அலெக்சிஸ் சிப்ராஸ்

கிரீஸ் மக்கள் நிராகரித்த அதே நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக ஐரோப்பிய நிதி நிறுவனங்களின் கால்களில் விழுந்திருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ்.

வாக்கெடுப்பின் முடிவை பயன்படுத்தி ஐரோப்பிய கடன் நிறுவனங்களிடம் புதிய வலுவுடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார், அலெக்சிஸ் சிப்ராஸ். அதன்படி ஜூலை 7-ம் தேதி அவர் முன்வைத்த கடன் கோரிக்கையை ஐரோப்பிய மத்திய வங்கி, ஐ.எம்.எஃப் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அவர் முகத்திலேயே தூக்கி எறிந்து விட்டன. மாறாக, அடுத்த 48 மணி நேரத்துக்குள் கிரீஸ் மக்களால் நிராகரிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை அம்மக்கள் மீது சுமத்துவதற்கான புதிய திட்டத்தை வகுத்துத் தருமாறு உத்தரவிட்டிருந்தன.

அதாவது, ஜூலை 9-ம் தேதிக்குள் கடன் கொடுத்தவர்களுக்கு உகந்த ஒப்பந்தத்தை போட்டுக் கொள்ளா விட்டால், ஜூலை 12-ம் தேதி மற்ற ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் ஒன்று கூடி கிரீசை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றுவது குறித்து முடிவெடுப்பார்கள். இதில், கிரீஸ் மக்களின் விருப்பம், முடிவு, ஜனநாயகம் எதற்கும் இடமில்லை. இதற்குப் பணிந்து சிப்ராஸ் கடன் நிறுவனங்கள் முதலில் சொன்ன நிபந்தனைகளையே ஏற்றுக் கொள்ளும் திட்டத்தை சமர்ப்பித்திருக்கிறார்.

இந்தச் சூழலில், கிரீஸ் ஐரோப்பாவுக்குள் தொடர்வது உலக நிதித் துறை கட்டமைப்புக்கு தேவையானது என்று ஒரு புறமும், கிரீஸ் போன்ற ஊதாரி, பொறுப்பற்ற நாட்டை வெளியேற்றுவதுதான் சரியானது என்று இன்னொரு புறமும் வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியின் போதும் முதலாளிகளின் தவறுகளை மக்கள் மேல் சுமத்துவது ஒரு தந்திரம். உண்மையில் கிரீஸின் இன்றைய நெருக்கடிக்கும் அதன் கடன் சுமைக்கும் யார் பொறுப்பு?

கிரீஸ்

முன்னேறிய வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார ரீதியாக இணைக்கப்பட்ட பிறகு கிரீஸின் சுயசார்பு பொருளாதாரம் அழிக்கப்பட்டது.

ஐரோப்பிய பொருளாதார சமூகத்திலும் (1962), ஐரோப்பிய ஒன்றியத்திலும் (1981), யூரோ ஒற்றை நாணய அமைப்பிலும் (2001) ஆரம்பத்திலிருந்து உறுப்பினராக ஆன நாடு கிரீஸ். தெற்கு ஐரோப்பாவில் உள்ள அந்நாட்டின் இப்போதைய மக்கள் தொகை சுமார் 1 கோடி, அதன் பரப்பளவு தமிழ்நாடு அளவுக்கு சமமானது. மத்திய தரைக் கடல் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் கிரீசின் வரலாற்றுப் பெருமையும் அனைவரும் அறிந்ததே.

பாரம்பரிய விவசாய நாடான கிரீஸ், விவசாயத்துடன் மீன்பிடித் தொழில், கப்பல் கட்டும் தொழில் ஆகியவற்றை சார்ந்திருந்தது. முன்னேறிய வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார ரீதியாக இணைக்கப்பட்ட பிறகு கிரீஸின் சுயசார்பு பொருளாதாரம் அழிக்கப்பட்டு விவசாயத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது; அதன் தொழில் துறை, ஏற்றுமதி சார்புடையதாக மாற்றப்பட்டது; அதன் தீவுகளும், பொருளாதாரமும் சுற்றுலாத் துறையை சார்ந்திருக்கும் படி மாற்றப்பட்டன. இன்று கிரீஸின் உழைக்கும் மக்களில் 5-ல் ஒருவர் சுற்றுலாத் துறையில் நேரடியாக பணிபுரிகின்றனர்.

கிரீஸ் நிதி கடத்தல்

கிரீஸ் (சட்ட விரோத நிதி கடத்தல்)

ஐரோப்பிய ஒற்றை நாணய யூரோவை ஏற்பதன் மூலம் லாப வேட்டையாட காத்திருந்த வங்கிகளும், முதலாளிகளும் கிரீஸின் நிதி நிலைமை அதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத நிலையில் மோசடி கணக்கு தயாரித்தனர். நாட்டின் நிதி பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என்று குறைத்துக் காட்டி யூரோவில் சேர்வதற்கான நிபந்தனையை நிறைவு செய்தனர். இதற்கு அமெரிக்காவின் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் ஆலோசகராக இருந்து வழிகாட்டியது.

கிரீஸ் அரசின் கடன் பத்திரங்கள் யென், டாலர் நாணயப் பெறுமதிக்கு மாற்றப்பட்டன. அரசாங்கம் கொடுக்க வேண்டிய கடன் நிலுவைகளை எதிர்காலத்தில் கொடுப்பதாக வேறொரு கணக்கில் குறித்தார்கள். மேலதிகமாக கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியே 100 கோடி யூரோ ரகசியக் கடனாக கொடுத்து சரிக்கட்டியது. 2001-லிருந்து இந்த மோசடி நடந்து வந்திருப்பது 2010-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

கிரீஸ் ஐரோப்பிய ஒற்றை நாணயத்தை பயன்படுத்த தொடங்கியது, வெளியிலிருந்து பாய்ந்த மூலதனமும், கடன்களும் ரியல் எஸ்டேட், 2004 ஒலிம்பிக் போட்டி கட்டுமானங்கள் (€2,000 கோடி) என்று கிரீஸ் கிரேக்க நாட்டு முதலாளிகளின் பைகளை நிரப்பியது. மேலும், கிரேக்க முதலாளிகள் அந்நாட்டு வரிகளை தவிர்க்க தமது நிறுவனங்களை வெளிநாடுகளில் பதிவு செய்து கொண்டனர். உதாரணமாக, கிரேக்கர்களுக்கு சொந்தமான 3,760 கப்பல்களில் 2,898 கப்பல்களை வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டு கிரீஸ் நாட்டு வரிகளை ஏய்க்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் கிரீஸ் கப்பல் முதலாளிகளுக்கு 58 வெவ்வேறு வகையான வரி வெட்டுகள் வழங்கப்பட்டன.

கிரீஸ் கடன் வகைகள்

நாட்டின் கடன்கள் குறித்து ஆய்வு செய்ய கிரீஸ் நாடாளுமன்றம் நியமித்த குழு வெளியிட்டிருக்கும் கடன்கள் பற்றிய விபரம்.

1980 முதல் 2010 வரை கார்ப்பரேட் வரி விதிப்பு 49% -லிருந்து 20% ஆக குறைக்கப்பட்டது. இருந்தாலும், முதலாளிகள் மோசடி மூலமும், லஞ்சம் மூலமும் பெருமளவு வரிகளை ஏய்த்தனர். 2000-க்கும், 2007-க்கும் இடையே கார்ப்பரேட் வரி விதிப்பு வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1%-லிருந்து 2.6% ஆக வீழ்ச்சியடைந்தது. மாறாக, பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படும் மறைமுக வரிகள் மொத்த வரி வருவாயில் 60%-ஐ விட அதிகமாக உள்ளது. (ஐரோப்பிய சராசரி 36.2%).

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து கிரீஸ் $2,140 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்தது. அந்நாட்டுக்குத் தேவையற்ற, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணத்தை கடத்தும், உள்நாட்டு தரகர்களின் பையை நிரப்பும் இந்த இறக்குமதிகள் மூலம் கிரீஸ் மக்கள் கொள்ளையடிக்கப்பட்டனர்.

கிரீஸ் வங்கிகளும், மற்ற ஐரோப்பிய நாட்டு வங்கிகளும் கிரீஸ் அரசின் கடன் பத்திரங்களை வாங்கி வரி வசூல் பற்றாக்குறை, ஆயுத இறக்குமதி, ஆடம்பர கட்டுமானப் பணிகள், முதலாளிகளுக்கு வரிச் சலுகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கின.

நிதி பயன்பாடு

2010 முதல் 2015 வரை பெறப்பட்ட நிதி பயன்பாட்டு வீதம்.

இந்நிலையில் 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் வெடித்த உலகளாவிய நிதி நெருக்கடி ஐரோப்பிய நாடுகளையும் தாக்கியது; கிரீஸ் அரசு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது கிரீஸ் அரசு கடன் பத்திரங்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலையில் ஐரோப்பிய, அமெரிக்க வங்கிகள் திவாலாகியிருக்கும். உடனே, ஐரோப்பிய மத்திய வங்கியும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், ஐ.எம்.எஃப்-ம் தலையிட்டனர். அதன்படி €11,000 கோடி கடன் வசதி கிரீஸ் அரசுக்குக் கொடுக்கப்பட்டது. அதில் பெரும்பகுதியை, ஐரோப்பிய வங்கி நிறுவனங்கள், வணிக வங்கிகளிடமிருந்து கடன் பத்திரங்களை வாங்கிக் கொண்டு செலவை கிரீஸ் அரசின் கணக்கில் எழுதிக் கொண்டன. 2012-ல் கிரீஸ் அரசின் கடன்களில் 80% தனியார் வங்கிகள் வாங்கிய கடன் பத்திரங்கள் வடிவில் இருந்தது, 20% பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்தது. இப்போது அந்த நிலைமை நேர் எதிராக மாறியிருக்கிறது.

கிரீஸ் அரசு கடன் கட்ட முடியாமல் போனதற்குக் காரணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பொதுத்துறை செலவுகள், ஓய்வூதியங்கள், மக்கள் மீதான வரி விதிப்பை அதிகரிக்காதது இவைதான் காரணம் என்று கூறி அவற்றை சரி செய்யும்படி உத்தரவிட்டன. அதே ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்தும் ஜெர்மனியிடமிருந்தும் வாங்கத் திட்டமிட்டிருந்த ஆயுதங்களை வாங்கத் தவறி விடக் கூடாது என்றும் கூறின. திவாலாகிப் போன கிரீஸ் அரசு மக்கள் மீது நிதிச் சுமையை அதிகரிக்க வேண்டும், ஆனால் அமெரிக்கா ஆயுதம் வாங்குவதை நிறுத்தி விடக் கூடாது. இதுதான், இவர்களது ‘சிக்கன’ நடவடிக்கைகளின் யோக்கியதை.

கார்ப்பரேட்டுகள் மீதான வரி விதிப்பை அதிகப்படுத்துவது, வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துவது, கிரீஸ் முதலாளிகள் சுவிஸ் வங்கியிலும், லண்டன் ரியல் எஸ்டேட்டிலும் குவித்திருக்கும் பணத்தை திரும்ப கொண்டு வருவது பற்றியும் அந்த ‘சிக்கன’ நடவடிக்கை எதுவும் பேசவில்லை.

கிரீஸ் மக்கள் போராட்டம்

கிரேஸில் உழைக்கும் மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் வேலையின்றி இருக்கின்றனர். இளைஞர்களில் பாதிக்கும் மேல் வேலை இல்லை.

கிரீஸின் 1 கோடி மக்கள் தொகையில் பாதிப் பேர் சம்பளம் பெறும் தொழிலாளர்கள். அவர்களது சராசரி நிகர ஆண்டு வருமானம் €9,000 யூரோ மட்டுமே. இது அந்நாட்டின் தனிநபர் சராசரி வருமானத்தில் பாதியை விடக் குறைவு. பெரும்பான்மை மக்கள் சுரண்டப்பட்டு மிகச் சிறுபான்மை கிரேக்க முதலாளிகள் கொழுக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்போது கிரேஸில் உழைக்கும் மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் வேலையின்றி இருக்கின்றனர். இளைஞர்களில் பாதிக்கும் மேல் வேலை இல்லை. அவர்கள் ஓய்வூதியம் வாங்கும் தமது பெற்றோர் அல்லது தாத்தா/பாட்டியை சார்ந்து வாழ்கின்றனர். 2010-க்குப் பிறகு கிரீஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25% வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.

இத்தகைய கடும் நெருக்கடியினால் அழுத்தப்பட்ட கிரீஸ் ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என்று நாடு முழுவதும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து போராடினர். இத்தகைய போராட்டங்களுக்கு மத்தியில் அடுத்தடுத்து ஐரோப்பிய வங்கிகளுக்கு கிரேக்க மக்களின் நலன்களை பலி கொடுத்துக் கொண்டிருந்த இடது, வலது சாரி கட்சிகளை எதிர்த்து சிக்கன நடவடிக்கைகளை நிராகரிப்போம், கடன்கள் ரத்து செய்யக் கோருவோம் ஆகிய முழக்கங்களை முன் வைத்து போட்டியிட்ட சிரிசா என்ற ‘தீவிர’ இடது சாரி கூட்டணி 2015 ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.

கிரீஸ் கருத்துக் கணிப்பு

ஆளும் வர்க்கங்களின் அச்சுறுத்தல்களுக்கும், பயமூட்டும் பிரச்சாரங்களுக்கும் மத்தியில் 61% மக்கள் ஐரோப்பிய கடன் நிறுவனங்களின் நிபந்தனைகளை நிராகரித்திருக்கின்றனர்.

தனது வாக்குறுதிப்படி, கடன் வசூலிக்கும் மும்மூர்த்திகளின் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக் கோருவதாக அறிவித்தது, பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான சிரிசா அரசு. அதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. கடன் கொடுத்த நிறுவனங்கள், ஐரோப்பிய வங்கிகள், உலக நிதி நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள், கடன் வாங்கினால் கட்டுவதுதான் சரி என்று கண்டிப்பு காட்டினர். தாங்கள் சொல்லும் நிபந்தனைகளே ஏற்றே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.

இது குறித்து, தான் முடிவு செய்ய முடியாது என்றும், கிரீஸ் மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு நடத்தி ஐரோப்பிய கடன் கொடுத்த நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதா நிராகரிப்பதா என்று கேட்கப் போவதாக ஜூன் 27-ம் தேதி அறிவித்தார் கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ்.

அதைத் தொடர்ந்து நிதி பற்றாக்குறை காரணமாக கிரீஸில் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டன. ஏ.டி.எம் எந்திரங்களில் அதிகபட்சம் ஒரு நாளைக்கு €60 மட்டுமே எடுக்க முடியும் என்று வரம்பு விதிக்கப்பட்டது. “கிரீஸ் கடன் நிபந்தனைகளை ஏற்கத் தவறினால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்படும், கடந்த 5 ஆண்டுகளில் அனுபவித்த (வேலை இழப்பு, ஓய்வூதிய இழப்பு, கல்வி/மருத்துவ வெட்டு) கஷ்டங்கள் ஒன்றுமில்லை என்று தோன்றுமளவு பேரழிவு காத்திருக்கிறது” என்று கிரேக்க முதலாளிகள் கைவசம் இருந்த தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்தன. ஆம் தரப்பும், இல்லை தரப்பும் சரிக்கு சமமாக உள்ளன என்று மோசடி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.

மறுபுறம், பார்சிலோனா, மாட்ரிட், லிஸ்பன், டப்ளின், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கிரீஸ் மக்களுக்கு ஆதரவாக பேரணியாகச் சென்றனர். ஜூலை 3-ம் தேதி ஏதென்சின் சின்டாக்மா சதுக்கத்தில் இல்லை தரப்பு ஆர்ப்பாட்டத்தில் 1.5 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

ஆளும் வர்க்கங்களின் அச்சுறுத்தல்களுக்கும், பயமூட்டும் பிரச்சாரங்களுக்கும் மத்தியில் 61% மக்கள் ஐரோப்பிய கடன் நிறுவனங்களின் நிபந்தனைகளை நிராகரித்திருக்கின்றனர். 18 முதல் 25 வயது இளைஞர்களில் 85% ஏகாதிபத்திய நிதிக் கொடுங்கோன்மையை எதிர்த்து வாக்களித்திருக்கின்றனர்.

கிரீஸ் போராட்டம்

“கடனை வெட்டு, ஐ.எம்.எஃப் திரும்பிப் போ” – ஜூலை 3-ம் தேதி ஏதென்சின் சின்டாக்மா சதுக்கத்தில் இல்லை தரப்பு ஆர்ப்பாட்டத்தில் 1.5 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

ஆனால், மீண்டும் கடன் கொடுத்த நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப் போவதைத் தவிர மாற்று திட்டம் எதுவும் இல்லாத போலி இடது சாரி கூட்டணிதான் சிரிசா என்பது நிரூபணமாகியிருக்கிறது.

  1. தனியார் மயத்தை நிறுத்துவதாக கூறிய சிரியா, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று நிதி திரட்டப் போவதாக அறிவித்திருக்கிறது..
  2. கிரீஸ் விமானப்படையை மேம்படுத்துவதற்கான நிதி உட்பட பெருமளவு நிதியை ராணுவத்துக்கு ஒதுக்கியிருகிறது.
  3. தேசிய ஓய்வூதிய நிதி மற்றும் நகராட்சி நிதியிலிருந்து மும்மூர்த்திகளுக்கு கடன் அடைத்திருக்கிறது, சிரிசா.
  4. வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொது முதலீடுகளை வெட்டி, மும்மூர்த்திகளின் கடன் கட்டும் இலக்குகளை நிறைவேற்ற முயற்சிக்கிறது, சிரிசா.
  5. மக்கள் பணத்தை மேலும் கொள்ளையடித்து தற்போது 0.7% பற்றாக்குறையில் இருக்கும் கிரீஸ் பட்ஜெட்டை 0.6% மிகை பட்ஜெட்டாக மாற்றுவதாக சிரிசா வாக்களித்திருக்கிறது.
  6. அத்தியாவசியப் பொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைப்பதாக வாக்களித்த சிரிசா இப்போது 23% வரியை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய எஜமான்கள்

‘கடன் எப்படி வந்திருந்தால் என்ன, அதை எதிர்த்து கிரீஸ் மக்கள் வாக்களித்தால் என்ன, நாங்கள் சொன்ன நிபந்தனைகளை எப்படி அமல்படுத்தப் போகிறீர்கள்’ என்று சொல்லும்படி உத்தரவு.

பிரதமர் சிப்ராஸ் ஐரோப்பிய கடன்காரர்களுக்கு எதிராக பேசிய முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரோஃபகிஸ்-ஐ நீக்கி விட்டு இங்கிலாந்தில் படித்த மேற்கத்திய அடிமை சாக்கலோடோஸ்-ஐ நிதி அமைச்சர் ஆக்கி ஐரோப்பிய ஈட்டிக்காரர்களை சமாதானப்படுத்த முயன்றார்.

ஆனால், “என்ன நடந்தாலும் சரி, பூரா தொகையையும் ஒரு பைசா விடாம எண்ணி கீழ வைக்கணும்” என்று சொல்கின்றன கிரீஸுக்கு கடன் கொடுத்த ஐரோப்பிய மத்திய வங்கியும், ஜெர்மனி, பிரான்ஸ் முதலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சர்வதேச நாணய நிதியமும்.

‘கடன் எப்படி வந்திருந்தால் என்ன, அதை எதிர்த்து கிரீஸ் மக்கள் வாக்களித்தால் என்ன, நாங்கள் சொன்ன நிபந்தனைகளை எப்படி அமல்படுத்தப் போகிறீர்கள்’ என்று சொல்லும்படி கிரீஸ் பிரதமருக்கு உத்தரவிட்டன. அதை சிரமேற்கொண்டு அத்தகைய ஒரு திட்டத்தை முன் வைத்திருக்கிறார் அலெக்சிஸ் சிப்ராஸ். ஆனால், சிரிசா கட்சிக்குள்ளேயே சிப்ராசின் இந்த சரணடைவு கடும் எதிர்ப்பை சந்திக்கும். மக்கள் போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.

2-ம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியும், பிரான்சும் செய்ததைப் போல கடன்களை கட்ட முடியாது என்று கடன் கொடுத்த நாடுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி கடன் தள்ளுபடி அல்லது குறைப்பு செய்ய வேண்டும். கிரீசுக்கு அத்தகைய சலுகையை செய்ய மறுக்கின்றன இப்போது கடன் கொடுத்த நாடுகளாக இருக்கும் ஜெர்மனியும், பிரான்சும்.

தனியார் வங்கிகள்

2012-ல் கிரீஸ் அரசின் கடன்களில் 80% தனியார் வங்கிகள் வாங்கிய கடன் பத்திரங்கள் வடிவில் இருந்தது, 20% பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்தது. இப்போது அந்த நிலைமை நேர் எதிராக மாறியிருக்கிறது.

அல்லது, அந்நாட்டு நாணய மதிப்பை குறைப்பதன் மூலம் கடன் சுமையை கையாளலாம். அதன் மூலம் ஒன்று உள்நாட்டு கடன்களை குறைந்த மதிப்பில் திருப்ப முடியும், மேலும் குறைந்த மதிப்பு நாணயத்தை பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரித்து வெளிநாட்டுக் கடன்களை கட்ட செலாவணி ஈட்ட முடியும்.

யூரோ ஒற்றை நாணயத்தில் தன்னை இணைத்துக் கொண்ட கிரீஸ் அதையும் செய்ய முடியவில்லை. யூரோ மீதான கட்டுப்பாடு ஐரோப்பிய மத்திய வங்கியிடம் இருக்கிறது. கிரீஸ் மத்திய வங்கியிடம் இல்லை. யூரோவிலிருந்து வெளியேறி, தனி நாணயத்தை உருவாக்கி கிரீஸ் மத்திய வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கிரீஸின் நிதித்துறையை கொண்டு வர முடியும்.

உலக நிதிக் கட்டமைவில் நெருக்கமாக பிணைக்கப்பட்டு விட்ட, சுயசார்பு பொருளாதாரம் முழுவதும் அழிக்கப்பட்டு விட்ட நிலையில் கிரீஸ் என்ன செய்ய முடியும்? ஐரோப்பிய ஒற்றை நாணயத்தையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் விட்டு வெளியேறினால் அந்நாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? இந்த விலகல் ஐரோப்பிய பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும்?

கிரீஸ் யூரோவை விட்டு விலகுவது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் கடும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நிதிப் பிணி நெருக்கடியில் சிக்கி, கடும் சிக்கன நடவடிக்கைகளில் அவதிப்படும் போர்ச்சுக்கல், அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி மக்களும் கிரீஸின் வழியில் போகும்படி கோரும் போராட்டங்கள் பரவும். அந்நாடுகளும் யூரோவை விட்டு விலகினால் அது ஐரோப்பிய ஒன்றியத்தை பலவீனப்படுத்துவதுடன், யூரோ திட்டத்தை சீர்குலைத்து, ஐரோப்பிய ஐக்கியத்தை இல்லாமல் செய்து விடும்.

பன்னாட்டு முதலீட்டாளர்கள் தமது ஐரோப்பிய கடன் பத்திரங்களை விற்க ஆரம்பித்தால் யூரோவின் மதிப்பு பெருமளவு சரியும். வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குள் (மத்திய தரைக்கடல் வழியாக) நுழையும் அகதிகளை கிரீஸ் நாட்டின் உதவியின்றி ஐரோப்பா கையாள முடியாது.

GreekCrisisImageமாறாக, கிரீஸ் சீனா, ரசியா போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள முடியும். ரசியாவிலிருந்து துருக்கி வழியாக எண்ணெய்/எரிவாயு குழாய் அமைத்து ஐரோப்பாவுக்கு கொண்டு செல்வதற்கான மையமாக கிரீஸ் செயல்பட முடியும். பிரேசில், ரசியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா இணைந்து ஏற்படுத்திய புதிய வளர்ச்சி வங்கி (நியூ டெவலப்மென்ட் பேங்க்) மற்றும் சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு வங்கியிலும் கிரீஸ் நாடு இணையலாம்.

எப்படியானாலும், தீர முடியாத, நிரந்தரமான, ஆழமான நெருக்கடியில் சிக்கியிருக்கும் உலக முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பின் பலவீனமான கண்ணிகளில் ஒன்றான கிரேக்க நாட்டில் ஏகாதிபத்திய நிதிக் கட்டமைப்பு நொறுங்கிக் கொண்டிருக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்ளும் ஆளும் வர்க்கங்களின் முயற்சிகள் உழைக்கும் மக்களின் எதிர்ப்புக்கு முன்பு திணறிக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை மக்களுக்கு எதிரான இந்த முதலாளித்துவ கட்டமைப்பை தூக்கி எறிந்து மக்களுக்கான அமைப்பை கட்டியமைப்பதற்கான போராட்டத்தில் கிரீஸ் மக்களுக்கு துணை நிற்க வேண்டியது உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் கடமை.

– அப்துல்

http://www.vinavu.com/2015/07/10/greece-financial-crisis-twists-and-turns/