ஏர்வாடி, டிச.7-
ஏர்வாடி அருகே பஸ்சில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
உறவினர் வீட்டுக்கு சென்றார்
ஏர்வாடி அருகே உள்ள ஆலங்குளம் செட்டி தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். அவரது மனைவி லதா (வயது 31). அவர் நேற்று முன்தினம் காவல்கிணற்றில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் அங்கு இருந்து லதா மற்றும் அவரது அக்காள் 2 பேர் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு வரும் பஸ்சில் ஊருக்கு திரும்பினர்.
தவறி விழுந்து பலி
பஸ் ஆலங்குளம் பஸ் நிறுத்தத்தில் நின்றது. முதலில் லதாவின் அக்காள் 2 பேரும் இறங்கி விட்டனர். லதா இறங்குவதற்குள் பஸ் புறப்பட்டது. உடனே அவர் பஸ்சில் இருந்து குதித்தார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த லதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி அம்மாள் விசாரணை நடத்தி பஸ் டிரைவர் நாகர்கோவில் ஆமணக்குவிளையைச் சேர்ந்த சுயம்பு லிங்கம் (வயது 30) என்பவரை கைது செய்தார். பிணத்தை பரிசோதனைக்காக பாளை. ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Source: Daily Thanthi [online] http://www.dailythanthi.com/article.asp?NewsID=532161&disdate=12/7/2009&advt=2 [Accessed on 7-Dec-2009]
|