட்டுக்கும் முக்கிய காரணமே இந்தியாவின் ஆட்சி மொழியாகவும், தொடர்பு மொழியகவும், கல்வி மொழியாகவும் ஆங்கிலம் இருப்பதை அனைத்து இந்தியர்களுமே உணர்ந்துள்ளார்கள். 
 
ஆனால் துரதிருஷ்ட வசமாக அண்ணா ஆட்சியேற்று இரண்டே ஆண்டுகளில் புற்றுநோயால் இறந்து போனார். அண்ணாவின் அடுத்த நிலையில் இருந்தவர்கள் மு. கருணாநிதி. நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் எம். ஜி. ராமச்சந்திரன். ஆனால் அடுத்த தலைமைக்கான போட்டியால் கருணாநிதி ஏனைய இருவரையும் ஓரங்கட்டினார். இதனால் 1972-யில் எம். ஜி. ராமச்சந்திரன் அண்ணா திமுக என்ற தனிக் கட்சியை நிறுவினார். இதன் பின்னர் இன்று வரை இந்த இரு கட்சிகளுமே தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றன. 
 
எம்.ஜி. ஆரின் மறைவின் பின் அண்ணாவின் கொள்கைகளில் பயிற்சி பெறாத அபிமானமில்லாத ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றினார்.
 
தலைமையுடன் ஏற்படும் அரசியல் மற்றும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் திராவிட அரசியல் இயக்கங்கள் பல பிளவுகளைச் சந்தித்துள்ளன. தி.மு.கவின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திரு.வைகோ, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், வைகோவின் அரசியல் லாபத்திற்காக கலைஞரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க விடுதலைப்புலிகள் இயக்கம் திட்ட மிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறையிடமிருந்து வந்த தகவலாலும் வைகோவும் அவரது ஆதரவாளர்களும் 1993-ஆம் ஆண்டு நவம்பர்  10-ஆம் நாள் தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டனர். 
 
திராவிட அரசியலை ஏன் வெறுக்கின்றார்கள், ஏன் விரும்புகின்றார்கள் என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கின்றது. ஆனால் இங்கு நாம் கவனிக்க பட வேண்டியது, இன்று இணைய சமூகத்தில் சில கருத்துக் கந்தசாமிகளின் திராவிட அரசியல் எதிர்ப்புப் பிரச்சாரம். இதில் இவர்கள் அடையப் போகின்ற லாபத்தின் சூட்சுமம். 
 
திராவிட அரசியல் பிராமணிய இந்துத்வா கொள்கைக்கு எதிரானது. திராவிட அரசியலில் ஆரம்பக் காலத் தலைவர்கள் பெரியாரது பாசறையில் இருந்து வந்தவர்கள் நாத்திகர்கள் என்றாலும், திராவிட அரசியல் நாத்திக அரசியலோ பெரியாரது கொள்கைப் பரப்பும் அரசியலோ கிடையாது என்பதே நிதர்சனமான உண்மை. திராவிட அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களில் 90 % ஆனவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என்பது வெளிப்படை. அதுவும் அந்த 90 % யில் 90 % ஆனவர்கள் இந்துக்கள் என்பது தான் உண்மை. ஆனால் திராவிட அரசியல் இந்து மதத்தின் அனைத்து பிரிவுகளையும் ஆதரிப்பதாகவும், பிராமணிய ஆதிக்கத்தை எதிர்ப்பதாகவும் இருக்கின்றது. 
 
இதனால் தான் தமிழகத்தில் திராவிட அரசியல் வந்த பின்னர் பிராமணிய ஏகாதிபத்தியம் ஒடுக்கப்பட்டது. ஆனால் சமூக மட்டத்திலும் கல்வி பொருளாதார ஆதிக்கத்திலும் இன்றளவும் இன்றளவும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்துக்கின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் பண பலம், சமூகத்தை மதமூடாக கட்டுபடுத்தும் பலம், மற்றும் ஊடக பலம். தமிழகத்தின் பெரும்பான்மை ஊடகங்கள் பிராமணர்களால் நடத்தப்படுபவை தி இந்து, தினமலர், தினமணி, விகடன், குமுதம் என்று முக்கியமான ஊடகம் அனைத்திலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 
 
திராவிட அரசியல் இந்துத்வா உட்பட மதக் கட்சிகளை வளரவிடவில்லை. திராவிட அரசியலால் தமிழகத்தில் எந்தவொரு மதக் கட்சியும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியவில்லை. இடைநிலைச் சாதிகளை சமூக கலாச்சாரம் ஊடாக தாக்கம் செலுத்துகின்ற அளவுக்கு மதக் கட்சிகளால் அரசியலில் நுழைய முடியவில்லை. இது ஒருவகையில் தமிழகத்துக்கு அனுகூலமே. இங்கு மதக் கலவரங்கள் மிக மிக குறைவு. தமிழர் என்ற மொழிசார் நிலம் சார் அடையாளத்துக்கு மத அரசியல் பங்கம் விளைவிக்க வல்லது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மதக் கட்சிகளான பாஜக, இந்து முன்னணி. தவ்வீது ஜமாத், மமக என பலவும் இலவு காத்த கிளியாக திராவிட அரசியல் வீழ வேண்டும் என காத்திருக்கின்றனர். ஏனெனில் திராவிட அரசியல் வீழ்ந்தால் எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்ற அளவில் நுழைந்து தம் மத அரசியல் செய்யலாம் என்ற மனோபாவமே. 
 
ஜாதியக் கட்சிகள் என்பவையும் கடந்த 25 ஆண்டுகளாக தமிழக அரசியலில் காலூன்றத் துடிக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் திராவிட அரசியல் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்தும் செயல்பட்டன. ஆனால் எதுவும் முடியவில்லை. ஜாதிய வாக்கு என்பது தமிழகம் மட்டுமின்றி இந்திய அரசியல் எங்குமே காணப்படும் போக்கு. அது திராவிட அரசியலில் கூட உள்ளது என்பது உண்மை. ஆனால் ஜாதிய அரசியல் தலைமைத்துவம் பெறாத வரை ஜாதிய வேற்றுமைகளை இங்கு தவிர்க்க கூடியதாக இருக்கின்றது. ஜாதியக் கட்சிகள் மூன்று வகையாக தமிழகத்தில் உள்ளன அவை உயர்சாதிகளின் சங்காத்தம், இடைநிலை ஆதிக்கச் சாதிகளின் கட்சிகள், இடைநிலை ஆதிக்கமற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் தாழ்த்தப்பட்ட சாதிகளின் கட்சிகள். 
 
உயர்சாதிகளின் சங்காத்தம் என்பது பிராமணர்களால் பிரமாணர்களை பின் தொடரும் இதர சாதிகளால் வழிநடத்தப்படுபவை. இவர்கள் வெளிப்படையாக சாதிப் பெயரோடு கட்சிகள் நடத்துவதில்லை மாறாக தேசியக் கட்சிகளில் ஆளுமை கொள்கின்றனர். பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் முக்கியமானவர்கள் இவர்களே. இவர்களது முக்கிய பலமே ஊடகங்கள் ஏற்கனவே சொன்னது போல தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊடகங்கள் இவர்களது கைகளில் உள்ளன என்பதோடு எந்தவொரு பிரதான ஊடகத்திலும் விளம்பரதாரர், முதலீட்டாளர், பங்குதாரர் என்ற போர்வையில் தம் வசமாக்கிக் கொள்ளும் சக்தி கொண்டவர்கள். ஊடகம் என்பதில் சினிமா, பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளங்கள் ஆகிய அனைத்தும் இவர்களின் பால் உள்ளது. ஏன் திராவிட அரசியல் செய்வோரது ஊடகங்களில் கூட பங்குதாரராக மென்போக்கு ஊடுருவல் செய்து கொண்டும் உள்ளார்கள். ஊடகங்களே மக்களின் மனதையும் கருத்துக்களையும் அதிகம் பாதிப்படையச் செய்பவை என்பதால் தான் இன்றளவும் தொடர்ந்து தமிழக்த்தில் பிராமண அபிமான சிந்தனைகள் விதைக்கப்பட்டு வருகின்றன. இது தமிழகம் என்றில்லை இந்தியா முழுவதுமே உயர்சாதிகளின் சங்காத்தமே ஊடகங்களை கட்டுபடுத்தி வருகின்றனர். முக்கியமாக இந்துத்வா அரசியலை தமிழகத்தில் நுழைக்க வேண்டும் என்பதே இவர் தம் கனவு. அதைச் சாதிக்க வேண்டுமானால் தமிழ் அடையாளத்தை நீக்க வேண்டும். தமிழ் தமிழர் என்ற அடையாளத்தை நீக்க வேண்டும் எனில் தமிழ் மொழிப் பற்றை சிதைக்க வேண்டும். அத்திட்டத்தின் பாதியை ஆங்கில வழிக் கல்வியின் மூலம் நிகழ்த்திவிட்டார்கள். அத்தோடு தம் ஊடகங்கள் ஊடாக தமிழையும் ஆங்கிலத்தையும் கலப்படையச் செய்து கொச்சை மொழியை பரப்பி வருகின்றார்கள். இவர்களது அடுத்த திட்டம் இந்தி நுழைக்கு வழி வகுப்பதும், இந்தி நுழைவை கொள்கையளவில் எதிர்த்துக் கொண்டிருக்கும் திராவிட அரசியலை நீக்குவதும் தான். இது ஒரு தொடர்ச் சங்கிலித் திட்டம். இந்த திட்டத்தில் எண்ணற்ற பார்ப்பன எழுத்தாளர்கள், கல்விமான்கள், சங்கராச்சாரியார் உட்பட பார்ப்பன மத சாமியார்கள் பலரும் இருக்கின்றனர். இவர்களது பண பலம் திராவிட அரசியலையே கட்டுபடுத்த முயல்வதை வெளிப்படையாகவே நாம் பார்க்க முடிகின்றது. திராவிட அரசியல் செய்வோரது பலரும் இந்த உயர்ஜாதிய சங்காத்தத்தில் துணை நிற்கவும் செய்கின்றனர். சிலர் செய்தனர் பின்னர் மக்களின் எதிர்ப்புகு அஞ்சி தம் நிலையை மாற்றிக் கொண்டனர். 
 
அடுத்தது இடைநிலைச் சாதிக் கட்சிகள். திராவிட அரசியல் எப்போது வீழும் சாதி அரசியல் செய்யலாம் எனக் காத்துக் கிடப்போர்களில் முக்கியமானவர்கள் இவர்களே. திராவிட அரசியல் ஜாதிகளை ஒழித்ததா என்பதை விட ஜாதிய கட்சிகளை ஓரளவில் கட்டுபடுத்தி வைத்துள்ளன என்பது உண்மை. வெளிப்படையான ஜாதியக் குரூரங்களை குறைப்பதில் திராவிட அரசியலின் பங்கு நிறையவே உள்ளது. ஆனால் திராவிட அரசியல் வீழும் நிலை வந்தால் அதிகார அனுகூலம் என்பது இடைநிலை ஆதிக்கச் சாதிகளிடமே இருக்கின்றன. இன்றைய நிலையில் இடைநிலை ஆதிக்கச் சாதி அரசியலை அதிகம் முன்னெடுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, கவுண்டர் சாதிக் கட்சிகள், வெள்ளாளர் சாதிக் கட்சிகள், தெலுங்குச் சாதிக் கட்சிகள், முக்குலத்தோர் சாதிக் கட்சிகள், நாடார் சாதிக் கட்சிகள். இவை முறையே தொண்டை நாடு, கொங்கு நாடு, பாண்டி நாடு, தென்பாண்டி நாடு என பிரதேசவாதங்களையும் வளர்க்க வல்லது. இவர்களது முக்கிய பலமே இன்றளவும் ஜாதிய அடையாளங்களை பரப்பி வருவதும், இடைநிலை ஜாதி மக்களே அதிகளவில் தமிழகத்தில் இருப்பதும் தான். இவர்களது முதன்மை பணியாக இன்று இருப்பவை திரிக்கப்பட்ட ஜாதி பெருமை பேசும் வரலாற்றுத் தகவல்கள், மற்றும் இளைய சமூகத்தவரிடம் ஜாதிய அபிமானம் வளர்க்கும் போக்கு. இந்த ஜாதிக் கட்சிகளின் பலியாடுகள் தம்மை விட பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருக்கும் தலித் மக்களை குறிவைப்பதே ஆகும். இந்த ஜாதியக் கட்சிகள் தம் ஜாதியங்களை அங்கீகரிக்கும் இந்துத்வா அமைப்புகளோடு அதிகம் நெருங்கி அரசியல் செய்ய தொடங்கி உள்ளது. 
 
அடுத்தது தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதிக் கட்சிகள். இவர்கள் பெரும்பாலும் திராவிட, இடதுசாரித்துவ அரசியலைச் சார்ந்தே இயங்கி வருகின்றனர். காரணம் அவற்றுக்கு மாற்றாக உள்ள அரசியல் சக்திகள் யாவும் தலித் சமூகத்தை மனிதர்களாகக் கூட கருதுவதில்லை. தலித் சமூகம் பொருளாதாரத்திலும், சமூக அந்தஸ்திலும் இன்னமும் ஏனைய சமூகங்களுக்கு இணையாக வளரமுடியாமல் தவிக்கின்றனர். இவர்களை குறிவைப்பதன் மூலம் தலித்தல்லாத இடைநிலைச் சாதிகளை ஒருங்கிணைக்க ஜாதியக் கட்சிகள் செயல்பட்டும் வருகின்றன. தலித் ஜாதிய அரசியலில் இன்று சிலர் திராவிட அரசியலை எதிர்க்கத் தொடங்கி உள்ளனர். அதற்கு ஒரு காரணம், திராவிட அரசியல் என்பது எந்தவொரு ஜாதியக் கட்சிகளையும் தனி அரசியல் சக்தியாக வளரவிடவில்லை என்பது தான். மற்றொன்று திராவிட அரசியலோடு ஒட்டி உறவாடும் தலித் சமூகங்களை தனிமை படுத்துவதன் மூலம் அந்த வாக்குகளை அரசியல் அனுகூலமாக மாற்றலாம் என்ற எண்ணமும் தான்.
 
இன்று தமிழகத்துக்கு வெளியே பல மாநிலங்களில் இந்துத்வா சக்தி எழுச்சி கண்டுள்ளது. தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலமே இந்துத்வா அரசியலை முற்றாக நிராக்ரித்த மாநிலங்களாக உள்ளன. அதிலும் தமிழகம் இந்துத்வா எதிர்ப்போடு, இந்தி எதிர்ப்பையும் கொண்டுள்ளது. சென்ற காங்கிரஸ் அரசு மென்போக்காக இந்தி திணிப்பை  நிகழ்த்தியது. இந்த திணிப்புக்கு தனது அரசியல் பங்காளியாக அப்போதிருந்த திமுகவை பல ஊழல் திட்டங்களில் பங்காளியாக மாற்றியதோடு, அதன் மூலம் திமுகவின் வாயை அடைத்தும் இருந்தது. ஒரு கட்டத்தில் திமுகவின் எதிர்ப்பு பெருகவே ஊழல் திட்டங்களில் பங்காளியாக இருந்த திமுகவையே பிரதான குற்றவாளியாக்கி ஊடகங்கள் மூலம் பரப்பி வெற்றி கண்டது. காங்கிரஸ் அரசும் சரி பாஜக அரசும் சரி இந்து அபிமானம், இந்தி அபிமானம் என்ற இரு கொள்கையில் இருந்து விலகாதவை. அத்தோடு ஊழல், லஞ்சம் போன்றவற்றவற்றை நிராகரித்தாவையும் கூட. அந்த வகையில் இந்தி எதிர்ப்பையும் இந்தித்வ எதிர்ப்பையும் கொண்டு அரசியல் நிகழ்த்திய திமுகவை காலம் பார்த்து கூட்டாளியாக்கி வலையில் சிக்க வைத்து அந்த ஊடான நேரத்தில் இலங்கையில் தமிழர் போராட்டத்தை நசுக்கியது, தமிழ் மீனவர் பிரச்சனையை கைவிட்டது, இந்தி திணிப்பை கொஞ்சம் கொஞ்சமாக உள் நுழைத்தது. தமிழுக்கு தனி அந்தஸ்துடைய செம்மொழி கொடுக்கப்பட்டதை சகிக்காமல் தில்லாங்கடி வேலை செய்து தெலுங்கு, கன்னடம், ஏன் மலையாளத்துக்கு கூட செம்மொழி தகுதி கொடுத்து தமிழ் மொழி பத்தோடு பதினொன்று தான் என நிறுவியது. 
 
இதன் தொடர்ச்சியாக வந்த பாஜக அரசும் இந்த தமிழ் விரோத அரசியலில் கொஞ்சமும் சளைக்காமல் சமஸ்கிருத திணிப்பு, இந்தி திணிப்பு ஆகியவற்றை தொடர்ந்தது. இந்த திணிப்பரசியலுக்கு எதிர்ப்புக் காட்டி வந்த ஜெயலலிதாவை சமயம் பார்த்து ஊழல் வழக்கில் தீர்ப்புச் சொல்லி வீழ்த்தியது. இந்த திட்டம் எல்லாம் இன்று நேற்று போட்டவையல்ல. கடந்த 30 ஆண்டுகளாகவே தீட்டப்பட்டு வந்த திட்டங்களே ஆகும். திராவிட அரசியலை ஒழித்துக் கட்ட ஜெயலலிதாவையே ஊழல் காரணத்தைக் காட்டி சென்ற முறை ஆட்சியில் மதமாற்ற தடை சட்டம், அது இது என வேலை பார்த்தது. ஒரு கட்டத்தில் கடுப்பாகி போன ஜெயலலிதா சங்காராச்சாரியர் செய்த கொலையை வைத்து அவரையே உள்ளே தள்ளியது. இவ்வாறான ஒரு நிலையில் இன்று ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை காலி செய்ய துணிந்திருக்கின்றது. இந்த பார்ப்பனிய ஊடுருவல் திட்டத்துக்கு கைக்கூலியாக செயல்பட்டு வருபவரே சுப்பிரமணியம் சுவாமி தான் என்பதை தமிழகமே அறியும்.
 
ஜெயலலிதா ஊழல் செய்துள்ளார் மறுப்பதற்கில்லை, ஆனால் இந்துத்வம் பலம் கூடிய போது, தமிழக கட்சிகள் மத்திய அரசியல் பங்கு கொள்ளாத இந்த சூழலில் தொடர்ந்து இந்தி திணிப்பு செய்து வரும் காலநிலையில் ஜெயலலிதா பழிவாங்கப்பட்டுள்ளதை வெறும் ஊழல் குற்றம் என கொண்டாட முடியாது. அதன் பின்னர் வலை வலையாக வெங்காயம் போல இருக்கும் அரசியல் சூழ்ச்சிகள் சாதாரணமானவை கிடையாது. 
 
ஜெயலலிதா என்ன தான் ஊழல் செய்திருந்தாலும் கூட அவரது அண்மையக் கால அரசியல் தமிழக முன்னேற்றத்திற்கு உதவியுள்ளது. அந்த அரசியல் நிலைப்பாடும் திட்டங்களும் அவரது சொந்த சுயநலத்துக்காக இருக்கலாம்,. ஆனால் அது தமிழகத்துக்கு பயன் தான். தமிழகத்தின் பலம் பொருந்திய அரசியல்வாதியாக அவர் இருந்து வருகின்றார். தனிப் பெரும் கட்சியாக பாராளமன்றத்தில் அதிகளவு உறுப்பினர்களை பெற்றுள்ளார். அத்தோடு ராஜ்ய சபையில் கூட அதிகளவு உறுப்பினர்கள் உள்ளார்கள். இவை இரண்டுமே பாஜகவின் இந்துத்வா இந்தி திணிப்பு அரசியலையும் தமிழ் விரோத அரசியலையும் கேள்விக் கேட்க போதுமானவை. இந்த நிலையில் ஜெயலலிதாவை சிறைக்குள் தள்ளுவதன் மூலம் அவர் தம் குரலைக் கட்டுபடுத்தலாம் என்று திட்டம் அதிகம் மத்திய அரசுக்கு உள்ளது. 
 
கருணாநிதி கடந்த முறை ஊழலில் சிக்க வைக்கபட்டு பின்னர் அவமானப்படுத்தப்பட்டு அவரது அரசியல் வாழ்க்கையையே அறவே ஒழித்துக் கட்டியது மத்திய அரசாங்கம். இதனால் திமுக பலவீனமானது. இப்போது ஜெயலலிதாவின் ஊழல் வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு அதிமுகவையும் பலவீனமாக்க முனைந்துள்ளது மத்திய அரசு. இந்த ஊழல் எதிர்ப்பு மனோபாவத்தை மக்களிடம் கொண்டு சென்று அதே சமயம் பாஜவின் மோதி மாயையை ஊடகங்கள் மூலம் விதைக்கப்பட்டு அதை இங்குள்ள ஜாதியக் கட்சிகளின் துணையோடு வழிமொழிந்து வருவதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்துவா சக்திகள் அரசியலில் பங்கு கொள்ளலாம் என்பதே மெகா திட்டமாகும். கருணாநிதி நிறைய நாளுக்கு வாழப் போவதில்லை. 2ஜி ஊழல், ஈழப் பிரச்சனையில் சிக்க வைக்கப்பட்டதால் அவரது செல்வாக்கு போய்விட்டது, கூடவே முக அழகிரி போன்றோரை வைத்து திமுக பலவீனப் படுத்தப்படலாம். அதே போல அடுத்த 10 ஆண்டுக்கு ஜெயயலிதாவை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதன் மூலம் ஊழல் எதிர்ப்பு மனோபாவத்தை மக்களிடம் விதைப்பதன் மூலம் அதிமுகவும் பலவீனம் அடையும். 
 
இதன் பின்னர் மிஞ்சியுள்ள ஜாதிக் கட்சிகளான, இந்துத்வா ஆதரவு கொண்ட பாமக, தேமுதிக, மதிமுக போன்றவைகளின் துணையோடு பாஜக உள்ளே நுழையும். அவ்வாறு நுழைவதன் மூலம் தமிழகத்தின் தனித் தன்மை வீழ்த்தப்பட்டு பார்ப்பனிய இந்துத்வம் வெற்றிக் கொள்ளும். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் பரப்பப்படும். இந்தி எதிர்ப்பு வலுவிழக்கச் செய்யப்படுவதோடு இந்தி மயம் தொடரும். இதன் மூலம் இலங்கை சிங்கள அரசிற்கு எதிராக தமிழகம் கொண்டுள்ள போக்கு மாற்றப்படும், இதன் மூலம் இலங்கை அரசோடு இந்தியா நன்றாகவே உறவாடலாம். தமிழகத்திலும் இந்தி அறிமுகம் செய்யப்படும். அதிகளவு இந்தி பேசுவோர் குடியேறுவர்கள். மதச்சார்பின்மை ஒழிக்கப்படும். ஜாதிய கட்சிகள் வலுவூட்டப்படும். 
 
அடுத்த பத்தாண்டுகளின் பின்னர் தமிழகமும் உத்தர பிரதேசம் போன்று மாற்றப்படும், ஏற்கனவே இங்கு முஸ்லிம்களோ, கிறித்தவர்களோ பெரும்பான்மை கிடையாது. வெறும் 10 % பேரே இந்த இரு மதத்தினர். ஆக 90 % இந்துக்களை இந்துத்வ மயமாக்கி பார்ப்பனமயமாக்குவதன் மூலம் ஆர்.எஸ்.எஸின் நூற்றாண்டு கனவு இங்கு மெய்படும் இதுவே இந்துத்வா பார்ப்பனிய சக்திகளின் பேராசையும் கூட. 
 
 
திராவிட அரசியல் இயக்கங்களான தி.மு.க, அ.தி.முக. இடையிலான தேர்தல் களப் போட்டிகளே தமிழகத்தில் முதன்மையாக இருப்பதால், ஆட்சியைப் பிடிப்பது ஒன்றே இயக்கத்தின் வெற்றி என்ற எண்ணம் இரு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அந்த வெற்றிக்காக எதையும் செய்வது என்பதே அரசியல் கொள்கையாக மாறிவிட்டதால் லஞ்ச-ஊழல் புகார்களும், ஆடம்பர செயல்பாடுகளும், தேர்தல் நேர பண விநியோகமும் முதன்மையாகி சமுதாய நலன் சார்ந்த செயல்பாடுகள் பின்தள்ளப் பட்டுள்ளன என்பதே இன்றைய நிலையாகும். 
 
இரண்டு கட்சிகளில் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.கவே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதி, பெண்ணுரிமை, கோவில்களில் அர்ச்சகராகும் உரிமை, கலப்பு மணம், சுயமரியாதை திருமணம் போன்றவற்றை தனது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் நடைமுறைப்படுத்திய இயக்க மாகும். 
 
முக்கியமாக அண்மையக் காலமாக ஜெயலலிதா தமிழ் மொழிக்கு ஆதரவாகவும், இந்தி திணிப்பு எதிராகவும் பேசியது வரவேற்க தக்கது. கடந்த திமுக ஆட்சியில் கட்டாயத் தமிழ் கற்றல் சட்டத்தைக் கொண்டு வந்ததும், தமிழுக்கு செம்மொழி தகுதி தந்ததும் போற்றத்தக்கது. அத்தோடு முதலீட்டையும் பொருளாதாரத்தையும் வளார்த்தும் விட்டது திராவிட அரசியல். ஆனால் இவை இன்று பறிபோய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழகத்தின் அடையாளம் காக்கப்பட வேண்டும். 
 
திராவிட அரசியலில் மூன்றாம் கட்சியாக உருவான மதிமுக ஈழத்தமிழர் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாடு, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தொடர்ச்சியான ஆதரவு, தமிழீழம் ஒன்றே ஈழத் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பனவற்றில் ம.தி.மு.க உறுதியாக இருந்து வருகிறது. முல்லைப்பெரியாறு, கூடன்குளம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் போன்றவற்றிற்காக தொடர் போராட்டங்களை வைகோ நடத்தி  வருகிறார். அவர் மீது லஞ்ச-ஊழல் புகார்கள் கிடையாது. அவருடைய பேச்சாற்றல் இளைய தலைமுறையினரை பெருமளவு ஈர்த்துள்ளது. இத்தகைய நிறைவான அம்சங்கள் இருந்தாலும், தேர்தல் அரசியல் களத்தில் ம.தி.மு.க எடுத்த கூட்டணி முடிவுகளால் அக்கட்சிக்கு பெரியளவில் மக்கள் செல்வாக்கு கிடைக்கவில்லை. தி.மு.க, அ.தி.மு.க என இருகட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைப்பதும், குறைவான அளவிலேயே வாக்குவங்கியை வைத்திருப்பதும் தமிழக அரசியல் களத்தில் ம.தி.மு.கவின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டன. வைகோவுடன் சென்ற முன்னணித் தலைவர்களும் காலப்போக்கில் பிரிந்துவிட்டனர். குறிப்பாக தற்சமயம் இந்துத்வா அரசியல் கொட்டாரத்தில் வெறும் கைப்பாவையாக வைகோ வைக்கப்பட்டுள்ளார்.
 
அதே நேரத்தில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் தமிழகத்தில் தங்கள் வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொண்டே இருப்பதால் மாநிலத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் அக்கட்சிகள் முக்கிய இடத்தை வகித்து வருகின்றன. 1989, 1996, 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் மத்தியில் அமைந்த அரசில் தி.மு.கவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 1991, 1998 ஆகிய ஆண்டுகளில் அமைந்த மத்திய அரசில் அ.தி.மு.கவின் ஆதரவு முக்கியமானதாக இருந்தது. இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். குறிப்பாக, தி.மு.க கடந்த 1999 முதல் தொடர்ச்சியாக 13 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்து வருகின்ற கட்சியாகும். 
 
1989-இல் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு (ஞஇஈ) 27% இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப் படுத்துவதற்கு தூண்டு கோலாகவும் உறுதுணையாகவும் இருந்த அரசியல் இயக்கம் தி.மு.கவே. இதன்காரணமாக, தமிழகத்தில்  திராவிட இயக்கத்தால் வலுப்பெற்ற சமூக நீதிக் கொள்கை இந்திய அரசியலின் கொள்கையாக பேருருவம் எடுத்தது. இன்று, சமூக நீதியைப் பற்றிப் பேசாமல் இந்தியாவில் எந்த கட்சியும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. அதுபோலவே, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் முடிவு மேற்கொள்ளப்பட்ட பிறகு மாநிலக் கட்சிகளின் எழுச்சியும் வளர்ச்சியும் அதிகமாயின. தேசிய முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என தி.மு.க பங்கேற்ற மத்திய அரசின் கூட்டணி ஆட்சிகளும் இதற்குக் காரணமாயின. மத்தியில், ஒரு கட்சி ஆட்சி என்கிற ஏகபோகம் முடிவுக்கு வந்து, மாநில நலன்களை வலியுறுத்தும் கட்சிகளும் முக்கிய இடம் பெறும் காலம் உருவாகியுள்ளது. இதன் மூலமாக அந்தந்த மாநிலங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசின் திட்டங்கள் மூலம் விரைந்து நிறைவேற்றும் சூழல் வாய்த்துள்ளது.
 
தமிழுக்குச் செம்மொழித் தகுதி, சேது சமுத்திரத் திட்டத் தொடக்கம், காவிரி பிரச்சினைக்குத் தீர்வுகாண நடுவர் மன்றம்-காவிரி ஆணையம், நான்குவழி நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவேற்றம், தமிழகத்தில் அதிக முதலீட்டிலான தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி  உள்ளிட்டவை மத்திய அரசில் மாநிலக் கட்சியான தி.மு.க பங்கேற்றதன் விளைவுகளாகும். தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் தனிப்பட்ட ஆளுமையினால் இந்திய அரசியலில் பல பிரதமர்களும் ஜனாதிபதி களும் தேர்வு பெற்றுள்ளனர். வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன்சிங் உள்ளிட்ட பிரதமர்களின் தேர்வில் கலைஞரின் பங்கு முக்கியமானது.  வாஜ்பாய் தலைமையிலான ஐந்தாண்டுகால ஆட்சியிலும் தி.மு.க.வின் பங்கு முக்கியமானது. வி.வி.கிரி, நீலம் சஞ்சீவரெட்டி, ஜெயில்சிங், இந்தியாவின் முதல் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன், முதல் பெண் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் உள்ளிட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்விலும் கலைஞரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும், தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றில் தி.மு.க பெரியளவில் எதையும் சாதிக்க முடியவில்லை.காவிரி நதி நீர் விவகாரம், முல்லைப்பெரியாறு  அணைப் பிரச்சினை, தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள், கச்சத்தீவில் தமிழகத்திற்கான உரிமை, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தும் தாக்குதல், ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு இவற்றில் தேவையான மாற்றங்களும் நிரந்தரத் தீர்வு களும் ஏற்பட தி.மு.கவால் பெரியளவில் ஏதும் செய்ய முடியவில்லை.
 
ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் நிலவிய சாதி ஏற்றத்தாழ்வு, உயர்சாதி ஆதிக்கம், ஒடுக்கப் பட்டோருக்கான உரிமை மறுப்பு, கல்வி மறுப்பு, வேலை வாய்ப்புகளில் பாரபட்சம், பெண்ணடிமைத்தனம் போன்ற பலவும் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பிறகு பெருமளவில் மாறியுள்ளன. சமூக நீதிப் பயணத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் பிறமாநிலங் களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சமூக சமத்துவம், மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், அரசியல் உரிமை, பெண்களுக்கான வாய்ப்புகள்-உரிமைகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, தனிநபர் வருமான உயர்வு ஆகியவை வளர்ச்சிப்பாதையிலேயே உள்ளன. இதில் திராவிட இயக்கத்தின் பங்கும் பணியும் அதிகம். அத்துடன் அரசியல் காழ்ப்புணர்வு, அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள், லஞ்ச-ஊழல் குற்றச் சாட்டுகள், சுயநல அரசியல் ஆகியவையும் திராவிட அரசியல் இயக்கத்தினால் வளர்க்கப்பட்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. 
 
திராவிட இயக்கத்திற்கு இயற்கையே எதிரியாக இருந்து மூன்று அரசியல் பின்னடைவுகளை ஏற்படுத்திவிட்டது. ஆம். இயற்கை தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமையை, விடுதலை உணர்வை - இராஜரிகத்தைத் தட்டிப்பறித்துவிட்டது. அது தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்ட மாபெரும் தீமை என்றே நாம் கருதுகின்றோம்.
 
(1) இலண்டனில் 1919ஆம் ஆண்டு டாக்டர் டி.எம். நாயருக்கு ஏற்பட்டுவிட்ட அகால மரணம்.
 
(2) 1940ஆம் ஆண்டு சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் விபத்திற்கு உள்ளாகி ஏற்பட்ட அவரது மரணம்.
 
(3) 1969ஆம் ஆண்டு நிகழ்ந்த அறிஞர் அண்ணாவின் மரணம்.
 
இம்மூன்று மரணங்கள் தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமைக்கு, விடுதலை உணர்வுக்கு ஏற்பட்ட மாபெரும் அரசியல் பின்னடைவுகள் ஆகும்.பெரியார் போட்ட சமூக நீதிக்கான அடித்தளம், அண்ணா அமைத்துக் கொடுத்த அரசியல் பாதை இவற்றின் மீதான பயணம் எந்தளவில் இருக்கிறது என்பதே திராவிட இயக்கங்களை மதிப்பீடு செய்வதற்கான  அளவு கோலாகும். அதிலிருந்து அடிக்கடி விலகுவதும், வெகுதூரம் செல்வதும் தொடர்கதையாகிறது. இந்த நிலை மாறி, திராவிட இயக்கக் கொள்கைகளின் அடிப்படையிலான செயல்பாடுகளை திராவிட அரசியல் இயக்கங்கள் மேற்கொள்ளவேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகியவையெல்லாம் பெயருக்கு திராவிட என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு திராவிடக் கொள்கைக்கு நேரெதிராக செயல்பட்டு வருகின்றன. எனவே திராவிட  அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில் தி.மு.கவே திராவிடக் கொள்கைகளைப் பலப்படுத்தும் செயல்பாடுகளை வேகமாகவும் ஆழமாகவும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கொள்கை அடிப்படையில் ம.தி.மு.கவும் இதனைச் செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளது.
 
உலகளாவிலான அரசியல் பார்வை, புதிய தொழில் நுட்பங்கள் மூலமாகக்  கொள்கைப் பிரச்சாரம், நவீன ஊடகங்களை இயக்க வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல், சுயநலமில்லாத-சொந்த லாபம் தவிர்த்த அரசியல்  செயல்பாடு, தேர்தல் வெற்றிக்கு அப்பாற்பட்ட சமுதாய சீர்திருத்தப் பணி, கட்சியின் செயல்பாடுகள் குறித்த மறு ஆய்வுகள்-சுயபரிசோதனைகள், தவறுகளிலிருந்து பாடம் பெற்று சரியான பாதையில் பயணித்தல், பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளில் ஒருங்கிணைந்த செயல்பாடு இவை திராவிட இயக்கங்களின் எதிர்காலத் திட்டங்களாக அமையுமானால், நூறாண்டு கால  திராவிட இயக்கத்தின் அருமையும் பெருமையும் அடுத்த நூற்றாண்டிலும் தொடரும்.
 
அறிஞர் அண்ணாவின் பேச்சை, எழுத்தை சுவைத்த கட்சிக்காரர்கள் - அதிகம் படிக்காதவர்கள் - மூன்றாவது, நான்காவது வகுப்புப் படித்த திமுக துணை மன்ற நிர்வாகிகூட அல்ல; அதன் உறுப்பினர் மேடையில் தெளிவாகப் பேசினார்; அரசியல் பேசினார்; அலசினார். சொற்பயிற்சியைப் பெற்றார்; இரவுப் பள்ளிக்குச் சென்று அறிவை வளர்த்துக்கொண்டார். ஆதி மநுவிலிருந்து பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை வரை தி.மு.க. துணை மன்ற உறுப்பினர் படித்தார்; மார்க்சை, லாஸ்கியை தெரிந்துகொண்டார். எழுத்தின் அத்தனை வடிவங்களையும் அவர் புரிந்துகொண்டு பேசினார். கட்சி உறுப்பினர் எந்தச் சமூக விவாதத்திற்கும் எதனையும் எதிர்கொள்வதற்கும் ஆயத்தமாக இருந்தார். இதற்கெல்லாம் காரணம் அறிஞர் அண்ணாவின் பேச்சு, எழுத்து, அவரது எளிமை காரணமாக இருந்தது.
 
அறிஞர் அண்ணா ஏதுமில்லாதவர்களின் பிரதிநிதியாக இருந்தார். அவர்களை அண்ணா 'தெருவோரத்து மக்கள்' என்று அடையாளங் காட்டினார். தம்மையும், கட்சிக்காரர்களையும் 'சாமான்யர்கள்' என்று மக்களிடையே அறிமுகப்படுத்திக்கொண்டார். உண்மையில் 'அவர்கள்' சாமான்யர்களே! தொண்டை மண்டலப் பகுதிகளில் (சென்னை, செங்கற்பட்டு, வடஆர்க்காடு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி) வாழும் பாமரனின் பாதிப்பு அவரது உடை, உணவு, பழக்க வழக்கங்கள் மற்றும் பேச்சுகளில் இருந்தன. இது சாதாரண மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் அறிஞர் அண்ணாவின் மீது ஒரு நம்பிக்கை தமிழக மக்களுக்குப் பிறந்தது.
 
அறிஞர் அண்ணாவின் தலைமையில் உள்ள கழகத்தை மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை அண்ணாவோ சாதுர்யமாக 'நாங்கள் பிரிவினையை கைவிட்டுவிட்டோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன' என்றார்.
 
எந்தச் சூழ்நிலையிலும் அவரது உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க அவர் தவறியதில்லை. பிரிவினைக் கொள்கையை அவர் கைவிட்டதற்குப் பிறகும் தமிழனின் தனித்தன்மையை அவர் நிலைநாட்டத் தவறியதே இல்லை.
 
"தமிழன் யாருக்கும் தாழாமல் - யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் - எவராலும் சுரண்டப்படாமல், யாருக்கும் எசமானனாக இல்லாமல் - உலகில் எவர்க்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாயக் கொள்கை."
 
"தமிழ் என்ற தொன்மையானதொரு மொழிக்குச் சொந்தக்காரன் நான் என்பதை என்னால் மறக்க முடியாது. என்னுடைய முன்னோர்கள் எந்த மொழியில் பேசினார்களோ, என்னுடைய கவிஞர்கள் எந்த மொழியில் காவியங்களையும் தத்துவங்களையும் வழங்கினார்களோ; வற்றாத அறிவுச் சுரங்கங்களாக விளங்கிய இலக்கண, இலக்கியங்களை எந்த மொழியில் நாங்கள் பெற்றிருக்கிறோமோ, அந்தத் தமிழ் மொழி மைய அரசின் ஆட்சி மொழியாக ஆகும் நாள்வரையில் நான் ஓயமாட்டேன்."
 
மேலே உள்ள அவரது பேச்சிலிருந்து நாம் எடுத்துக் காட்டியுள்ள இரண்டு மேற்கோள்கள் அவரது கொள்கை உரத்தைக் காட்டுகின்றன. அறிஞர் அண்ணாவை இயற்கை 10, 15 ஆண்டுகள் உயிர் வாழ அனுமதித்து இருக்குமானால், தமிழ்நாட்டின் நிலை அவர் காலத்தில் மேலும் உயர்ந்திருக்கும். 
 
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே அண்ணா வளர்த்த மதச்சார்பின்மை ஜாதிச் சார்பின்மை சமூக வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி என்ற கொள்கைக்கு திரும்ப வேண்டும். குடும்ப அரசியல், ஊழல் ஆகிய இரண்டையும் கைவிட வேண்டும். தமிழகத்தை பிய்த்து தின்ன நினைக்கும் இந்துத்வம், ஜாதியத்துவம், இந்தி மொழி ஆதிக்கம், இந்தி மொழி பேசுவோரது குடியேற்றம் போன்றவற்றை தடுத்து நிறுத்த பலம் பொருந்திய அடுத்த தலைமுறை தலைமைகளை உருவாக்க வேண்டும். கருணாநிதிக்கு பின்னரோ, ஜெயயலலிதாவுக்கு பின்னரோ அண்ணாவின் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்று தமிழகத்தின் தனித்தவம் தமிழ் மொழி வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை ஏற்படுத்துமளவுக்கு தலைமைகளே இல்லாமல் இருக்கின்றனவே>? இந்த வெற்றிடம் தமிழகத்தின் எதிர்காலத்துக்கு பேராபத்தை தரவல்லது. இந்த இரு தலைவர்களுமே அண்ணாவின் கொள்கைகளில் இருந்து விலகியதாலே இன்று சறுக்கி வீழ்ந்துள்ளனர் என்பதை உணர வேண்டும். இந்த சறுக்கல்கள் இரு தலைவர்களது சறுக்கல்கள் மட்டுமல்ல இரு கட்சிகளின் சறுக்கல்கள் மட்டுமல்ல நாளைய தமிழகத்தின் நாளைய தமிழ் மொழியின் தமிழ் கலாச்சாரத்தின் சறுக்கல்கள் ஆகும்.
 
இலங்கையில் நடந்தது போல சிங்களாதிக்கும் ஒடுக்குமுறையும் தமிழகத்துக்கும் இந்தியாதிக்கதால் வந்துவிடுமோ என்ற பயம் தொற்றிக் கொள்கின்றது. நாளை தமிழகத்தை வழிநடத்த திராவிட அரசியலில் இருந்து ஒரு நல்ல தலைமையும் இல்லாமல் இருப்பது அச்சமூட்டுவதாகவே இருக்கின்றது. இதனை சில மதாப் பித்தும் ஜாதிய பித்தும் தமிழ் விரோதமும் கொண்ட பெயர்தாங்கி தமிழர்கள் கொண்டாடக் கூடும். ஏனைய தமிழர்கள் பலரால் செரித்துக் கொள்ள முடியவில்லை.
 
தமிழகமும் தமிழகத்தை ஆளுமைச் செலுத்தி வரும் திராவிட அரசியலும் அண்ணாவின் கொள்கைக்குத் திரும்பி தமிழகத்தை பொற்காலமாக்குவதா? அல்லத் அண்ணாவின் கொள்கைகளை கைவிட்டு ஊழல், குடும்ப அரசியல் எனப் போய் தமிழகத்தை கரிக்காடு ஆக்குவதா? இல்லை அதையும் விட கொடுமையாக மதவாத, ஜாதியவாத கட்சிகளின் பின்னால் ஓடி தமிழகத்தை சுடுகாடு ஆக்குவதா என்பதை தமிழக இளைய சமூகம் தான் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

அது சரி ஜெயலலிதா சிறைவாசம் வனவாசம் முடிந்து திரும்பும் வரை யார் முதலமைச்சர்? என்னைக் கேட்டால் நாவலர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியனே ஏற்ற நபராக இருப்பார். அவரது அறிவும் திறமையும் ஜெயலலிதா மீதான் அன்பும் அவரை முதலமைச்சர் ஆக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
http://www.kodangi.net/2014/09/hindutva-targets-Dravidian-polity-tamilnadu.html





Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..